5 மார்., 2021

நூல் நயம் : எஸ்ராவின் "சஞ்சாரம்"

சஞ்சாரத்தில் இருந்த பொழுது.... !

சஞ்சாரம் நாவல் வாசித்து முடித்தேன். ஒவ்வொரு முறை எஸ். ரா வின் புத்தகத்தை வாசித்து முடிக்கையில் விட்டில் பூச்சிகள் அலைவதைப் போல மனதில் நினைவுகளும் வலிகளும் அலைந்து கொண்டிருக்கிறது. தீடீரென்று ஊரில் யாராவது நாதஸ்வரம் வாசித்திருக்கிறார்களா?  என்று யோசித்துப் பார்த்தேன். கோவில் கொடையில் நாயனம் வாசித்தித்தது நினைவிற்கு வந்தது. மற்றபடி எங்கள் ஊர் முருகன் கோவிலில் அன்றாடம் சிறிது நேரம் ஒருவர் நாயனம் வாசிப்பார் . மற்றபடி நாயனம் வாசிக்கும் கலைஞர்களைப் பற்றிய ஒரு அறிவும் எனக்கில்லை. கரகாட்டக்காரன் திரைப்படத்தில் கவுண்ட மணி மேளம் வாசிப்பார்  செந்தில் நாதஸ்வரம் வாசிப்பார். அந்தளவே எனக்கு பரிச்சயம். ஆனால் நாதஸ்வரம் வாசிக்கு கலைக்கு பின்னர் இப்படியான மனிதர்களின் அவல வாழ்க்கை ஒளிந்து கொண்டுள்ளதை உணர முடிகிறது.

 சாலையில் எதாவது ஒரு நிகழ்ச்சியில் நாம் கடந்து போகையில் நாதஸ்வரம் வாசிக்கும் யாரையாவது பார்த்தால் வெள்ளை வேஷ்டி சட்டை,  பாகவதர் மாதிரி படிய வாரிய தலை முடி,  வாயில் வெற்றிலை பாக்கு சிவப்புக் கறை,  கையில் மோதிரம், நகை தவிர வேறெதுவும் தெரியாது. ஆனால் அந்த இசை அதன் புனிதம்,  ராக கீர்த்தனைகள்,  அந்த கலைஞர்களின் திறமை என நாவலில் எஸ். ரா மாபெரும் பிரமாண்ட சித்திரமே வரைந்து காட்டுகிறார். சிட்டுக் கட்டு களைவதைப் போல அல்லது பிக்காஸோவின் துயர ஓவியத்தைப் போல சிதில மடைந்த வாழ்வே அந்த மனிதர்களுக்கு வாய்க்கப் பெற்றிருப்பது சமூக அநீதி  .  அந்த மங்கல இசையில் எத்தனை சுகம் இருக்கிறது .  அது ஆன்மீக இசை என்றில்லாமல் சக மனிதனின் உணர்வைப் போலவும் ஆங்காங்கே குடும்ப நிகழ்ச்சிகளில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது . 

நாவலை வாசித்ததும் எனக்கு ஏற்பட்ட கேள்விகள் இவை :

1. நாயனம் அல்லது நாதஸ்வரம் வாசிக்கும் மனிதர்களை ஏன் இவ்வளவு இழிவு படுத்துகிறோம்? 

2.  கலை என்பது அனைவருக்கும் பொதுவானது, இசையும் அதுதான் ஆனால் சாதியை,  மதத்தை ஏன் அதில் கலந்து அந்த கலைஞர்களை அவமதிப்பு செய்கிறோம்? 

3. பெரும்பாலும் இந்த மாதிரியான பண்பாட்டுக்கலைகள்,  திரைப்படம் வாயிலாக மட்டுமே நாம் அறிந்திருக்கிறோம்?  ஏன் கல்வியில் பாடத் திட்டத்தில் இதைப் பற்றிய பாடங்கள் விழிப்புணர்வுகள் ஏற்பட வில்லை? 

4.  வரலாற்ற்றில் முக்கியமாக திறமை வாய்ந்த எத்தனையோ நாயனக் கலைஞர்கள் இருந்திருக் கிறார்கள்... மேலும் அவர்களில் திறமை சாகசம் நிகழ்த்தி சாதித்து உள்ளார்கள்... அப்படிப்பட்ட மனிதர்களின் வரலாறு முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா? 

5. நவீன இலக்கியங்கள்,  சினிமா,  கோவில் நிகழ்ச்சகளில் இப்படியான பண்பாடு முக்கியம் வாய்ந்த இசைக் கருவியும் அதை வாசிக்கும் மனிதர்களும் ஊக்குவிக்கப் படுகிறார்களா?  

6. நவீன தொழில் நுட்ப வளர்ச்சியடைந்து விட்ட இன்றைய சூழலில்  அரசும் சமூகமும்,  ஏன் மக்களும் கூட நாதஸ்வரம் வாசிக்கும் மனிதர்களையும் அவர்களின் நலிவடைந்த தொழிலையும்,  துயர வாழ்க்கைப் பற்றி யோசித்திருப்பார்களா? 
  
7. முறையான புத்தகங்கள்,  ஆவணப் படங்கள்,  திரைப்படங்கள் நாதஸ்வரம் வாசிக்கும் மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றிய பதிவு செய்தார்களா? 

8. இன்றைய நுகர்வு கலாச்சார சமூகத்தில் இந்த மாதிரியான பண்பாடு கலைகள் ஊக்குவிக்கப் பாடுவதின் அவசியம் என்ன? 

இந்த மாதிரி அதிகமாக கேள்விகள் மனதில் எழுகின்றன.  நமது பண்டைய தமிழ் வரலாற்றில் நாயனம் பற்றிய தொன்மங்கள் காணப்படுகின்றன. S. ரா வே நாதஸ்வரம் உருவான விதத்தை சொல்கிறார். 

அதாவது சூரபத்மனை முருகர் வதம் செய்தவுடன் முசுக்குந்த மகாராஜா தேவசேனாவை முருகப் பெருமானுக்கு திருப்பரங்குன்றத் தில் மணம் முடித்து வைக்க இந்திரன் திட்டமிட்டதைச் சொல்லி அழைத்து வர ஏற்பாடு. அப்படி அந்த கல்யாணத்தில் கலந்து கொள்ள முசுகுந்த மகாராஜா கொக்கரை, படகம்,  பேரி,  குடமுழா,  நாதஸ்வரம் போன்ற இசைக் கருவிகளை இசைத்துக் கொண்டு போயிருக்கிறார்கள். அப்படி கொண்டு சென்ற வாத்தியக் கருவிகளில் ஒன்று தான் நாதஸ்வரம் என்று பழங்கதை ஒன்று குறிப்பிடுகிறார். 
ரத்தினம் மிக இயல்பாக நாதஸ்வர கலைஞனாக உருவாக்கப் பட்டிருக்கிறார். உண்மையில் அவமானப் படுத்தப்பட்ட,  ஆதரிக்கப் படாத கலையின் வலியும் வேதனையும் கொண்ட கலைஞனின் குரலாகவே பக்கிரி வருகிறான் .

      நாவலின் தொடக்கத்தில் சூலக்கருப்பசாமி கோவில் முன்பாக அவர்கள் அவமதிக்கப் படுவது நாம் என்றோ வாழ்வில் அந்த சம்பவங்களை பார்த்திருப்போம் ஆனால் எதுவும் செய்யாமலே அவர்களை ஆதரிக்காமல் கடந்து வந்திருப்போம். அதுமட்டுமில்லாமல் கரகாட்டம்,  நாடகக் கலைஞர்கள், யானைப்பாகன் என பல மனிதர்களை பற்றி சொல்லிக் கொண்டே போகிறார். கிட்டத்தட்ட இன்றைக்கு வாசிக்கையில் இது ஒரு பின் நவீனத்துவ நாவல் என சொல்ல முடித்தாலும் இந்த புத்தகம் சொல்கிற உண்மை என்றைக்கும் பொருந்தும்தான். ஏன் அனைத்து கலைகளுக்கும்,  புறக்கணிக்கப்பட்ட கால மாற்றத்தால் நலிவடைந்து போன தொழிற் கலைஞர்களும்,  நாட்டுப் புற கலைஞர்களின் வாழ்க்கையும் கூட இப்படியான நிலைமைக்கு உள்ளாக்கப் பட்டிருப்பதும் நிதர்சனம். கிராமப் புறங்களில் இன்றும் கோவில் திருவிழாக்களில் நாதஸ்வரம்,  வில்லுப் பாட்டு,  கரகாட்டம்,  தெருக்கூத்து போன்ற பண்பாட்டுக் கலைகள் மிக சொற்பமாகவே வழக்கத்தில் உள்ளன  . 

சமகாலத் திரைப்படங்கள் கிராமப் புற வாழ்வியலை சாதிக் கொடுமைகளை,  அங்குள்ள நில ஆக்கிரமிப்பு மற்றும் கார்பொரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தை பற்றி பரவலாக பேச ஆரம்பித்து விட்டன. ஆனால் கிராமியக் கலைகள்,  நாட்டுப் புற கலைஞர்களின் அவல வாழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்றால் இல்லைதான் என்று சொல்ல வேண்டும் . நாடோடித் தானமான அவர்கள் வாழ்க்கை வறுமை,  என நிலைகொள்ளமைதான் இந்த படைப்பு சொல்கிறது . 
அவள் பெயர் தமிழரசி திரைப்படத்தில் தெருக்கூத்து நடக்கும் காட்சிகள் தத்ரூபமாக காட்டிஇருப்பார்கள். மழை இல்லாமல் தவிக்கும் மக்கள் கூத்து நடந்தால் மழை வந்து விவசாயம் தளைக்கும் என்று நம்புகிறார்கள். மேலும் கூத்து கட்டுபவர் வீடு வீடாக சென்று யாசித்துதான் சாப்பிட வேண்டும் என்கிற அவல நிலையும் அந்த படத்தில் சொல்லப் பட்டிருக்கும். படத்தின் இயக்குனர் மீரா கதிரவன் தெருக் கூத்து நடத்தும் மனிதர்களை காட்சிப் படுத்தியதில் மிக முக்கியமானவர் என்றே சொல்ல வேண்டும் . 
இதைப் போல பண்பாடு ஆய்வாளராக எஸ். ரா இந்த கலையைப் பற்றி ஆராய்ந்து ஆழமாக விளக்குகிறார். 
கிபி 1311ம் ஆண்டு மாலிக்கபூர் தமிழ்நாட்டை நோக்கி படையேடுத்த போது  அரட்டானம் சிவன் கோவிலை கொள்ளைஅடித்ததாகவும் அந்த கரிசல் கிராமத்து பாரம்பரிய கலைஞரான லட்ச்சய்யா கல்யாணி ராகம் வாசித்து கோவில் கற் சிலையால் செய்யப்பட்ட கல்யானையின் காதுகளை  அசைய வைத்ததாக காற்றில் இலைகள் போல அசைய  வைத்ததாக ஒரு சம்பவத்தைப் பற்றி நினைவு கூறுகிறார். பின்னர் அதனால் மனம் மாறிய மாலிக்கபூர் கோவிலை விட்டுவிட்டு லட்சய்யாவை உடன் அழைத்து டெல்லி போய்விட்டதாக கதை . இது போன்ற வரலாற்று சிறப்பு மிக்க சாகசங்களை நாதஸ்வர வித்துவான்கள் நிகழ்த்தி நமது பண்பாடு கலைக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். 

ஆவணம் படம் எடுப்பதைப் போல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அந்த கரிசல் நிலைத்து கலைஞர்களை படைப்பாக்கி இருக்கிறார்.  

சமகால அரசியல் சமூகப் பிரச்சனைகளை மட்டுமே பேசுகிற எழுத்து உலகில் இப்படியான வரலாற்று ஆவணப் படைப்புகளும் கண்டிப்பாக அவசியதான். அடுத்த தலைமுறைக்கு நமது கலாச்சார சிறப்புகளையும் பண்பாடு வளர்ச்சியையும் நாம் சொல்லிக் கொடுக்கிற அதே சமயம் அதி நுட்ப கால மாற்றத்தில் வீழ்ச்சி அடைந்த கலைகளின் நிலையை வேதனையுடன் சொல்லாத்தான் வேண்டியுள்ளது . அதுவும் எழுத்தாளன் என்னும் கலைஞரின் பணி.   
நாவலில் பல இடங்களில் நாதஸ்வரம் வாசிக்கும் கலைஞர்கள் அவமதிப்புக் குள்ளாகிறார்கள்.  இன்றைய வாழ்க்கையில் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் மேற்கத்திய பாணியில் அல்லது சினிமாத்தனமான கொண்டாட்டங்கள் பெருகி போய்விட்டன.  ட்ரம்ஸ்,  நடனம்,  கும்பலாக சேர்ந்து கொண்டு ஆடிப் பாடி மகிழ்கிறார்கள் . ஆனால் கூடவே இந்த மேளம்,  நாதஸ்வர கலைஞர்களை ஏற்பாடு செய்து அவர்களை அவமானப் படுத்துகிறார்கள் .  வெளி நாடு போய் வாசிக்க செல்லும் ரத்தினம்,  பக்கிரி, பழனி குழுவினர் எத்தனை இடர் பாடுகளை சந்திக்கின்றனர் என்பது கண் முன்னே காட்சியாக விரிகிறது. பலவிதமாக வாழ்ந்து மறைந்த நாதஸ்வர வித்துவான்களின் வாழ்க்கை சொல்லப் படுகிறது. பெரும்பாலும் நாதஸ்வர கலைஞர்கள் போதைப் பழக்கம் கொண்டவர்கள் தான்.  ஆனால் விசித்திரமான பழக்கம் கொண்ட மனதைப் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். தன்னாசி,  லட்சுய்யா,  தெக்கரை சாமிநாத பிள்ளை என இன்னும் நிறைய. ஒரு அத்தியாயத்தில் சாமி நாத பிள்ளை வாத்தியம் வாசிக்கையில் தங்கம் உருகி சாலையில் போவதை போல இசையும் வெயிலும் ஓடுவதைப் போன்ற வாசிக்கையில் உண்மையிலேயே அந்த இடத்திற்கு சென்று இசையில் நனைவது போல உள்ளது. 

1. தெக்கரை சாமிநாத பிள்ளை, 
2.  திருவாடுதுறை ராஜ ரத்தினம் பிள்ளை
3. குழிக்கரை பிச்சையா,  
4. நல்லடம் சண்முக சுந்தரம்,  
5. வல்லம் தட்சிணாமூர்த்தி 
6. மேலையூர் தன்னாசி 
7. வித்துவான் ஏ. என். எஸ் 
8. திருவெண்காடு சுப்பிரமணியன் பிள்ளை 
9. றி. ழி. வீருசாமிப் பிள்ளை 
10. திருவீழிமலை சகோதரர்கள் 
11. செம்பனார் கோவில் சகோதரர்கள் 
12. காருக் குறிச்சி அருணாச்சலம் 
13. கழுகுமலை சுப்பையா 
14. சிங்கிகுளம் கணேசன் 
15. இருக்கன்குடி  முத்து மாணிக்கம் 

இவை யாவும் புத்தகத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் நாதஸ்வரக்கலைஞர்கள். அனைவரும் தெரிந்து கொள்ளக் கூடிய ஆவணப் பதிவு இது. 
மேலும் கீழ்க் கண்ட ராகங்களைப் பற்றியயும் சுவைபட கூறுகிறார் எஸ். ரா :
1. கல்யாணி 
2. தன்யாசி
3. தோடி ராகம் 
4. ரஞ்சனி 
5. மல்லாரி 
6. நாட்டைக் குறிஞ்சி 
7. கரஹரப் பிரியா 
8. தர்பாரி வர்ணம் 
9. சக்கரவாஹம் 

எத்தனை ராகங்கள். இவற்றில் ஒன்று கூட இப்பொது அனைவராலும் கேட்கப் படுகிறதா. மொழியையும் கவிதையும் போல ராகங்கள் ஒவ்வொரு உணர்வுகளை கொண்டிருக்கிறது. இன்றைய இளைஞர்கள் மற்றும் புதிதாக நாயனம் கற்றுக்கொள்ளக் கூடியவர்கள் அறிந்துகொள்ள கூடிய தகவல்கள், பழங்கதைகள்,  வரலாற்றுக் குறிப்புக்கள் என புத்தகம் விளக்கமாக எழுதப் பட்டிருப்பது சிறப்பு. 
இசையுன் பண்பாடு நாகரீகத்தைப் பற்றிய எழுதப் பட்டிருந்தாலும் நாவலில் சாதிக் கொடுமைகள்,  சிதைந்து போன கிராமங்களையும் அதன் மனிதர்களும் நினைவுகளும் நமக்கு கண்ணீரை வரவழைத்துவிடும். நல்லப் புத்தகம் ஒரு மனிதனை உற்சாகப் படுத்தி நம்பிக்கை ஏற்படுத்தி சுயசிந்தனை கொண்டவனாக மாற்றும் அதே சமத்தியதில் சக மனிதத் துயரத்தை கொண்டு கண்ணீர் விட வைப்பதும் அடங்கும். அந்த வகையில் இந்தப் புத்தகம் மிக இன்றியமையாத முக்கியமான  படைப்பு.

நன்றி :

கருத்துகள் இல்லை: