27 அக்., 2020

வேதனைக்குரல் : எங்கே தொலைத்தோம்?

https://m.facebook.com/story.php?story_fbid=894027614463100&id=100015676090921

எங்கள்ஊருக்கு மின்சாரம் வருவதற்கு முன்னால் எங்கள் வீட்டில் இரண்டு பெட்ரோமாக்ஸ் லைட்டுகள் இருக்கும்.இரண்டுமே ஊருக்கு பொதுவானவை.ஊரில் நடக்கும் அத்தனை நல்லகாரியங்களுக்கும் வாடகைக்கு வாங்கிப் போவார்கள்.அந்த வாடகைப் பணம் ஊர்ப் பொதுக் கணக்கில் சேரும்.ஊர்க்கணக்கு புத்தகம் எங்கள் வீட்டில்தானிருக்கும்.பெட்ரோமாக்ஸ் லைட்டுகளை வாடகைக்கு வாங்கிப் போகிறவர்கள் காலையில் வாடகையும் லைட்டுகளையும் கொண்டுவந்து எங்கள் அய்யாவிடம் கொடுப்பார்கள்.அதை துடைத்து சுத்தப்படுத்தும் போது அதில் கொஞ்சம் மண்ணெண்ணை மீதமிருக்கும்.அதை வடித்தெடுத்து ஒரு பாட்டிலில் வைத்திருப்பார்.எங்கள் வீட்டில் உள்ள அரிக்கேன் லைட்டுக்கு எண்ணெய் தீர்ந்து போனால் கடையில் போய் வாங்குவதற்குப் பதில் இந்த எண்ணெய்யில் கொஞ்சத்தை எங்கள் அம்மா ஊற்றி விடுவார்.இதைக்கண்டுபிடித்து எங்கள் ஐயா அம்மாவுடன் சண்டை போடுவார்.அந்த எண்ணெய் நம்முடையதில்லை.அதை எப்படி‌ நீ பயன்படுத்தலாம் என்று பெரிய சண்டையே நடக்கும்.

     அதே போல் கிராமங்களில் பெரும்பாலும் கூரை வீடுகள்தானிருக்கும்.ஒன்றிரெண்டு ஓட்டு வீடுகள் காரை வீடுகள்‌இருக்கும்.கூரைவீடுகளில் அடிக்கடி தீ விபத்துக்கள் ஏற்படும்.அதனால் அதற்கு பயந்து கூரைவீட்டுக்காரர்கள் தங்களிடமுள்ள தங்கச்சாமான்களை ஓட்டுவீட்டுக்காரர்களிடம் கொடுத்து வைப்பதுண்டு.நம்பிக்கை மட்டுமே அத்தாட்சி.அந்த மாதிரி கொடுத்து வைத்த தங்க நகைகளை எங்கள் பாட்டி துணியில் முடிந்து எங்களுடைய தானியக்குலுக்கைக்குள் புதைத்து வைத்திருக்கிறாள் யாருக்கும் தெரியாது.இவளிடம் கொடுத்து வைத்த பாட்டி இறந்து போய்விட்டாள்.எங்கள் பாட்டியும் அதை மறந்து விட்டாள்.முந்தியெல்லாம் கடைகளில் பொருட்கள் வாங்க மல்லி,வத்தல்,உளுந்து,பருத்திதானியங்களைக் கொடுத்தே வாங்குவோம்.பணம் என்பது இரண்டாம் பட்சமே.எங்கள் பாட்டி பெட்டி நிறைய்ய தானியத்தை கொண்டுபோய் கடையில் அளந்து நாடார் கடையில் சாமான்கள் வாங்கிவிட்டு வந்துவிட்டாள்.பின்னாலேயே நாடார் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டார்.அவர் கையில் தங்கச்சாமான்கள் அடங்கிய துணிப் பொட்டலம்.உடனே அதைக்கொண்டு போய் உரிய நபரிடம்‌ ஒப்படைத்துவிட்டு வந்தாள் எங்கள் பாட்டி.

        எங்கள் பாட்டி மட்டுமல்ல நம்முடைய எல்லோருடைய தாத்தா பாட்டிகளும் அப்படித்தான் வாழ்ந்தார்கள்.கடைக்கார நாடார் மாதிரிதான் எல்லா வியாபாரிகளும் இருந்தார்கள்.பொய் புரட்டு சூது வாது அடுத்தவன் பொருளுக்கு ஆசை எதுவும் கிடையாது.அப்படி இருந்த நம் சந்ததிகள் இன்று எப்படி மாறிப் போனார்கள்‌என்று யோசித்தால் ரொம்பவும் சங்கடமாக இருக்கிறது.

    சென்ற நாடாளுமன்றத் தேர்தல்.மகளிர் சுய உதவிக்குழு மூலமாக பணப்பட்டுவாடா நடக்கிறது.எங்கள் பக்கத்து வீட்டு அம்மாதான் குழுத்தலைவி.எல்லாக்கட்சியிடமும் பணம் வாங்கி பங்கு போடுகிறார்கள்.பெண்கள் அனைவரும்‌ கூடியிருக்க நான் கேட்டேன்.
"ஏதாவது ஒரு கட்சியில் பணம் வாங்குங்கள்.அந்தக் கட்சிக்கே ஓட்டுப்போடுங்கள்.எல்லாரிடமும் பணம் வாங்குறது நல்லாவா இருக்கு"என்றேன்.
"போங்கண்ணே அவுக அப்பன் வீட்டு ரூபாயக்கொடுக்கானா இல்ல ஒழைச்சு சம்பாதிச்ச பணத்தைக் கொடுக்கானா எல்லாம் கொள்ளையடிச்ச பணம்தானே நம்ம ரூவாதானே இதிலென்ன நியாயம் அனியாயம் எவன் குடுத்தாலும் வாங்க வேண்டியதான் நமக்குப் பிடிச்சதுல குத்திட்டுப் போகவேண்டிய தான்"

        அதாவது பணம் இருந்தால் போதும் எப்படியும் வெற்றி பெற்றுவிடலாம் என்று அரசியல்வாதிகளும் யார் அதிக ரூபா கொடுக்கிறார்களோ அவனுக்கு ஓட்டு போட்டுட்டுப் போவோம் என்ற மனநிலையில் மக்களும் இருக்கும் போது என்னத்தை சொல்ல.

   தேர்தலுக்கு ஒரு வாரம் இருக்கும்‌போது சாலைமறியல் .பெரும்பாலும் பெண்கள் கலந்து கொண்டார்கள்.எதற்காக மறியல் தெரியுமா.அடுத்த வார்டில் ஓட்டுக்கு ஆயிரம் கொடுத்திருக்கிறார்கள் எங்கள் வார்டில் ஓட்டுக்கு ஐநூறுதான் கொடுத்தார்கள் என்று சாலைமறியல்.அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக வேட்பாளருக்கு தகவல் சொன்னார்கள்.அவர் அவருடைய ஏஜெண்டிடம் கொடுத்துவிட்டதாகச் சொன்னார்.ஒரு மணிநேரத்தில் மீதி ஐநூறு ரூபாய் பட்டுவாடா வானது.மறியல் வாபஸானது.

     இவ்வளவு நாகரீக கல்வி வளர்ச்சியடைந்த நாம் எப்படி இவ்வாறு மாறிப்போனோம்.காரணம் யார்.நம் கல்விமுறையா.இல்லை நம்மை ஆளும் ஆட்சியாளர்களா.படிப்பறிவே இல்லாத நம் தாத்தாவும் பாட்டியும்‌ எவ்வளவு அற உணர்வுடன் உண்மையாக தெய்வத்துக்கும் மனச்சாட்சிக்கும் பயந்து வாழ்ந்தார்கள் என்று நினைக்கும் போது நம்முடைய போலித்தனத்தை நினைத்து வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை.

        விவசாயிகள் அல்லாதவர்களை விவசாயிகளாக காட்டி நடைபெற்ற ஊழலுக்கு அதிகாரிகள் மட்டும் காரணமல்ல.உடந்தையாக இருந்த போலிச்சம்சாரிகளும் உடந்தை.அதேபோல் கிராமங்களில் இன்னொரு பெரிய ஊழல் நடைபெற்றிருக்கிறது.தூய்மை இந்தியா திட்டத்தில் தனிநபர் கழிப்பறை கட்டுவதற்காக இருபதாயிரம் ரூபாய் மத்திய அரசு வழங்குகிறது.கிராமத்தில் ஒரே ஒரு வீட்டில் மட்டும் கட்டிவிட்டு ஒட்டு மொத்த கிராமமும் அந்த கழிப்பறை தன் வீட்டில் கட்டியதைப் போல் போட்டோ எடுத்து ஆதார் கொடுத்து வாங்கியிருக்கிறார்கள்.அதிகாரிகளுக்கு பத்தாயிரம்.இவர்களுக்கு பத்தாயிரம்.ஆக பாரதம் தூய்மையாகவில்லை.என்றைக்கும் போல் நாற்றமெடுக்கிறது.இவ்வளவு பொய் புரட்டு சொல்கிற அளவுக்கு  சம்சாரிகள் மாறிப்போனது எப்படி.சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

நன்றி :

திரு.சோ.தர்மன்,
மற்றும் 
விஸ்டம் வாட்ஸ்அப் குழு 

கருத்துகள் இல்லை: