"தி .ஜானகிராமன் படைப்புகள்". சிறுகதைகள் தொகுதி-2 .விலை ரூபாய் 325/ ஐந்தினை பதிப்பகம் மறு பதிப்பு 2008.
. எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்
தி. ஜானகிராமன் அவர்கள் .மோகமுள் எத்தனை முறை படித்தாலும் சலிக்காது அதேபோல் அவரின் நூற்றுக்கணக்கான சிறு கதைகளையும் பயணநூல்களையும் நாவல்களையும் மொத்தமாக வாங்கிக் குவித்து அவ்வப்பொழுது படித்து வருகின்றேன்.
தற்கால தமிழ் இலக்கியத்தில் சிறுகதை துறையின் வளர்ச்சியும் பலமும் பெருமைக்கும் மகிழ்ச்சிக்கும் உரியனவாகும் .தமிழ்ச்சிறுகதை வளம் தரும் உரம் உருவம் இவற்றில் சிறந்து விளங்குவதற்கு பங்காற்றி உள்ள படைப்பாளிகள் பலர் .அவ்விதம் தனித்தன்மையோடு சிறுகதைகள் எழுதி புகழ்பெற்ற முக்கியப் படைப்பாளிகளில் தி. ஜானகிராமன் ஒருவர்.
நாவலில் தனது திறமையை காட்டி உயர் சாதனைகள் புரிந்துள்ள தி.ஜா. தாம் ஓர் அரிய சிறுகதை கலைஞர் என்பதையும் நிரூபித்திருக்கிறார் .
*சிறுகதை வாழ்வின் பல சூட்சுமங்களை யும் எழுத்தில் நிர்மாணித்து காண்பிப்பது* என்று புதுமைப்பித்தன் குறிப்பிட்டுள்ளார். மனித வாழ்வின் பல சூட்சுமங்களை யும்- வாழ்க்கையின் உயர்வு தாழ்வுகள், தன்மைகள் ,தவறுகள் ,முரண்பாடுகள் அவலங்கள் முதலிய பலவற்றையும் சிறுகதைகளாக சித்தரிக்கிறார தி. ஜா.
வாழ்வின் பல்வேறு நிலைகளில் மனிதர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள் -வாழ்க்கை ஓட்டத்தில், விதம்விதமான குணங்களை உடைய மனிதர்கள் எவ்வளவு விந்தை ஆக, விசித்திரமாக ,வேடிக்கையாக, கோளாறாக எல்லாம் செயல்படுகிறார்கள் - விந்தை குணங்கள் கொண்ட சில பேர் உணர்ச்சி உந்துதலின் காரணமாக எவ்வாறு உயர்வான முறையில் நடந்து மனித மாண்பு சேர்க்கிறார்கள் என்றெல்லாம் தி. ஜா.தனது கதைகள் மூலம் எடுத்துக் காட்டுகிறார்.
கதையை உரையாடல் ஆகவும் நினைவுகூறும் விதத்திலும் உணர்ச்சி துடிப்புடனும் வளர்த்து கதை மாந்தரை உயிருள்ள பிறவிகளாக வாசகர் மனதில் பதிய வைப்பது தி.ஜா.வின் உத்தி.
மனிதர்களின் பல்வேறு வாழ்க்கை நிலைகளில் போக்குகளில் சகஜமாக காணப்படுகிற விதம்விதமான முரண்பாடுகளை எடுத்துச் சொல்லும் ரசமான கதைகள் பல இந்த தொகுதியில் உள்ளன.
தி .ஜானகிராமனின் எழுத்தாற்றலையும் நன்கு புலப்படுத்துகின்றன விதத்தில் இந்த சிறுகதைத் தொகுதி அமைந்துள்ளது.
பெரும்பாலான கதைகள் 'நான் என்று தன்மை ஒருமையில் சம்பந்தப்பட்ட மனிதர்களையும் சம்பவங்களையும் கண்டு உடனிருந்து அனுபவபூர்வமாக உணர்ந்த ஒருவரால் சுவையாக சொல்லப்படும் முறையிலேயே எழுதப்பட்டிருக்கின்றன. இதனால் கதை மாந்தரும் ,கதை நிகழ்ச்சிகளும் ஒரு உண்மையை சாயை பெற்றிருக்கின்றன, வாழ்க்கையின் எதார்த்த சித்தரிப்புகள் ஆக.
எந்தப் பாத்திரத்தையும் ,ஒரு சில வரிகள் -சிறுசிறு வர்ணிப்புகள் மூலம் உயிர் துடிப்போடு வாசகரின் மனக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விடும் ஆற்றல் தி. ஜா.வின் எழுத்துக்கு உண்டு
தி ஜானகிராமன் வாழ்க்கை நேசித்தார். மனிதர்களை வேடிக்கையாக பார்த்து, அவர்களது இயல்புகளையும் போக்குகளையும் கண்டு மகிழ்ந்தார் .அதே அளவுக்கு இயற்கை அழகுகளையும் இயற்கையோடு இயற்கையாக கலந்து நிற்கிற சகல ஜீவராசிகளையும், பலவிதமான ஓசைகளையும் ரசித்து அனுபவித்து சந்தோஷப்பட்டார். அவற்றையெல்லாம் கதைகளில் பதிவு செய்யத் தவறவில்லை தி. ஜா.அவர்கள்.
தஞ்சை மாவட்ட மண்ணின் வளமும், அந்த வட்டார மக்களின் பேச்சு நடை உடை பழக்க வழக்கங்களும் தி. ஜா.வின் கதைகளில் பசுமையாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன
தமிழ்ச் சிறுகதைக்கு இலக்கியத் தகுதி தேடித்தந்த சிறுகதை முதல்வர்களில் ஒருவரான கு .ப .ராஜகோபாலனின் முக்கிய சீடர்களில் தி. ஜா .வும் ஒருவர். உரையாடல்கள் மூலமாக கதையை வளர்ப்பது உரையாடல்களில் கதைமாந்தரின் தன்மைகளை புரியவைப்பது முதலியவற்றை கு. ப. ரா.திறமையாக கூர்மையாக கதைகளில் கையாண்டிருக்கிறார் .அந்தவித
கலை நேர்த்தி களை தி.ஜா.வும் வெற்றிகரமாக எடுத்தாண்டு உயர்ந்த கதைகளைப் படைத்துள்ளார் அதற்கு இந்த தொகுப்பு ஒரு நல்ல சான்று.
. இந்த புத்தகத்தில் சிறுகதைகள் பயணக் கட்டுரைகள் கட்டுரைகள் பரிந்துரைகள் சில நினைவுகள் என்று உள்ளது சிறுகதைகள் மட்டும் 45 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.
கொட்டுமேளம்
செண்பகப்பூ
ரசிகரும் ரசிகையும்
கழுகு
பசி ஆ அறிற்று
வேண்டாம் பூசணி
இக்கரை பச்சை
நானும் எம்தனும்
அத்துவின் முடிவு
பொட்டை , தவம் , சிலிர்ப்பு
சிவப்பு ரிக்ஷா
கடன் தீர்ந்தது
பொய்
கோயம்புத்தூர் பவபூதி
தேவர் குதிரை
பரதேசி வந்தான்
சத்தியமா
செய்தி , மறதிக்கு , பஞ்சத்து ஆண்டி நான் தான் ராமன் நாயர்
துரப் பிரயாணம் , ராவணன் காதல்
பிரயாணக்கதை , அதிருஷ்டம்
வேறு வழியில்லை ,, குளிர் ஜுரம் தற்செயல் .
பூட்டுக்கள்
பாரிமுனை டு பட்னபாக்கம் கம்ப்ளைன்ட்
வேதாந்தியும் உப்பிலி யும்
மக்களை ஈர்த்த மகராசர்
நாத ரட்சகன்
மிஸஸ் மாதங்கி
மிஸ்டர் கோடு கோடு கோடு
பத்து செட்டி
உதட்டுக்கார பையன்
கைகாட்டி விஞ்ஞான வெட்டியான் ஞானவெட்டியான் 23 இ பேருந்தில்
காவலுக்கு
...ப்பா
முதலான 45 சிறுகதைகள் உள்ளன.
1)பரதேசி வந்தான்.
ஒரு பெரிய வக்கீல் மகனுக்கு திருமணம் செய்கிறார் .முடிந்து விருந்து வைத்துக் கொண்டிருக்கிறார் .அப்பொழுது ஒரு பரதேசி வந்து பந்தியில் உட்கார்ந்து சாப்பிட, அதை பார்த்துவிட்டு வக்கீல் ஆகாயத்துக்கும் பூமிக்குமாக குதிக்கிறார்.
அவனை எழுந்து போ என்று விரட்டி வெளியே கொண்டுவந்து விடுகிறார். அவனை அடித்து நொறுக்கி கிழவனை வீதியிலே கிடத்துகிறார் .அவன் போகும்போது ஒன்னு சொல்வான்.
"இதோ போறேன் .ஆனால் திரும்பி வருவேன் .அடுத்த மாதம் இதே தேதிக்கு இந்த வீட்டிலேயே வந்து சாப்பிட வரேன் .நீ அழுது கொண்டு போடற சாப்பாட்டுக்கு வரேன் .பார்த்துக்கொள்ளுங்கள் "என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்.
இவருக்கு மனசு ஒரு மாதிரி ஆகியிருந்தது .
அன்றைய தினமே வக்கீலின் மகனுக்குஉடல் நலம் குன்றி விடுகிறது. மருத்துவர்களை சென்னையிலிருந்து திருச்சியிலிருந்து அழைத்து வந்து மருத்துவம் பார்க்கிறார்கள் .ஆனாலும் பிரயோஜனமில்லை .மகன் இறந்து விடுகிறான் .ஆக வேண்டிய காரியங்கள் ஆகிறது .
பரதேசி சொல்லிவிட்டுப் போன அதே நாளில் காரியம் நடக்கிறது .அந்த சாப்பாட்டிற்காக பரதேசி வருகிறார்.
உங்களை வேதனைப்படுத்தவும்,வெந்த புண்ணில் வேல் பாய்ச்சவும் வரவில்லை. நான் சொன்ன சொல்லைக் காப்பாற்றிட வந்தேன் என்கிறார் .
ஏனைய அப்படி சாபம் விட்டிர்கள் என்று கேட்க அதற்கு பரதேசி நான் சாபம் இடவில்லை .*என் பசி சாபம் விட்டது* என்று சொல்கிறார் .
வக்கீல் ஏதோ கேட்கிறார் .பரதேசி எல்லாவற்றிற்கும் அமைதியாக விளக்கம் அளிக்கிறார் .
வக்கீல் சூனியத்தை பார்த்துக்கொண்டு தேம்பி அழுகிறார் .சற்று கழித்து ,"ஓய் காலதேவனே.உட்கார்ந்து பேசும் .ஏன் கால் வலிக்க வில்லையா என்று வேண்டினார்.
காலதேவன் வயிறு குழைய , கண் குழைய ,விலா எலும்புகள் தோல் விம்ம, ஈஸ்வரா என்று* பசியின் வடிவாக * உட்கார்ந்துகொண்டான் என்பதாக கதை முடிகிறது.
இந்த கதையை எத்தனை முறை படித்திருப்பேன் என்று எனக்கே தெரியாது. ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் புதிதாக படிப்பது போல இருக்கிறது .வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை என்னால் இந்த கதையை பொறுத்தமட்டில் படிக்க முடிகிறது. மேம்போக்காக அல்லது வேறு எதற்காகவோ இதனால் படிக்க முடிவதில்லை .ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் எனது முடிகள் எல்லாம் விரைத்து நின்று விடும் .எனக்கு தெரிந்த மூத்த எழுத்தாளர்கள் எத்தனையோ பேர் இந்த கதையை சிலாகித்துப் பேசி இருக்கிறார்கள் .படிக்கப்பட வேண்டிய கதை .நேற்றைய எழுத்தாளர்கள் இன்றைய எழுத்தாளர்கள் நாளை எழுத்தாளர்கள் எல்லோராலும் இந்தக் கதையைப் படிக்கப் படவேண்டும்.
2) தூரப்பயணம்
பாலியை பார்ப்பதற்காக ரங்கு வருகிறார்.. 300 மைல் இரவெல்லாம் கண்விழித்து சென்னைக்கு விடியற்காலையில் வந்து சேர்கிறான் .
"அட எப்ப !"என்று பாலி வரவேற்றாள். இன்னும் இரண்டு ஆழாக்கு பால் அதிகமாக கொடு என்று வந்தவனை பார்த்துக்கொண்டே பால்காரனுடன் கேட்டு வாங்குகிறாள்.
மதுரையிலிருந்தா வருகிறாய் என்று சொல்லிக்கொண்டு புன்னகை பூத்தாள் .அந்த புன்னகைக்கு தான் எவ்வளவு அர்த்தம் உண்டு .
ஆசிரியர் சொல்வதைக் கேளுங்கள்.
அந்தப் புன்முறுவலுக்கு எவ்வளவோ அர்த்தம் உண்டு . அவளுக்கு எவ்வளவோ தினுசாக புன்னகை பூக்க தெரியும். ஆனால் இந்த புன்முறுவல் இவனுக்குத்தான் .வேறு ஒருவருக்கும் அதை காணவும் அதன் குளுமையில் நனைந்து புல்லரிக்க வோ முடியாது .உரிமை கிடையாது .அதாவது உரிமை உள்ளவனுக்கு கூட முடியாது, கிடையாது என்று அவனுக்குத் தெரியும். யார் என்ன சொன்னாலும் செய்தாலும் யார் என் மீது
உரிமை கொண்டாடினாலும் நான் முழுவதும் உனக்குத்தான் .முழுவதும் தான். ஆமாம் இந்த பொங்கி குலுங்குகின்ற வனப்பும் செழிப்பும் மலர்ந்து விரியும் நெஞ்சமும் உனக்குத்தான் என்று சொல்லுகிற புன்முறுவல் அது .
தெருவில் இருந்த பனி மூட்டத்தில் பளீரென்று அருணோதயம் போல் அந்த முகம் ஒளி வீசிற்று *என்கின்றார் ஆசிரியர்.
வழக்கம்போல் பாலியிடம் எதையோ எதிர்பார்க்கிறான் .இந்த முறை பாலி அதுபோல் எதுவும் செய்ய வேண்டாம் ஊருக்கு கிளம்பி போ என்று சொல்லிவிடுவாள் .இருவருக்கும் வாக்குவாதம் ஆகிறது. பிரிய மனம் இல்லாமல் சோர்ந்து போய் ரங்கு இரவுக்கு ரயில் செல்ல வேண்டிய நிலையில் இருந்த போதிலும் கூட மதிய சாப்பாடு கூட சாப்பிடாமல் அவளிடமிருந்து விடைபெற்று சென்று விடுகிறார்.
மாலையில் வாசலில் பால்மணி கேட்டது. கண்ணை துடைத்துக்கொண்டு பால் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு போனார்
பாலி. இரண்டு ஆழாக்கு போதும் என்று வாங்கிக் கொண்டாள் .
பாலில் ரங்கு சுற்றி சுற்றி வருவது போல் இருந்தது என்பதாக கதை முடிகிறது.
3) ராவணன் காதல் :
ராவணன் ஒரு அழகியை சந்திக்கிறான் புஞ்சி கஸ்தலை என்று அவள் பெயர். மின்னலைப் போல் இருக்கிறார் .அவரது அழகை வர்ணிக்க ஆசிரியர் வர்ணிக்கும் விதம் பாருங்கள் .
அந்த உயரம்தான் அவளை முதலில் கவர்ந்தது. வெறும் உயரமல்ல .உயரத்தின் அளவுக்கு அங்கங்களும் பூரித்து இருந்தன. உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை உற்று நோக்கினான் .அவள் கேசத்தின் சுருளை தோளின் சரிவு ,கண்ணின் வளைவு, முழங்கையின் வளைவு ,முதுகிலும் வளைவு இடையின் வளைவும் முழங்காலின் குழைவு உயர்ந்த பாதங்களின் சரிவு --ஒரே சரிவும் வளைவும் குழைவுமான உடல் அது. ஒளிமயமான தாய் சரக்கில் தெரிந்தவரையில் குறைவுகளை எல்லாம் திரட்டி அவளைச் சமைத்து விட்டான் படைத்தவன்" என்று விமர்சிக்கிறார் .ராவணன் பேசுவதுபோல் ஆசிரியர் பேசி இருக்கிறார்.
அடைகிறான் ,
அனுபவிக்கிறான் .
புஞ்சி கஸ்தலை பிரம்மாவிடம் சென்று முறையிடுகிறாள்.
பிரம்மன் ராவணனை விசாரிக்கிறான் இப்படி செய்யலாமா என்று.
கம்பனுக்கும் ராவணனுக்கும் வாக்குவாதம் நடைபெறுகிறது .எவ்வளவு தவம் செய்தும் உனக்கு உபயோகம் இல்லாமல் போய்விட்டதே ராவணா என்று சொல்லி சாபமிடுகிறார் பிரம்மதேவன் .
இனி எந்த பெண்ணையாவது ,உன்னை விரும்பாத பெண்ணை பலாத்காரம் செய்யும் எண்ணத்துடன் நீ தொட்டால் உன் தலையை துண்டாக வெடித்துவிடும். நீ போகலாம் என்று சொல்கிறார்.
அவன் திரும்பி இலங்கையை நோக்கி பயணமானார் .வானவீதியில் மின்னல் வெட்டும் புஞ்சி கஸ் தலை அங்கே நின்று கொண்டிருந்தாள் .வளைவும் குழை வுமாக.
அவன் வேதனை எழுந்தது .உடல் தீப்பற்றி எரிந்தது .
அவளைப் பற்றப் போனான் .பளிச்சென்று தீ சுட்டார் போல் கையை இழுத்துக் கொண்டார் . கொஞ்சம் தயக்கத்துடன் சிரித்தாள் அவள்.
சிரித்து விட்டு நடந்தாள்.
அவளுடைய பின்னழகை கண்டு கால் ஓடிந்தவன் போல நின்றான் இராவணன்.
அவன் உடல் தீப்பற்றி எரிந்தது என்பதாக கதை முடிகிறது.
4) பொய் :
இந்த கதையில் வரக்கூடிய சாவித்திரி. இளம்பெண் .ஏழ்மையான குடும்பம் என்ற காரணத்தினால் அவளுக்கு வாய்த்தவன் இவளை விட 40 வயது மூத்த கிழவன் 60 வயதுக்கு மேல் அதிகமாக இருக்கும். திருமணம் ஆகிவிடுகிறது .திருமணமாகி மார ரசம் என்கிற விசேஷமான மருந்து வாங்கி உட்கொண்டு வாலிபம் திரும்பப்பெற எத்தனிக்கும் கிழம்.
60 க்கு மேலான ஒருவன் இருபதுடன் சல்லாபம் செய்ய முடியுமா .பொய்யான மருந்தை பொய்யான நேரத்தை உட்கொண்டு தனி ஒருவனாக இருந்து நான்கு வருடத்திற்குள்
இறந்துவிடுகிறான் .
4) சிலிர்ப்பு:
ரயில் வண்டியில் இரண்டு குடும்பங்கள் சந்திக்கின்றனர் .ஒரு பெண் 10 வயது பெண் குழந்தையை அழைத்துக்கொண்டு கல்கத்தா அனுப்புவதற்காக சென்று கொண்டிருக்கிறாள்.ஒருவன் சென்னையில் இருந்து கும்பகோணத்திற்கு வேலையில் இருந்த பத்து வயது பையனை அழைத்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்புகிறார் .
வழியில் ஆண் குழந்தை அப்பாவிடம்ஆரஞ்சு வேண்டும் என்று
கேட்க வாங்கி கொடுக்கிறான் . உறித்து தருகிறேன் சாப்பிடு என்று சொல்ல, இல்லை அம்மாவிடம் போய் அம்மா உறித்து கொடுக்கும் நான் சாப்பிடுவேன் என்று சொல்லி வைத்துக் கொள்கிறான் .
மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பெண் குழந்தை அவள் .தனது குடும்பத்தை காப்பதற்காக வேண்டி தொலைதூரம் சென்று கல்கத்தாவில் ஒரு வீட்டுக்கு வேலைக்கு செல்கிறாள் .
கும்பகோணம் வருகிறது. ஆண்குழந்தை பிரியும் வேளை வருகிறது. ரயிலை விட்டு இறங்கிய அவன் மீண்டும் சென்று அந்த பெண்
குழந்தையிடம் தான் பத்திரமாக வைத்திருந்த ஆரஞ்சு பழத்தை கொடுத்து விட்டு பிரிகிறார் .
அன்பு ஒருவரை எப்படி எல்லாம் ஆட்டுவிக்கும் ,எப்படி எல்லாம் காட்சி செய்யும் என்பதை ஆசிரியர் ஆங்காங்கே அவரின் அற்புதமான வரிகளில் நமக்கு உணர்த்திச் செல்கிறார் இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு.
இந்த கதையை குறித்து சிறுகதை எழுதுவது எப்படி என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பார் கீழ்க்கண்டவாறு:
'ஒரு நாள் நான் ரயிலில் போய்க்கொண்டிருந்தபோது கச்சலும் கறுப்புமாக நாய் பிடுங்கினா போன்ற ஒரு பத்து வயது பெண் குழந்தையுடன் யாரோ பணக்கார அம்மாள் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தாள் .பள்ளிக்கூட விடுமுறைக்கு மூத்த அக்காளின் ஊரில் தங்கிவிட்டு ஊர் திரும் புகிறது அந்தப் பெண் குழந்தை .
அந்தப் பெண் குழந்தையை பார்த்துக் கொண்டு வந்தேன் .அந்த ஆறு மணி நேர பயணத்தில் ஒன்றும் வேறொன்றும் வேண்டும் என்று கேட்காமல் ஆசைப்படாமல் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லிக் கொண்டு வந்தது அது.
எனக்கு உணர்ச்சி வசப்படுகிற இயல்பு அதிகம் .அந்தப் பெண் தன் பொறுமையினாலும் பொறுப்பினாலும் எதையும் சமாளிக்கும் எதையும் ஆளும் என்று தோன்றிற்று .ஓடி ஆடி கத்தி கூச்சலிட்டு விளையாடிப் பிதற்ற வேண்டிய வயதில் அது உலகத்தின் சுமைகளையும் கவலைகளையும் தாங்கிக் கொண்டிருப்பது போல் எனக்குத் தோன்றிற்று .எனக்கு பயமாக இருந்தது .வயிற்றை கலக்கியாது என்று எழுதி இருக்கிறார்.
5)சன்பகப் பூ:
இளவயது செண்பகம்.தோட்டத்து கிணற்றில் குளித்துக் கொண்டிருக்கிறாள்.
அப்போது அவளது கணவன் இறந்து விட்டதாக செய்தி வருகிறது. அக்கம்பக்கத்தில் உள்ள குங்கும கிழவிகள் வந்து கட்டி புலம்பல் செய்கிறார்கள்.
பதினெட்டு வயது கூட முடியவில்லை. இளம்வயது .அழகோ அழகு .இவளுக்கு இப்படி ஆகிவிட்டதே என்று ஊர்மக்கள் கிராம மக்கள் எல்லாரும் கண்ணீர் சிந்துகிறார்கள் .சென்னையில் இருக்கும் கணவன் வீட்டுக்குஅழைத்துச் செல்கிறார்கள் .திரும்ப வருகிறார்கள். காரியமெல்லாம் ஆகிறது .
அப்போது கணவனின் அண்ணன் இவளுக்கு மேலும் படிக்கவும் ஏற்பாடு செய்திருக்கிறேன் என்று சொல்கிறான். பார்த்துக்கொண்டிருந்த கிழவரும்,கிழவியும் ஒப்புக்கொள்கிறார்கள் .இவள் கிராமத்துக்கு வந்து விடுகிறாள்.
30 நாள் காரியம் எல்லாம் ஆன பிறகு ஒருநாள் செய்தி வருகிறது .கணவனின் அண்ணன் வருகிறான் கிராமத்திற்கு.
அழைத்துப்போக.
புறப்படுகிறது மாட்டு வண்டி மாலையில்.வழியனுப்ப விடைகொடுக்க கிழவரின் மனைவி கை அசைக்கபெண் வண்டியில் ஏற்றி முன்னால் இருந்த மூட்டையை நகர்த்தி ஏற இடம் பண்ணினால் மூத்தார் .
நாணம் புன்னகை பூக்க பெண் வண்டியில் ஏறிச் போயிட்டு வரேன் தாத்தா என்கிறாள் அவள் .
வண்டி மறைந்தது .கிழவி ஹாலில் நின்று உரக்கக் கத்தினார் .
"ரத்த பூவாம். எல்லா மூக்கும் ரத்தம் கொட்டாது ,சண்பகப்பூ மோந்து பார்த்தா. என்ன சிரிப்பு .என்ன நெளிசல் .;அவள் அகமுடையான் உயிரோடு தான் இருக்கான். அதான் நெளியறது .குழந்தையை பார்க்கலே" என்று கிழவி கூறுகிறாள்.
கோபத்தில் உருமினார் கிழவர் என்றாலும் அவர் மனதிற்குள் கிழவியின் குறி தப்பாது என்பது அவரது அனுபவம் என்பதாக கதை முடிகிறது.
6)கைடு:
பிரம்ம முகூர்த்த வேளை .தெருவெல்லாம் வெறிச்சோடி கிடக்கிறது காகம் மட்டும் திடீரென விழித்திருந்து கத்துகிறது. அப்பொழுது காவாய் மீது படுத்திருந்த ஒரு மனிதன் எழுந்து சோம்பல் முறித்து உட்கார்ந்து அப்படியும் இப்படியும் பார்த்துக்கொண்டிருக்கிறான் .
சிறிது நேரம் கழித்து ஒரு மனிதன், கிராமத்து மனிதன் போல் ஒருவன் வருகிறான் .ஒரு விலாசத்தில் பெயர் சொல்லி எப்படி போகவேண்டும் என்று கேட்கிறார் .ஐயோ நீ வழிதவறி வந்து விட்டாயே இப்படி இருக்கலாம் அப்படி இருக்கலாம் என்று ஆயிரம் உபதேசம் சொல்லிவிட்டு பஸ்ஸில் வந்து இருந்தால் இப்படி போய் இருக்கலாம். ட்ரெய்னில் வந்துவிட்டாய் ரயிலில் வந்து விட்டாய் இவ்வளவு தூரம் வீணாக நடந்து வந்து விட்டாய்.வேறு ரிக்ஷா போகலாமே நீ .
மூன்று ரூபாய் ஆகுமா என்று வாயை பிளந்தவன் சும்மா நின்றான்.
பிறகு ஒருவழியாக அப்படி போய் திரும்பி ரைட்ல போயி போயி லெப்ட்ல போய் நேரா போயி ஒரு கோயில் வரும் .அந்த பச்சை கோவில் போயிட்டு , இன்னொரு கோயில் வரும் அந்த வழியே போக கூடாது, பச்சை பெயிண்ட் அடித்த கோயில் வழியாக போன பின்னாடி தான் நீ சொல்ற சந்து வரும், என்பதாக சொல்லுகிறான் .
அவனுக்கும் புரிந்து புறப்பட யத்தனிக்கும் அவ்வளவுதானா என்று கேட்கிறான் .
என்ன தானா என்று இவன் கேட்கிறான். கவனிப்பா என்று இவன் சொல்கிறான். அவன் திகைக்கிறான் .
அப்போது அவன் சொல்லுகிறான் தெரிந்த ஊர் தெரியாத ஊருக்கு போறீங்க உங்களுக்கு தெரிந்த விஷயம் தெரியாத விஷயமாக இருக்கக்கூடிய கைடு தான் சொல்றா ,அவனுக்கு அள்ளி அள்ளி கொடுக்குறீங்க எனக்கு ஏதாவது கொடுத்து விட்டு போ என்று வாய்விட்டு கேட்கிறான்.
அவன் நாலனா தர,
ரெண்டு இட்லி எட்டணா ஒரு காபி எட்டணா என்று தனது வழிகாட்டி தன்மைக்கு கூலி தீர்மானிக்கிறான்.
நான் நினைத்துப் பார்க்கிறேன் .இரண்டு இட்லி விலை இன்று 50 ரூபாய் .2 இட்லி விலை 50 காசு அன்று.
காலம்தான் பொருளின் விலையை நினைக்கிறதோ என்னவோ.
7) ....ப்பா:
இரவு பத்து பதினொரு மணி அளவில் தூக்கம் வரவில்லை அவனுக்கு.
நாய் குறைத்துக் கொண்டிருக்கிறது. தூக்கக்கலக்கத்தில் இவனுக்கு நாய் ஆங்கிலம் பேசுவது போல் இருக்கிறது.
தூக்க கலக்கம் எல்லாம் போன பிறகு மீண்டும் உற்று கவனிக்கிறான் ,உற்று கேட்கிறான் .அப்போது நாய் நன்றாக ஆங்கிலம் பேசுவது கேட்கிறது. இவன் வாசக் கதவை திறந்து வெளியே வந்து நாயிடம் பேச ஆரம்பிக்கிறான் .இதன் குறைகளெல்லாம் சொல்லுகிறது இவன் அதனிடம் தர்க்கம் செய்து கொண்டிருக்கிறான் .
டெரிதொரியல் இம்பேரதிவே (Territorial Imperative) என்று நாய் ஆங்கிலத்தில் கூறுவதாக நினைத்துக் கொள்கிறார் வீட்டுக்காரர் .
இந்த ஏரியாவுக்கு நான் தான் அதிபதி. இந்த இடத்திற்கு நான் தான் .இந்த தெருவில் எல்லாமே என்ஆளுகைக்கு உட்பட்டது என்று அர்த்தம் தொனிக்க நாய் கூறுகிறது .
நான் ஒரு கேள்வி கேட்கிறேன் நாயென் எங்கே சொல்வேன் என்று ஒரு பாட்டில் வருகிறதாமே அதுக்கு என்ன அர்த்தம் என்று கேட்பது நாய் .
நாயேன் ஏழை என் பால் தயை செய்வாயே என்று ஒரு பாட்டில் வருகிறதே அது யார் எழுதியது என்று நாய் கேட்க, யோசனை செய்து பார்க்கிறான் .
பிறகு நினைவுக்கு வருகிறது. பாபநாசம் சிவன் எழுதிய பாட்டாக.இருக்கலாம் என்று இவன் சொல்கிறான் .
நாய் இன்னொரு கேள்வி கேட்கிறது. *நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு* என்றெல்லாம் கட்சியில் மாறுகின்ற மனிதர்களை திட்டுகிறார்கள் அல்லது எங்களது வம்சத்தை திட்டி
இருக்கிறார்களா? நாங்கள் என்ன அவ்வளவு மோசமாகவா இருக்கிறோம் என்று கேள்வி கேட்பது நாய் .
ஆசிரியர் அந்த காலத்திலேயே கட்சி மாறி மாறி செல்பவர்களை பற்றி மிகவும் கேவலமாக நாய் என்று திட்ட பட்டதாக குறிப்பிடுகிறார் .
நாயும் பிழைக்குமோ இந்தப் பிழைப்பு. நல்ல சொல்லாடல் .நல்லகாலம் ஆசிரியர் இப்போது இல்லை .இப்போது இருக்கிற நிலையில் பார்த்தால் இன்னும் எதை எதை ஒப்பிட்டு பேசுவாரோ தெரியவில்லை .
(இலக்கிய சிந்தனை பரிசு பெற்ற சிறுகதை இது)
8) விஞ்ஞான வெட்டியானும் ஞானவெட்டியானும்:
நல்லகாலம் .ஆசிரி யர் இப்போ. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் நடந்த கதையாக ஆசிரியர் எழுதுகிறார் .
தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க சென்ற ஒரு அப்பாவி ஏழை கிராமத்து விவசாயியின் மனைவி ஏற்பட்ட கதி .அவளுக்கு ஒரு கால் எடுக்கிறார்கள். எடுத்து காலை மீண்டும் எடுக்கிறார்கள்.
முதலில் முழங்காலுக்குக் கீழே எடுக்கிறார்கள் .பிறகு தொடை வரை காலை எடுக்கிறார்கள் .அதற்கு அம்புடேஷன் என்று பெயர்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறை காலையிலும் மாலையிலும் பெரிய டாக்டர் வருவார்கள் .கூடவே சிறிய டாக்டர்களும் வருவார்கள் .ஒவ்வொரு டாக்டர் வரும் போதும் ஒவ்வொரு முறை டாக்டர் வரும்பொழுதும் விசிட்டிங் சார்ஜ் என்று தனியாக தர வேண்டுமாம் என்பதாகத் தெரிகிறது .
இதுவரை 42 ஆயிரம் ரூபாய் செலவாகி இருக்கிறது .என்ன செய்வது என்று தெரியவில்லை .பெரிய மகளுக்கு கல்யாணத்திற்காக வைத்திருந்த காசு இப்படி செலவாகி விட்டது என்று கூறுவான். டாக்டர் விஞ்ஞானம் படித்து இருக்கிறார். அவருக்கு விஞ்ஞான வெட்டியான் என்று பெயர்.
வெட்டிய காலை
எடுத்துக்கொண்டு சுடு காட்டில் கொண்டு போய் புதைக்க வேண்டும்.அதற்கு வெட்டியான் சார்ஜ் போடணும். மருத்துவமனையில் 25 ரூபாய் வெட்டியான் சார்ஜ் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். ஆனால் அதைக் கொண்டு செல்பவனுக்கு கொடுத்த கூலியோ 15 ரூபா.
அதையும் இதையும் ஆசிரியர் ஒப்பிட்டு தான் விஞ்ஞான வெட்டி ஆளுக்கு இவ்வளவு காசு சுடுகாட்டு ஞானவெட்டியானுக்கு இவ்வளவு காசு என்று அழகாக கதையை பின்னியிருக்கிறார் .
ஆசிரியர் இப்பொழுது இருந்திருந்தால் பெரிய பெரிய மருத்துவமனைகள் எல்லாம் எப்படி கொள்ளையடிக்கிறார்கள் எப்படி காசு வசூல் செய்கிறார்கள் என்பதை பார்த்து இரத்தக் கண்ணீர்
வடித்திருப்பாரோ என்னவோ தெரியவில்லை.
சிறுகதை எழுதுவது எப்படி என்று ஆசிரியர் கதைகளை படித்தாலே நாம் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக