#சாண்டில்யனின்
#மன்னன்_மகள் (வரலாற்றுப் புதினம் 1961-ல் வந்தது)
1958, 59-ல் குமுதம் இதழில் தொடராக வெளிவந்த போதே வாசகர்களிடம் பெரும் வரவேற்பு.
'தன் பிறப்பின் ரகசியத்தை அறியும் நோக்கில் புத்த மடாலயத்திலிருந்து புறப்படும் வாலிபன் (கரிகாலன் - கதாநாயகன்) ...வேங்கி நாடு, சாளுக்கிய மன்னன், சோழப்பேரரசு என அரசியல் #சதுரங்கம் ஆடும் புதினமே மன்னன் மகள்'
மற்ற நாவலாசிரியர்களை விட சாண்டில்யனிடம் பல சிறப்புகள் உண்டு என்பதை இதிலிருந்து நான் விளங்கிக்கொண்டேன்.
1. எந்த அத்தியாயமும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் போகவே போகாது. தொடர்பு இருந்து கொண்டேயிருக்கும்.
2. கதாபாத்திர அறிமுகங்கள் ஒவ்வொன்றும் கரிகாலன் அறிமுகமாகின்ற பொழுதுதான் வாசகர்களுக்கும் அறிமுகமாகும்.
3. பெண்களை ரசிக்கும்படி வர்ணிப்பதில் வார்த்தைகளில் எல்லை மீறாமல் வாசகனின் எண்ணங்களில் எல்லை மீற வைக்கிறார் மிக நேர்த்தியாக.
4. இதுவரை போர்க்காட்சிகளை இவர் வர்ணித்ததே மிக அழகாக நான் பார்க்கிறேன்.
5. அதே போல நாயகன் நாயகி சந்திப்பிற்குப் பிறகான காதல் வசனங்கள் முத்திரை குத்தப்பட்ட (அக்மார்க்) காதல் இலக்கியம். அவ்வளவு நாசூக்கு. அதற்குப் பிறகு இருவருக்குமான காதல் உரையாடல்கள் இறுதிக்கட்டம் தவிர வேறெங்கும் கிடையாது. ஆனால் நினைவுகள் உண்டு.
6. கரிகாலன் செல்லுமிடங்களிலெல்லாம் தர்க்கம், புவியியல், மனோவியல் போன்ற அத்தனையும் ஒவ்வொரு விதத்தில் வெளிப்படுகின்றது.
7. கரிகாலனுடனான மன்னன் மகளின் முதல் சந்திப்பில் நம்மை இழக்கும் நாம், அடுத்தடுத்த சந்திப்பில் நாயகியின் மீதே வெறுப்பை வளர்த்து, சோழர் படைத்தலைவன் அரையன் ராஜராஜனின் மகள் செங்கமலச்செல்வியின் செயல்களுக்கு ஆதரவாகி விடுகிறோம். கண்ணுக்குள்ளேயே நிற்கிறாள் செங்கமலச் செல்வி
9. கரிகாலன் - மன்னன் மகள், கரிகாலன் - சாளுக்கிய மன்னன்,
கரிகாலன் - இராஜேந்திர சோழன்,
செங்கமலச் செல்வி- மன்னன் மகள்,
கரிகாலன் - பிரதாபருத்திரன்,
கரிகாலன் - அரையன், வல்லவன் வந்தியத்தேவன் (பொன்னியின் செல்வன் ஹீரோவேதான்), பிரும்ம மாராயர் உள்ளிட்டோரின் மந்திராலோசனை... போன்ற முக்கிய சந்திப்புகள் அனைத்துமே சாண்டில்யனின் தர்க்க அறிவை மெச்சுகிறது.
8. மனம் பதைபதைப்பதற்கும் இடமுண்டு; பாசப்பிணைப்பினால் நம் கண்கள் கண்ணீரை கசிய விடுவதும் நிச்சயம்..
9. நாவலினூடாக சில பல தத்துவங்கள் அத்தனையும் அறிவுரை; அறவுரை.
'மனக்குதிரையை அடக்குபவனே உண்மையான சாரதி' (மகாபாரதம்)
'கடலில் ஆசைதான் நீர்; அதை பெரும் அலைகளாக எழுப்புபவை சந்தர்ப்பங்கள்; சந்தர்ப்பங்களை வெற்றி கண்டு செலுத்துபவனே மாலுமி எனும் மனிதன்.'
'மனித ரத்தத்தில் கலந்திருக்கும் மகா சக்திகளில் ஒன்றுதான் மொழி'
'மனித சரித்திரத்தில் வதந்திகளின் மூலத்தை கண்டு பிடித்தவன் இல்லை'
'படிப்பு - காரணத்திற்காகவோ காரியத்திற்காகவோ ஏற்பட்டதல்ல; மாறாக, அறிவை விசாலப்படுத்துகிறது. அறிவு விசாலம் மனிதனுக்கு அவசியம்'
"உயிர்" குறித்த தத்துவமும் அருமை..
இதுபோன்ற நவீனங்கள் உண்மைக்கு சற்று நெருக்கமாக சுவராசியமாக வாசிக்கப்படும்பொழுது உண்மை சரித்திரத்தைக் கண்டடைய வாசகன் பேராவல் கொள்கிறான். அதுவே 'வரலாற்றுப் புதினங்களின்' வெற்றி. தலைமுறை கடந்தும் சாண்டில்யன் வாசிக்கப்படுகிறார். இதுவே அவருக்கான புகழஞ்சலி..
மன்னன் மகள் வாசிப்பின் தாக்கத்துடன்.. Azeez Wahithi
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக