திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள். 🔥
இரண்டாம் திருமுறை - 2.048 திருவெண்காடு 🔥🔥
சுவாமிபெயர் - சுவேதாரணியேசுவரர்.
தேவியார் - பிரமவித்தியாநாயகியம்மை.
மண்ணொடுநீ ரனல்காலோ
டாகாய மதியிரவி
எண்ணில்வரு மியமான
னிகபரமு மெண்டிசையும்
பெண்ணினொடாண் பெருமையொடு
சிறுமையுமாம் பேராளன்
விண்ணவர்கோன் வழிபடவெண்
காடிடமா விரும்பினனே.2.048.3
மண், நீர், அனல், காற்று, ஆகாயம், மதி, இரவி, எண்ணற்றனவாயுள்ள உயிர்கள் ஆகிய எட்டு மூர்த்தங்களுடன் இம்மை, மறுமை, எண்திசை, பெண், ஆண் ஆகியனவாகவும் பெரியதில் பெருமை, சிறியதில் சிறுமை ஆகியனவாகவும் விளங்கும் புகாளனாகிய சிவபிரான், இந்திரன் வழிபடத்திருவெண்காட்டைத் தனது இருப்பிடமாகக்கி கொண்டு எழுந்தருளியுள்ளான்.
வேலைமலி தண்கானல்
வெண்காட்டான் றிருவடிக்கீழ்
மாலைமலி வண்சாந்தால்
வழிபடுநன் மறையவன்றன்
மேலடர்வெங் காலனுயிர்
விண்டபினை நமன் றூதர்
ஆலமிடற் றானடியா
ரென்றடர வஞ்சுவரே.2.048. 5
கடல்நீர் நிரம்பிய குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த வெண்காட்டு இறைவன் திருவடிகளை மாலைகளாலும் நிறைந்த வளமையான சந்தனத்தாலும் வழிபட்ட மறையவராகிய சுவேதகேதுவின் உயிரைக் கவரவந்த இயமனை அச்சிவன் உதைத்து அழித்ததால் அந்த இயமனுடைய தூதர்கள் சிவபிரான் அடியவர் என்றால் அஞ்சி விலகுவர்.
இமையா துயிரா திருந்தாய் போற்றி!
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி!!
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக