31 அக்., 2020

குட்டிக்கதை

ஒரு காட்டில் வாத்துக்குடும்பம் ஒன்று இருந்தது. அம்மா வாத்து முட்டையிட்டு , அடைகாத்து குஞ்சு பொறித்தது.
பிறந்த குஞ்சுகள் அடர்ந்த , பல வண்ணங்கள் கொண்ட முடியுடன் அழகாவும், துருதுருப்பாகவும் இருந்தன. ஆனால் அதில் ஒரு குஞ்சு மட்டும் அடர்த்தியும், அழகும் இல்லாத முடியுடன் மெலிந்து போய் அசிங்கமாக இருந்தது. அதன் குரலும் மற்ற குஞ்சுகள் போல இல்லாமல் வித்தியாசமாக ஒலித்தது.
உடன்பிறந்த வாத்துக் குஞ்சுகளுக்கு இந்த அசிங்கமான வாத்துக்குஞ்சைக் கண்டாலே பிடிக்கவில்லை. அதன் தாய்கூட அதை வெறுத்து ஒதுக்கியது. அதை மட்டும் ஒதுக்கிவிட்டு மற்ற குஞ்சுகளுடன் நீந்தியது.
அசிங்கமான வாத்துக் குஞ்சு மிகவும் வேதனை அடைந்தது.
"நான் மட்டும் ஏன் இப்படி ஒரு அவலட்சணமா பிறந்தேன்?
முட்டையிலேயே உடைஞ்சு போயிருக்கலாமே" என்று அழுது கதறியது.
நாட்கள் ஓடின. மற்ற வாத்துக் குஞ்சுகள் மேலும் அழகாயின. இதுவோ உயரமாகவும், நிறமற்றும் காணப்பட்டது. தலையில் வேறு அசிங்கமாகக் குச்சிகள் போல ஓரிரு முடிகள் வளர்ந்து அதை இன்னும் அசிங்கமாக ஆக்கிற்று.
தினமும் வேதனையும், கண்ணீருமாகத் தனிமையில் வாழ்ந்து வந்தது.
சில வேளைகளில் அன்பாய் சகோதரர்களையும் , அம்மாவையும் நெருங்கும். ஆனால் சில நொடிகளிலேயே அவை இதைக் கொத்தி விரட்டிவிடும்.
இன்னும் கொஞ்ச நாள் சென்றது. அசிங்கமாக இருந்த வாத்துக் குஞ்சின் நிறமற்ற முடிகள் பிரகாசிக்கும் வெண்மை நிறமானது. தலையில் நீண்டிருந்த முடிகள் அழகான கொண்டையாக மாறிற்று. இறக்கைகள் பலமடைந்து நீளமாக மாறிவிட்டன. அசிங்கமான வாத்துக்குஞ்சு இப்போது கண் கொள்ளா அழகுடன் காட்சியளித்தது.
அம்மா வாத்துக்கும் , மற்ற சகோதர வாத்துக்களுக்கும் ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. அதன் அருகில் நெருங்கக்கூட வெட்கப்பட்டன. நடந்தது என்னவென்றால், ஒரு அன்னப்பறவை தவறுதலாக வாத்தின் கூட்டில் முட்டை இட்டுச் சென்றுவிட்டது. இது தெரியாமல் வாத்தும் தன்னுடைய முட்டையென்று எண்ணி அடைகாத்து , குஞ்சு பொறித்து விட்டது. அதுதான் அந்த அசிங்கமான வாத்துக் குஞ்சு..
ஒரு நாள் வந்தது. அசிங்கமான வாத்துக் குஞ்சாய்த் தோற்றமளித்த அன்னப்பறவையின் சிறகில் ஒரு உந்துதல் தோன்றியது. படபடவென்று சிறகை அடித்து மேலே எழும்பியது. கேலி செய்தவர்கள், வெறுத்து விரட்டியவர்கள் எல்லாம் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்ள அன்னப்பறவை கம்பீரமாய் உயரஉயரப் பறந்து ஒரு புள்ளியாக மறைந்து போனது.
ஊர் பழித்தாலும் நீ உன்னை வெளிப்படுத்தினால்.. உயர செல்லலாம்.. உண்மையான திறமையிருந்தால்....
ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு காரண‌ம் இருக்கும். முடிவு கிட்டப்படும் வரை பொறுமை தேவை.
இறைவன் அதற்கான நேரத்தை ஒதுக்கி கொடுப்பான்.அது வரை சற்று நிதானமாக இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.

நன்றி :

கருத்துகள் இல்லை: