த.செ.ஞானவேலின் 'ஜெய் பீம்!'
ஏன்? எதற்கு? என்ன செய்யும்?
செல்வ.ரஞ்சித் குமார்
சூர்யா சமூகப் பொறுப்புணர்ந்து செயல்படும் & குரல் கொடுக்கும் பன்முகக் கலைஞன். ஜோதிகா சூர்யா-வின் 2D Entertainment தொடர்ந்து சமூகப் பொறுப்புள்ள படங்களையும் தயாரித்து வரும் நிறுவனம். இருந்தும் இது ஜோதிகா சூர்யாவின் ஜெய் பீம் என்பதைவிட 'த.செ.ஞானவேலின் ஜெய் பீம்' என்பதே சரியானதாக இருக்கும்.
ஊடகவியலாளராக இருப்பினும் ஒரு படைப்பை பெருவாரியான மக்கள் ரசிக்கும் படியாக, விமர்சகர்கள் ஏற்கும்படியாக உருவாக்குவது அத்தனை எளிதல்ல. 'கூட்டத்தில் ஒருவன்' படத்தையடுத்து த.செ.ஞானவேல் தன் இரண்டாம் படைப்பிலேயே இதனைச் சாதித்துள்ளார்.
வெற்றிமாறனின் 'விசாரணை'க்குப் பின் காவல்துறை பின்னணியில் எதார்த்தமாக எடுக்கப்பட்டு அதிர்வை ஏற்படுத்திய மற்றுமொரு உண்மை நிகழ்வு த.செ.ஞானவேலின் எழுத்து & இயக்கத்தில் வெளிவந்துள்ள ஜெய் பீம்.
இந்நிலத்தின் மூத்தகுடி மக்கள் மீதான சமூகப் பார்வையையும், அவர்களிடையே உறுதியாக இருந்த சட்டத்தின் மீதான நம்பிக்கையையும், அந்நம்பிக்கையை மெய்ப்பித்துக் காட்டிய வழக்கறிஞர் பணியின் தேவையையும், இதற்கெல்லாம் அடிப்படையான இடதுசாரிகளின் களப்பங்களிப்பையும் உண்மைப் பொருள் கொண்டு விறுவிறுப்பான திரைக்கதை & பொறுப்புமிக்க வசனங்களின் வழியே திரைப்படமாக்கியுள்ளார் த.செ.ஞானவேல். ஆனால், இதற்காக மட்டுமே த.செ.ஞானவேலின் ஜெய் பீம் என்னை ஈர்க்கவில்லை.
வாய் & வாட்சப் பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் பெற்றுவிட்ட அதிநவீன தமிழ் நாட்டுத் தலைமுறைக்கு இன்று கறுப்பும் சிவப்பும் கறுப்புசிவப்பை முன்வைத்து ஒவ்வாமையாக்கப்பட்டுள்ள சூழலில் தமிழ் மண்ணின் உரிமை காத்த பெரியாரிய & பொதுவுடமை இயக்கங்களின் பங்களிப்பை அடுத்த தலைமுறைக்கும் சேர்த்துக் கொண்டுசெல்ல வேண்டிய தேவை ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டேதான் போகிறது. ஆனால், களத்திலோ பெரியாரிய & பொதுவுடமைக் கொள்கைகளைத் தெளிவிக்க ஒற்றைத் தொலைக்காட்சி ஊடகம் கூட இல்லை.
அவ்வகையில் உண்டியல் குலுக்கி, கொக்கி பார்ட்டி, டோழர் என்று ஏகத்துக்கும் வசைச் சொற்களால் அடையாளப்படுத்தப்பட்டு இம்மண்ணிற்கே தொடர்பில்லாதது என மார்க்சியத்தைத் தூற்றி கட்டமைக்கப்பட்டு வைத்துள்ள புதுத்தமிழ் & ஆதி ஆரியப் புத்திகளை உண்மை வரலாற்றுச் சான்றுகளிவழி தெளிவிக்க வலுவான பெருந்தொடர்பு ஊடகம் தேவையாக இருக்கிறது. அத்தேவையை அவ்வப்போது திரைப்படங்கள் அத்திபூத்தாற்போல ஓரளவு ஈடு செய்து வருகின்றனதான் என்றாலும் உண்மை வரலாற்றை மக்கள் இரசிக்கும்படி இவ்வளவு நேர்த்தியாக இதற்குமுன் யாருமே திரைப்படமாக்கியதில்லை. இதுதான் த.செ.ஞானவேலின் ஜெய் பீம் மெய்யாகவே என் மெய்யை ஈர்த்துக் கொள்ளக் காரணம்.
சரி. பீம்-னா பீமாராவ் அம்பேத்கர் தானே? ஜெய் பீம்-ற்கும் பொதுவுடமைவாதிகளுக்கும் என்ன தொடர்பு? என்று சில கேள்விகள் சிலருக்குள் எழலாம் அதையும் தெளிவுக்குட்படுத்த இப்பதிவை மேலும் தொடர்கிறேன். . .
மராட்டியத்தில் 1680-ல் சத்ரபதி சிவாஜிக்குப் பின்பான 'போன்ஸ்லே'க்களின் ஆட்சி முழுக்க முழுக்க ஆட்சி & அரசு நிர்வாகத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே இடம்பெற்ற 'பேஷ்வா'க்களின் ஆட்சியாக மாறி பாஜிராவ் பேஷ்வாவின் காலமான 1817 வரை நீண்டு வர்ணாசிரமக் கோட்பாடுகளை கடுமையாகப் பின்பற்றப்பட்டுத் தீண்டாமை தலைவிரித்தாடியது.
100 ஆண்டுகளுக்கும் மேல் நீண்ட இந்த கொடுங்கோல் ஆட்சியில் மகர், மாங் உள்ளிட்ட பிரிவு மக்களின் நிழல் பட்டாலே தீட்டென இட்டுக்கட்டி மற்றவர்களையும் பின்பற்ற வைத்தனர் பார்ப்பனர்கள். மகர் மக்கள் கால் பதித்த இடத்தைக் கூட்ட இடுப்பில் துடைப்பமும், எச்சில் விழாமலிருக்க கழுத்தில் கலயம் ஒன்றைக் கட்டி தொங்கவிட்டபடியும்தான் பொது இடங்களில் நடமாட அனுமதிக்கப்பட்டனர் என்பதிலேயே தீட்டுச்சடங்கின் வீரியத்தை விளங்கிக் கொள்ளலாம். சிவாஜி காலம் வரை மராட்டியப் படையில் முக்கியப் பங்கு வகித்த மகர்களை தீட்டின் பேரால் ஒதுக்கி படையிலிருந்தே வெளியேற்றினர் பேஷ்வாக்கள்.
இரண்டு யுத்தங்களை நடத்தியும் மராத்தியப் படைகளை வீழ்த்த முடியாதிருந்த கிழக்கிந்தியக் கம்பெனி உள்ளூரில் படைதிரட்டத் தொடங்கி, பேஷ்வாக்களால் மராத்தியப் படையிலிருந்து வெளியேற்றப்பட்ட போர்த்திறமிக்க மகர் சமூகத்தவரை இணைத்துக்கொள்ள விரும்பியது.
சத்நாத் என்ற மகர் சமூகத் தலைவர் பாஜிராவ் பேஷ்வாவின் கவனத்திற்கு இதைக் கொண்டுசென்று, மராட்டியப் படையில் மீண்டும் தங்களை இணைத்துக் கொள்ளக் கோரினார். ஆனால், தீண்டத்தகாதோரை மராத்தியப்படையில் சேர்க்கமுடியாதென பேஷ்வா புறக்கணிக்க, தீண்டாமையின் வலி மகர்களை கிழக்கிந்தியக் கம்பெனியின் படையில் சேர்ந்து மராத்தியப் படைக்கு எதிராகப் போரிடவைத்தது.
01.01.1818 அன்று பீமா நதிக்கரை கிராமமான கோரேகான் (புனே அருகில்) என்ற சிற்றூரில் நடந்த போரில் 28,000 வீரர்கள் கொண்ட பேஷ்வா படையினரை 500 மகர்கள் உள்ளிட்ட 834 வீரர்கள் கொண்ட கிழக்கிந்தியக் கம்பனியின் படை வீழ்த்தி வெற்றிகண்டது.
8000 வீரர்களுடன் பின்வாங்கிய பாஜிராவ் பேஷ்வா அதன்பின் தூதுவர்களை அனுப்பி பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின் 03.06.1818-ல் பல்வேறு நிபந்தனைகளுடன் சரணடைந்து, வருடத்திற்கு 8 இலட்சம் ரூபாய் ஓய்வூதியம் பெற்றுக்கொண்டு உத்திரபிரதேச மாநிலம் கான்பூருக்கு அருகிலுள்ள பிதூர் என்ற சிற்றூரில் 33 ஆண்டுகாலம் வாழ்ந்து மடிந்தார். இந்தியத் துணைக்கண்டத்தில் தனது ஆட்சிப்பகுதிக்கு வெளியே ஓய்வூதியம் பெற்று வாழ்ந்த முதல் ஆட்சியாளர் இவர்தான் என்பது பிரித்தானிய ஆவணக்குறிப்பு.
1857-ற்குப் பின் மற்ற சாதியினரும் படைப்பிரிவில் சேர, கம்பெனி ஆட்சியிலும் மகர்கள் தீண்டாமை பேரில் ஒதுக்கப்பட்டனர் என்றாலும் மகர்களால் பீமா நதிக்கரையில் கிடைக்கப்பட்ட வெற்றி நூறாண்டுகால தீண்டாமைக் கொடுமைக்கு எதிரான வெற்றியாகவே மகர் மக்களால் வரலாற்றில் மதிக்கப்பட்டது.
கோரேகான் யுத்தத்தில் முதல் குண்டு சுடப்பட்ட இடத்தில் 65 அடி உயர வெற்றித்தூண் நிறுவ 26.03.1821-ல் அடிக்கல் நாட்டி 1824-ல் கட்டி முடித்தது கிழக்கிந்தியக் கம்பெனி. இத்தூணில், 22 மகர்கள் உட்பட யுத்தத்தில் இறந்த & காயமுற்ற 49 படைவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவர்தம் குடும்பத்தினரும், இவ்வெற்றியின் மேன்மை உணர்ந்தோறும் யுத்த நாளான சனவரி 1 அன்று ஆண்டுதோறும் இங்கு வந்து வெற்றித்தூணை வணங்கி மரியாதை செலுத்துவது வழக்கம்.
அண்ணல் அம்பேத்கர் 01.01.1927-ல் இங்கு வந்து மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து, பீமா கோரேகான் என்பது பார்ப்பன வர்ணாசிரமத்தால் தீண்டத்தகாதோர் என ஒடுக்கப்பட்ட இந்தியத் துணைக்கண்ட மக்கள் இலட்சக்கணக்கானோர் ஒன்றுகூடி மதிப்பு செய்யும் வணக்கத்திற்குரிய இடங்களில் ஒன்றாக மாறியது. நாளடைவில் வர்ணாசிரமத்தை எதிர்க்கும் அனைத்துத் தரப்பு மக்களின் மதிப்பிற்குரிய இடமாக மாறியுள்ளது.
01.01.1817-ல் பீமா நதிக்கரை வெற்றியை 'ஜெய் பீம்' என முழங்கி ஆரவாரம் செய்தனர் மகர் படையினர். இதை வெறும் போரின் வெற்றியாகக் கருதாமல் நூற்றாண்டு தீண்டாமைக்கு எதிரான வெற்றியாகவே அவர்கள் கருதினர். அதன்பின், அண்ணல் அம்பேத்கர் 15.08.1936-ல் தொடங்கிய சுதந்திரத் தொழிலாளர் கட்சியின் தலைமைச்செயலாளரும், காம்தி சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவருமான எல்.என். பாபு ஹர்தாஸ், 16.02.1937-ல் நடைபெற்ற நிகழ்ச்சியில் பீம்ராவ் அம்பேத்கருக்கே வெற்றி என்ற பொருளில் 'ஜெய் பீம்' என்ற முழக்கத்தை மீண்டும் வலுவான புழக்கத்திற்கு கொண்டுவந்தார்.
அவ்வகையில் த.செ.ஞானவேலின் 'ஜெய் பீம்', கடலூரில் தீண்டாமையால் பாதிக்கப்பட்ட இருளர் இன மக்களின் சட்டப் போராட்ட வெற்றியைக் குறிப்பதோடே, இவ்வெற்றியைப் பெற்றுத்தர அரசமைப்புச் சட்டத்தின் வழியே வழிவகுத்துக் கொடுத்த அண்ணல் அம்பேத்கரால் (/ அம்பேத்கருக்கே) கிடைத்த வெற்றி எனும் நோக்கிலும் காரணகாரியப் பெயராகச் சூட்டப்பட்டுள்ளது. ஜெய் பீம்!
தலைப்புக்கே இவ்வளவு நீண்ட விளக்கமென்றால் திரைக்கலைஞர்கள் பற்றி. . . சூர்யா பாத்திரமேற்று நடித்த உண்மை வழக்கறிஞர் நீதிநாயகம் கே.சந்துரு அவர்களைப் பற்றி. . . படம் பார்க்கும் பலரும் தொடர்ந்து எழுதிக்கொண்டேதான் இருக்கின்றனர் என்றாலும் சுருக்கமாக. . .
நடிகர்கள் கேமரா முன்பு வாழ்ந்து காட்டியதை திரையில் அதன் களத்திற்கே நேரில் சென்று வந்த அனுபவத்தை ஒளி-ஒலி வழி ஏற்படுத்தித் தந்துள்ளது ஜெய் பீம் திரைப்படக்குழு.
தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளுக்கான இடதுசாரிகளின் நீண்ட நெடிய களப் போராட்ட வரலாற்றில் சட்டப்போராட்டங்களின் வழி உறுதி செய்யப்பட்ட உரிமைகளில் வழக்கறிஞராகப் பணியாற்றிய நீதிநாயகம் கே.சந்துரு அவர்களின் முழுமையன அற்பணிப்பு எந்தளவிற்கு இருந்திருக்கும் என்பதற்கு சூர்யாவின் நடிப்பு நல்ல உதாரணம்.
இன்னும் பல இடங்களில் தீண்டாமைக் கொடுமைகள் ஓய்ந்தபாடில்லை. . . உரிமைகள் கிடைத்தபாடில்லை என்பதால் அதன் மீதான பார்வையையும் விவாதத்தையும் பொதுமக்களிடம் தொடங்கி வைத்துள்ளதோடே, தோழர்.சந்துரு போன்ற வழக்கறிஞர்களின் தேவை இன்றும் உள்ள சூழலில் சந்துரு-கள் உருவாக உந்துவிசையாக அமையும் த.செ.ஞானவேலின் ஜெய் பீம்!
#JaiBhim
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக