7 ஜன., 2021

இன்றைய திருமந்திரம்

திருமந்திரம் - பாடல் #1017: நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

மேலறிந் துள்ளே வெளிசெய்த வப்பொருள்
காலறிந் துள்ளே கருத்துற்ற செஞ்சுடர்
பாரறிந் தண்டஞ் சிறகற நின்றது
நானறிந்து உள்ளெழ நாடிக்கொண் டேனே.

விளக்கம்:

ஆகாயத்திலுள்ள காற்றை அறிந்து அதை தமக்குள் தலை உச்சி வழியாக உள்வாங்கி மூச்சுப் பயிற்சிகளின் வழியாக மூலாதாரத்திற்கு கொண்டு சென்று அங்கிருக்கும் குண்டலினி சக்தியை எழுப்பினால் அது அக்னிச் சுடராக மேலெழும்பும். உலகத்தைத் தாண்டி அண்டசராசரங்களையும் தாண்டி எல்லைகளற்று பரந்து விரிந்து இருக்கும் பேரொளியான இறைவனை எமக்குளிருந்து எழும்பிய குண்டலினியின் அக்னிச் சுடராக யான் அறிந்து கொண்டு அதை தேடி அடைந்தேன்.

கருத்து: உலகத்தைத் தாண்டி அண்டசராசரங்களையும் தாண்டி எல்லைகளற்று பரந்து விரிந்து இருக்கும் பேரொளியான இறைவனே உயிர்களுக்குள் இருக்கும் குண்டலினியின் அக்னிச் சுடராகவும் இருக்கின்றான்.

குறிப்பு: வெளியில் நவகுண்டத்தில் அக்னி வளர்த்து செய்யும் யாகத்தைப் போலவே தமக்குள்ளும் மானசீகமாக அக்னியை வளர்த்து யாகம் செய்து அண்டங்களைத் தாண்டி நின்ற இறைவனின் பேரொளியாக அறிந்து கொள்ளலாம்.

நன்றி :

கருத்துகள் இல்லை: