Reading Marathon
RM0038
16/25
புத்தகம்: உறுபசி
ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்
பக்கங்கள் :154
#நாவல்
புத்தகங்களில் தொடர்பில் இருக்க ஆசைப்படுவேன்.ஆகையால் ஒரு புத்தகம் வாசித்து முடித்த பிறகு இன்னொரு புத்தகத்தில் இரண்டு பக்கங்களையாவது வாசித்து புக்மார்க் வைத்து விடுவது எனது வழக்கம்.
அப்படி நினைத்துதான் இந்த புத்தகத்தை எடுத்து இரண்டு பக்கங்கள் வாசித்து புக்மார்க் வைத்து விட்டேன்.ஏனோ சம்பத் என்னை வாசிக்க அழைப்பது போலவே தோன்றியது.
ஒருவன் இறந்த பிறகு அவன் நினைவுகளை அசைபோடும் புத்தகம்.சம்பத் தமிழ் இலக்கியம் படித்த இளைஞன்.அவன் வாழ்வில் சந்தித்த போராட்டங்கள் அவலங்கள் புறக்கணிப்புகள் இவை அனைத்தையும் ஆசிரியர் அழகாக எழுத்துக்களில் வடிவமைத்து இருப்பார்.சம்பத் பற்றி அறிந்துகொள்ள நான் இரண்டு நிகழ்வுகளை உங்களோடு பகிர்கிறேன்.
உணவிற்கே வழியின்றி தன் சொந்த ஊர் திரும்பிய சம்பத் தன் நண்பர்களின் உதவியால் ஒரு நர்சரி பண்ணை அமைக்கிறான்.மனம் நொந்துபோன சம்பத்திற்கு செடிகள் வளர்ப்பது அவ்வளவு ஆசையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.பதியம் போட்டு செடிகள் அனைத்தும் துளிர்த்துவிட சம்பத்தின் மனைவி இதை எவ்வளவு காசு பார்க்கலாம் என்று எண்ணி கொண்டு இருந்தாள்.ஒருநாள் சம்பத்தின் மனைவி பல செடிகளை விற்பனைக்கு கொண்டு சென்று விட்டாள்.
செடிகள் அனைத்தையும் விற்று பின் வீடு திரும்பியபோது சம்பத் வீட்டில் இல்லை.செடிகளும் வீட்டில் இல்லை.எங்கே போயிருப்பான் இத்தனை செடிகளையும் எடுத்துக்கொண்டு என்று அவன் மனைவி இரவு முழுவதும் உறங்காமல் விழித்துக் கிடந்தாள்.ஆனால் சம்பத்து வரவே இல்லை.அக்கம்பக்கத்தில் விசாரிக்கையில் ஒரு ட்ரை சைக்கிளில் அத்தனை செடிகளையும் ஏற்றிக்கொண்டு போனதாக சொன்னார்கள்.ஒருவேளை டவுனுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து இருப்பானோ என்ற எண்ணத்தில் அவளும் டவுனுக்கு சென்றாள்.எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை.தன் தந்தையின் வீட்டில் தங்கிவிட்டு மறுநாள் தனது குடிசைக்கு வந்த சம்பத்தின் மனைவிக்கு ஆச்சரியம் காத்திருந்தது.சம்பத் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான்.கோபமாக திட்டிய சம்பத்தின் மனைவியை பார்த்து சம்பத் சொன்னான்.அந்தச் செடிகள் அனைத்தையும் விற்பதற்கு நமக்கு யார் உரிமை தந்தார்கள்.அதை காசுக்கு விற்க எனக்கு மனம் வரவில்லை அதனால் இரண்டு நாட்களில் எடுத்துக் கொண்டு சாலையில் அனைத்தையும் நட்டுவைத்து வந்து விட்டேன் என்றான்.
இப்படி ஒரு குணம் கொண்டவன் எப்படி வீட்டிற்கு பணம் கொடுக்கப் போகிறான்.பல நாட்கள் கழித்து சம்பத் தன்னுடைய கிராமத்திற்கு தன் அக்காவை பார்க்க போகிறான்.அங்கே யாரும் இவனோடு பேச தயாராக இல்லை.பணம் இல்லாதவனை மனிதனாய் மதிக்க கூட மதிப்பதில்லை இச்சமூகம்.வந்தவனை பசியோடு அனுப்ப மனமில்லாமல் உணவு கொடுக்க அதை சாப்பிட்டுக் கொண்டிருந்தான் சம்பத்.அந்நேரத்தில் காட்டிலிருந்து வந்த சம்பத்தின் தந்தை அவனை பார்த்ததும் கடும் கோபம் கொண்டார்.
காட்டிலிருந்து சுமையாய் கொண்டுவந்த விறகு கட்டையை எடுத்து சம்பத்தின் முதுகில் அடிக்க ஆரம்பித்த இரண்டு மூன்று அடிகள் பொறுத்துக் கொண்டிருந்த சம்பத்து பின் அந்த விறகு கட்டையை பிடுங்கி அடிக்க ஆரம்பித்தான் தன் அப்பாவை இதை சற்றும் எதிர்பாராத சம்பத்தின் அப்பா தெருவில் ஓட தொடங்கினர் சம்பத்தும் துரத்திக் கொண்டு ஓடி தன் அப்பாவை அடி அடி என்று அடித்து கொண்டிருந்தான் நான்கைந்து பேர் சேர்ந்து அவனைத் தடுத்தனர்.இதை கேள்விப்பட்ட அக்காளின் கணவர் சம்பத்தை அடிக்க ஓடி வர சம்பத் ஊரை விட்டே ஓடிவிட்டான்.
காசைக் கொட்டி படிக்க வைத்த ஆதங்கம் அப்பாவிற்கு.தான் வாழ்வில் எந்த ஒரு வெற்றியும் பெறவில்லை என்ற ஆதங்கம் சம்பத்திற்கு.படித்த படிப்புக்கு வேலை கிடைக்கவில்லை.கிடைத்த வேலையும் அவன் மனசாட்சியின் படி வேலை பார்க்க முடியவில்லை.சம்பத் தன் திருமணத்திற்கு பிறகு ஒரு பத்திரிகையில் பிழை திருத்தும் பணியில் சேர்கிறான். ஆனால் ஏழு நாட்களுக்கு மேல் அந்தப் பணியை அவனால் தொடர முடியவில்லை.காரணம் ஒரு சிறு குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை சுவாரசியமான வார்த்தைகளால் வர்ணிப்பது அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.இப்படி ஊரோடு ஒத்து வாழ முடியவில்லை...ஒதுங்கியும் அவனால் வாழ முடியவில்லை...
சம்பத்தின் நண்பர்கள் சம்பத் வேலை பார்த்த இடம் என அத்தனையும் கண் முன்னே காட்சியாய் வடிவமைத்திருந்தார் ஆசிரியர்.
வாய்ப்பிருந்தால் வாசியுங்கள்...
#சுதா
நன்றி :
சுதா பழனிச்சாமி,
வாசிப்பை நேசிப்போம்,
முகநூல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக