2 நவ., 2021

பிரபஞ்சன் நினைவுகள் : எஸ்ரா

பிரபஞ்சனின் துணைவியார் பிரமீளா
சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து 
போனார். அவரது முதாலண்டு நினைவின்
போது பிரபஞ்சன் ஒரு கட்டுரை எழுதினார்.
அந்த கட்டுரயை படித்து கண்கலங்கிப்போனேன்.
அது நம் அனைவருக்குமான அறிவுரை என்றே
சொல்வேன்.

அந்தக் கட்டுரை இப்படி முடிகிறது.

எனக்கு முன் என் துணைவர் இறந்தது எனக்கு
மகிழ்ச்சியைத் தருகிறது. மரணம் எனக்கு
நேர்ந்து, அவர் பூமியில் தங்க நேர்ந்திருந்தால்,
மிகுந்த அவமானங்களைச் சந்தித்து இருப்பார்.
அவமானத்தின், புறக்கணிப்பின் நிழல் கூடப் 
படக்கூடாத ஆத்மா அவர். இவை போன்ற
சிறுமைகள் எல்லாம் எனக்கே உரியவை.

நட்சத்திரக் கணக்குப்படி, அவர் இறந்து இந்த 16
மார்ச்சோடு சரியாக ஒரு வருடம் ஆகிவிட்டது.
அவரது இல்லாமை இப்போதுதான் என்னைத்
தாக்கத் தொடங்கி இருக்கிறது. இளமையில் துணை 
இல்லாமல் இருந்துவிடலாம். முதுமையில்தான்
துணையின் அவசியம் கூடுதலாக உணர
முடிகிறது.

நிறைந்த கனவுகளும், லட்சியங்களும் கண்களில்
மிதக்க, ஆனந்தமாகப் பறந்து திரிய வேண்டிய,
அறிவும் ஞானமும் பொலிந்த, மகத்தான மானுட
உணர்வுகள் கொண்ட பெண்மணிகளை மனைவியாக் 
கொண்டு, அவர்களைக் கீழிறக்கி, ஒளி இழக்கச் 
செய்த , செய்து கொண்டிருக்கும் கோடி கோடி 
ஆண்களின் வரிசையில் நானும் சேர்ந்து இருக்கிறேன்.
என்கிற குற்றவுணர்வு மட்டும் எப்போதும் என்னுடன்
இருந்து தீரும் அதிலிருந்து நான் தப்ப முடியாது.

-எஸ்.ராமகிருஷ்ணன்
சொற்களின் புதிர்பாதை

நன்றி :

கருத்துகள் இல்லை: