"பால்யகால சகி."
வைக்கம் முகமது பஷீர் .
தமிழில் குளச்சல் யூசுப் .காலச்சுவடு பதிப்பகம் .முதல் பதிப்பு 2009 பத்தாம் பதிப்பு 2021 .விலை ரூபாய் 100.
மொத்த பக்கங்கள் 80.
வைக்கம் முகமது பஷீர் வைக்கம் தாலுகாவில் தலையோல பரம்பில் பிறந்தவர் .பத்தாம் வகுப்பு படிக்கும் போது வீட்டை விட்டு ஓடி இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்து உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார் .
சுதந்திர போராட்ட வீரராக சென்னை கோழிக்கோடு கோட்டயம் கொல்லம் திருவனந்தபுரம் சிறைகளில் தண்டனை அனுபவித்தார் . பகத்சிங் பாணியிலான தீவிரவாத அமைப்பொன்றை உருவாக்கி செயல்பட்டார் .அமைப்பின் கொள்கை இதழாக உஜ்ஜீவனம் வார இதழையும் தொடங்கினார் .பத்தாண்டுகள் இந்தியாவெங்கும் தேசாந்திரி யாக திரிந்தார் .பிறகு ஆப்ரிக்காவிலும் ஆசியாவிலும் சுற்றினார் .
இந்த காலகட்டத்தில் பஷீர் செய்யாத வேலைகால இல்லை .5,6 வருடங்கள் இமய மலைச் சரிவுகளிலும் கங்கை ஆற்றின் கரைகளிலும் இந்து துறவியாகவும் இஸ்லாமியச் சூ பியாகவும் வாழ்ந்தார் .
சுதந்திர போராட்ட வீரர்களுக்கான மத்திய மாநில அரசுகளின் ஓய்வு ஊதியம் ,சிறப்பு நல்கை ,இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது ,கோழிக்கோடு பல்கலைக் கழகத்தின் சம்ஸ்கார தீபம் விருது ,பிரேம் நசீர் விருது , லலிதாம்பிகா அந்தர்ஜனம் விருது,முட்டத்து வர்க்கி விருது , வள்ளத்தோள் விருது , ஜித்தாஅரங்கு விருது போன்ற பல்வேறு விருதுகள் பெற்றவர்.
##########
குளச்சல் யுசுப் இந்தக்கதையை மொழிபெயர்த்துள்ளார். இவரும் வைக்கம் முகமது பஷீரின் படைப்புகள் உட்பட 30க்கும் மேற்பட்ட நூல்களை தமிழில் மொழி பெயர்த்துள்ளார் .செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்காக நாலடியார் அறநூலை மலையாளத்தில் மொழியாக்கம் செய்துள்ளார் .
தொ. மு சி ரகு நாதன் ,ஆனந்தவிகடன் ,உள்ளூர் பரமேஸ்வரய்யர் , வி.ஆர்.கிருஷ்ணய்யர் ,நல்லி திசை எட்டும் ,ஸ்பாரோ உட்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
########
"55 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய நாவல்," பால்யகால சகி ",இன்று வரை வெவ்வேறு தலைமுறை வாசகர்களால் தொடர்ந்து வாசிக்கப்படும் மலையாள படைப்பும் இதுதான் .
தோல்வி அடைந்த காதல் கதை எனும் எளிய தோற்றத்திற்கு பின்னால் பஷீரின் சொந்த அனுபவங்களின் சாயலும் இஸ்லாமிய பின்புலமும் உணர்ச்சிப் பெருக்கும் கொண்ட புனைகதையின் கூறுகளாக மட்டுமல்லாமல் வாழ்க்கையின் அம்சங்களாக இருப்பதுதான் நாவலை இலக்கிய முக்கியத்துவம் கொண்டதாகவும் தொடர்ந்து வாசிக்க கூடியதாகவும்
ஆக்குகிறது.
அதன் பின் உள்ள படைப்பு மனம் தான் பஷீரை மலையாள படைப்பாளிகளில்
* உம்மிணி வலிய ஒரு ஆளாக *---இன்னும் பெரிய ஒருவராக --- ஆக்குகிறது .இந்த குறு நாவலுக்கு இன்று உருவாகியிருக்கும் செவ்வியல் தகுதியும் அதனால்தான் ", என்று கூறுகிறார் சுகுமாரன்.
###########₹₹**
இனி ,பால்யகால சகி கதை குறித்து பார்ப்போம்.
சகி என்றால் தோழி , சகி என்றால் பொறுத்துக்கொள் , பொறுமை ,மன்னித்தல்,
சகிதம் என்றால் கூடி இருத்தல் .
எவ்வளவு ஒரு அருமையான வார்த்தை. இந்த அழகான சகி என்கிற வார்த்தையை நினைத்து நான் வியந்து போகிறேன் .எனக்கு என் பால்ய காலத்தில் சகி கிடைக்கவில்லை என்றாலும் இந்த பால்யகால சகி படிக்கும்பொழுது என் பால்யகால சினேகிதியோடு உணர்வோடு உறவாடியதைப் போன்ற உணர்வு எனக்கு ஏற்படுகிறது இந்த புத்தகத்தின் மூலம்.
மஜீது ,சொகறா.
இருவரும் பக்கத்து பக்கத்து வீட்டு குழந்தைகள் . மஜீதுபணக்கார வீட்டு பிள்ளை ,அவளோ மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள் .
மாங்காய் கடிப்பதில் ஆரம்பித்து தேங்காய் சிரட்டை அடிப்பதில் முடிய அவர்களிடம் நட்பு ஏற்படுகிறது.
நட்பு பாசம் ஆகி ,பாசம் ஆசையாகி,ஆசை காதலாகி ,காதல் கனிந்து காமம் துளிர்ப்பதற்கு முன் அவர்கள் பிரிந்து விடுகிறார்கள். மஜீது ஊரை விட்டு ஓடி விடுகிறான்.
ஒருவகையில் இது வைக்கம் முகமது பஷீர் அவர்களின் சொந்த கதை போலவே இருக்கிறது.
சுன்னத் கல்யாணம் குறித்து இன்னும் சற்று விரிவாக விவரமாக எழுதி இருந்தாலும் நன்றாக இருந்திருக்குமோ என்கிற ஆசை எனக்கு படிக்கப்படிக்க துளிர்விட்டது பளீரென.
முடித்து சில நிகழ்வுகளை சில ஆசிரியர்கள் செம்மையாக கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தி விடுவார்கள் . கி.ரா.அவர்கள் மாடு கன்று ஈனும் நிகழ்வையும் ,வைரமுத்து அவர்கள் ஒரு பெண் தானே பிரசவம் பார்த்துக் கொள்வதையும் கண்முன்னே நிறுத்தியது எனக்கு ஏனோ இப்பொழுது நினைவுக்கு வருகிறது.
அதேபோல காதுகுத்தல் நிகழ்வையும் ஒரு வரியில் ஆசிரியர் தெரிவித்து முடித்து விடுவார்.
சுன்னத்து கல்யாணம் செய்துகொண்ட வலியோடு காதுகுத்தல் நிகழ்வுக்கு செல்கின்ற இந்நிகழ்ச்சியில் மஜீதுக்கு சொகறா மீது உள்ள ஆழமான நட்பையும் காதலையும் அன்பையும் பாசத்தையும் தெரிவிப்பதற்காக ஆசிரியர் எழுதி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
ஒருநாள் வலது காலில் கட்டி வந்து மஜீது மிகவும் வலியோடு துடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த சொகாறா
உள்ளங்கையில் எடுத்து, உள்ளங் காலில் முத்தமிடுகிறார் .
முத்தமிட்ட செய்கை ஒருவித அதிர்வை அவனுக்கு ஏற்படுத்துகிறது .மறுகணம் இருவரும் மாறிமாறி ஆயிரக்கணக்கில் முத்தமிட்டுக் கொள்கிறார்கள் , என்னவென்று உணர்வு புரியாமலேயே.
புணர்தல் இன்றி உணர்தல் இன்றி கிளர்தல் மட்டுமே செய்து கொண்ட நிகழ்வு அது.
சொகாறாவின் வாப்பா இறந்துவிடவே பள்ளிப் படிப்பு நிறுத்தப்படுகிறது .அவளையும் படிக்க வையுங்கள் என்று மஜீது தனது வாப்பாவை கேட்க,வாப்பா மறுத்துவிடுகிறார் .42 பிள்ளைகளுக்கு தர்ம சோறு போடுகின்ற மனத்தன்மை உள்ள நிலையிலும் அவருக்கு ஏனோ சொகராவின் படிப்புச் செலவை ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை.
அறுவடை காலத்தில் தனக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்ள மஜீது மறந்து போகாமல் இருக்க, விரத காலத்தில் வந்து நையப்புடைத்து விடுகிறார் வாப்பா .அதனால் கோபித்துக்கொண்டு மஜீத் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் பத்தாண்டு ஊரைவிட்டு வெளியே சென்று விடுகிறான்.
பத்து வருடங்களுக்கு பிறகு திரும்பி வந்து பார்க்கும் பொழுது வீட்டின் நிலைமை தலைகீழ் ஆகஉள்ளது.அத்தனை சொத்துக்களையும் இழந்த ஏழைத் தந்தை. மஜீத்தின் சகோதரிகளுக்கும் திருமணம் செய்து வைக்கவில்லை. பொறுப்புகள் அதிகமாகவே, சொகறா நினைவும்அதிகமாக வாட்டத்தொடங்கவே மஜீத் வெளியூர் சென்று வேலை பார்க்க நினைக்கிறான்.
சொகறா இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டு அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரோடு மஜீது காண வருகிறாள் .இங்கேயே தங்கி விடுகிறாள் . இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுக்கின்றார்கள் .ஆனால் வறுமை துரத்துகிறது. வீட்டின் முழு பொறுப்பையும் சொகறா வசம் தந்துவிட்டு வேலை தேடி செல்கிறான் .மாதாமாதம் பணம் அனுப்புகிறான் .
விபத்து நேர்ந்து விடுகிறது .இந்த விபத்தில் அன்று முத்தமிட்ட அவனது வலது கால் முழுவதுமாக அகற்றப்பட்டு விடுகிறது .ஒரு காலிலேயே தனது பசியைப் போக்கிக் கொள்ளவும் குடும்பத்தை காப்பாற்ற எச்சில் தட்டுகளைக் கழுவி ஜீவனம் நடத்துகிறான்.இவன் வாராமை கண்டு துன்பப்பட்டு சொகறா மரித்துப் போகிறாள்.
வேலைக்காக புறப்படும் பொழுது அவள் என்னமோ சொல்ல நினைத்த சொகறா அதை சொல்லாமலேயே இருந்து விட்டா ள்.அதையே நினைத்துக் கொண்டு தட்டினை கழுவிக் கொண்டு இருக்கிறான் என்பதாக கதை முடிகிறது.
########₹₹₹
மஜீது படித்திருந்த அறை, மஜீது வளர்த்த தோட்டம், மஜீது தோட்டத்தில் மா மரத்தின் கீழ் அமர்ந்த ஈஸி சேர் இவைகளையெல்லாம் வைக்கம் முகமது பஷீர் பயன்படுத்திய இடங்கள் பயன்படுத்திய தடங்கள் என்பதாக திருவண்ணாமலை கதை சொல்லி பாவா செல்லத்துரை அவர்கள் தனது புத்தகத்திலும் சில முறை தனது உரைகளிலும் தெரிவித்திருக்கிறார் .
எஸ் ராமகிருஷ்ணன் அவர்களும் வைக்கம் முகமது பஷீர் தோட்டம் சென்று உரையாடி இருக்கிறார் .நாய்கள்
குறைப்பதையும் அழகாக குறிப்பிட்டிருப்பார்
நானும் எனது முதல் 10 ஆண்டு சபரிமலை பயணத்தில் வைக்கம் சென்றிருக்கிறேன் .வைக்கம் சிவன் கோவில் சென்றிருக்கிறேன் .வைக்கம் நகரில் நடந்த பெரியார் தலைமை போராட்டம் கண்டு மெய்சிலிர்த்து இருக்கிறேன் .
ஆனால் வைக்கம் முகமது பஷீர் அவர்கள் அன்றைய காலகட்டத்தில் எனக்கு பரிச்சயம் இல்லாத காரணத்தினால் அவரது தோட்டத்திற்கு நான் செல்ல முடியாமல் போனது இப்பொழுது வருத்தம் அடைய செய்கிறது
கதையை படித்து முடிக்கும்போது
* செம்பருத்தியும் பெரிய ஒண்ணும் * நினைவில் நிழலாடாமல் இருக்கப்போவதில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக