#ReadingMarathon2021-71/75
RM0073
#ஆண்டுவிழாவாசிப்பு
#புராணங்கள்
திருவிளையாடல் புராணம்
ஆசிரியர் - ரா.சீனிவாசன்
கிண்டில் பதிப்பு
பக்கங்கள் -208
சிவபெருமான் தன் அடியார்களை ஆட்கொள்வதற்காக பல திருவிளையாடல்களை நிகழ்த்தியுள்ளார்.அறுபத்தி நான்கு திருவிளையாடல் கதைகளின் தொகுப்புதான் இந்த நூல்.மதுரை மாநகரே அனைத்து திருவிளையாடல்களுக்கான களம்.பெரும்பாலான கதைகள் திரைப்படமாகவும் சிறுகதைகளாகவும் ஏற்கனவே தெரிந்தவைதான்.முழு தொகுப்பாக வாசிப்பது இதுவே முதல்முறை.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலில் குடிகொண்ட சிவன், சோமசுந்தரராய் பக்தர்களுக்கு அருளுகிறார்.இக்கோவிலின் பெருமையையும்,வரலாற்றையும் கூறுகிறது திருவிளையாடல் புராணம்.மதுரையின் மூன்று பெயர்களுக்கு சுவாரசியம் நிறைந்த காரணங்கள் உண்டு.பரஞ்சோதி முனிவர் பாடல் வடிவில் இயற்றியதை எளிய உரைநடை வடிவில் தந்திருக்கிறார் ஆசிரியர்.
பாண்டிய மன்னர்களுக்கு இன்னல் நேரும் போதெல்லாம் துணையாய் இருந்து காத்திருக்கிறார் சோமசுந்தரர்.தவறு செய்தவர்கள் அனைவரையும் பூலோகத்தில் பிறக்கச்செய்து,பொற்றாமறைக் குளத்தில் நீராடி வழிபட்டால் விமோசனம் கிடைக்குமாறு அருளியிருக்கிறார்.இதற்கு உமையவளோ,தேவர்களோ விதிவிலக்கல்ல.
மலையத்துவச பாண்டியனின் மகள் தடாதகைப் பிராட்டியாக உமையவள் பிறந்து,ஆட்சி செய்யும் உரிமைபெறுகிறாள்.சோமசுந்தரரை மணந்து கொண்டதால்,இறைவனே ஆட்சி புரிந்த பெருமையையும் பெறுகிறது மதுரை.முதல் கதை,இந்திரனைப் பழி தீர்த்த படலம்.கேளிக்கை இன்பத்தில் இந்திரன் மயங்கி நின்ற சமயம்,காண வந்த ஆசிரியரை கவனிக்க மறக்கிறான்.இந்த செயலுக்கு தண்டனையாக,இந்திரலோகம் பொலிவிழந்து,வறுமையில் தவிக்கிறது.பல போராட்டங்களுக்குப்பின்,மதுரையின் கடம்வனத்தின் காற்று அவனின் பாவத்தைப் போக்குகிறது.
பழி அஞ்சிய படலம் என்ற கதை மிகச் சிறப்பானது.எதிர்பாராத சூழ்நிலையில் ஒரு அம்பை ஏற்று மரணமடைகிறாள் ஒரு பெண்,பழியோ குற்றம் செய்யாத ஒரு வேடனுக்குக் கிடைக்கிறது.அவன் குற்றமற்றவன் என்று நிரூபிப்பதற்காக இறைவன்,வேறு ஒரு நிகழ்ச்சிக்கு அவர்களை சாட்சியாக்கி புரியவைக்கிறார்.மரணம் யாருக்கு எப்போது வரும் என்பது,யாருக்கும் தெரியாது என்பதை உணர்த்தவே இப்படி ஒரு திருவிளையாடல்.
தருமிக்கு உதவி செய்ய வந்ததற்காக,நக்கீரரின் நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்ற சிவனின் மீதான குற்றச்சாட்டு,நக்கீரரின் யாருக்கும் அஞ்சாத மனம், அன்றைய புலவர்களுக்கு அரசவையில் இருந்த மதிப்பையும் உரிமையையும் காட்டுகிறது.தன் பக்தர்களுக்காக வளையல் விற்பவனாக, மீன் பிடிப்பவராக, விறகு வெட்டியாக இப்படி பல வேடங்கள்.
சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் போர் நடந்தபோது, வேடனாக வந்து சோழனை தாக்கியதும்,அம்பு எய்தவன் சோமசுந்தரர் என்றறிந்து கதிகலங்கிப் போகிறான் சோழன்.புறமுதுகிட்டு ஓடியவனை வெல்கிறான் பாண்டிய மன்னன் .அந்தப் போரின் நினைவாக இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் பொன்னாலான அம்பையும் வில்லையும் கோவிலுக்கு காணிக்கையாக கொடுத்தானாம் பாண்டியன்.
போரின் சிறப்புகளையும், கோவிலை பற்றியும்,அங்கு வழிபட்டவர்கள் அடைந்த சிறப்பையும் பேசிக்கொண்டிருந்த மதுரையில்,அதன்பின் தமிழின் மேன்மைக்காக சங்கம் அமைத்ததையும்,பல புலவர்களின் வரவும் அதன் மூலம் தமிழ் வளர்ச்சி அடைந்து மதுரை சிறப்புற்ற அனைத்து நிகழ்வுகளும் அழகாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது.
குதிரை வாங்க அரசன் தந்த பொருள் எல்லாம் சிவ தொண்டுக்காக பயன்படுத்திய மாணிக்கவாசகர்,அமைச்சராக இருந்து பொருளைத் தொலைத்த குற்றவாளி ஆகி விட்டோமே என்று வருந்தினார்.நரிகளைப் பரிகளாக்கி விளையாடுகிறார் இறைவன்.நரிகளைக் கண்ட அரசன் கோபத்தில் மாணிக்கவாசகரை தண்டிக்கிறான்.மாணிக்கவாசகருக்கு தண்டனையாகக் கிடைத்த சவுக்கடிகளில் மனமிரங்கி வைகையை பொங்கி எழச்செய்து பக்தரை காக்கிறார் சோமசுந்தரர்.
வைகையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால்,அனைவரும் கரை கட்ட உத்தரவிடுகிறான் அரசன்.பிட்டு விற்கும் வந்தி கிழவிக்கு யாருமில்லாத காரணத்தால் உதவி செய்வதற்காக பிட்டுக்கு மண் சுமக்கிறான் இறைவன்.வேலையே செய்யாமல் இருந்த காரணத்திற்காக இறைவனுக்கு முதுகில் பிரம்படி கிடைக்கிறது அந்த அடி இறைவனுக்கு மட்டுமல்லாமல் உலகில் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் ஆக மாறுகிறது.தன் தவறை உணர்ந்து வருந்துகிறான் மன்னன்.சிவபக்தையான வந்தி கிழவிக்கு விண்ணுலகம் செல்ல விமானம் வருகிறது.
இப்படி சுவாரஸ்யம் நிறைந்ததாக அறுபத்திநான்கு சிறு சிறு கதைகள்.தன் பக்தர்களின் தவறுகளைத் திருத்தி ஆட்கொள்ளும் சிவனின் திருவிளையாடல்கள் அனைத்துமே வாசிப்பதற்கு சுவையும்,சிறப்புமானவை.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக