31 ஜூலை, 2021

நூல் நயம் : சாயாவனம் - சா.கந்தசாமி

        #Reading_marathon_2021 
01/50

புத்தகம்: சாயாவனம்
ஆசிரியர்: சா.கந்தசாமி
வகை: நாவல்
பக்கங்கள்: 160
விலை: ₹160
பதிப்பகம்: நற்றிணை

பெருமதிப்பிற்குரிய சா. கந்தசாமியால், தனது 25 வயதிற்குள் எழுதப்பட்டு, மூன்று வருடங்கள் கழித்து 1968ல் வெளிவந்தது. நாவலின் சில குறிப்புகளின்படி, கதையின் காலகட்டம் 1900களின் நடுப்பகுதியிலிருந்து 1910களின் நடுப்பகுதிவரை. 

தஞ்சாவூர் மாவட்ட கிராமமொன்றில் சாயாவனம் என்ற பெயரிலிருக்கும் ஓரு ஆதிவனம்தான் களம். கதிரவனின் ஒளிக்கதிர்கள்கூட உள்நுழைய முடியாத வனம் என்று பொருள். மனித கால்தடம் படாத அவ்வனத்தின் முகப்பில் நின்று, அதை அழித்து நாகரிக மாற்றம் செய்யவிருக்கும் சிங்கப்பூரிலிருந்து திரும்பிய ஒருவனின் பார்வையில் தொடங்குகிறது கதை. 

"... வானத்தை ஊடுருவி நோக்கினான் சிதம்பரம். ஒரு மடையான் கூட்டம் தாழப் பறந்து சென்றது. அதைத் தொடர்ந்து கழுத்தை முன்னே நீட்டியபடி ஒரு கொக்குக் கூட்டம். ஒரு தனி செம்போத்து. இரண்டு பச்சைக்கிளி கூட்டங்கள்." 

இயற்கைக்குள், அதொரு புனைவில் என்றாலுங்கூட, ஊடுரும் கணம் அலாதியான இதமளிக்கக்கூடியது. அதனால்தான், அது நம் கண்முன்னே ஒவ்வொரு இறகாய் உருவப்பட்டு, உயிரின் வெம்மை மிக நிதானமாய் நீங்கி குளிர்ந்தடங்குவது விவரிக்க முடியாத சஞ்சலத்தை கொடுக்கக்கூடியது. நூறு பக்கங்களுக்கு மேல், கிட்டத்தட்ட கதையின் மூன்றில் இரண்டு பாகத்திற்கு, சாயாவனக்காடு இழை இழையாய் பிடுங்கப்பட்டு கொளுத்தப்படுகிறது. தற்கால இயற்பியல் முன்னேற்றங்களை ஆதாரமாய்க் கொண்டியங்கும் ராட்சத எந்திரங்களால் அதை இன்றைக்கு இரண்டு பக்கங்களில் செய்துவிடலாம். அப்படியொரு அசுர வளர்ச்சியைக் கண்டிருக்கிறோம். 

கதையாடலானது கானகம் அழிப்பதை மட்டுமல்ல; அழித்தபின் முதற்காரியமாய் உட்புக இருவண்டியகலப் பாதையிடுவது, பிறகு அங்கொரு ஆலை அமைப்பது, அதற்கான குடியிருப்புகள் எழுப்புவது, இயந்திரங்களை உருட்டி வருவது, ஆலை உற்பத்தியின் முன்பின் தேவைக்காக காவிரியாற்றின் குறுக்கே மூங்கில் பாலம் நிர்மானிப்பது, பண்டமாற்றை பணமாற்றமாக்குவது, விவசாயநிலங்கள் உணவுப்பயிரிலிருந்து பணப்பயிரை விளைவித்துக் கொடுப்பது, மனிதத்தேவைகள் விஸ்தரித்து புதிய கடைகள் முளைத்தெழுவது, தொலைத்தொடர்பில் மனிதன் ஒரு கண்ணியாய் இணைக்கப்படுவது, இப்படி எல்லாக் கலாச்சார மாற்றமும் ஒரு கிராமத்தை 'வளர்த்தும்' வரலாற்றையல்லவா சா.க பெருங்கதையாடுகிறார்!

புனைவாயிருப்பினும், தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தின் நவீன மாற்றத்தை குறியீடாகக் கொண்டு, விவரங்களை மிக நுட்பமாக ஆவணப்படுத்தியிருப்பதற்காக இந்திய தேசமே சர்வநிச்சயமாக சா.க-விற்கு உளமார நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது. 60களிலேயே, மூன்றாம் உலகத்திலிருந்து முதலுலகத்திற்கு இந்தியா வளர்ச்சி மாற்றம் அடைவதற்கான துவக்க காலத்திலேயே, சூழலியல் சிந்தனைகள் நமக்கிருந்தது என்பதன் சாட்சியாய் இந்நாவல் என்றும் நிற்கும். அதனாலும், ஆங்கிலத்திலும் பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நூலை, இந்திய தேசிய புத்தக அறக்கட்டளை (National Book Trust of India) 'இந்திய இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பு' (Masterpiece of Indian Literature) என்று பத்திரப்படுத்தியுள்ளது. தன் எழுத்துத் திறமை கொண்டு, எதை எழுதவேண்டும், அதை எப்போது எழுத வேண்டும் என்ற அறிவில் இயங்கிய எழுத்தாளர், இலக்கியமும் இயற்கையும் இருக்கும் வரை நினைவு கூறப்படுவார். 

இந்நாவலை வாசித்துக்கொண்டிருந்த இரண்டாம் நாளில், எந்திரன் படத்தின் ஒரு பாடல் வரி காதில் விழுந்தது. இன்றுவரை என் சிந்தனையில் நிறைய திறப்புகளை செய்துகொண்டிருக்கிறது.

"கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும்.
அறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை"

வாசித்து முடித்து, க.சா-வை நினைவுகூர்ந்து, இப்பதிவை எழுதிக்கொண்டிருக்கும் இன்று (ஜூலை 31, 2021) அவரின் முதலாம் ஆண்டு நினைவுநாள். கருவில் பிறந்த ஒன்று மரித்துவிட்டது. அது மரித்தபின் பூமி சூரியனையும் ஒருமுறை சுற்றிவிட்டது. ஆனால் அதன் அறிவில் பிறந்தது மரிக்கவேயில்லை. இப்பூமி சுழலும்வரை மரிக்கப்போவதுமில்லை.

இந்நூலின் தார்மீகச் செய்தியென்று நான் என்ன சொல்லி முடிக்க? 

இப்படியொரு ஃபேஸ்புக் பதிவிற்காக விரல் தட்டிக்கொண்டிருக்கும் எனது கைபேசியின் எல்.சி.டி கண்ணாடியிலிருந்து அதன் அடியுறை நெகிழிவரை ஏறக்குறைய அறுபது கனிமங்கள் இருப்பதை நானறிவேன். அதில் குறைந்தது ஏழாவது அபூர்வ நிலத் தனிமங்கள் (Rare Earth Elements) என்பதையும் அறிவேன். இப்பதிவை இடுவதற்குள் சிலமுறை ஸ்தம்பித்துச் செயல்படும் இகைபேசியை நான் மாற்றாமலிருக்கப் போவதில்லை. வருங்காலத்தில் என் பிள்ளைக்கு இன்னும் திறனான கைபேசியை நான் வாங்கிக் கொடுக்காமலிருக்கப் போவதில்லை. இக்கனிமங்களும், உலோகங்களும், எந்நாடுகளிலிருந்தும், எக்கடலுக்கடியிலிருந்தும் வருகின்றன என்பதும், அதை நோண்டியெடுக்க எத்தனை சிறுபிள்ளைகள் பணியமர்த்தப்படுகிறார்கள் என்பதும் ஓரளவு அறிவேன். அதனால் எத்தனை ஜீவராசிகள் என்னென்ன அசௌகரியங்களுக்கும் அழிவுக்கும் தள்ளப்படுகின்றன என்பதையும் சிந்திக்கிறேன். அந்நாடுகளிருந்து கந்தசாமிகள் இதுபற்றி இன்னும்பல மகத்தான நாவல்கள் எழுதி, அவை எனக்குத் தெரிந்த மொழியில் என்னைச்சேரும்போது அவற்றிற்கும் வாசிப்பனுபவங்கள் நான் இடக்கூடும்! ஆனால் அப்பதிவுகளையும் எப்படி முடித்துவைப்பேன்? என் பொருளாசையின் ஆதாரக் கம்பியிலிருந்தல்லவா இயற்கையழிவு எனும் பெருஞ்சுருதி மீட்டப்படுகிறது!  அதனால்தான் 'அழிக்கிறார்கள்' என்பதைக்காட்டிலும், 'அழிக்கிறேன்' என்று சொல்லி முடிக்க வேண்டியிருக்கிறது. 

என் போன்றோரின் பொருளின்பத்திற்காக மட்டுமல்ல, இன்னும்பல வலுவான காரணிகளாலும் சுரண்டப்படுகிற ஒரு 'ஸ்பெகட்டி பௌல்' (Spaghetti Bowl) குழப்பச் சுழற்சியிது; அல்லது டிஜிட்டல் தமிழில் இதொரு 'இடியாப்பச் சிக்கல்'. ஆனால் வேறு யாரையோ மட்டும் காரணம் சொல்லிச் சபித்து பதிவிட்டுத் தப்பியோட எங்கனம் என்னால் முடியும்!? பூமியழியும் பூகம்பவேளையில் மண்ணுக்கடியில் தலை புதைத்து காலால் வானம் பார்க்கும் ஏதோவொரு கோழியின் சாகசம் என் புத்திக்கு என்றும் கடவாதிருப்பதாக.

நன்றி :

Mr. Rajkumar Samiyappan Ponnusamy
வாசிப்பை நேசிப்போம்
முகநூல்

கருத்துகள் இல்லை: