குற்றபரம்பரை - வேல ராமமூர்த்தி
வேல ராமமூர்த்தி அவர்கள் எழுதிய குற்றபரம்பரை மிகவும் அற்புதமான நாவல், வாசிப்பவரின் கவனத்தை சிதற விடாமல் கதையை நகர்த்தி செல்லும் விதமும் அற்புதம், மாந்திரீகமும் யதார்த்தமும் சேர்ந்து நாவலுக்கு மேலும் அழகூட்டுகின்றன. கதையின் தொடக்கத்தில் கள்ளர்கள் தங்கள் மக்களோடு குதிரைகாரனிடமிருந்து தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள காட்டில் பதுங்கி இருக்கின்ற பொழுது நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் கண்முன்னே வந்து சென்று பயத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்துகின்றது.
கூழாணி கிழவி அற்புதமான ஓர் கதாபாத்திரம், கூழாணி கிழவி தன் மகன் வேயன்னாவையும் தன் சொந்த சனங்களையும் தன் அனுபவங்கள் மூலமாக வழிநடத்தி செல்லும் விதம் பல கூழாணி கிழவிகளையும் நினைவுக்கு கொண்டுவருகின்றாள்.
குதிரைக்காரனிடமிருந்து தப்பித்து கொள்ள அனைவரும் சிதறி ஓடும் பொழுது வேயன்னாவின் மூத்த மகன் சேது வேறு திசை நோக்கி ஓடி குதிரைக்காரனிடம் மாட்டி கொள்கின்றான்.
தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள தப்பித்து சிதறி ஓடிய கூட்டம் ஆற்றங்கரையில் அடிபட்டு கிடக்கும் பொழுது அவ்வழியே வந்த பெரும்பசேரி சிறுவன் வையத்துறை தன் ஊர் மக்கள் உதவியோடு கொம்பூதியில் குடி அமர்த்துகிறான். வேயன்னாவும் கொம்பூதி சனமும் வையத்துறைக்கும் பெரும்பசேரி சனத்துக்கும் நன்றி கடன் பட்டவர்களாக தங்களால் முடிந்த உதவிகளை பெரும்பசேரி மக்களுக்கு செய்கின்றனர், பிரச்சனைகளின் போதும் துணை நிற்கின்றனர்.
வேயன்னா தலைமையில் கொம்பூதி கிராமம் சுற்றியுள்ள பல கிராமங்களில் கொலை கொள்ளையில் ஈடுபடுகின்றனர், கொம்பூதி கிராமம் கொள்ளையடித்து வந்த அனைத்து விலை மதிக்கமுடியாத பொருட்களையும் பெருநாழி பச்சைமுத்துவிடம் ஒப்படைத்து விட்டு தானியங்களை மட்டுமே வாங்கி கொள்கின்றனர்.
கொம்பூதி கிராம பெண்கள் எல்லோரும் இரவு முழுக்க கண் விழித்து களவுக்கு போன ஆம்பிளைகளுக்காக காத்து கிடக்கும் பொழுது கவலை மறந்து விளையாடுகின்றனர், களவுக்கு போன கொம்பூதி இளவட்டம் வேயன்னா தலைமையில் கொம்பூதிக்கு திரும்பியதும் ஊரே இருளப்ப குலசாமி முன் நின்று காணிக்கை செலுத்துகின்றனர்.
பின்னாளில் நம்பிக்கை துரோகிகளால் மேற்கொள்ளப்படும் சதி திட்டம் சாதி சண்டையாக மாறி, மிகப்பெரிய இழப்பினை இரண்டு ஊர் மக்களும் சந்திக்கின்றனர்.
கூழாணி கிழவி வேயன்னாவிடம் :
"வேயன்னா... அவங்களை தடுக்காதே... போக விடு ! யானைக்கு விரிப்படும் கொம்பூதிச் சேலை முந்தி ஒரு பூனைக்கு எப்படி சொந்தமாகும் ?" (439)
கூழாணி கிழவியின் இந்த வார்த்தைகள் கொம்பூதிகாரர்களை யானை என்றும், பெரும்பசேரிகாரர்களை பூனை என்றும் பார்க்கும் விதம், எவ்வளவு நட்பாக பழகினாலும் வேறு சாதி காரன் நம்ம வீட்டு பெண்ணை காதலிக்கிறான் என்று தெரிந்தாலே வெளிப்படும் சாதி வெறியும், மனதில் அவன் நம்மை விட தாழ்ந்தவன் என்னும் எண்ணமும் மிகவும் கொடுமையானது கேவலமானது.
குதிரைக்காரனிடம் மாட்டிக்கொண்ட சேது பின்னாளில் வெள்ளைக்கார தம்பதியின் வளர்ப்பில் போலீசாக கொம்பூதிக்கு திரும்பும் பொழுது, சேதுவால் தன் சொந்த சனங்களுக்கும் குடும்பத்திற்கும் நேர்ந்த விபரீதம் மிகவும் கொடுமையானது.
தங்கள் நிலங்களையெல்லாம் பறிகொடுத்து விட்டு கூலிகளாக நாளெல்லாம் உழைத்தும் சரியான கூலி இல்லாமல், பொது கிணற்றில் தண்ணீர் எடுக்க கூட உரிமை இல்லாமல் தீண்டப்படாதவர்களாய் தங்கள் உரிமை இழந்த மக்களை ஊரை விட்டு ஒதுக்கி சேரியில் தள்ளியது யார் தவறு?...
உழைப்பவன் ஏமாற்றப்படுபவனாக சேரியிலும், கொள்ளை, கொலை செய்பவன், வேலை செய்யாமல் உட்காந்து பெருமை பேசுபவன் ஊர்களிலும் சகல வசதிகளோடு இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
பெரும்பச்சேரியில் வாழும் மக்களின் அவலநிலையையும், கொம்பூதி கிராமத்தின் வீரத்தையும், வாக்கு மாறாதவர்கள் கள்ளர்கள் என்றும் நாவல் முடிகின்றது. தீண்டாமை கொடுமை, வீரம், காதல், கொலை, கொள்ளை, பல்வேறு தேடல் மற்றும் எதிர்பார்ப்பு என அனைத்தையும் பேசும் குற்றபரம்பரை. கண்டிப்பாக வாசிக்கப்பட்டு விவாதிக்க பட வேண்டிய நாவல்.
மொத்த பக்கங்கள்: 447
- Micheal
நன்றி :
திரு மைக்கேல்
முகநூல்
மற்றும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக