19 அக்., 2021

நூல் நயம் : ரெய்னீஸ்அய்யர் தெரு - வண்ணநிலவன்


#ReadingMarathon2021_50
#RM152
#30/50

#ரெய்னீஸ்அய்யர்_தெரு
#வண்ணநிலவன்

#நற்றிணை_பதிப்பகம்

வண்ணநிலவன் கதைகளின் சிறப்பம்சமே, தான் கதைகளில் அமைக்கின்ற கதாபாத்திரங்களின் குரலின் வழியே கதையை நமக்கு கடத்துவது தான். ஒவ்வொரு பாத்திரத்தின் குரலுக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. ஒன்றைப்போல் மற்றொன்று இருப்பதில்லை. அப்படிதான் டாரதி எனும் சிறுமியின் குரலின் வழியே கதையை தொடங்குகிறார்.
             ரெய்னீஸ் அய்யர் கல்லறையை ஒட்டிய ஆறு வீடுகள் கொண்ட சிறிய தெரு.
அதில் ஒவ்வொரு வீட்டிலுமுள்ள ஒவ்வொரு மனிதரின் கதையையும் அவர்களின் குரலிலேயே பதிவு செய்திருப்பது சிறப்பு. 
        கதையில் எதிர்பாராத திருப்புமுனையோ,
வித்தியாசமான கதைக்களமோ,கதையோ என எதுவும் இல்லை. நம்மைச் சுற்றி இருக்கு இயல்பான மனிதர்களும், அவர்களின் அன்றாட நடவடிக்கைகளும் தான் கதையே.

புதினத்திலிருந்து சில வரிகள்👇

பெரிய மழையாகப் பெய்தால், தெருவிற்கு புது மணல் வரும்.
இந்தப் புதுமணல் எங்கிருந்து வருகிறது?ஊரிலுள்ள எல்லா தெருக்களையும் இந்த புதுமணல் எப்படி நிறைத்துவிடுகிறது?
இன்று இரவு மழை பெய்தால் நாளைக் காலையில் புதுமணலில் நடந்து பள்ளிக்கூடம் போகலாம். புதுமணல் வந்தால் ரெய்னீஸ் அய்யர் தெருக்காரர்கள் சந்தோசமாக இருப்பார்கள்.//

ஆசிர்வாதம் பிள்ளையின் அடுப்படிக்கு செல்லும் கல்படியில் செதுக்கியிருக்கும் மூன்று தாமரை பூக்கள். சிறுவயதில் இறந்துபோன அலீஸ் பட்டுப்பாவாடை அணிந்து தன் பிருஷ்டங்கள் பதிய அந்தக் கல்படியில் அமர்ந்திருக்கும் காட்சி அந்த வீட்டை மாளிகை போல் காட்டியது//

சாம்சஸன் அண்ணனை எஸ்தர் சித்தியோடு தவறான நேரத்தில் பார்த்து விட்ட மூன்றாவது வீட்டு அற்புதமேரி,
அந்த நிகழ்விற்கு பிறகு அற்புதமேரி எப்போதையும் விட அண்ணனிடமும்,எஸ்தர் சித்தியிடமும் மிகுந்த பிரியத்துடன் நடந்துக்கொண்டாள்.வகுப்பில் கூட பெரிய முதிர்ந்த பெண்ணைப்போல நடந்துக்கொண்டாள். 
அளவற்ற ஆனந்தத்தையும், அமைதியையும் ஊரிலிருந்து கொண்டுவந்து எல்லோருக்கும் காட்டிவிட்டு எடுத்துக் கொண்டு போனாள் எஸ்தர் சித்தி.//
இப்படி நாவல் முழுக்க நிறைய அழகியல்...

வாசித்து முடித்ததும் டாரதி,எபன்,அற்புதமேரி,தியோடர், அன்னமேரி,ஜீனோ, இருதயத்து டீச்சர், ஆசிர்வாதம் பிள்ளை,ரெபேக்காள், ரோஸம்மா அனைவருடன் நாமும் ரெய்னீஸ் அய்யர் தெருவில் வசித்து விட்ட உணர்வை கொடுக்குது.

இந்தக் கதை சொல்லப்பட்டிருக்கும் மொழி அவ்வளவு அழகு. இதுவரை நான் வாசித்த எந்த எழுத்தாளரின் எழுத்திலும் இல்லாத வசியம் இதில் இருக்கு. மிகச் சாதாரணமான மனிதர்களை தனது அசாதாரணமான எழுத்தால் பிரம்மிப்பாக பார்க்க வைக்கிறார். இதை வாசித்து முடித்ததும் தெருவில் அக்கம்பக்கத்தில் வசிக்கும் மனிதர்களையே இவ்வளவு சிரத்தையாக கவனித்து, நேசித்து எழுதியிருக்கும் போது, ஒரே வீட்டில் உடனிருக்கும் மனிதர்களை இவ்வளவு கவனித்திருக்கிறோமோ நேசித்திருக்கிறோமோ என்ற குற்றவுணர்வு எழாமலில்லை.

'ரெய்னீஸ் அய்யர் தெரு' மழையைப்போல் மனிதர்களையும் நேசிக்க தூண்டும்.❤

நன்றி :

Ms அம்மு ராகவ், 
வாசிப்பை நேசிப்போம், 
முகநூல்

கருத்துகள் இல்லை: