14 மார்., 2021

அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங் நினைவு தினம்

இன்றைக்கு நூற்றுக்கணக்கான ஆன்டிபயாட்டிக் மருந்துகள் நடைமுறையில் உள்ளன. என்றாலும், எல்லாவற்றுக்கும் முன்னோடி பென்சிலின் மருந்துதான்.
இது எப்படி பாக்டீரியாக்களைக் கொல்கிறது?பாக்டீரியாக்களின் செல் சுவர்கள் பெப்டிடோ கிளைக்கான் எனும் புரதப்பொருளால் ஆனவை. 

இந்தப் புரதம் உண்டாவதற்கு டிரான்ஸ்பெப்டிடேஸ் எனும் என்சைம் உதவுகிறது. இந்த உதவியை நிறுத்திவிட்டால் பாக்டீரியாக்கள் வளர முடியாது. இறந்து விடும். மேலே சொன்ன நோய்களும் கட்டுப்படும். இந்த அற்புதச் செயலைச் செய்கிறது பென்சிலின். டிரான்ஸ் பெப்டிடேஸ் என்சைமை அழித்து பாக்டீரியாக்களைக் கொல்கிறது.

இது எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்து போல் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து! மருத்துவ சிகிச்சைக்கு ஒரு புதிய பாதையைக் காட்டிய மருந்து! இதைக் கண்டுபிடித்தவர் இங்கிலாந்து விஞ்ஞானி சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங்.

இவர் முதல் உலகப்போரின் போது பிரிட்டிஷ் ராயல் ராணுவ மருத்துவப் பிரிவில் பணிபுரிந்தார். அப்போது ஆயிரக்கணக்கான போர் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. போரில் காயமடைந்த வீரர்கள் அவர்களுக்கு ஏற்பட்டிருந்த காயங்களில் சீழ் பிடித்துப் புரையோடி இறந்தனர்.

காரணம், அந்தக் காயங்களில் சீழ் பிடிக்கக் காரணமாக இருந்த பாக்டீரியா கிருமிகளைக் கொல்வதற்கு அப்போது எவ்வித கிருமிக்கொல்லி மருந்தும் மருத்துவர்களிடம் இல்லை. இந்தக் கொடிய நிலைமை ஃபிளெமிங் மனதைக் குடைந்து கொண்டே இருந்தது. இந்த அவல நிலைமையை எப்படியாவது களைய வேண்டும் என்று தீவிரமாகக் களமிறங்கிய ஃபிளெமிங், 1922ல் ‘லைசோசைம்’ என்ற கிருமிநாசினியைக் கண்டுபிடித்தார். ஆனால் இது பாக்டீரியாக்களைக் கொல்லும் அளவுக்கு ஆற்றல் உள்ளதாக இல்லை. என்றாலும் ஃபிளெமிங் மனம் தளரவில்லை. தொடர்ந்து தன் ஆய்வுகளை அதிகப்படுத்தினார்.

ஃபிளெமிங் 1928ம் ஆண்டில் ‘ஸ்டெஃபிலோகாக்கஸ்’ எனும் ஒருவகை பாக்டீரியா கிருமிகள் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். ஃபிளெமிங் ஒரு தீவிரமான மருத்துவ ஆராய்ச்சியாளராக இருந்தபோதிலும், தன்னுடைய ஆராய்ச்சிக் கூடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதிலும் ஆராய்ச்சி முடிவுகளை ஒழுங்குபடுத்தி வகைப்படுத்துவதிலும் அவர் சரியான சோம்பேறி. அவர் ஆராய்ச்சிக்கூடம் எப்போது பார்த்தாலும் ஒரு போர் நடந்து முடிந்த போர்க்
களம் போல அலங்கோலமாக இருக்கும் என்பதே அதற்குச் சான்று.

ஒருமுறை ஃபிளெமிங் தான் வளர்த்து வந்த ‘ஸ்டெஃபிலோகாக்கஸ்’ கிருமிகள் அடங்கிய கண்ணாடித் தட்டுகளை ஆராய்ச்சி அறையில் அப்படி அப்படியே போட்டுவிட்டு இரண்டு வார விடுப்பில் சென்றுவிட்டார். விடுமுறை முடிந்து அறைக்குத் திரும்பியபோது அறையில் துர்நாற்றம் வீசியது.

ஃபிளெமிங் அந்தக் கண்ணாடித் தட்டுகளைக் கவனித்தார். அவற்றில் பூஞ்சைக் காளான்கள் வளர்ந்திருந்தன. அறையில் துர்நாற்றம் வீசியதற்குக் காரணம் அந்தப் பூஞ்சைகள்தான். கெட்டுப்போன ரொட்டித் துண்டுகளில் திட்டுத்திட்டாக லேசான பச்சை நிறத்தில் காணப்படுமே... அதுதான் பூஞ்சைக்காளான்!

ஃபிளெமிங், பூஞ்சைக்காளான் பாதித்த அந்தக் கண்ணாடித் தட்டுகளை குப்பையில் போட நினைத்தார். ஆனால் நம் ஊரில் செய்வது போல உடனே அவற்றை குப்பையில் போட முடியாது. எந்தக் கிருமியையும் அழித்த பின்புதான் குப்பையில் போட முடியும். அதனால் கிருமி களைக் கொல்லும் ஒரு திரவத்தில் அந்தக் கண்ணாடித் தட்டுகளை முக்கி வைத்தார்.சில நாட்கள் கழித்து ஃபிளெமிங்கின் நண்பர் ஒருவர் அவரைக் காண வந்தார்.

அந்த நண்பரிடம் தான் எதைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறேன் என்று காண்பிப்பதற்காக, குப்பையில் போட நினைத்த கண்ணாடித் தட்டுகளை வெளியில் எடுத்தார். என்ன ஆச்சரியம்!ஏறத்தாழ எல்லா கண்ணாடித் தட்டுகளிலும் ‘ஸ்டெஃபிலோகாக்கஸ்’ கிருமிகள் உயிரோடு இருக்க, ஒரு பகுதியில் மட்டும் அந்தக் கிருமிகள் முழுவதுமாக இறந்திருந்தன.

உடனே அந்தப் பகுதியில் இருந்த பூஞ்சைக் காளானை எடுத்து ஆராய்ச்சி செய்தார். அது ‘பென்சிலின் நொட்டேட்டம்’ எனும் பூஞ்சை என்றும், அதற்கு பாக்டீரியாக்களைக் கொல்லும் ஆற்றல் உள்ளது என்றும் தெரிந்து கொண்டார். அந்தப் பூஞ்சையிலிருந்து ஒரு கிருமிக்கொல்லி மருந்தை தயாரித்தார். அதுதான் பென்சிலின் ஊசி மருந்து!

1941ல் நடந்த இரண்டாம் உலகப் போரின்போது பல்லாயிரக்கணக்கான போர் வீரர்களைக் காப்பாற்ற இந்த மருந்து உதவியது. இதன் மூலம் ஃபிளெமிங்கின் கனவு நனவானது. இந்த அற்புதக் கண்டுபிடிப்புக்காக 1945ல் இங்கிலாந்து மன்னர் அவருக்கு நோபல் பரிசு வழங்கினார்.

இன்றைக்கும் ருமாட்டிக் காய்ச்சல், சிபிலிஸ், டெட்டனஸ், கொனேரியா, மூளை உறைக் காய்ச்சல் போன்ற பல கடுமையான நோய்களைத் தீர்ப்பதில் பென்சிலினுக்குத்தான் முதலிடம்! ஆம், இன்று பென்சிலின் உயிர் காக்கும் போராளி என்றால் அது மிகையல்ல

நன்றி :


கருத்துகள் இல்லை: