27 ஆக., 2021

நூல் நயம் : தமிழ் தாத்தா உ.வே.சா - டாக்டர் கே ராமமூர்த்தி

"RM.072
176/150+
நான்காம் ஆண்டு விழா வாசிப்பு போட்டி : இரண்டாம் வாரம்: சுயமுன்னேற்றம் ,
வாழ்க்கை வரலாறு ,தன் வரலாறு.

சுயமுன்னேற்றம் :1
வாழ்க்கை வரலாறு :1/10
தன் வரலாறு.           :

#####₹₹₹₹₹₹₹

"தமிழ் தாத்தா உ.வே.சா."
டாக்டர் கே ராமமூர்த்தி .கங்கை புத்தக நிலையம் .முதல் பதிப்பு 2001 .
நான்காம் பதிப்பு 2005 .விலை ரூபாய் 20 மொத்த பக்கங்கள் 96.

  *என் சரிதம்* என்கிற உ.வே சாமிநாதன் ஐயர் அவர்கள் எழுதிய சரித்திரத்தை படித்திருக்கிறேன் .
    அதில் தம்முடைய வரலாற்றை சுவைபட எழுதினார் .அவர் இந்த நூலில் சங்க இலக்கியங்களையும் பிற நூல்களையும் வெளியிடுவதற்கு மேற்கொண்ட முயற்சிகளை உள்ளது உள்ளபடி எழுதி இருக்கிறார் .சாமிநாதய்யரின் சரித்திரம் அவருடைய குடும்ப வரலாறு பற்றியது மட்டுமல்ல ,தமிழ்நாட்டு வரலாறு அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் புரவலர்கள் ஆதீனத் தலைவர்கள் முதலிய பலருடைய வரலாற்றுக் குறிப்புகளையும் கொண்டதாகும் .
        அக்காலத்தில் தமிழின் வளர்ச்சி போன்ற பல செய்திகளை சாமிநாத ஐயர் *என் சரித்திரத்தில்* சுவையாக கூறியுள்ளார் .
        ஒரு இமயமலையை ஒரு கடுகு அளவு ஆக்கி அதை நமக்கு வாசிப்பதற்காக புத்தகமாக தந்திருக்கிறார் டாக்டர் கே ராமமூர்த்தி அவர்கள்.
       மிகச் சிறிய புத்தகம் என்றாலும் விபரங்கள் விஷயங்களில் ஒன்றுவிடாமல் எல்லாம் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.
      இரண்டு நூற்றாண்டுகளை கண்ட தமிழறிஞர் ,தமிழ்தாத்தா என்று போற்றப்படுகிற வே சாமிநாதையர் அவர்கள் நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் வாழ்ந்த தமிழ் மகான் ஆவார்.
         தமிழ் தமிழ் என்று தம் வாழ்நாள் முழுவதும் செந்தமிழையே 
சுவாசித்துக்கொண்டிருந்த தமிழ் மகாத்மா அவர் .தமிழின் பழம் பெருமைகளை பேசிக் கொண்டிராமல் அவற்றை தமிழுலகம் காணச் செய்த தமிழ் கர்மயோகி அவர் .அவரது வரலாற்றை நாம் படித்து பயன்பெற வேண்டும்.
    புதைந்து போனவைகளை புதையல் என்பார்கள் .புதையல்களின் பெருமைகளை தோண்டிக் கொணர்ந்து வந்த தமிழ் வள்ளல் அவர்.செல்லரித்தவைகளை, தொலைந்து போனவற்றை ,செல்வக் கருவூலங்கள் 
 எனத் தேர்ந்து தேடித்தந்த தமிழ் காவலர் அவர்.
            இன்று நாம் படிக்கும் எல்லா தமிழ் அமுதச் சுவைகளுக்குக் காரணமான சுவடிகளை தேடி சென்று பதிப்பித்தவர் அவர்.
  நல்ல மாணவர், நல்ல ஆசிரியர் ,பெரும் பேராசிரியர்.
       இவரின் சீடரான மறைமலை அடிகளார் அவர்களின் பேரன்களோடு டல்லாஸ் மாநகரத்தில் கூடி குலாவி பேசியும் மகிழ்கின்ற வாய்ப்பும் எனக்கு கிடைத்தது .நாங்கள் செய்த தவம்.
    மகாவித்வான், மகாத்மா, மகாகவி என்று பெரியவர்களின் பாராட்டைப் பெற்ற மகாமகோபாத்தியாயராகத் திகழ்ந்தவர்தான் உ. வே .சாமிநாதையர் .உருவத்தில் உயர்ந்த கம்பீரம் போன்ற தமிழ்த் தொண்டில் உயர்ந்த பேராளரைப் பற்றிய நூல் இது.

     நூற்பதிப்புக்காக நடந்த கால்களும் நடைகளும் நற்றமில் காவியமாகும். தமிழ் வாழக் குறி கொண்டு நெறியுடன் வாழ்ந்த தமிழ் தாத்தா வரலாறு இன்றைய இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டி ,ஒளிவிளக்கு அவரது வாழ்க்கை வரலாறு.
    அவமானங்கள் நேர்ந்தாலும் ,அரும் 
தமிழ்ப் பணிக்காக அவற்றைத் தாங்கிக் கொண்டவர் .தம் நலம் காணாமல் தமிழ்வளம் கண்ட தமிழ் தாத்தாவின் வரலாறு இன்றைய இளம் எழுத்தாளர்கள் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.
நூலைப் படித்தவர்கள் உ.வே.சா.அவர்கள் எழுதிய *என்சரிதம் *அவசியம் படிக்க வேண்டும்.

#######

இந்தப் புத்தகம் 15 தலைப்புகளில் எழுதி நமக்கு அளிக்கப் பட்டுள்ளது.
​தமிழின் பெருமை .
​பிறப்பும் படிப்பும்.
​மகாவித்வான்.
​மாணவப்பருவம் .
​மகா வித்வானின் மாணவர்.
​தமிழ் பயிற்சி .
​தியாகராசர் பெருந்தகை.
​ஒப்பரிய பதிப்புப் பணிகள் .
​மூன்று மலர்கள்.
​தமிழ்த்தொண்டு .
​பாராட்டும் பட்டங்களும் .
​மகாமகோபாத்தியாயரும் மகாத்மாவும் .
​மகாகவியின் பாராட்டு .
​குணநலன்கள் .
15​தமிழ் தாத்தா.
 
   தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகில் உள்ள உத்தமதானபுரம் கிராமத்தில் வெங்கடசுப்பையர் சரஸ்வதி அம்மையார் அவர்களுக்கும் 1855 ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ஆம் நாள்மகனாகப் பிறந்தார்.
பள்ளிக்கூடத்தில் கல்வி ஆரம்பம். அரியலூர் சடகோப ஐயங்கார், கிருஷ்ணர் உபாத்தியாயர்  ,வேலாயுதம் பண்டாரம் ,சிதம்பரம்பிள்ளை கான்குடி கஸ்தூரி ஐயங்கார் ,விருதாச்சலம் ரெட்டியார் போன்ற சிறந்த தமிழ் ஆசிரியர்களிடம்  தமிழ் பயின்றார்.
என் உள்ளத்தில் தமிழ் விதையை விதைத்தவர் அரியலூர் சடகோப ஐயங்கார் ஆவார் என்று உ.வே.சா.பெருமையோடு சொல்கிறார்.
   பண்புடையார் பட்டுண்டு உலகம் என்ற மொழிக்கேற்ப இவருக்கு ஆசிரியராக அமைந்த மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் சிறந்த பண்பாளர்.
      முறைப்படி இலக்கண இலக்கியங்களை காலமும் கருதாது ஆசையுடன் கற்று சாமிநாதய்யர் பெரும் புலவரானார்.
     கிரேக்க நாட்டில் அரிஸ்டாட்டில் போல ஆங்கிலேய அறிஞர் ஜான்சன் போல மகாவித்வான் எப்போதும் சான்றோர்களும் மாணாக்கர்களும் புடைசூழ காட்சி தருவார். சாமிநாதய்யர் உடன் யாதவர் செட்டியார் ,முன்சீப் வேதநாயகம் பிள்ளை ,சுப்பராய செட்டியார் ,வெண்பா புலி வேலுசாமி ,கவிராயர் புதுச்சேரி சவரிராயலு நாயக்கர் ,திருவிழி மழலை சாமிநாத கவிராயர் ,வல்லுநர் தேவராஜப் பிள்ளை, குலாம் காதர் நாவலர் ,ஞானப்பிரகாசம் பிள்ளை போன்றவர்கள் பயின்றார்கள்.
    திருவாடுதுறை ஆதீனத்தில் தமிழ் தொண்டு ஆற்றியும், தமிழ் கற்று சாமிநாதய்யர் வாழ்வின் லட்சியத்தை எட்டிப் பிடித்தார்.
    நந்தனார் நாடகக் கீர்த்தனை எழுதிய கோபாலகிருஷ்ண பாரதியார் இடம் சாமிநாதையர் இசைப் பயிற்சியும் பெற்றார்.
  படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே மதுராம்பிகை என்பவருடன் திருமணம் நடந்தது.
   முதல் முதலில் சீவக சிந்தாமணி என்கிற ஏட்டுச்சுவடி பார்த்து படித்து அச்சிட்டார்.
   அந்த காலத்தில் நூல்கள் அனைத்தும் ஏட்டுச் சுவடிகளில் பனையோலையில் எழுதப்பட்டிருந்தன அதை படிப்பதற்கும் கற்றிருக்க வேண்டும் எல்லோராலும் எளிதில் படிக்க முடியாது சாமிநாத ஐயர் இது போன்ற நூல்களை சுவடிகளைத் தேடி அடைந்து அவற்றை ஆராய்ந்து பின்பு நூல் வடிவிலே பதிப்பித்துள்ளார் அது ஒரு நீண்ட வரலாறு.
    அருமையான சுவடிகள் பல கரையான்கள் அரிக்கப்பட்ட நிலையில் இருக்கக் கண்டு மனம் புண்பட்டார். சில சுவடிகள் சிதைந்த நிலையிலேயே கிடைத்தன .சுவடிகளைத் தேடி போகும்போது அலைச்சலும் கிடைக்கும் அவமானமும் அவரை வாட்டின.

      ஏட்டுச் சுவடிகள் எங்கே யாரிடம் கிடைக்கும் என்று வீடு வீடாகச் சென்று  கேட்டார். புகை வண்டியில் செல்ல வேண்டிய ஊர்களுக்கு புகைவண்டியில் பயணம் செய்து தேடினார் .புகைவண்டி வசதி இல்லாத ஊர்களுக்கு கட்டை வண்டியிலும் மாட்டு வண்டியிலும் சென்றார். ஊருக்குள் வண்டி செல்ல பாதை இல்லாத போது அவர் கால்களால் நடந்து நீண்ட தூரம் சென்றார்.

  ஒரே நூலுக்கு பல சுவடிகள் கிடைத்தன.
அவற்றை ஒப்புநோக்கி எது சரியான சுவடி,எது அந்த ஆசிரியரால் எழுதப்பட்டவை, இடைச்செருகலாக பிற்காலப் புலவர்களால் எழுதப்பட்டவை என்பதையெல்லாம் ஆராய்ச்சி செய்தார் .தேவையான திருத்தங்களைச் செய்தார் .ஒவ்வொரு சுவடியையும் தேடிக் கண்டறிந்து ஒப்புநோக்கி ஆய்வு செய்து வகைப்படுத்தி நூலாக பல ஆண்டுகள் உழைக்க வேண்டிய தாயிற்று.

  ஏட்டுச் சுவடிகளை படிப்பதில் சாமிநாதய்யர் திறமை மிக்கவர். சேலம் ராமசாமி முதலியார் பூண்டி அரங்கநாத முதலியார் போன்ற அறிஞர்களின் ஆதரவுடன் சாமிநாதையர் நூல் பதிப்பிலும் தேர்ந்தவர் ஆனார் .

        சாமிநாதய்யரின் திறமையை இங்கிலாந்து பிரான்ஸ் போன்ற நாடுகளும் பாராட்டின.மேலைநாட்டு அறிஞர்களும் வியந்து பாராட்டினார்கள் அவ்வாறு பாராட்டியவர்களுள் குறிப்பிடத்தக்கவர் டாக்டர் ஜி யு போப் ஆவார்.
          சீவக சிந்தாமணி அடுத்து பத்துப்பாட்டு என்ற நூலை அச்சிட்டு வெளியிட்டார் .அதன்பிறகு சிலப்பதிகாரம் மணிமேகலை புறநானூறு போன்ற நூல்களை சாமிநாதையர் வெளியிட்டார் .வளையாபதி குண்டலகேசி தேடி அலைந்தார் எங்கும் கிடைக்கவில்லை.
   சேர மன்னர்கள் பத்து பேருடைய வரலாற்றைக் கூறும் பழந்தமிழ் நூல் பதிற்றுப்பத்து ஒவ்வொருவரைப் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன .இந்த நூலை சாமிநாதையர் அச்சிட்டு வெளியிட்டதன் மூலம் சேரருடைய வரலாற்றை ஓரளவு அறிய முடிகின்றது.
  பரிபாடல் ஐங்குறுநூறு போன்றவைகளை வெளியிட்டார். இவர் தம்முடைய 81 ஆம் வயதில் குறுந்தொகை என்ற இலக்கியத்திற்கு அரியதொரு உரை எழுதி வெளியிட்டார்.
   உ வே சாமிநாதையர் பதிப்பித்த நூல்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம் சங்க நூல்கள் பிற்கால நூல்கள் இலக்கண நூல்கள் பிரபந்தங்கள் பெருங்கதை உதயணகுமார காவியம் பழைய திருவிளையாடல் புராணம் முதலியவை பிற்காலக் காவியங்கள் வகையைச் சேர்ந்தவை.
  பதிப்புத்துறையில் இவர் செய்த சீர்திருத்தங்கள் தமிழுக்கு புதுமை பைபிள் நூலில் ஒப்புமைப் பகுதி அமைந்திருப்பதை போல தம்முடைய பதிப்புகளிலும் முறையைக் கையாண்டார்.
     பல நூல்களை அவர் எழுதினார் .இவ்வாறு தமிழுக்கு அரதுண்டாக்கி பெரும் பணி புறி புரிந்தவர்களில் இவரே முன்னோடியும் முதல்வரும் ஆவார்.
   பத்துப்பாட்டு தொகையில் எட்டாவதாக அமைந்திருப்பது குறிஞ்சிப்பாட்டு . கபிலரால் இயற்றப்பட்டது.
அதில் 99 மலர்களின் பெயர்கள் மாலையாக வைக்கப்பட்டிருந்தன அழகான மலர் கடைசியில் சில மலர்கள் காணப்படவில்லை என்பதை அவர் அறிந்தார் .அவற்றை தேடி அலைந்து திரிந்து இறுதியில் குறிஞ்சிப்பாட்டில் உள்ள குறை நிவர்த்தி செய்து மகிழ்ச்சி அடைந்தார்.
*தேமா- தேமாம்பூ, மணிச்சிகை - செம்மணிப் பூ, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ்-- தனக்கு உரித்தாக நாறும் விரிந்த கொத்தினையுடைய பெருமூங்கில் பூ* என்ற சிறு பகுதியே  விடுபட்டு இருந்தது என்பதையும் வே சாமிநாதையர் கண்டு ஆறுதலும் மகிழ்வும் அடைந்தார்.
    ராஜாஜி அவர்களின் ஏற்பாட்டின்படி தனது 83 ஆவது வயதில் 68 வயதான காந்தியடிகளை சந்தித்தார் .
கிவா ஜெகந்நாதன் அவர்கள் மாணாக்கர் என்ற முறையில் உடனிருந்தார்.
  தமிழுக்கு அவர் செய்த தொண்டு கணக்கற்றது ஏட்டில் அடங்காது.
     தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்பட்டார் .அவர் ", தமிழ் தான் எனக்கு செல்வம் .அதுதான் என் அறிவு பசிக்கு உணவு எவ்வளவுக்கெவ்வளவு அதன் தொடர்பை மிகுதி படுத்திக் கொள்கிறேனோ அவ்வளவுக்கவ்வளவு எனக்கு மகிழ்ச்சி . நல்லது செய்தோம் என்ற உள்ள அமைதி. நன்மை அடைந்தோம் என்ற உணர்ச்சி உண்டாகிறது. நம்மை ஒன்றுபடுத்தும் வல்லமை உடைய தமிழ் வாழ்க என்று
 உ.வே. சாமிநாத ஐயர் கூறியுள்ளார்.
   

######

        இறுதியாக மகாகவி சூட்டிய கவிதா மகுடம் மகா மகோ பாத்தியா .

செம்பருதி ஒளி பெற்றான் பைந்நரவு   
        சுவை பெற்றுத் திகழ்ந்தது ; ஆங்கண் உம்பரெலாம்  இறவாமை பெற்றனர் என்று   
       எவரே கொல் உவத்தல் செய்வார்   
கும்பமுனி எனத் தோன்றும் சாமிநா
         தப்புலவன் குறைவில் கீர்த்தி
 பம்பலுற பெற்றெனனேல் இதற்கென் சொல் 
        பேருவகை படைக்கின்றீரே?
அன்னியர்கள் தமிழ்ச்செல்வி அறியாதார்  
      இன்றேம்மை ஆள்வோர் ஏனும் பன்னியசீர் மகாமகோபாத்தியாய      
       யப்பதவியை பரிவின் ஈந்து
பொன் நிலவு குடந்தை நகர சாமிநா
         தன் தனக்கு  புகழ் செய்வாரேல் முன்னிவன பாண்டியர் நாள் இருந்திருப்பின் 
          இவன் பெருமை மொழிய லாமோ? நிதியறியோம் இவ்வுலகத் தொருகோடி 
       இன்பவகை நித்தம் துய்க்கும் கதியறியோம்  என்று மனம் வருந்தற்க ; 
        குடந்தை நகர்க் கலைஞர் கோவே! பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
            காலமெலாம் புலவோர் வாயில் துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்
         இரர்ப்பின்றி துலங்கு வாயே.

மகாகவி பாரதியார் பாராட்டிய இக்கவிதையின் வரிகளுடன் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்த் தாத்தா
 உ வே சாமிநாத ஐயர் சிலை காட்சியளிக்கிறது.

நன்றி :

கருத்துகள் இல்லை: