https://chat.whatsapp.com/HKGooQa8eYQ847zjtIIO59
புராணங்கள் போற்றும் புனிதமான விரதம், நவராத்திரி விரதம்.
மங்களங்கள் யாவும் தரும் மகத்தான நவராத்திரியை எப்படிக் கொண்டாடுகிறார்கள்?
நவராத்திரி விரதம், கும்ப பூஜையோடு தான் ஆரம்பமாகிறது.
இச்சா, கிரியா, ஞான சக்திகளை அருளும் பூமகள், மாமகள், நாமகள் மூவரையும் ஒரே அம்சமாக, கலசம் ஒன்றில் எழுந்தருள வேண்டிடுவதுதான் இந்த பூஜை.
நவராத்திரி தொடங்கும் நாளன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு, கொலு வைக்கப்போகிற இடத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து பூஜையை தொடங்குவது பாரம்பரியமான வழக்கம்.
மணைப் பலகை ஒன்றை எடுத்துக்கொண்டு அதனை நன்கு கழுவி சுத்தம் செய்து, அதில் கோலம் போட்டுக் கொள்ளுங்கள்.
அதன் மேல் நுனி வாழையிலை ஒன்றை வைத்து, கொஞ்சம் நெல் அல்லது அரிசியைப் (பச்சரிசி) பரப்பவும்.
அதன் மேல் தூய நீர் நிரப்பிய வெள்ளி அல்லது செம்பு கலசத்தை வையுங்கள். .
சிறிதளவு பச்சை கற்பூரம், சந்தனம், ஓரிரு பூவிதழ்களை அந்த நீரில் இடவும்.
புதிய சில்லறைக் காசுகள் சிலவற்றையும் அதனுள் போடவும்.
செம்பின் வாய்ப் பகுதியில் புதிய மாவிலைகளை செருகி, மஞ்சள் பூசப்பட்ட ஒரு தேங்காயை அதன் மீது வையுங்கள்.
கலசத்தின் கழுத்தை சிவப்பு நிறத் துணியால் சுற்றி வையுங்கள்.
பூஜையறையில் விளக்கேற்றியபின், கலசத்தின் முன்பும் ஒரு விளக்கினை ஏற்றி வைக்கலாம்.
அவரவர் வழக்கப்படி குத்துவிளக்கு அல்லது காமாட்சி அம்மன் விளக்கும் ஏற்றலாம்.
கலசத்தின் முன் ஒரு வெற்றிலையை வைத்து, அதன்மீது மஞ்சள் பொடியினால் பிள்ளையார் பிடித்து வையுங்கள்.
இந்தப் பிள்ளையாருக்கு குங்குமப் பொட்டிட்டு பூ சாத்துங்கள்.
பின்னர் கலசத்திற்கும் பொட்டு வைத்து, பூ சாத்தி, தூபம் ஏற்றி வையுங்கள்.
முதலில் பிள்ளையாரை வேண்டிக் கொண்டு, பிறகு துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி அம்மன்களை கலசத்தில் எழுந்தருளும்படி மனதால் வேண்டிக் கொள்ளுங்கள்.
பிறகு அவர்களுக்கு தூப, தீபம் காட்டி வணங்கிக் கொள்ளுங்கள்.
அடுத்து, காய்ச்சி சர்க்கரை சேர்த்த பாலை நிவேதனம் செய்யுங்கள்.
முடிந்தால் பால் பாயசமும் நைவேத்யம் செய்யலாம்.
இந்தக் கலச அமைப்பினை அப்படியே வைத்திருந்து நவராத்திரியின் ஒன்பது நாட்களும், அடுத்த விஜயதசமியன்றும் முதல் பூஜையை இதற்கே செய்ய வேண்டும்.
கொலுவுக்கு உரிய நிவேதனமும் முதலில் இந்தக் கலச அமைப்பிற்கே செய்ய வேண்டும்.
அம்பிகை பற்றிய பாடல்களை படியுங்கள், கேளுங்கள். தினமும் இந்த பூஜையை செய்து முடிக்கும் வரை உணவு உட்கொள்ளாமல் இருப்பது சிறப்பு.
முடியாதவர்கள் சிறிதளவு பால், பழம் எடுத்துக் கொள்ளலாம்.
முதல் நாள் அமைத்த கலசத்திற்கே அடுத்தடுத்த நாட்களில் புதுமலர் சாத்தி, நிவேதனமும் செய்ய வேண்டும்.
ஒன்பது நாட்களும் அம்பிகை பாடல்களைப் பாடுவதும், கேட்பதும் தொடர வேண்டும்.
முதல் மூன்று நாட்களில் துர்க்கையையும்,
அடுத்த மூன்று தினங்களில் லட்சுமியையும்,
கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதியையும் வணங்குவது வழக்கம்.
நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள், சரஸ்வதிக்கு உரிய மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும் நாளில் சரஸ்வதி தேவி தோன்றுகிறாள் என்பது ஐதீகம்.
எதற்குமே ஒரு மூலம் உண்டு என்பதை உணர்த்தும் விதமாகவே கலைமகள் மூல நட்சத்திரத்தில் அவதரித்தாள் என்பர்.
ஞானம், கல்வி, இவை மட்டுமின்றி, ஆயுள், ஆரோக்யமும் கூட சரஸ்வதியின் கடாட்சத்தால் கிட்டும் என்கிறது பவிஷ்யோத்ர புராணம்.
நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் பூஜை, விரதம் இவற்றை அனுஷ்டிக்க வேண்டும் என்றும், இயலாதவர்கள் அஷ்டமி திதி வரும் நாளில் மட்டுமாவது அவசியம் விரதம் இருக்க வேண்டும் எனவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.
விஜயதசமி தினத்தில், அம்பிகை வெற்றி வாகை சூடினாள்.
ஆணவம், சக்தியாலும்; வறுமை, செல்வத்தினாலும்; அறியாமை, ஞானத்தாலும் வெற்றி கொள்ளப்பட்ட தினம் அது.
ஆகவே அன்றைய தினம் மிகவும் சிறப்புமிக்கது.
அன்று புதிதாகத் தொடங்கும் எந்தக் கலையும் எளிதாக வசமாகும் என்பது நம்பிக்கை.
நவராத்திரி பண்டிகையின் நிறைவு நாளும் இதுவே.
விஜயதசமியன்று கலச பூஜையில் பயன்படுத்திய கலசத்தின் முன்பாக அமர்ந்து, முப்பெரும் சக்தியரையும் மனதால் வேண்டிக்கொண்டு ஆரத்தி எடுக்கலாம்.
முப்பெருந்தேவியரும் இந்தக் கலசத்தில் நிறைந்திருந்தது போல இனி என்றென்றும் நமது இல்லத்தில் நிலைத்திருக்க வேண்டிக் கொண்டு, கலசத்தில் உள்ள நீரை வீடு முழுதும் தெளித்து பூஜையினை முழுமை செய்யுங்கள்.
இந்த நவராத்திரி நாட்களில் அழகிய பொம்மைகளைக் கொண்டு கொலு வைப்பது பலருடைய வழக்கம்.
சிலர் ஒவ்வொரு வருடமும் பிரத்யேகமான ஓர் ஆன்மிகக் கருத்தை மூலமாக வைத்து பிரமாண்டமான வகையில் கொலு வைப்பார்கள்.
பொதுவாகவே இப்படி வைக்கப்படும் கொலுவைப் பார்க்க அக்கம்பக்கத்தார், உறவினர், நண்பர்கள் என்று அனைவரையும் அழைத்து அவர்களுக்கு அன்றன்றைய நிவேதனப் பொருளையும், மஞ்சள்-குங்குமம்- வெற்றிலை-பாக்கு என்று மங்கலப் பொருட்களையும் வழங்கி சந்தோஷப்படுத்துவார்கள், சந்தோஷப்படுவார்கள்.
இப்படி பிறரை குறிப்பாக சுமங்கலிப் பெண்களையும், கன்னிப் பெண்களையும், சிறுமிகளையும் அழைத்து அவர்களுக்கு ‘மரியாதை’ செய்வதிலும் ஒரு தத்துவம் உள்ளடங்கியிருக்கிறது.
அதாவது, அப்படி வரும் பெண்களோடு அம்பாள் தானும் உடன் வருகிறாள், அவளும் நம் ‘மரியாதை’யை ஏற்றுக்கொள்கிறாள் என்ற நம்பிக்கைதான் அது! நவராத்திரி விரத பூஜையின் மகிமையால் உங்கள் இல்லம் சிறக்கும்; மங்களங்கள் பெருகும்.
பகிர்வு : ராஜா.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
நன்றி. 🙏
திரு ராஜா
மற்றும்
*🤘ஓம் நமசிவாய🙏* ஆன்மீக குழு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக