9 அக்., 2021

நூல் நயம் : புயலிலே ஒரு தோணி - ப.சிங்காரம்


"என்ன ஜி இந்த புக்கையா எல்லாரும் இவ்வளவு பெருமையா பேசுறாங்க. பாதி புக்க தாண்டிட்டேன் ஊர பத்தின வெறும் டிஸ்கிரிப்ஷன் தவிர வேற ஒண்ணுமே இல்லையே ஜி." புயலிலே ஒரு தோணி புத்தகத்தின் முதல் 150 பக்கங்களை தாண்டிய பின்பு   நண்பரிடம்  நொந்து கொண்டு இருந்தேன். இந்த 150 பக்கங்களை படிக்க எனக்கு 2 மாதங்கள் ஆனது; அதுவும் பஹீரத பிரெயத்தனைப் பட்டுதான் படித்து முடித்தேன். சேர்ந்தாற்போல் 5 பக்கங்களை தடையில்லாமல்  வாசிக்க முடியவில்லை அவ்வளவு கஷ்டமான எழுத்துநடை. இந்தோனேஷியா, மலாய், டச்சு , சீனம் என்று பல மொழிச் சொற்கள் மொழிபெயர்க்கப் படாமல் அப்படியே எழுதப்பட்டிருந்தன.  அவற்றை புரிந்து கொள்வதற்குள் வாசிப்பு ஓட்டம் தடைப்பட்டு எரிச்சல் வந்து விடுகிறது.

சரி இவ்வளவு பேர் சொல்றாங்களே படித்துதான் பார்ப்போம் என்று  தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். அடுத்த 150 பக்கங்களை மூன்று நாட்களுக்குள்ளாக படித்துவிட்டேன். பொதுவாக முதல் நூறு பக்கங்களில்  என்னைக் கவரவில்லை என்றால் பெரும்பாலும் அந்த புத்தகம்  சுமாரான புத்தகமாகவே இருக்கும் ஆனால் புயலிலே ஒரு தோணி இதற்கு விதிவிலக்கு. பழைய பாகவதர் பாட்டிலிருந்து திடீரென்று  ஏ ஆர் ரகுமான் இசையைக் கேட்டது போல் உருமாறி வேகம் பிடித்து விட்டது இரண்டாம் பாதி.

இரண்டாம் உலகப்போர் சமயம் ஜப்பானியர்கள் இந்தோனேசியாவை கைப்பற்றுகிறார்கள். வட்டிக்கடை மேலாளலாக இருந்த பாண்டியன் மெடானில் இருந்து கடல்வழியாக பினாங்கு புறப்படுகிறான். பயணத்தின்போது அவன்சொந்த ஊரின் நினைவலைகள் அவனை தாலாட்டுகின்றன. அவனோடு சேர்ந்து நாமும் மதுரையின் தெருக்களில் சுற்றி வருகிறோம். புயலின் காரணமாக  சரக்குகளை இழந்து பினாங்கில் இறங்குகிறான். இங்கிருந்து பாண்டியன் எப்படி தென்கிழக்கு ஆசியா முழுவதும் பயணப்பட்டான்; மீண்டும் தனது சொந்த ஊரைப் பார்க்க திரும்பி போனானா ? என்பது மீதிக்கதை. 

மூன்று விஷயங்களுக்காக புயலிலே ஒரு தோணியை என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை,
 1. இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் , உண்மைக்கு மிக மிக நெருக்கமாகவும் துல்லியமாகவும் எழுதப்பட்ட தமிழ் நாவல்.
2. நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள், வாழும் மனிதர்கள், அவர்களின் மொழி , வசிக்கும் ஊர் என மிகக் கூர்மையாக கவனித்து அதை ஒரு செழுமையான நாவலாக கொடுத்திருக்கும் பா.சிங்காரம் அவர்களின் படைப்பாற்றல்
3. புத்தகம் முன்வைக்கும் ஞாயமான சில தர்க்கங்களுக்காக. உதாரணமாக,
a) தமிழர் பழம் பெருமை  பேசுவதை விடுத்து எல்லா மொழிகளிலும் அவற்றிற்கான சிறந்த இலக்கியங்களும் நீதிகளும் அறமும் இருப்பதை அங்கீகரிக்க வேண்டுமென்ற பறந்த மனப்பான்மையை முன்வைக்கிறது. (30000 யானைகளை கப்பலில் கொண்டு போன போலி பெருமை எல்லாம் பேசாதிங்கப்பானு சொல்றாரு 😂)
 b) வலியோருக்கு எதிராய் போராடும் எளியோருக்கு உதவி செய்வதே அறம் என பாண்டியன் முடிவெடுப்பது. (இன்றைய நிலவரப்படி இலங்கையில், பர்மாவில், பாலஸ்தீனத்தில் etc. etc.) 
c) மொழி , தேசம் , இனம் போன்றவற்றிற்கு உணர்வுதான் அடிநாதமாக இருக்க வேண்டுமே அன்றி புறக் காரணங்கள் அல்ல  என்ற கருத்து இன்றைய அரசியல் சூழலிற்கும் பொருந்திப் போகிறது. (தமிழ் அகராதி தந்த வீரமாமுனிவரைக் கூட பிறப்பால் நீ தமிழனா என்று  கேள்வி கேட்போர் சிந்தனைக்கு 😁 )

இன்னும் நிறைய அருமையான கருத்துக்களை கதையின் போக்கிலேயே ப. சிங்காரம் அவர்கள் முன்வைக்கிறார்; நிச்சயம் படித்து பாருங்கள். புதிதாக புத்தகம் வாசிக்க தொடங்கியிருந்தால் தயவுசெய்து இந்த புத்தகத்தை இப்போது படிக்க வேண்டாம். குறைந்தது 30 , 40 புத்தகங்கள் படித்து அனுபவம் பெற்ற பிறகு படிக்கவேண்டிய மிகச்சிறந்த பொக்கிஷம் இது. என்னை பொருத்தவரை இன்னும் பல பத்தாண்டுகளுக்கு தமிழின் நவீன இலக்கிய படைப்புகளுக்கு புயலிலே ஒரு தோணி ஒரு முன்னோடியாகவே இருக்கும்.

reading_marathon_2021_25 #RM0070
புத்தகத்தின் பெயர்: புயலிலே ஒரு தோணி
பப்ளிகேஷன்ஸ்: காலச்சுவடு பதிப்பகம்
ஆசிரியர்: பா.சிங்காரம்
பக்கங்கள்: 295

அன்புடன்,
நௌஷாத்

நன்றி :

கருத்துகள் இல்லை: