7 நவ., 2021

அனலை கக்கும் ஜெய்பீம் ! - மேலும் ஒரு கருத்துப்பதிவு


ஜெய்பீம் திரைப்படத்தைப் பற்றி நான் நினைப்பதை அப்படியே எழுத்தில் கொண்டு வருவது என்பது மிகவும் குறைவானதாகவே இருக்கும்.

தமிழ் சினிமா உலகம் பாராட்டுக்குரியதாகு 
மாறிக் கொண்டிருப்பதை ஜெய் பீம் திரைப்படம் மீண்டும் உண்மையாக்கி இருக்கிறது.

இந்த படத்தை பற்றி என் உணர்வுகளை மொத்தமாக கொட்டுவதற்கு என்னிடம் எழுத்துக்கள் இல்லை அவ்வளவு ரசனைக்குரிய எழுத்தாளனும் நான் இல்லை .

தமிழ் சினிமா உலகம்,
உலக சினிமாக்களோடு போட்டிபோடும் அளவிற்கு உலகத்தரத்தோடு வந்து கொண்டிருப்பது என்பது தமிழர்களாக நாம் பெருமை கொள்ளக் கூடியதாகும்.

 அடித்தட்டு மற்றும் விளிம்புநிலை மக்களைப் பற்றி,அவர்களின்  வாழ்வியலைப் பற்றி,
அந்த மக்களை பொது சமூகமும்,அதிகார வர்க்கமும் எந்த அளவிற்கு  ஒடுக்குகிறது என்பதை  வீரியத்தோடு 
ஜெய்பீம் திரைப்படம் பேசி இருக்கிறது.

மனிதமும்,மனசாட்சி உள்ள 
ஒவ்வொரும் இந்த படத்தை  கண்கலங்காமல் பார்க்க முடியாது என்பதே உண்மை.
அவ்வளவு கோபத்தோடு ஒடுக்குமுறைக்கு எதிராக அனலை கக்கி இருக்கிறது ஜெய்பீம் படம்.

அண்ணல் அம்பேத்கரையும்,தந்தை பெரியாரையும் காரல்மார்க்சையும் ஒருங்கே சேர்ந்து நடிகர் சூர்யாவாக நம் கண்முன் நிறுத்தியிருகிறது.

சிறந்த நடிப்புக்கு என்று உச்சம் இருந்தால் அந்த உச்சத்தைத் தொட்டுயிருக்கிறார் இந்த படத்தின் மூலம் நடிகர் சூர்யா அவர்கள்.
சூர்யா இந்தப் படத்தில் நடித்தார் என்பதை விட அந்த பாத்திரமாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

இந்த படத்தை எடுத்ததற்கான துணிச்சலையும்,தைரியத்தையும் மற்றும் இந்த படத்திற்கு ஜெய்பீம் என்று பெயர் சூட்டியதையும் உண்மையாகவே பாராட்டியாக வேண்டும்.

நீதியரசர் சந்துரு அவர்கள்
வழக்கறிஞராக பணியாற்றியபோது. அவர் காலத்தில் உண்மையாகவே நடந்த ஒரு சம்பவத்தை காவல்துறையால் ஒடுக்கு முறைக்கு ஆளாகி உயிரை இழந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் வழக்கை அதிகார வர்க்கத்தை எதிர்த்து அந்த சாமானியனின் உயிருக்காக தன்னுடைய வாதத்திறமையால் நீதியைப் பெற்றுத் தந்த வழக்கை முதன்மையாக கொண்டு உருவான படமே ஜெய்பீம்.

வழக்கறிஞராக இருந்தபோதும்,  நீதிபதியான பிறகும் பொது சமூகத்தால்..சாதியாக ஒடுக்குமுறைக்கு ஆளான அடித்தட்டு மக்களின் வாழ்விற்காகவும்,
அதிகார வர்க்கத்தால் அடக்குமுறைக்கு ஆளாகும் விளிம்பு நிலை மக்கள் மற்றும் தொழிலாளர் தோழர்களுக்காக எவ்வித சமரசமும் இல்லாமல் அதிகார வர்க்கங்களை எதிர்த்து வாதாடியும்,போராடியும் அவர்களின் வாழ்க்கைக்கு வெற்றி தேடித் தந்தவர் நீதியரசர் சந்துரு அவர்கள்.

அவரின் கதாபாத்திரத்திற்கு எந்தவிதத்திலும் ஊறு ஏற்படாத வண்ணம் அந்த கதாபாத்திரத்தை அருமையாக உருவாக்கி இருக்கிறார்கள்.
சந்துரு அவர்களின் நேர்மையையும்,கடைக்கோடி மக்களுக்கான அவரின் போராட்டங்களையும் எந்தவித சமரசமும் இன்றி பதிவு செய்திருக்கிறார்கள் எனவே அவருக்கு இந்தப் படத்தின் மூலம் அறத்தையும் மற்றும் கௌரவத்தையும் 
சேர்த்திருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை.

இந்த படத்தின் இயக்குனருக்கு தமிழ் சமூகம் மிகப்பெரிய பாராட்டு தெரிவிக்க வேண்டும்.
சக மனிதர்களை சக மனிதர்களே.. சாதியின் பெயரால் ஒதுக்கி வைப்பதும்,அடக்கி வைப்பதும் தீண்டாமை என்ற பெயரால் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது என்பது இன்றைய அறிவியல் உலகில் ஏற்றுக்கொள்ள முடியாத
மிருக செயலாகும் என்பதை பொட்டில் அடித்தால் போல் சொல்லியிருக்கிறார்.
இந்தப்படத்தை நேர்த்தியாகவும், நியாயமாகவும் சமூகத்தில் நடக்கின்ற கொடுமைகளை எவ்வித சமரசமும் இன்றி பதிவு செய்திருக்கிறார். படத்தை வெற்றிபெற வைக்க வேண்டும் என்பதற்காக ஜனரஞ்சக விஷயங்களை சேர்க்காமல் படத்தை விறுவிறுப்பாககொண்டு சென்றது என்பது அவரின் திறமைக்கு கிடைத்த வெற்றியாகும்.தமிழ் சினிமா உலகை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றதற்காக அவருக்கு மீண்டும், மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

 சூர்யா போன்ற பெரும் நடிகர்கள் இதுபோன்ற சமூகம் சார்ந்த திரைப் படங்களில் நடிப்பதும்,எடுப்பதும் இந்த சமூகத்துக்கு அவர்கள் செய்யும் பெரும் தொண்டாகும்.
அவர் செய்யும் தொண்டுக்கு தமிழ் சமூகம் என்றென்றும் துணை நிற்க வேண்டும்.

நன்றி :

கருத்துகள் இல்லை: