1 செப்., 2021

நூல் நயம் : எழுத்தே வாழ்க்கை - எஸ்ரா

#ஆண்டுவிழா
வாரம் - 2
புத்தகம் - 4
#சுய முன்னேற்றம்,வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு

இதில் எடுத்துக் கொண்ட தலைப்பு "தன் வரலாறு"

புத்தகம் : எழுத்தே வாழ்க்கை
ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன்
பக்கங்கள் : 176
போட்டியாளர் பெயர் : MUNIRAJ KALIMUTHU
போட்டியாளர் ID : RM 185 
Reading Marathon- ல் புத்தக வாசிப்பு எண்ணிக்கை : 14/25

*****************************

தன்னைப் பற்றிய வரலாறுதான் 'தன் வரலாறு' எனப்படுகிறது. தன்னைப் பற்றி ஒருவர் எழுதுவதென்பது அவர் பற்றியதாக மட்டும் இருப்பது இல்லை. அவர் சமூகத்தின் அங்கமாக இருப்பதால், சமூக வரலாறாகவும், அவர் வாழ்ந்த காலகட்டத்தின் திறப்பாகவும், அவர் வாழ்ந்த வாழ்வின் விமர்சனமாகவும், தன்னோடு வாழ்ந்த மனிதர்களின் சித்தரிப்பாகவும் அது அமைய வேண்டும். அப்படி எழுதப்பட்ட ஒரு தன் வரலாறு புத்தகம்தான் "எழுத்தே வாழ்க்கை".

நினைப்பது போல் அமைவதல்ல வாழ்க்கை. வாழ்வு பற்றிய கனவுகள் ஆயிரம் இருந்தாலும் புறக்காரணிகள், உடன் இருப்பவர்கள், சமூகம், சூழ்நிலை போன்ற பல காரணங்களால் நனவாகிப் போகாமல் இன்னமும் கனவாகவே இருக்கிறது சிலருக்கு வாழ்க்கை. 

ஆனால் என்ன தவம் செய்து இந்த வாழ்வெனும் வரத்தை வாங்கி வந்திருக்கிறாரோ தெரியவில்லை திரு. எஸ்.ராமகிருஷ்ணன். எழுத்தே வாழ்க்கையாக்கிக் கொண்டு வாழ வேண்டும். வேறு எந்த வேலைக்கும் போகவே கூடாது என்ற வைராக்கியத்தோடு கல்லூரிப் படிப்பில் அடியெடுத்து வைத்தவர், அதே வைராக்கியத்தோடுதான் இன்று வரை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் என்றால் இந்த வைராக்கியத்திற்கு பின்னால் உறுதுணையாய் இருக்கும் அவர் மனைவி, சித்தப்பா, பெற்றோர், மகன்கள் ஆகியோருக்கு என்ன சொல்லி நன்றி தெரிவிப்பது எனத் தெரியவில்லை. 

வாசிப்புக்காக நான் புத்தகங்களைத் தேடத் தொடங்கும் போது அறிமுகமானவர்தான் எஸ்.ரா. புத்தகங்களை வாங்கிப்  படிக்கும் வசதி வருவதற்கு முன்னால் வார தமிழ் சஞ்சிகைகளை மட்டுந்தான் படித்துக் கொண்டிருந்தேன். அதிலும் பெரிதாக ஒன்றுமில்லை. புதிய தலைமுறை வார இதழ்தான் நான் முதலில் படிக்க ஆரம்பித்தது (2005 - 06 ம் ஆண்டுகளில்). அதன் மூலமாகத்தான் வெ. இறையன்பு எனக்கு அறிமுகமானார் மற்றும் பரிச்சயமானார். பத்தாயிரம் மைல் பயணம் எனும் தொடர் வழியாக. அடுத்தபடியாக புத்தக உலகிற்குள் வரும் போது பிள்ளையார் சுழி போட்டதே எஸ்.ராவின் புத்தகங்களில் இருந்துதான். 

மறைக்கப்பட்ட இந்தியா, எமது இந்தியா, தேசாந்திரி போன்றவைதான் நான் வாசிக்க ஆரம்பித்த அவரின் புத்தகங்கள். பக்கத்துக்குப் பக்கம் மட்டுமில்லை பாராவிற்கு பாரா தகவல்களைத் தருவதில் வல்லவர். எத்தனை பத்திகள் படித்தாலும் அதில் நிச்சயம் நிறைய தெரிந்து கொள்ளலாம். உரைகளை அடர்த்தியாக வீண் சொல் இல்லாத நேர்த்தன்மையுடன் அவர் எழுதுவதுதான் அவரைப் படிப்பதற்கு ஒரே காரணம். 

உலக இலக்கிய ஆளுமைகள், உலகத் திரைப்படங்கள், வரலாறு புகழ் பெற்ற ஓவியங்கள் என தன் வாசகனுக்கு இந்த உலகத்தையே தன் எழுத்துக்களால்  திறந்துகாட்டும் வித்தை தெரிந்த மாயாஜாலக்காரர். 

இவரைப் படித்தாலே போதும் எந்த கவிஞரைப் பற்றியும் எந்த மேற்குலக எழுத்தாளர்கள் பற்றியும் அவர்களது படைப்புகள் பற்றியும் தெரிந்து விநாயகர் போல ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு உலகை வலம் வந்ததுபோல, இந்த எழுத்துலகத் தரணியையே ஒரு வலம் வந்துவிடலாம். இவரைப் படித்தால் எந்த வாசகனும்/ வாசகியும் நிச்சயமாக இலக்கியவாதி ஆகிவிடலாம். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் என் எஸ்.ரா.வைப்பற்றி. 

சரி. எழுத்தே வாழ்க்கை எனும் புத்தகத்திற்கு வருகிறேன். 

இந்தப் புத்தகத்தில் மொத்தம் 30 கட்டுரைகள். இவருடைய குடும்பத்தில் ஆரம்பிக்கிறது முதல் கட்டுரை. அடுத்ததாக பள்ளியைப் பற்றியும் பள்ளி நண்பர்கள் பற்றியும் பள்ளிப் பருவச் சேட்டைகள் பற்றியும்  இரண்டு மற்றும் மூன்றாவது கட்டுரைகளில் தன் வரலாறைச் சொல்கிறார். 

"என் எழுத்து" எனும் நான்காவது கட்டுரையில் தான் எழுதுவதற்கான திட்டமிடலையும் அதை செயல்படுத்துவதையும், வாசகர்களின் அனைத்து மின்னஞ்சலுக்கும் பதில் எழுதி விடுவது பற்றியும் சொல்கிறார். ஒரு நாளில் தினமும் ஐந்து அல்லது ஆறு மணி நேரம் எழுதுகிறார். ஊர் சுற்றுவதில் அதிஆர்வமாக இருக்கிறார். ஆனால் பயணங்களில் எந்த புகைப்படங்களும் எடுத்துக் கொள்வதில்லையாம். பயணங்களில் எதையும் எழுதுவதில்லையாம். ஊர் சுற்றி பார்த்த கேட்ட அனுபங்களைத்தான் பின்பு எழுதுவாராம். என்ன ஒரு நினைவாற்றல். அந்த வகையில்  உண்மையிலேயே இவர் ஒரு தேசாந்திரிதான். இவருடைய சொந்த பதிப்பகத்தின் பெயரும் தேசாந்திரி என்பதும் எல்லாரும் அறிந்ததே. 

இவரது நினைவாற்றல் பற்றி இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

" மகாபாரதத்தில் வரும் கௌரவர்கள் நூறு பேரின் பெயரைக் கேட்டால் நினைவிலிருந்து எப்போதும் சொல்ல முடியும். ஷேக்ஸ்பியர், டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி படைப்புகளில் எதைக் கேட்டாலும் உடனுக்குடன் சொல்ல முடியும். ஆனால், என்னால் என் வங்கிக் கணக்கு எண்ணை நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. இவ்வளவு ஏன்? எங்காவது வெளியூர்களுக்குப் போனால் அறை எண்ணை செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் கஜினி நான். மூளையின் ஒரு பக்கம் மட்டும் வேலை செய்கிறதோ என்னவோ!" என்கிறார்.

அடுத்ததாக, அதே கட்டுரையில் எழுத்தாளனைப் பற்றியும் எழுத்தாளர்களைப் பற்றியும் இப்படித்தான் சொல்கிறார். 

" எழுத்தாளனாக இருப்பது என்பது ஒரு பொறுப்புணர்வு. எழுத்தாளன் தனது சிந்தனைகள், படைப்புகள், செயல்பாடுகள் வழியாகச் சமூகத்தை மேம்படுத்துகிறான் என்பதற்காகவே கொண்டாடப் படுகிறான். 

தமிழ்ச் சமூகம் எழுத்தாளர்களைக் கொண்டாடுவதில்லை என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நிச்சயம் கொண்டாடவே செய்கிறது. திரைப்பட நடிகர்களைப் போலக் கொண்டாடவில்லையே எனக் கேட்டால் ஏன் கொண்டாட வேண்டும் என்று தான் பதிலுக்குக் கேட்பேன். "

எழுத்தாளன்-வாசகர் உறவு பற்றி :
----------------------------

எழுத்தாளனனுக்கும் வாசகனுக்கும் உள்ள உறவு வெறும் ஆராதனையில்லை. அது ஒரு வகை அன்பு,பாசம், உணர்வுப் பூர்வமான நெருக்கம்,விசித்திரமான உறவு. 

வாசகன் தனக்கு விருப்பமான எழுத்தாளனைச் சந்திக்கும் போது உள்ளூறக் கூச்சமடைகிறான். பேசத்தடுமாறுகிறான், பல நேரங்கள் வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதோ, கைகளைப் பற்றிக் கொள்வதோ போதும் என நினைக்கிறான். அந்த அன்பு மகத்தானது. ஒரு வாசகன் அன்புடன் தரும் ஒரு கோப்பை தேநீர் எல்லா விருதுகளையும் விட முக்கியமானது " என்கிறார். 

காதலி = மனைவி = குறிக்கோள் : 
----------------------------

காதலி தீவிர வாசகி. அதனாலேயே காதலியானதும் அதே காதலி மனைவியானதும் இது நாள் வரை எழுத்தையே கட்டிக் கொண்டிருக்கும் ஓர் எழுத்தாளனை வசைபாடாமல் எழுத்தாளனின் குறிக்கோளை அடைய உறுதுணையாக இருக்கும் தன் மனைவி சந்திரபிரபாவுக்கென "காதலின் நினைவில்" எனத் தனிக்கட்டுரை. 

முதல் நாவல் : 
-------------

எஸ்.ரா.வினுடைய முதல் நாவல் இதுதான் என நிச்சயம் தெரியாது இந்தக் கட்டுரையை வாசிக்கும் வரை. சிறுகதைகள் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தவருக்கு ஒரு பிரம்மாண்ட படைப்பை படைக்க வேண்டும் என்கிற ஆசையில் துளிர்த்தது தான் "உப பாண்டவம்". 

மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நவீன நாவல். கையெழுத்துப் பிரதியாக ஐநூறு பக்கங்கள் மேல் வந்த நாவல் இது. ஆனால் எந்த பதிப்பகங்களும் முன் வரவில்லை இதைஅச்சிட்டு வெளியிட. எத்தனையோ பதிப்பகங்களின் வாசல்கள் ஏறி இறங்கி கடைசியாக தானே 'அட்சரம்' என்ற பதிப்பகத்தைத் துவங்கி புத்தகத்தை அச்சிட்டு வெளியிட்டார். அதன் முதற்பதிப்பில் சின்ன சங்கடம் என்றால் தான் புரூப் பார்த்து பிழை திருத்திக் கொடுத்தும் அந்த நாவல் அதே பிழைகளோடே வெளிவந்தது. இருந்தாலும் பிரசித்தி பெற ஆரம்பித்தது. அடுத்ததாக கோவையில் உள்ள விஜயா பதிப்பகம் அதிகபட்ச பிரதிகளை வாங்கி விற்பனை செய்து தந்ததாகவும் முதற்பதிப்பு எட்டு மாதங்களில் விற்றுத் தீர்ந்ததாகவும் தன் முதல் நாவல் உப பாண்டவத்தைப் பற்றி 11வது கட்டுரையான "உப பாண்டவத்திற்குப் பின்னால்"-ல் குறிப்பிட்டுள்ளார். 

எஸ்ராவும் - விகடனும்: 
--------------------

இந்தக் கட்டுரையில் எஸ்.ரா கல்லூரி படிக்கும்போது விகடனின் மாணவப் பத்திரிக்கையாளராகத் தேர்வு செய்யப்பட்டிருந்ததையும் அப்போது அதற்கான நேர்காணலில் "ஏன் எப்போதும் பத்திரிக்கையாளர்களை உருவாக்குகிறீர்கள். எழுத்தாளர்களையும் உருவாக்கலாம் தானே" என்று கேட்டிருக்கிறார். அதற்கு "உங்களுக்கு விருப்பம் இருந்தால் நிச்சயம் சிறுகதை எழுதுங்கள். அது தரமாக இருந்தால் கட்டாயம் வெளியிடப்படும்" என்று பதில் வந்திருக்கிறது. அப்படி கல்லுரி மாணவனாக இருந்த போதே அவரது சிறுகதைகளைத் தொடர்ச்சியாக விகடனில் வெளியிட்டு தன்னை உலகறிய செய்தது விகடனே என விகடனுக்கு கடன்பட்டுள்ளதை இந்த "நானும் விகடனும்" கட்டுரையில் சொல்லியிருக்கிறார். 

தன் வரலாறில் அடுத்ததாக ஒரு தேசாந்திரியாக ஊர் சுற்றி பார்த்த இடங்களையும் அந்த இடங்களுக்கு அழைத்துப் போக உதவியாக இருந்த நண்பர்களைப் பற்றியும் பயணக் கட்டுரைகள் போல அடுத்தடுத்து வரும் கட்டுரைகளில் எழுதியிருக்கிறார். அதில் மனிதர்கள் விட்டுச் சென்ற நகரமான குல்தாரா, ஒடிசா மாநிலத்தில் இருக்கும் ரகுராஜ்பூர், நயாகரா அருவி, லூரே கேவன்ஸ், எழுத்தாளர் மார்க் ட்வைனின் வீடு, தனுஷ்கோடி, அப்புறம் முப்பது பக்கங்களுக்குக் குறையாமல் "ஜப்பானில் சில நாட்கள்" என ஜப்பானின் பயண அனுபவத்தையும் ஜப்பானைப் பற்றிய மினி அறிமுகத்தையும் இந்த தன் வரலாறில் பதிவு செய்திருக்கிறார்.

கட்டுரைகள், சிறுகதைகள், நாவல் என எழுதியிருக்கும் எஸ்.ரா. இதுவரை கவிதைகள் எழுதியதில்லை. ஆனால் அவரது கதைகளில் எழுதும் உவமைகள் எல்லாமே கவிதைகளாக அழகாக இருக்கும். ஆனால் இவர் பாடலாசிரியான கதை யாரும் அறியாததுதான். அறியாத நிறைய விஷயங்களை திறந்து வைப்பது எப்போதும் புத்தகம்தான். இந்த தன் வரலாற்றில் இசைஞானி இளையராஜாவுடன் சேர்ந்து தான் பாடலாசிரியன் ஆன கதையையும் ஆனால் அந்தப் படம் வெளிவராத வருத்தத்தையும் இதில் பதிவு செய்திருக்கிறார். 

பொதுவாக எஸ்.ரா. அவர்களின் எந்தவொரு புத்தகத்தினை எடுத்துப் படித்தாலும் (நாவல்கள் தவிர) அதில் நமக்கு ஏதேனும் ஒரு புத்தகத்தையாவது அறிமுகப்படுத்தி வைப்பார். இதிலும் அதற்கு குறையில்லை. எழுத்தாளர் மார்க் ட்வைனின் வீடு எனும் கட்டுரையின் வாயிலாக அவர் எழுதிய Following the Equator எனும் நூலை அறிமுகப்படுத்துகிறார் நமக்கு.

படிக்க படிக்க நிறைய அனுபவங்கள், ஆச்சர்யம் மிகுந்த தகவல்கள், பயணம் சார்ந்த கட்டுரைகள் எனத் தகவல்களஞ்சியமாக தன் வரலாற்றை "எழுத்தே வாழ்க்கை"யென எழுதியிருக்கிறார் எஸ்.ரா. 

நன்றி.

இவண், 
முனிராஜ்

நன்றி :

கருத்துகள் இல்லை: