16 அக்., 2021

பக்திப் பாமாலை : மாசில் வீணையும் மாலை மதியமும் - திருநாவுக்கரசர்


துயர் தீர்க்கும் திருப்பதிகம் 

மாசில் வீணையும் மாலை மதியமும் 

திருநாவுக்கரசு சுவாமிகள்

388,739 views

Jun 2, 2019

Thiruneriya Thamizhosai

#MaasilVeenaiyum | #ThirunavukkarasarThevaram  | #ThiruneriyaThamizhosai

"எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் இந்த பதிகப்பாடலை படியுங்கள் துன்பங்கள் அனைத்தும் விலகி போகும்." பெருந்தீ கொழுந்து விட்டு எரியும் நீற்றரையின் உள்ளே அடைத்த போது பாடி அருளிய திருப்பதிகம். திருநாவுக்கரசு சுவாமிகள் பாடி அருளிய சிறப்புப் பொருந்திய இத்தேவாரப் பதிகங்களை அனுதினமும் பாராயணம் செய்வதால், பெரும் துன்பங்களில் இருந்தும் எளிதில் விடுபெறலாம் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.

 

திருமுறை : ஐந்தாம் திருமுறை 090 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்

பதிக குரலிசை :

திரு மதுரை முத்துக்குமரன் ஓதுவார்

 

கடம்பூர் கரக்கோயிலான் "தன் கடன் அடியேனையும் தாங்குதல், என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று பின்னாளில் பாடியதற்கு ஏற்ப. சிவபிரான் பேரில் அசையாத நம்பிக்கை கொண்டு, இறைவனது பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட நாவுக்கரசரின் வாழ்க்கையில் இறைவன் நிகழ்த்திய இரண்டாவது அதிசயம். முதல் அதிசயம் சூலை நோயிலிருந்து மீட்டது.

 

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நீழலே. ..... (01)

 

நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்

நமச்சிவாயவே நானறி விச்சையும்

நமச்சிவாயவே நா நவின்று ஏத்துமே

நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே. ..... (02)

 

ஆளாகார் ஆளானாரை அடைந்து உய்யார்

மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்

தோளாத சுரையோ தொழும்பர் செவி

வாளா மாய்ந்து மண்ணாகிக் கழிவரே. ..... (03)

 

நடலை வாழ்வு கொண்டு என் செய்தீர் நாணிலீர்

சுடலை சேர்வது சொல் பிரமாணமே

கடலின் நஞ்சு அமுது உண்டவர் கைவிட்டால்

உடலினார் கிடந்தூர் முனி பண்டமே. ..... (04)

 

பூக்கைக் கொண்டு அரன் பொன்னடி போற்றிலார்

நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்

ஆக்கைக்கே இரை தேடி அலமந்து

காக்கைக்கே இரையாகிக் கழிவரே. ..... (05)

 

குறிகளும் அடையாளமும் கோயிலும்

நெறிகளும் அவர் நின்றதோர் நேர்மையும்

அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்            

பொறியீலீர் மனம் என்கொல் புகாததே. ..... (06)

 

வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்

தாழ்த்த சென்னியும் தந்த தலைவனைச்

சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே

வீழ்த்தவா வினையேன் நெடுங்காலமே. ..... (07)

 

எழுது பாவை நல்லார் திறம் விட்டு நான்

தொழுது போற்றி நின்றேனையும் சூழ்ந்து கொண்டு

உழுத சால் வழியே உழுவான் பொருட்டு

இழுதை நெஞ்சம் இது என் படுகின்றதே. ..... (08)

 

நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே

புக்கு நிற்கும் பொன்னார் சடை புண்ணியன்

பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு

நக்கு நிற்பர் அவர் தம்மை நாணியே. ..... (09)

 

விறகில் தீயினன் பாலில் படுநெய் போல்

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்

உறவுக் கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்

முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே. ..... (10)

 

பொருளுரை : சிவபிரான் அரணிக் கட்டையில் தீ போலவும், பாலினில் நெய் போலவும், சாணை பிடிக்கப்படாத மாணிக்கக் கல்லில் பிரகாசம் போலவும் நமது கண்களுக்கு புலப்படாமல் நிற்கின்றான். ஆனால் நமக்கும் அவனுக்கும் இடையே இருக்கும் ஆண்டவன் பக்தன் என்ற உறவாகிய மத்தினை நட்டு உணர்வு என்னும் கயிற்றினால் அந்த மத்தினை இறுக்கமாக கட்டி கடைந்தால் இறைவன் நமது முன்னே வந்து தோன்றுவான்.

 

குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

 

Subscribe Us : https://www.youtube.com/c/Thiruneriya...

 

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"

 

Grateful thanks to

Thiruneriya Thamizhosai

திரு மதுரை முத்துக்குமரன் ஓதுவார்

and YouTube and all the others who made this video possible. 

கருத்துகள் இல்லை: