RM.072
200 /150+
நான்காம் ஆண்டு விழா வாசிப்பு போட்டி :
நான்காம் வாரம்: புராணங்கள்.
இதிகாசங்கள்,பாரதி இயல் ,வரலாறு
பாரதியியல் 2/
இதிகாசங்கள்..5/ 32
வரலாறு ..1/
#####₹₹₹₹₹₹₹
"காளிதாசரின் உலக மகா காவியங்கள் ". தமிழில் புலவர் நாராயண வேலுப்பிள்ளை
நர்மதா பதிப்பகம் .விலை ரூபாய் 80.
முதல் பதிப்பு 2009 மொத்த பக்கங்கள் 216.
காளிதாசர் பாரத நாட்டுக் கவிஞர்களில் தலைசிறந்தவர் .சமஸ்கிருத மொழிக்கு வளம் சேர்த்தவர் .
அவரது நூல்கள் பாரத நாடு முழுவதிலும் அல்லாது உலக முழுவதிலும் புகழ்பெற்றுத் திகழ்கின்றன .மேனாட்டு அறிஞர்கள் பலர் அவரது கவித் திறத்தை பாராட்டி உள்ளனர் .உலக இலக்கிய வரலாற்றில் காளிதாசர் மிக உயர்ந்த இடத்தை பெற்றிருக்கிறார்.
அவர் இயற்றிய காவியங்கள் இரகுவம்சம்
குமாரசம்பவம்
மேகசந்தேசம்
இருது சம்காரம் (காவியம் )
இதுவன்றி
மாளவிகாக்னிமித்ரம்
விக்ரம ஊர்வசியம்
சாகுந்தலம் ஆகிய நாடகங்களையும் இயற்றியிருக்கிறார் .
காவியங்கள் எல்லாம் கதை உருவிலும் நாடகங்கள் எல்லாம் காட்சிகளாகவும் எளிய தமிழ் நடையில் இந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.
அந்த கால அரண்மனை வாழ்க்கை ஆசிரம வாழ்க்கை மக்களின் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை சுவைபட சித்தரிக்கப்பட்டுள்ளது.
#######
காளிதாசர் குறித்து என்ன எழுதுவது .சிவாஜி நடித்த காளிதாசர் படம் பார்த்தேன். அதில் கண்ணதாசன் எழுதிய ஒரு பாட்டு காளியை பார்த்து அவர் பாடுவது போல அமைந்திருக்கும் .
*அம்மா யார் தருவார் இந்த அரியாசனம் புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்.
பேசரும் நூல் ஒன்றும் கல்லாதவன்
பெரும் புகழ் படைத்த அவைதனில் நில்லாதவன்..
வடமொழி மாணவர்கள் குமாரசம்பவம் ரகுவம்சம் மேக சந்தேசம் மூன்றையும் கருத்துடன் பயின்று வருகின்றனர் .இவை *காளிதாச மும்மணி *என்னும் புகழ் படைத்தவை.
அவரைப் பற்றி ஒரு செவிவழி கதை உண்டு .உயர் குலத்தில் பிறந்தவர் .ஆனால் ஆட்டிடையன் வீட்டில் வளர்க்கப்பட்டவர் . எழுத்தறியா மூடர்.
ஓர் இளவரசி செருக்குற்றமையால் அவளை அடக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் அவரது ஆசிரியர் எழுத்தறியா மூடன் ஆகிய காளிதாசனை அந்த இளவரசிக்கு திருமணம் செய்து வைத்தான்.
அவள் காளிதாசனுக்கு காளிமந்திரம் பயிற்றுவித்தார் .அந்த மந்திரத்தை பயின்றவாறு காளிதாசர் மாபெரும் கவிஞர் ஆனார்.
குப்த மன்னன் விக்கிரமாதித்தன் அவையில் காளிதாசர் கவிஞராக இருந்தார் என்பது ஒரு செய்தி.
காளிதாசர் சிற்றின்பத்தை மிகவும் பயின்றவர் என்றும் ஒரு கணிகை இல்லத்தில் வாழ்க்கையை இறுதியை அடைந்தார் என்றும் சிலர் கூறுவர் .
அவர் காவியங்களில் அகச்சுவை காதல் சுவை மலிந்திருப்பதை காண்கிறோம் .அதனால் அவர் சிற்றின்பத்தில் ஈடுபாடு உடையவர் என்று கூறிவிடமுடியாது .
வால்மீகி முனிவர் திருத்தக்கதேவர் இளங்கோவடிகள் கம்பர் முதலியோர் இயற்றிய காவியங்களில் காதல் சுவை மிகுந்து இருக்கிறது .அதனால் அவர்களை சிற்றின்பத்தில் மூழ்கியவர்கள் என்று சொல்வதில்லை
ஜெர்மனி நாட்டு தலைசிறந்த மகாகவி "கதே" என்பவர் காளிதாசருடைய இலக்கியத்தை மிகவும் புகழ்ந்து கூறியுள்ளார் .
ஜெர்மனி மகாகவி ஷில்லரும் காளிதாசருடைய * மேகசந்தேச* நூலை புகழ்ந்து அதுபோன்ற ஒரு தூது நூலை எழுதியுள்ளார்.
######
இனி காவியம் குறித்து பார்ப்போம்
காளிதாசர் செய்யுள் வடிவில் ரகுவம்சம் குமாரசம்பவம் மேகசந்தேசம் எழுதியுள்ளார் .
ஒவ்வொன்றும் அற்புதமான காவியம் .படிக்கப் படிக்கச் சுவை கூடிக்கொண்டே செல்லும் வண்ணம் அவை எழுதப்பட்டிருக்கிறது.
1) ரகுவம்சம் ::
வடமொழியில் ஐம்பெரும் காவியங்களாக விளங்கும் நூல்களும் ரகுவம்சம் ஒன்று .இது சக்கரவர்த்தித் திருமகனாக ரகுராமனின் முன்னோர்களைப் பற்றியும் .
பின்னோர்களைப் பற்றியும் விளக்கமாக கூறும் வரலாற்று காவியம் .
திலீபன் முதலாக அக்னி வருணன் ஈறாகவுள்ள இருபத்தொரு அரசர்களின் வரலாறு இதில் அடங்கியுள்ளது .
தன்னடக்கம் தூய்மை தியாகம் என்ற மூன்று நற்பண்புகள் இதில் வற்புறுத்தப்படுகின்றன .இதன் மூலம் நல்வாழ்க்கை அமையவும் ,தீமை அகலவும் காளிதாசர் வழிவகைகளை கூறுகிறார்.
திலீபன் நந்தி வழிபாடு செய்துவணங்கி வழிபாடு செய்து தன் மனைவி மூலம் இரகுவின் பிறப்பு நடைபெறுகிறது..
ராகு அஸ்வமேத யாகம் செய்து திக் விஜயம் செய்து கௌத்சமுனிவர் ஆசிர்வாதம் பெற்று அசன் தனை மகனாகப் பெற்றார்.
இந்துமதியின் சுயம்வர செய்தி கேட்டு விதர்ப்ப நாடு சென்று ,மணந்து ,ஆட்சி செய்து வருகையில் இருவருக்கும் தசரதன் பிறந்தான்..
தசரதன் ராமன் பிறப்பதும் சிறப்பதும் நாம் அறிந்த கதை.
கீழ்கண்ட வாறு குலமுறை பட்டியல் தெரிவிக்கப்படுகிறது.
திலீபன்
ரகு
அசன்
தசரதன்
ராமன்
குசன் ,அதிதி, நிடதன் ,
நளன் ,புண்டரீகன் ,சேம தன்னுவான் ,
தேவா நீகன், அகீநகு,
பாரியாத்திரன்,சீலன்
உன்னநாபன், வச்சிர நாபன், சங்கணன் ,வியூஷி நாசுவன் , விசுவாசகன்,
இரணி நாபன் , கௌசல்யன் ,பிரமிட்டன் ,
புத்திரன் ,புஷயன், துருவா சந்தி , சுதர்சனன்
அக்னி வருணன்.
ஆகியோர்.
அக்னி வருணன் அரசியலை ஒழுங்காக நடத்தவில்லை .எப்பொழுதும் சிற்றின்பத்தில் நாட்டம் கொண்டிருந்தார் .நாளடைவில் இவனை நோய் பற்றிக் கொண்டது .நோயை குணப்படுத்த முடியவில்லை .அமைச்சர்களும் வேள்வியாசனும் அரசனை தூக்கி வேள்வித்தீயில் போட்டுவிட்டனர் .அரசி
அமைச்சருடைய உதவியை கொண்டு ஆட்சியை நடத்தி வந்தாள் ,"என்பதாக ரகுவம்சம் காவியம் கூறுகிறது..
######
2) குமார சம்பவம்:
முன்பொரு காலத்தில் திருக்கயிலாய மலையில் உலகம் அனைத்தையும் உய்விப்பவரும் தேவாதி தேவருமான
சிவபெருமானை நோக்கி அவரது பத்தினியான தாட்சாயணி தேவி பின்வருமாறு கூறினார்." தங்கள் சொல்லைக் கேட்காமல் என் தந்தையின் வீட்டுக்கு சென்றேன். அதனால் தாங்க முடியாத அவமதிப்பையும் அடைந்தேன் .என் தந்தையும் அவர் செய்த பெரிய யாகமும் தாங்கள் ஏவிய வீரபத்திரனால் அழிந்து ஒழிந்தனர்.அப்படியிருந்தும் எல்லோரும் என்னை தாட்சாயணி என்று என் பெயரை குறிப்பிடுகிறார்கள் .
பரம்பொருளே! பெரும் பழிக்கு ஆளான இந்த பிறவி எனக்கு வேண்டாம். வேறு பிறவி எடுக்க எனக்கு ஒரு வரம் தாருங்கள் என்று வேண்டினாள்.
சிவபெருமான் பார்வதியாக பிறக்க வரம் தந்து ,மணந்து ,ஆறுமுகப் பெருமானை பெற்று எடுத்து அசுரனை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய கதை எல்லோரும் அறிவோம் . அது தாய் குமாரசம்பவம்.
முருகனுடைய சிறப்புகளை முழுவதுமாக கூறுகிறது குமாரசம்பவம்.
3) மேக சந்தேசம்:
மேக சந்தேசம் என்றால் மேகத்தை தூது அனுப்புதல் என்று பொருள் .உலகம் போற்றும் மகாகவி காளிதாசர் அளித்த காவியங்களில் மேகசந்தேசம் மிகச்சிறந்தது .மேக சந்தேசம் தொடங்கும் முறையே புதுமையும் அழகும் நிறைந்துள்ளது.
அளகாபுரியில் இருந்த ஒரு யட்சன் குபேரனது சாபத்தால் தன் மனைவியை விட்டு பிரிந்து ஓராண்டு காலம் சீதா பிராட்டியார் நீராடிய புண்ணிய அருவி பெருகும் ராமகிரி ,சித்ரகூட மலையில் உள்ள ஆசிரமத்தில் காலம் கழித்து வந்தான் .
அவன் தன் மனைவிக்கு தன் அன்பு செய்தியை அறிவிக்கும் நூலாக காளிதாசர் மேக சந்தேசம் காவியத்தை இயற்றினார் .
அதில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன .முதல் பகுதியில் மேகம் செல்ல வேண்டிய வழியை கூறும் முறையில் காளிதாசர் தன் தாய்நாட்டின் அழகையும் வளத்தையும் தன் தேசபக்தி விளங்கும் முறையில் வர்ணிக்கின்றார்.
பிற்பகுதியில் யட்சன் மனைவியின் பண்பையும் பதிபக்தியையும் அழகான முறையில் கூறுகின்றார்.
முடிவில் தளபதி குபேரன் மேகசந்தேசம் கேட்டு சாபத்தை நீக்கி கணவனையும் மனைவியையும் ஒன்றுகூட்டி இன்புற்று வாழ செய்தான் என்று நூல் கூறுகின்றது.
நூலில் பல சிறப்புகள் அமைந்திருக்கின்றன .
சொல் நயம் பொருள் நயம் அணி அழகு நிரம்பி இருக்கும் நூல்.
பிற்பகுதியில் யட்சன் மேகத்தைத் தூது விடுத்ததற்கு காரணம் அது தாபத்தைப் போக்கும் தன்மை உள்ளது என்று கவிஞர் அழகாகக் கூறுகிறார். உஜ்ஜயினி நகரத்தில் ஒப்பு உயர்வு இல்லாத அழகை வர்ணிக்கிறார். பிற்பகுதியில் அளகாபுரிக்கும் மேகத்திற்கும் உள்ள ஒற்றுமையை மிக அழகாகக் கூறுகிறார்.
" உன்னிடத்தில் மின்னல் ஒளி வீசுவது போல அங்கே அழகிய மாதர்கள் உடல் அளவிலும் நகை அழகுடனும் விளங்குகிறார்கள் .உன்னிடத்தில் வானவில் விளங்குவது போல் அங்கே சித்திரங்கள் விளங்குகின்றன.உன் இடி முழக்கத்தை போல் அங்கே வாத்திய ஒலி முழக்கத்தை கேட்கலாம் .மழைநீர் பளபளப்புடன் உள்ள உன் மேனி போல் வெள்ளி பொன் முதலியவற்றால் அமைந்த தளங்கள் விளங்குகின்றன .அங்கே உள்ள மாளிகைகளுடைய உச்சி உன்னை நெருங்கியிருக்கும்".
பிறகு அளகாபுரியின் வளத்தை சீரிய முறையில் வர்ணிக்கின்றார்::
வண்டுகள் ஒலிக்கும் மலர்கள் வாடாமல் மிளிர்கின்றன .அன்னப்பறவைகள் வீற்றிருக்கும் வாடாத தாமரை மலர்கள் மணம் வீசும் குளங்கள் அங்கே உள்ளன .மயில்கள் விரிந்த தோகையுடன் ஒளிரும் கழுத்துடனும் விளங்குகின்றன .எப்பொழுதும் நிறைந்த மதியின் ஒளி வீசுவதால் இருட்டே
கிடையாது .இன்பத்தால் துளிர்க்கும் கண்ணீர் தவிர வேறு கண்ணீர் இல்லை .
காமனால் உண்டாகும் உடல் சூடு தவிர வேறு ஜுரம் இல்லை. வேடிக்கை பிணக்கத்தால் உண்டாகும் பிரிவைத் தவிர வேறு பிரிவு கிடையாது இளமைப்பருவத்தை தவிர வேறு பருவம் இல்லை.
நூலின் உரையாசிரியர் மல்லிநாதர் காவியத்தின் சிறப்பை மிக அழகாக வர்ணனை செய்து உரை எழுதியிருக்கிறார்.
வால்மீகி ராமாயணத்தில் ராமர் சீதா பிராட்டிக்கு அனுமன் மூலமாக அறிவித்த அனுமன் சந்தேசத்தை மனத்தில் நினைத்து மகிழ்ந்து உள்ளம் உருகி காளிதாசர் மேக சந்தேசக்
காவியத்தை இயற்றினார் என்று உரையாசிரியர் மிகுந்த சிறப்பாக அறிவிக்கின்றார்.
4) (இ)ருது சம்காரம்::
ருது சம்காரம் என்ற சொல்லுக்கு பருவங்களில் வருணனை என்பது பொருள் .
காளிதாசர் தற்போது மத்திய பிரதேசம் என்று அழைக்கப்படும் பகுதியில் கிமு முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவர் .அந்த கால சூழ்நிலைக்கு ஏற்ப அவர் எழுதிய நூல்கள் அமைந்திருக்கின்றன.
அந்தக்கால மக்கள் காதலையும் போரையும் தம் இரு கண்கள் எனப் போற்றினர் .
காதலும் போரும் பழைய இலக்கியங்களில் கருத்தாகவும் ,சமயமும் தத்துவமும் இடைக்கால இலக்கியங்களில் சாரமாகவும் ,விஞ்ஞானமும் மனித இயலும் இக்கால இலக்கியங்களில் நோக்கமாகவும் அமைந்துள்ளன.
ருது சம்காரம் என்ற நூலில் 6 பருவங்களின்தட்பவெட்ப நிலையும் இயற்கை வருணனையும் ஆண் பெண் இருபாலரது உறவு முறையும் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன.
இந்த நூல் முழுவதும் காம இன்பம் என்ற சிருங்கார ரசம் நிறைந்திருக்கிறது என்பதை காணலாம்.
ருது என்ற சொல்லுக்கு வருவன என்பது பொருள். வசந்தம் முதலிய ஆறும் ஒவ்வொரு வருஷமும் திரும்பத் திரும்ப வருவதால் இவைகள் ருதுக்கள் எனப் பெயர் பெற்றன .தமிழில் இவைகளை பெரும்பொழுது என்பர் .ஒரு பருவம் இரண்டு மாதங்கள் கொண்டது .ஒரு வருஷம் ஆறு பருவங்கள் கொண்டது.
ஒவ்வொரு பருவமும் அதனால் ஏற்படும் விளைவுகளை ,சுற்று சூழ்நிலையிலும் மரம் செடி கொடிகள் இடமும் மக்களிடத்திலும் உண்டாக செய்கிறது .
மலர் காய் கனிகள் இவை தோன்றுவதும் மக்கள் தங்கள் நடை உடை பாவனைகளை மாற்றிக் கொள்வதும் பருவங்கள் தோறும் இயல்பாய் உள்ளன.
காளிதாசர் ஒவ்வொரு சருக்கத்திலும் முதலில் சுற்றுச்சூழலை வர்ணிக்கின்றார் .பின்பு மக்களின் இயற்கையை சுற்று சூழ்நிலையோடு இணைத்து வர்ணிக்கின்றார் .அவர் சொல்லும் விதம் மிகவும் வசீகரமாய் உள்ளது .இந்த நூலில் காதல் சுவை தலையாயது ஆகும்.
காதலர்கள் ஒருவருக்கொருவர் பிரிந்து இருக்கும் போதும் இந்தச் சுவை வெளிப்படுகிறது .மக்களின் மனநிலையை காளிதாசர் நன்கு உணர்ந்தவர் .ஆகவே அவர்கள் மனத்தில் எழும் உணர்வுகளை அந்தந்த பருவத்தோடு இணைத்து கூறுகின்றார் .
ஆபாசமாக எதையும் கூறவில்லை. எந்த நிலையிலும் நம் நாட்டின் பண்பாட்டை கடந்து செல்ல வில்லை .மிகவும் நாகரீகமாக கூறிச் செல்லும் பாங்கு ,படித்து இன்புறுவதற்கு உரியதாக உள்ளது .
இவர் காவியங்களும் இது நான்காவது ஆகும் .இந்த நூலைக் குறித்து யோகி அரவிந்தர் மிகவும் சிறப்பாக பாராட்டுகிறார் .காளிதாசரின் இயற்கை வருணனை மிகவும் சிறந்தது என்றும் இவருடைய நூல்கள் உலக இலக்கியங்களில் இடம் பெறும் என்றும் கூறுகிறார் .
இருது சம்காரம் காவியத்தில் உவமை தற்குறிப்பேற்றம் உயர்வு நவிற்சி முதலிய அணிகள் அணி செய்கின்றன.
######
காவியங்கள் எல்லாம் நாம் படித்து இன்புறுவதற்கு .
இளமையில் காவியங்கள் படித்து நம்மை முறுக்கேற்றி கொள்வதற்கு ;
முதுமையில் படித்து நாம் நம்மை பதப்படுத்திக் கொள்வதற்கு என்பதே எனது சொந்த கருத்து.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக