# ஆண்டுவிழா வாசிப்பு-2021
#9 வது வாரம்
#நாவல்
நூல்:வெளியேற்றம்
ஆசிரியர்: யுவன் சந்திரசேகர்
அன்றாட வாழ்வின் அபத்தங்கள் தரும் கடும் நெருக்கடிகளும் , அயர்ச்சி அளிக்கும் சமூக அவலச் சூழல் தரும் தொல்லைகளும் கண நேரங்களில் நம்மை இந்த அமைப்பிலிருந்து வெளியேறி விடலாமா என்று சிந்திக்க வைத்துவிடும் . ஆனால் அப்படி வெளியேறுவதற்கு அசாத்திய தைரியமும் ,மனநிலையும் அதற்குரிய சூழ்நிலையும் வேண்டும். யுவன் சந்திரசேகரின் வெளியேற்றம் நாவல் அத்தகைய மனிதர்களைப் பற்றியது.கதை என்பதை விட நிஜம் தழுவிய புனைவு என்றுதான் சொல்ல வேண்டும். அந்நாவலைப் பற்றிய என் வாசிப்பு அனுபவம் பற்றிய சிறுகுறிப்பு இந்த பதிவு.
இதற்கு முன்னர் யுவனின் நாவல் பெயர்களின் ( குள்ள சித்தன் சரித்திரம்) மூலம் ஏனோ அவர் படைப்புகளை படிப்பதற்கு ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் அவரின் சமீபத்திய உரை கேட்ட பிறகு ,அவரது சிறுகதைகளை (உறங்கும் கடல் , முடிவற்று நீளும் கோடை , நான்காவது கனவு மற்றும் சில) வாசிக்க தொடங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக என் மனதிற்கு பிடித்த எழுத்தாளராக அசோகமித்திரன் ,தி.ஜா ,வண்ணதாசன் வரிசையில் இடம் பிடித்திட்டுவிடடார் என்றே சொல்ல வேண்டும்.
இந்த நாவலின் கதையானது ,குடும்ப,சமூக அமைப்புகளிருந்து வெளியேற எத்தனித்து வெளியேற முடியாமல் மதில் மேல் பூனையென தவிக்கும் சந்தானம் , அதிலிருந்தது ஏதோ ஒரு வகையில் விட்டு விடுதலையாகி வெளியேறியவர்களை சந்திக்கும் அனுபவங்களைப் பற்றியது.
இந்த நாவலில் பல்வேறு மனிதர்கள் வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள் . பெற்றோரை இழந்த குரு ,தந்தையின் துரோகத்தால் பெரியவர் வேதமூர்த்தி ,பெற்றோரின் கையாலாகாததனத்தால் மன்னாதி,வயிற்றுப் பசியினால் குற்றாலிங்கம் ,உடல் பசியினால் ராமலிங்கம்,தாயின் இழப்பினால் வைரவன் ,மன்னியின் இழப்பால் சிவராமன் ,அனாதை கோவர்தன் ,ஆத்திரத்தினால் மதியிழந்து பால்பாண்டி மற்றும் பலர். ஒவ்வொரு மனிதரின் கதையும் ஒவ்வொரு திறப்பை அளிக்கிறது…எல்லோருக்கும் பெரியவரின் தீட்சை கிடைப்பதில்லை …ஆனால் பெரியவரின் மூலம் வெளியேற்றம் அடைந்து தங்கள் கர்மவினையை கண்டறிறார்கள்.ஜெயராமிற்கு கிடைத்தது ,மன்னாதிக்கு கிட்டுவதில்லை. ஹரிஹரனுக்கு கிடைத்தது வைரவனிற்கு கிடைப்பதில்லை.ஏனென்றால் ஒவ்வொருவரின் அப்யாசங்கள் அப்படி . இவர்கள் யாவரும் தாங்கள் பிறப்பின் நோக்கத்தை அடைகிறார்கள்.
இந்த நாவலின் நிறைகளைப் பற்றி பார்க்கலாம் . யுவன் பல்வேறு கதாபாத்திரங்கள் மூலம் காலம் ,வெளி ,குடும்பம் ,சமூகம் ,பிறப்பு ,இறப்பு ,அன்பு ,விரோதம் ,முற்பிறவி,மறுபிறவி ,காமம் என்று பல்வேறு சிக்கலாக விஷயங்களை அலசுகிறார் . மனதைத் தொடும் பல்வேறு சம்பாஷைனைகளும் ,மாந்தர்களும் நிறைந்திருக்கிறார்கள் .குறிப்பாக பைராகியின் மரணத்திற்கு பிறகு குரு அடையும் நிலை ” சேர்த்து வைக்க எதுவும் தேவை இல்லாது போது ,இழப்பு குறித்து கவலைப் படத்தேவையில்லை “.இந்த ஒரு சொற்றோடர் கொடுத்த மனவெழுச்சியை வார்த்தைகளில் விவரிப்பது கடினம் .மன்னி இறந்தபிறகு சிவராமன் வீட்டீல் அனைவரும் மன்னியின் நினைவுகளை பகிரும் இடம் நெகிழ்ச்சி கணங்கள் ,படித்த பொழுது ஏதேதோ நினைவுகள் கண் கலங்காமல் இருக்க முடியவில்லை. காலம் ,வெளி பற்றிய ஹரிஹரனுக்கும்,சந்தானத்துக்கும் நடக்கும் உரையாடல் ” ஆக,காலத்தை சுருக்கலாம்.அல்லது சுருங்கின மாதிரித் தோண வைக்கலாம்.இடத்தை சுருக்க முடியுமோ ? .அப்போ ,இடம் சரீரகமாகவும் ,காலம் மனசுங்கிற ஸ்தலமாகவும் இருக்கோ என்னவோ ? சரீரம் காலமாயிட்ட பிற்பாடும் ,மனசுங்கிற பிரதேசம் நீங்காதோ என்னவோ ..ஆக என்னோட மனசுன்னு நான் நினைச்சுக்கிண்டிருக்கின்ற ஒரு ஸ்தலம் ,யோசனைகளும்,ஞாபகங்களும் வந்துவந்து போற வெளி இடம்னு தான் சொல்லணும் ” .
பால்பாண்டி “அன்பும் ,விரோதமும் ரெண்டும் ஒன்றோடு ஒன்றாக கோர்த்த வளையம் மாதிரி.அதிகபட்ச அன்புக்கு அடுத்த ஸ்டெப் விரோதம் தான். “எனக்கு உன்னைப் புடிக்கலடா”னு வர்ற ஆத்திரத்தை விட “ஒன்னே எனக்கு எம்புட்டு புடுச்சிருக்கு .அது புரியாம நடந்துகிடடேயா “ன்ற ஆத்திரத்திற்கு வீரியம் அதிகம் ” பெரியவர் வேத மூர்த்தி விரும்பும் தறுவாயில் இயற்கை மரணத்தை வருவித்துக்கொள்ளும் இடம் என்று எவ்வளவோ தருணங்களை சுட்டிக் காட்டிடலாம் .
யுவனைப் போன்று அனைத்து வடடார வழக்கையும் ( மதுரை ,நெல்லை ,நகரத்தார் ,நாகர்கோவில் வழக்கு ) இவ்வளவு கச்சித்தமாக யாரும் பயன்படுத்தி படித்ததில்லை.
இந்த நாவலைப் பற்றி குறை சொல்ல நான் ஒன்றும் பெரிய விமர்சகன் கிடையாது.படிக்க வேண்டிய புத்தகங்களும்,போக வேண்டிய தூரமும் அதிகம் .ஆனால் ஒன்று நிசசயம் .இந்த புத்தகம் கையிலெடுத்தால் முழுவதும் படிக்காமல் செல்லமுடியாது.அவ்வளவு சரளமான நடை ,கட்டிப்போட்டு விருக்கிறார் யுவன்.
முன்பெல்லாம் தெருவில் ஏதாவது சாமியார்களைப் பார்த்தால் “உழைக்காமல் சோம்பேறியாக ஊர் சுற்றுகிறார்களே “என்று இளக்காரப்படடதுண்டு. ஆனால் இந்த நாவலைப் படித்த பிறகு அந்தக் குறுபார்வை என் மனதை விட்டு வெளியேறி விட்டதென்றே சொல்ல வேண்டும் .
நன்றி :
முகநூல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக