7 செப்., 2021

ஆன்மீக மலர்கள்

🕉️ ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் 🕉️
(மூன்றாம் பகுதி) 

தொடர்ச்சி... ( 520 )

🌲 அத்யாயம் - 49 🌲

 🌼 சியாம்புகூரில் பக்தர்களுடன் 🌼

வியாழன், அக்டோபர் 29. 1885 

பாதுரி (சர்க்காரிடம்): 'நான் இப்போது கூறியவை. வேதாந்தத்தில் உள்ளன. நீங்கள் சாஸ்திரம்-டாஸ்திரம் ஏதாவது படித்தால்தானே!'

சர்க்கார்: 'ஏன். இவர் (குருதேவர்) என்ன சாஸ்திரங்களைப் படித்தா மேதையானார்? இவரும் சாஸ்திரங்கள் கூறுவதைத்தானே சொல்கிறார்? சாஸ்திரங்களைப் படிக்காமல் மேதையாக முடியாதா?' 

ஸ்ரீராமகிருஷ்ணர்: 'அப்பா, நான் எவ்வளவோ சாஸ்திரங்களைக் கேட்டிருக்கிறேன்.' 

சர்க்கார்: 'வெறுமனே கேட்பதால் தவறுகள் பல ஏற்படக்கூடும். உங்களுடையது கேள்வியறிவு மட்டும் அல்ல.' 

இதன்பிறகு வேறு
விஷயங்கள்பற்றி பேச்சு தொடங்கியது.

ஸ்ரீராமகிருஷ்ணர் (சர்க்காரிடம்): 'என்னைப் பைத்தியம் என்று கூறினீர்களாமே! அதனால்தான் இவர்கள் (ம-முதலிய வர்களைச் சுட்டிக் காட்டி) உங்களிடம் வர விரும்புவதில்லை.'

சர்க்கார் (ம-இருந்த பக்கம் பார்த்து): 'பைத்தியம் என்று ஏன் நான் கூற வேண்டும்? ஆனால் உங்கள் அகங்காரம்பற்றி குறிப்பிட்டேன். உங்கள் பாத தூளியை மக்கள் ஏற்றுக்கொள்ள நீங்கள் ஏன் அனுமதிக்கிறீர்கள்?'

ம-: 'இல்லாவிட்டால் மக்கள் அழுகின்றனர்.' 

சர்க்கார்: 'அது அவர்களின் தவறு. அவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.'

ம-: 'எதற்காக? எல்லா உயிர்களிலும் இறைவன் இல்லையா?'

சர்க்கார்: 'இதை நான் மறுக்கவில்லை. அப்படியானால் எல்லோருடைய வேண்டும். பாத தூளியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.'

ம- : 'சிலரிடம் வெளிப்பாடு அதிகமாக இருக்கிறது. தண்ணீர் எங்கும் இருக்கிறது. ஆனால் குளத்தில், ஆற்றில் கடலில் அதன் அளவு அதிகம். நீங்கள் பாரடேயை (Faraday) மதிக்கின்ற அளவுக்கு ஒரு புதிய அறிவியல் பட்டதாரியை மதிப்பீர்களா?'

சர்க்கார்: 'நான் இதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இவரை ஏன் கடவுள் என்று சொல்கிறீர்கள்?'

ம-: 'நாம் ஏன் ஒருவரையொருவர் வணங்குகிறோம்? எல்லோருடைய இதயத்திலும் இறைவன் உள்ளார் என்பதால்தான். நீங்கள் இத்தகையவற்றை அதிகமாகக் கண்டதும் இல்லை, சிந்திக்கவும் இல்லை.'

ஸ்ரீராமகிருஷ்ணர் (டாக்டர் சர்க்காரிடம்): 'சிலரிடம் வெளிப்பாடு அதிகம். ஏற்கனவே கூறினேனே, சூரியனின் கதிர்கள் தரைமீது ஒருவிதமாகப் பிரதிபலிக்கிறது, மரத்தில் மற்றொரு விதம், கண்ணாடியில் இன்னொரு விதம், கண்ணாடியில் பிரதிபிம்பம் நன்றாக விழுகிறது. இதையே எடுத்துக் கொள்ளுங்களேன் — பிரகலாதனும் இங்கே இருக்கிற பக்தர்களும் சரிசமமாக முடியுமா? பிரகலாதனின் மனம் உயிர், எல்லாம் இறைவனிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.'

டாக்டர் சர்க்கார் எதுவும் பேசாமல் இருந்தார்.

எல்லோரும் மௌனமாக இருந்தனர்.

ஸ்ரீராமகிருஷ்ணர் (சர்க்காரிடம்): 'உங்களுக்கு இதனிடம் (என்னிடம் ) ஒரு வசீகரம் இருக்கிறது. "நான் உங்களை நேசிக்கிறேன்'' என்று நீங்கள் ஏற்கனவே கூறியுள்ளீர்கள்.'

சர்க்கார்: 'நீங்கள் Child of Nature (இயற்கையின் குழந்தை). ஆகவேதான் இப்படியெல்லாம் சொல்கிறேன். உங்கள் கால்களைத் தொட்டு மக்கள் வணங்குவது எனக்கு வருத்தத்தைத் தருகிறது. இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரைக் கெடுக்கிறார்களே என்று தோன்றுகிறது. கேசவரை அவரது சீடர்கள் இவ்வாறுதான் கெடுத்தனர். சற்று கேளுங்கள், கூறுகிறேன்— ' 

ஸ்ரீராமகிருஷ்ணர்: 'உங்கள் பேச்சைக் கேட்பதா? நீங்கள் ஒரு பேராசைக்காரர், சிற்றின்பப் பிரியர், ஆணவம் மிக்கவர்.' 

பாதுரி (சர்க்காரிடம்): 'அதாவது, உங்களிடம் மனிதத்துவம் இருக்கிறது. பணம் காசு, பெயர் புகழ் இவற்றில் நாட்டம், சிற்றின்பம், ஆணவம் எல்லாம் மனித இயற்கையே அல்லவா! எல்லா உயிர்களுக்கும் இது இயற்கை.'

சர்க்கார் (குருதேவரிடம்): 'அப்படியானால் உங்கள் தொண்டைப் புண்ணைமட்டும் பார்த்துவிட்டுப் போய் விடுகிறேன். வேறு பேச்சில் எந்தப் பயனும் இல்லை. நான் பேச வேண்டுமானால் என் மனத்திற்குச் சரியென்று பட்டதை நான் கூறித்தான் ஆகவேண்டும்.'

எல்லோரும் அமைதியாக இருந்தனர். சிறிதுநேரம் சென்றதும் குருதேவர் பாதுரியுடன் பேசத் தொடங்கினர்.

ஸ்ரீராமகிருஷ்ணர்: 'விஷயம் என்ன தெரியுமா? இவர் (சர்க்கார்) இப்போது நேதிநேதி என்று விலக்கும் பாதையில் போகிறார். இறைவன் உயிர்கள் அல்ல, உலகம் அல்ல, படைப்பிலிருந்து அவர் வேறானவர் என்றெல்லாம் சிந்திக்கிறார். ஏற்றுக்கொள்ளும் பாதையில் வரும்போது எல்லாவற்றையும் ஒப்புக்கொள்வார்.

'வாழை மரத்தின் பட்டைகளை உரித்துக்கொண்டே போனால் கடைசியாக தண்டு வரும். பட்டை வேறு, தண்டு வேறு; பட்டை, தண்டு அல்ல; தண்டு, பட்டை அல்ல. ஆனால் பட்டையினுடையதே தண்டு, தண்டினுடையதே பட்டை என்பதைக் கடைசியில் காண்கிறோம். இறைவனே இருபத்திநான்கு தத்துவங்களாக ஆகியுள்ளார். இறைவனே மனிதனாகவும் ஆகியுள்ளார்.

(சர்க்காரிடம்) 'பக்தர்கள் மூன்றுவகை— கீழ்நிலை பக்தன், இடைநிலை பக்தன், உயர்நிலை பக்தன். கீழ்நிலை பக்தன் "இறைவன் அங்கே" என்கிறான். இறைவன் வேறு, படைப்பு வேறு என்று இவர்கள் கூறுகின்றனர். இடைநிலை பக்தன் ''இறைவன் உள் நின்று வழி நடத்துபவர்'' என்கிறான். இவன் இதயநடுவில் இறைவனைக் காண்கிறான். உயர்நிலை பக்தன் இறைவனே எல்லாமாக ஆகியிருப்பதைக் காண்கிறான். இறைவனே இருபத்திநான்கு தத்துவங்களாக ஆகியுள்ளார். கீழே, மேலே எங்கும் இறைவனே நிறைந்துள்ளதை அவன் காண்கிறான்.

'கீதை, பாகவதம், வேதாந்தம் எல்லாம் படியுங்கள். அப்போதுதான் இவற்றைப் புரிந்துகொள்ள முடியும். படைப்பில் இறைவன் இல்லையா என்ன?'

சர்க்கார்: 'இருக்கிறார். ஆனால் குறிப்பிட்ட இடத்தில் இருக்கிறார் என்பதில்லை, அவர் எங்கும் இருக்கிறார். அதனால்தான் அவரைத் தேடவும் முடிவதில்லை.'

-அமுதத்தை தொடர்ந்து பருகுவோம்...

நன்றி :

கருத்துகள் இல்லை: