26 அக்., 2021

நூல் நயம் : வட்டியும் முதலும் - ராஜூ முருகன்.

#ReadingMarathon2021 
87/100
#ஆண்டுவிழாவாசிப்பு 
#பத்தாம்வாரம்
#கட்டுரைத்தொகுப்பு

* நூல்- வட்டியும் முதலும்
**நூலாசிரியர்-ராஜூ முருகன்.

***பதிப்பகம்- விகடன் பிரசுரம்.

****பக்கங்கள்-504,₹-350(டிசம்பர்2016)

             உயிர்ப்பூட்டும் சொற்கள் வாழ்க்கை மீது மகிழ்ச்சிகரமான பார்வையைச் செலுத்த வைக்கும். மனிதர்களிடம் இன்னும் நேச மனப்பான்மையோடு நெருங்க வைக்கும் .சக உயிர்களிடம் பரிவு ,அக்கறை காட்ட வைக்கும். 

           சில சமயங்களில் நாம் வாசிக்கும் புத்தகம்
வாழ்க்கையின் 
பொருளைப் பற்றியும் வாழ்வில் நாம் வகிக்கும் நிலை பற்றியும்
 அட்சரம் பிசகாது  புலப்படுத்திடும்.அத்தகைய மாயாஜாலத் தருணங்கள் வாசிப்பின் பொழுதுகளில்  ஏற்படுத்தும் அனுபவங்கள்   அதிஅற்புதமானவை.

        தன் வாழ்வியல் அனுபவங்களாக வாழ்வின் பன்முகங்களையும் தன் எழுத்தால் நம் கண் முன்
மனித உணர்வுகளின் அத்தனை வெளிக்காட்டல்களையும்
 பெருங்கடலாகப் பரவ விட்டிருக்கும் ராஜூ முருகனின் எழுத்துக்களும்,ஓவியர் ஹாசிப் கான் ஒவியங்களும் நம்முள்  ஏற்படுத்தும்  அதிர்வலைகள் ஆழிப்பேரலை போன்றது.

        இப்புத்தகத்தில் உள்ள 70 கட்டுரைகளில் உலவும் மாந்தர்களும்,அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த  நிகழ்வுகளும் நமக்குள்  நிகழ்த்தும் ரசவாதத்தின் விளைவாக நமது உள்ளமானது அமைதியும்,தூய்மையும் அடைந்து குறுகிய மனப்பான்மை அகன்று பரந்த நோக்கில் அமைய முயற்சிக்கும்.

          "சில வரிகள், சில பத்திகள் போதும் நம்மை அப்புத்தகங்களுடன் இணைக்க" என்பார் எஸ்.ரா இந்நூலின் ஒவ்வொரு வரியும்,ஒவ்வொரு பத்தியுமே  நம்மை இப்புத்தகத்தோடு இணைத்து விடும்.

       மனிதன் எனும் சமூக விலங்கின்  பல பிம்பங்கள் வெவ்வேறு பெயர்களில் ,உறவுமுறைகளில் சமூக நீரோட்டத்தில் உலவுவதின் பிரதிபலிப்பாக இப்புத்தகத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் அல்லது வாழ்ந்து கொண்டிருக்கும் மாமாக்கள்,அத்தைகள்,கீர்த்தனாக்கள்,அண்ணன்கள்,ஆட்டோக்காரர்கள்.....என நீளு............ம் பட்டியல்  என்னளவில் உணர்த்துவதெல்லாம் " வாழ்வு குறுகியது வாழ் ,வாழவிடு ,மகிழ்ந்திரு,மகிழ்வித்திரு " என்பதாகவே இருக்கின்றது.

       "சக மனிதனை நம்பு" என்று சொல்லும் புத்தகங்கள் நம் இலக்கிய உலகில் மிகக் குறைவு அதேபோல் எதார்த்தத்தை பிரதி செய்து கொண்ட புத்தகங்களும் மிகவும் குறைவுதான் எனும் குறைகளை எல்லாம்  நீக்க வந்த புத்தகமாகத்தான் இப்புத்தகத்தை நான் மதிக்கின்றேன்.

      தூக்கம் வராமல் துன்பப்பட்ட நாட்களை நம்மோடு பகிர்ந்து கொள்கின்ற 
ராஜீவின் வார்த்தைகளில்தான்  எத்தனை வாஞ்சை! ❤️ 

       "லைஃப் இஸ் பியூட்டிஃபுல்' கட்டுரையில் கூறப்படும் ஆலோசனைகளிலும்,வழிகாட்டுதல்களிலும் ஒரு தேர்ந்த மனநல மருத்துவர் கூடத் தோற்றுப் போவார் அவரிடம்...

       1 வது கட்டுரையிலிருந்து 70 வது கட்டுரை வரை மனதில் கல்வெட்டாய் பதிந்த வரிகள் பல அவற்றில்  சிலவற்றை மட்டுமே இங்கு பதிய விழைகின்றேன்.

// "இந்த மனசு  பல விஷயங்களை சேத்து வெச்சுக்கும் ...சீழ் பிடிக்கறது மாதிரிதான் .அப்புறம் கெடந்து அனத்திட்டே கெடக்கும் ...லைப்ல நெனச்சது அமையாம தள்ளிப்போற தவிப்பு...அது தர  அழுத்தம் அதுதான் பிரச்சனை ...பீல் ஃப்ரீ லைஃப் இஸ் பியூட்டிஃபுல்"

"ஒவ்வொரு முறையும் இந்த உறவுகள் தரும் உணர்வுகள்  நம்மை பெரிய மனுஷன் ஆக்கிக்கொண்டே இருக்கின்றது"

"எவ்வளவோ பேருக்கு எவ்வளவோ நடக்குது சில விஷயங்களை ஏத்துக்கிட்டு தான் ஆகணும் ஏத்துகிட்டா தான் மனுஷன்!!! "

"அன்பா சொன்னா எல்லாமே கேட்கும் அன்பை உணர்வதும், உணர்த்துவதும் இந்த உலகில் யாவற்றுக்கும் ஆன தேவை"

"மாறிக்கொண்டே இருப்பது உனக்கான எனக்கான உலகம் உனக்காகவும் எனக்காகவும் அப்படியேதான் காத்துக்கொண்டிருக்கிறது நமக்கான உலகம்"

"உறவும் நிலவும் தானே பண்டிகையின் முதல் அர்த்தம்  பால்யம் என்ற நதியில் பண்டிகைகள் கொட்டிய கூடைப் பூக்கள் எப்போதும் நினைவில் மிதந்து கொண்டே இருக்கும்"

"நமது நினைவுகளோடும் உணர்வுகளுடன் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு பொருளுக்கும் உயிர் இருக்கிறது"

"வேலையில் பார்க்கும்போதும் சாலையில் பார்க்கும்போதும் எல்லோருக்கும் வெவ்வேறு முகங்கள்தான் எப்போதும்"

"எ(இ)துவும்  கடந்து போகும்"

"தொண்டர்களின் ரத்தமும், உயிரும், கண்ணீரும்தான்  ஒவ்வொரு கட்சிக்கும் கொடிமரத்தின் வேர்கள் இல்லையா?"

நன்றி :

Ms ரேணுகாதேவி, 
வாசிப்பை நேசிப்போம், 
முகநூல்

கருத்துகள் இல்லை: