என்னுடைய டயரியின் இன்றைய பக்கங்கள். { 212 / 2020 }
ஒரு நடுப்பகல் மரணம்.
ஆம். சுஜாதா எழுதிய நாவல்தான். முதலில் குங்குமத்தில் தொடர்கதையாக வெளிவந்து பின்னர் நாவலாக வெளிவந்த கதைதான். ஒரு கிரைம் ஸ்டோரியாகத்தான் இது வரை இந்தக் கதையை நான் படித்து அனுபவித்து இருக்கின்றேன். ஒரு முறை , இரு முறை அல்ல. கிட்டத்தட்ட பத்து முறைகள்.!
ஆனால் சமீபத்தில் படித்த பொழுது அதில் under current ஆக ஒரு காதல் கதை சொல்லப் பட்டு இருந்ததை என்னால் உணர முடிந்தது. கணேஷ் வசந்த் இல்லாத ஒரு கிரைம் கதையாக நான் பல முறை ரசித்த இந்தக் கதையில் பிரிவோம் சந்திப்போம் என்ற அவரது கதையில் காணப்பட்ட ஒரு காதல் ஒளிந்து கொண்டிருந்ததை அறிந்த பொழுது சிலிர்த்துப் போனேன்.
உமா, இந்தக் கதையின் கதாநாயகி ஒரு அழகான பெண். கிரிக்கெட் ஆர்வம் உள்ள பெண் . கிரிக்கெட் ஆர்வம் என்றால் என்ன ஸ்கோர் என்று கேட்டு பதிலுக்குக் காத்திருக்காமல் விலகும் பெண் அல்ல. மைதானத்தில் பேட்டிங் செய்து, பௌலிங் செய்து, பேப்பரில் பெயர் வருமளவு விளையாடிய பெண்.
அவளது அழகும் , விளையாட்டும் ஒருவனை இவள் மீது காதல் கொள்ள வைத்ததை அறியாத பெண்.
அவள் பெற்றோர்களால் பார்த்து , நிச்சயிக்கப் பட்ட மூர்த்தியைத் திருமணம் செய்து கொள்கின்றாள்.
இந்தத் திருமணத்தினால் சிலரது ஏமாற்றங்களுக்கும் அவர்களது கோபத்துக்கும் தான் ஆளாகப் போகிறோம் என்பதை அவள் அப்பொழுது அறிந்திருக்கவில்லை.
உமாவின் சொந்தத்
தாய்மாமா மணி அப்படி ஏமாற்றம் அடைந்த ஒருவன். நிச்சயமாக உமாவை திருமணம் செய்து கொள்ளப் போவது தான்தான் என்று நம்பி உமி , உமி, என்று சுற்றிச் சுற்றி வந்தவன்.
அதனால் மூர்த்தி-உமா திருமணம் அவனைக் கோபம் கொள்ளச் செய்கின்றது. அந்தக் கோபம் மூர்த்தியைக்
கொலை செய்யும் அளவுக்கு மணியைச் செலுத்துகின்றது.
திவ்யா... மூர்த்தியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டியவள். நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் நடக்க வேண்டிய சமயத்தில் ஏதோ காரணத்தினால் மூர்த்தி வீட்டார் அவளுடைய ஜாதகத்தின் மீது பழி போட்டு
திருமணத்தை தவிர்த்து விட , திவ்யாவுக்கு மூர்த்தி மீது கொலை வெறி.
இத்தனை சிக்கல்கள் இருப்பது தெரியாமல் உமா மூர்த்தி திருமணம் முடிந்து முதல் இரவும் முடிந்து ஹனிமூனுக்காக பெங்களூர் செல்கின்றார்கள்.
மணி அதே ரயிலில் அலுவலக விஷயமாக பெங்களூர் பயணிக்கின்றான். திவ்யாவும் தன்னுடய புது ஆண் சினேகிதனுடன் பெங்களூர் வருகின்றாள்.
அடுத்த நாள் காலை ஹோட்டலில் உமா புத்தகம் வாங்கக் கீழே போயிருந்த சமயத்தில் மூர்த்தி கொலை செய்யப் படுகின்றான்
.கொடூரமாக...! உடலெங்கும் கத்தியால் குத்தப்பட்டு சுவரெங்கும் ரத்தம் பீறிட்டு
கோரமாக கொல்லப் படுகின்றான். அறை கண்ணாடியில் “ MAYA “ என்று ரத்தத்தில் எழுதப்பட்டு இருக்கின்றது.
இந்த வழக்கை விசாரிக்க மாதவராவ் வருகின்றார்.
Maya என்பது Mani & Divya வின் சுருக்கமா? ஏனெனில் இருவருமே இந்தத் திருமணத்தால் பாதிக்கப்பட்டவர்கள்.
அறையில் இருந்த காலணியின் சுவடு மூலம் அது ஒரு ஸ்போர்ட்ஸ் ஷூ என்பதும் , அதன் அளவை வைத்துப் பார்க்கும் பொழுது அது ஒரு விளையாட்டு வீரனின் காலடித் தடம் என்றும் தெரிகின்றது. அதை வைத்து தேடும் பொழுது Malleswaram Youth Association ( இன்னுமொரு Maya ) க்கு விசாரணை திரும்புகின்றது.
அதற்கு இன்னுமொரு காரணம் கொலை நடந்த தினத்துக்கு முன் தினம் மிகவும் தற் செயலாக யாரோ ஒருவர் உமா- மூர்த்தியை எடுத்த புகைப்படம் கிடைக்கின்றது. அதைப் பெரிது படுத்திப் பார்க்கையில் ஒரு மரத்தின் பின்னாலிருந்து இருவரையும் ஒருவன் பார்ப்பது தெரிகின்றது. அவன் அணிந்திருந்த ஸ்போர்ட்ஸ் பனியனிலும் Maya . அந்த கிளப்பில் விசாரித்ததில் இருந்து ஒளிந்து இருந்து பார்ப்பவன் ராக்கேஷ் என்பதும் , அவன் அதே ஹோட்டலில் உமா- மூர்த்தி தங்கி இருந்த அறைக்கு எதிரேயே தங்கி இருந்ததும் தெரிகின்றது. அவன் அறையில் மூர்த்தியைக் கொலை செய்யப் பயன் படுத்திய கத்தியும் கண்டு பிடிக்கப் படுகின்றது.
மாதவராவ் ராக்கேஷ்தான் கொலையாளி என்று நிச்சயித்து அவனைக் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தத் துடிக்கின்றார். ஆனால் ராக்கேஷ் கொலை செய்ததாக ஒப்புக்கொள்வதில்லை. ராக்கேஷ் காட்டும் அசாத்திய நிதானம் , அவன் விசாரனைக்கு ஒத்துழைக்கும் முறை இவை எல்லாம் நெருடலாக இருக்க மாதவராவின் உயர் அதிகாரி ( D. C ) கொலை சம்பந்தப்பட்ட அனவரையும் வரவைத்து ஒரு மீட்டிங் போடுகிறார். ஒவ்வொருவர் மீதும் சந்தேகம் வரக்காரணம் என்ன? எப்படி ஒவ்வொருவராக சந்தேக வட்டத்தில் இருந்து விலக்கப் படுகின்றனர். உண்மையான குற்றவாளி யார் என்பதை விவரிக்கின்றார். மிக அருமையான இந்தக் கட்டத்தை சுஜாதா தவிர வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாக எழுத முடியாது. பெர்ரி மேசன் கதைகளில் கடைசி கோர்ட் காட்சிகளில் உண்மை விளக்கும்
காட்சிக்கு சற்றும் குறைவில்லாத வகையில் எழுதப்பட்டு இருந்தது.
அந்த சுவாரஸ்யத்தில்தான் , அந்த விறுவிறுப்பில்தான் ராக்கேஷ் உமா மீது கொண்டிருந்த காதலை விவரிக்கும் அந்த அழகான வரிகளை , அவனது காதலின் தீவிரத்தை இது நாள் வரை நான் ரசிக்கத் தவறிவிட்டேன் என்று நினைக்கின்றேன்.
இதோ ராக்கேஷின் வரிகள்...
எனக்கு மூச்சு விடறதுக்கு ஒரு நாள்தான் பாக்கி இருந்து அன்னைக்கு நீ வந்தாலும் உன்னைத்தான் கல்யாணம் செய்து கொண்டிருப்பேன் எலிசெபெத் என்று சொன்னான், ஜாக்சன் என்னும் என் நண்பன்..
உமா ! அதையே நானும் உனக்கு சொல்ல விரும்புகின்றேன்.
உங்களை முதல் தடவை கிரிக்கெட் மைதானத்தில் பதிமூன்று பெண்கள் மத்தியில் பைனாகுலர் மூலமாக பார்த்த அந்தக் கணத்தில் இருந்து உங்களைத் தவிர வேறு யாரையும் பார்க்கவே இல்லை.
நீங்க ஓடறதையும் , பந்து வீசுவதையும் , மற்றப் பெண்களோடு பேசுவதையும் , நடக்கறதையும் , குனியறதையும் , அடிக்கடி பின்னலை தள்ளிவிட்டுக்கறதையும் பார்த்துகிட்டே வந்திருக்கிறேன். எல்லாத்திலையும் கொஞ்சம் பெண் கொஞ்சம் சின்னப் பையனுடைய தன்மை- -ஒரு வித ‘அடானிஸ்’தனம்
இருந்ததை கவனிச்சு இருந்தேன். அது எனக்கு ஒரு வினோத வசிகரம். நான் மத்த பெண்களை கவனிச்சதே இல்லை.
உங்க முகத்தில் அரும்பின வியர்வையை சேகரிச்சு சின்ன முத்தா பத்திரப் படுத்த ஆசைப் பட்டிருக்கேன். நீங்க டூர் போனபோது எல்லாம் உங்க பின்னாடி வந்திருக்கேன்.
உங்களுக்கு ஞாபகம் இருக்கா? ஒரு முறை பெங்களூர் போனப்ப பிருந்தாவன்ல வந்து சந்திச்சுப் பேசினேன். முதன் முறை உங்க கூட பேசினது. அதுக்கு முன்பு எத்தனையோ தடவை கற்பனையில் உங்க கூட பேசியிருக்கேன்.
நீங்க காலேஜ் போறப்போ பார்த்திருக்கேன். ஆன்யுவல் டேல உங்க சட்டைல மெடல் குத்தினாங்க.
தாஸப்பிரகாஷில் ஒரு நா ராத்திரி ஐஸ் கிரீம் சாப்பிட்ட பொழுது கவலைப்பட்டு இருக்கேன். க்யூவில் சிரிச்சுக்கிட்டே நின்னுகிட்டு காசினோவில் டிக்கெட் வாங்கினீங்க . அப்புறம் ..அப்புறம்...
உங்க கல்யாணத்தின் பொழுது காலை முகூர்த்தத்துக்கு வந்திருந்தேன். ரிஸப்ஷன் , கச்சேரிக்கு அப்புறம் உங்களை மாப்பிள்ளை வீட்டில் கொண்டு விட்ட பொழுது பார்த்துக் கொண்டேதான் இருந்தேன். புதுப்புடவை உடுத்திக்கிட்டு அந்த அறைக்குள் நீங்கள் நுழையும் பொழுது பார்த்துக்கிட்டேதான் இருந்தேன்......
இப்படி எல்லாம் சொல்லும் ராக்கேஷ் அவளை இவ்வளவு தீவிரமாக காதலிக்கக் காரணம் அவன் போட்டோவாக மட்டுமே பார்த்த அவனுடய அம்மாவின் சாயலை இவளிடம் கண்டதுதான். பெங்களூரில் மூர்த்தி தங்கியிருந்த அறைக்குப் போய் உமா யாருக்குமே கிடைக்காத ஜெம் . அவளை நன்றாக பார்த்துக் கொள் என்று சொல்ல நுழைந்து அதனால்தான் சந்தேகத்துக்கு காரணமாகின்றான்.
இவ்வளவு காதல் கொண்ட அவன் ஏன் உமாவிடம் தன் காதலை சொல்லவில்லை.?
ஒரு வேளை நீங்க போடா ராஸ்கல் என்று சொல்லிட்டா என்ன செய்வது என்ற பயம் . உமா . நான் சுபாவத்திலேயே ரொம்ப சங்கோஜி. என் வாழ்க்கை பூரா நான் சொல்லாம விட்டுப்போன விஷயங்கள் ஏராளம் எனக்கு லா படிக்க இஷ்டமில்லை. கிரிமினாலஜிய தவிர மற்ற எல்லாம் போர். அதை அப்பா கிட்ட சொல்ல பயம். அவர் சொன்னபடியே படிச்சு முடிச்சேன். எனக்கு தொழிற்சாலை வேலை மேற்பார்வையில் இஷ்டமே இல்லை. ஆனா அதுக்கு உண்டான பயிற்சி எடுத்துக்கோன்னு அப்பா சொன்னவுடன் பயிற்சி எடுத்து கிட்டேன்....
மூர்த்தி கொலை செய்யப்பட்டதும் உமா மனதில் இருந்து மூர்த்தியை விலக்க மாயா என்று ஒரு கற்பனைப் பெண் பாத்திரத்தை உருவாக்கி அவளுக்கும் மூர்த்திக்கும் பழக்கம் இருந்தது போல
ஒரு ஜோடனை கூட செய்கின்றான் ராக்கேஷ்
இதை எல்லாம் உமாவிடம் ஒப்புக் கொண்டு எனக்கு பொய் சொல்லத் தெரியல என்று சொல்லும் இடம் ஒரு அற்புதம்.
கதையின் கடைசி வரிகள்..
ராக்கேஷ் ! ராக்கேஷ்! ராக்கேஷ்! நில்லுங்க.!
என்ன என்றான் .அங்கிருந்து திரும்பி.
எனக்கு நீங்க ஒண்ணு வாங்கித் தரணும் என்றாள்.
என்ன ? என்றான்.
குங்குமம் என்றாள்.
இப்படி
அழுத்தமான வரிகள்...
அதுவும் ஒரு கிரைம் கதையில்
சுஜாதா சார் We miss you always.
சாரதி.
21/10/2020.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக