6 செப்., 2021

நூல் நயம் : பட்டத்து யானை - திரு.வேலராமமூர்த்தி

Reading Marathon -2021.  53/50+
S.PRASANNA VENKATESAN.
# R.M.No: 0064
# 4 -ஆம் ஆண்டு விழா போட்டி
# சமூக நீதி பிரிவு:3  பதிவு:4

புத்தகம்; பட்டத்து யானை
ஆசிரியர்: திரு. வேலராமமூர்த்தி
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ்
மொத்த பக்கங்கள்: 376
                      விலை:₹380/+

இந்த புத்தகம் செங்கையில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களில் ஒன்றாகும்.

 ஒரு சிலரின் எழுத்துக்கள் வாசிப்பவனை உள்ளிழுத்துக் கொள்ளும். அப்படியான எழுத்து எழுத்தாளர் வேல ராமமூர்த்தி அவர்களுக்கு வாய்த்திருக்கிறது. அவர் ஒரு நல்ல கதை சொல்லி என்பதைக் குற்றப்பரம்பரை எனக்கு உணர்த்தியது. குற்றப்பரம்பரை வாசிக்கும் வரை அவரை ஒரு எழுத்தாளராய்த் தெரியுமே ஒழிய அவரின் எழுத்தை வாசித்ததில்லை. குற்றப்பரம்பரையில் பெருநாழி கிராமத்துக்குள் வேயன்னா பின்னே என்னையும் அலைய வைத்தார்.  அப்போதே தேடிப்பிடித்து வாசிக்க வேண்டிய எழுத்தாளராய் எனக்குள் அவரின் எழுத்து அமர்ந்து கொண்டது.

சாண்டில்யன், கல்கி போன்ற எழுத்து ஜாம்பவான்களின் வரலாற்று நாவல்களை வாசிப்பது ஒரு வித சுகானுபாவம் என்றால் வேல ராமமூர்த்தி அவர்களின் கிராமத்து மனிதர்களின் வாழ்வியலை... அதன் உண்மையான பக்கங்களில் இருந்து எள்ளளவும் பிசகாத  தன்மையுடன் வாசிப்பது சுகானுபவத்திலும் சுகானுபவம். அதுவும் கிராமத்தானாய் ஆடு, மாடு, கோழிகளுடன் திரிந்தவனுக்கு இந்த எழுத்து சுகானுபவத்திலும் சுகானுபவம் என்றுதான் சொல்ல வேண்டும்.

நான் கதைகளை வாசிக்கும் போது அந்த எழுத்தின் பின்னே மட்டுமின்றி அந்த காட்சிகளோடு பயணித்துக் கொண்டே படிப்பேன். கதை மாந்தர்கள் தவிர்த்து அவர்களைச் சுற்றியிருப்பவற்றைக் காட்சிப்படுத்துதல் என்பது எழுத்தில் ஒரு அழகு, அது எல்லாருக்கும் வாய்த்து விடுவதில்லை. அப்படி வாய்க்கப் பெற்றவர்கள் காட்சிகளை கண் முன்னே கடத்துவதில் கில்லாடிகள். அப்படியான கில்லாடிகளில் ஒருவர் வேல ராமமூர்த்தி ஐயா. இவர் பேய்கள், தெய்வங்கள், ஊரணி, ஆறு, பந்தய மாடுகள், கோட்டை, குடிசை என எல்லாவற்றையும் காட்சிக்குள் கொண்டு வந்து விடுகிறார். ஏன் வெட்டிக் கிடக்கும் ஆடுகள் கூட நாம் எப்போது விருந்தாவோமென நம் கண் முன்னே காத்துக்கிடக்கின்றன.

குற்றப்பரம்பரை வாசிக்கும் போதே  என்னிடம் என் நண்பர் ஒருவர் பட்டத்து யானை இருக்கு இதை முடிச்சதும் வாங்கிப் படிங்க என்றார். 

பெரும்பாலும் கிராமத்து ஜனங்கள் எந்த ஒரு பிரச்சினையை முன்னெடுத்தாலும் அதில் அதீத தீவிரம் காட்டுவார்கள். இந்த பட்டத்து யானையோ வெள்ளை அரசாங்கத்துக்கு எதிராக கிளம்பும் கிராமத்து இளைஞர்களின் வீரத்தையும் விவேகத்தையும் சுமந்து முன்னூற்றி எழுபத்தாறு பக்கம் பயணிக்கிறது. இந்த யானையில் வேங்கையாய் நிற்கிறான் பெருநாழி ரணசிங்கம்.

எங்க தேவகோட்டையில் சுதந்திர போராட்டத்தில் உயிர் நீத்தவர்கள் நினைவாக தியாகிகள் பூங்கா இருக்கிறது. அந்த இடத்தில் வெள்ளையனை எதிர்த்துப் போராடி சிலர் உயிரை விட்டார்கள் எனச் சொல்வார்கள். எங்க ஊர் பக்கத்து ஊர் ஐயாமார்களெல்லாம் தியாகிகள் பென்சன் வாங்கி, இறந்தபின் தேசியகொடி போர்த்தப்பட்டு போனார்கள். 

இதுல வேடிக்கை என்னன்னா உண்மையா அடிபட்டவனைவிட வேடிக்கை பார்த்தவங்களெல்லாம் தியாகி ஆகிட்டாங்க. அவங்க குடும்பம் இன்னும் பென்சன் வாங்கிக்கிட்டு இருக்கு. போலீசுக்கு கொடுத்த ஜீப் அவருக்கு பயன்படுதோ இல்லையோ அவரின் குடும்பப் பணிகளுக்குப் பயன்படுவது போல... மந்திரி சுருட்டுறாரோ இல்லையோ மச்சான் சுருட்டுறதைப் போல... காட்டுனவனைவிட பார்த்து எழுதியவன் அதிக மார்க் வாங்குவதைப் போல... இப்படி போல... போலன்னு எத்தனையோ சொல்லலாம். இது எல்லா இடத்திலும் நடப்பதுதானே என்று நாம் கடந்து போக ஆரம்பித்து காலங்கள் போய் விட்டன... 

பட்டத்து யானை வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு எதிராக களமிறங்கிய கருஞ்சேனகளின் வீரத்தையும் அவர்களை எல்லாம் தன் கட்டுப்பாட்டில் வைத்து வெற்றி வாகை சூடி துரோகத்தால் மரணிக்கும் ஒரு மகா வீரனையும் பற்றி விறுவிறுப்பாய் பேசுகிறது. 

'தமிழன் காட்டிக் கொடுப்பான்... மலையாளி கூட்டிக் கொடுப்பான்' என்ற சொல்லை அமீரகத்தில் பரவலாகக் கேட்கலாம். அன்று முதல் இன்று வரை தமிழன் வஞ்சத்தில்தானே வீழ்ந்தான்... கூட இருந்தே குழி பறிப்பவனால்தான் வீழ்கிறான். அழுது ஆர்ப்பாட்டம் செய்து பதவி ஏற்றவர்கள் மருத்துவமனையில் என்ன நடந்தது என்பதை இதுவரை சொல்லாமல் ஆளுயர கட் அவுட் வைத்து தன்னை அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட எட்டப்பர்கள் (கவனிக்க... பாடிகள் அல்ல) காலம் காலமாக வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்கள்.

சுதந்திர போராட்ட தீயின் சிறு கங்கொன்று தென்னகத்தின் ஆப்பநாட்டில் விழுந்து சிறு தீப்பொறியாய்... பெரும் நெருப்பாய்... வெள்ளையர் என்னும் காட்டை அழித்து எக்காளமிடுகிறது. வீரத்தால் வெல்ல முடியாத வெள்ளையர்கள் விவேகத்தை முன்னிறுத்தி எலும்புத் துண்டுக்கு ஆசைப்படும் சில குள்ளநரிகளை கையில் வைத்துக் கொண்டு தீயின் சுவாலையை அழிக்க முயல்கிறார்கள். 

அவர்கள் ஊற்றிய தண்ணீரில் கங்கு கரியாகிவிடுகிறது. பிடித்த நெருப்பு இன்னும் இன்னுமென தீவிரமாக எரியுமா... இல்லை அணையுமா என்பதைச் சொல்லாமல் விட்டாலும் நாடு கடத்தப்படும் சிறு தீப்பொறி பின்னாளில் பெரும் நெருப்பென திரும்பி வருமெனச் சொல்லி முடிக்கிறார்.

கல்யாண மாப்பிள்ளை மணக்கோலம் பூணாமல் வெள்ளையனை எதிர்த்து மடிகிறான்... மணமகன் வரவில்லை என்றால் அவனின் சகோதரி பெண்ணிற்கு தாலி கட்டலாம் என்ற வழக்கப்படி தன் கழுத்தில் தாலி வாங்கிய மறுநிமிடமே விதவையானவள் வீட்டுக்குள் முடங்காமல் மறுநாளே வேல்கம்பு தாங்கி வீரத்துடன் எதிரியின் வரவை நோக்கி குமரிகளுடன் நிற்கிறாள்.

அண்ணன் துப்பாக்கியும் வேல்கம்பும் சுமந்து திரிய அந்தக் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளும் தம்பியும் வெள்ளையரை எதிர்க்கும் கருஞ்சேனைகளின் ஒரு பிரிவுக்கு தலைமை தாங்கி தன்னுயிரைக் கொடுக்கிறான்.

ரணசிங்கம் என்ற ஒற்றை மனிதனின் கண் பார்வைக்கு கட்டுப்பட்டு இளைஞர்கள், பெரியவர்கள், பெண்கள் என குருதி சிந்தி மண்ணில் வீழ்வதை வாசிக்கும் போது நம்மால் அந்த எழுத்தை, அந்த மனிதர்களை நேசிக்காமல் இருக்க முடியவில்லை. வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு எதிராக எப்படியெல்லாம் போராடியிருக்கிறார்கள் இந்த மக்கள்... இன்று நாம் எனக்குச் சுதந்திரம் இருக்கு என அடிபட்டவனை வீடியோ எடுத்து முகநூலில் போட்டு லைக்கை அள்ளுவதில் ஆர்வம் காட்டுகிறோம்.

தனுஷ்கோடியில் பிரிட்டீஷ் கப்பலை தகர்ப்பதில் தொடங்கி... அடுத்தடுத்த நிகழ்வுகளில் நிறைய உயிர்களைக் காவு கொடுத்தாலும் வெள்ளையர்களோடு ஒப்பிடுகையில் வெற்றி வாகை தென்னாட்டுச் சிங்கங்களுக்குத்தான். 

உன்னோட தம்பியை இழந்துட்டு நிக்கிறே... உனக்கு அழுகை வரலை... என்னடா நீ என்று கேட்கும் நண்பனிடம் நேற்று உயிர் விட்டானே அவன் யார்... இந்தா இன்னைக்கு செத்து வீழ்கிறார்களே இவர்கள் யார்... போர் தந்திரம் பழகாமலே என் பேச்சைக் கேட்டு உயிர் விட்டிருக்கிறார்களே அவர்கள் யார்... எல்லாரும் என் தம்பிகள் தானே எனச் சொல்லி, தன் சோகம் மறைத்து உடைந்து அழாமல் அடுத்தது என்ன என வேட்கையோடு கேட்கும் ரணசிங்கம்... இராணுவத்தில் இருந்து தப்பி வடநாட்டில் சில காலம் வெள்ளையனுக்கு எதிராக களமாடி விட்டு தன் சொந்தப் பூமியில் விருட்சமாய் வளர்ந்து நிற்பதில்... அவனே தலைவன் என கிராமங்கள் கொண்டாடுவதில் தவறே இல்லை. அவனின் பாசமெல்லாம் தாய் நாட்டின் மீதே... என்னே ஒரு வீரன். 

முனீஸ்வரனைக் கும்பிடும் மீரா கதாபாத்திரம் என்னுடன் படித்த சூசை மாணிக்கத்தை நினைவில் நிறுத்தியது. கல்லூரி செல்லும் வழியில் இருக்கும் புவனேஸ்வரி அம்மன் கோவில் திருநீறு அவன் நெற்றியிலும் இருக்கும். என்னடா நீ இதெல்லாம் வச்சிக்கிட்டு என யாராவது கேட்டால் எனக்கு மதம் பிடிக்கவில்லை... இதை வைத்துக் கொள்வதில் என்ன தவறு என்பான். நானும் முருகனும் மெழுகுவர்த்தியுடன் சர்ச்சுக்குள் அமைதி நாடி அமர்ந்திருந்த நாட்கள் என்றும் அழியாதவை. நாகூரும் வேளாங்கன்னியும் எம்மதத்தினரையும் வரவேற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

எத்தனை எத்தனை கதாபாத்திரங்கள்... எல்லாருமே மனதில் நிற்கிறார்கள். 
                  தோழமையுடன்,
      சு.பிரசன்ன வெங்கடேசன்

நன்றி :

கருத்துகள் இல்லை: