30 நவ., 2021

நூல் நயம் : ஆ மாதவன் கதைகள்

#ReadingMarathon2021 
RM018
71/100

ஆ மாதவன் கதைகள் முழுத்தொகுப்பு 
நற்றிணை பதிப்பகம் 
640 பக்கங்கள் 

ஆ மாதவனின் அறுபத்தி ஆறு கதைகளைக் கொண்ட முழுத் தொகுப்பு நூல் இது. நாஞ்சில் நாடனின் முன்னுரை இந்நூலின் மற்றுமொரு சிறப்பு.

 தாய்மொழியான தமிழை பள்ளி அளவில்கூட கற்காதவரின் படைப்புகளில் தனித்துவம் பெருமிதத்துடன் மிளிர்கிறது. கிடைத்திருக்க வேண்டிய நியாயமான விருதுகள்கூட அவருக்கு மிக தாமதமாகவே அளிக்கப்பட்டிருக்கின்றன.

 விருதுகள் அவருக்கு அளிக்கப்பட்டமையாலேயே தமது மதிப்பினை நிலைநிறுத்திக் கொண்டிருந்திருக்கும். மறுக்காமல் அவற்றை ஏற்றுக் கொண்ட செயல் அக்கலைஞனின் பெருங்குணம்.

 தமிழின் முன்னோடி எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ரா, கு. அழகிரிசாமி , தி.ஜானகிராமன், அசோகமித்திரன், சார்வாகன் ஆகியோரது முழுத்தொகுப்பு நூல்களை வாசித்து இருந்தபோதும் இத்தொகுப்பில்  அமைந்துள்ள கதைகள் முற்றிலும் தனித்ததொரு வாசிப்பு அனுபவம் அளித்தவை.

 சாலைக் கடை  மாந்தரை புனைவில் அழகியலுடன் உலவ விட்டிருக்கிறார் மாதவன். சாலைக் கடையில் உலவித் திரியும் மாடு, நாய் முதற்கொண்டு இரந்து வாழும் மாற்றுத்திறனாளி வரை கதைகளில் வரிசைகட்டி வருகின்றனர்.

 கல்லூரி நிகழ்விற்காக நன்கொடை வசூலிக்க வருபவர்களிடம் கவனமுடன் இருப்பவர், இலக்கியம் பேச வருபவரிடம் வெகு சுலபமாக ஏமாந்து விடுகிறார்.

 தொகுப்பின் ஆரம்ப கதைகளில் காமரசம் ததும்புகிறது. மரண வாயிலில் இருக்கும் மனைவியின் அருகாமையிலேயே உதவிக்காக வந்த எதிர் வீட்டுப் பெண்ணின் மீது மோகம் கொள்பவன்,  மனிதாபிமானத்துடன் கிடைக்கும் உதவியை இழக்கிறான்.

 மனப் போராட்டங்களின் விவரணையாகவே அமையும் 'மூட சொர்க்கம்', மலிவில் காணும் அவலம், விரதகாலத்தில் மோகத்தைத் தூண்டும் 'தேவதரிசனம்', பெருந்திணை, பொருந்தாக் காமம் இவைகளை நினைவுபடுத்தும் 'தியானம்', வாசுப் போற்றியை கோயிலிலிருந்து விரட்டும் கார்த்தியாயினியின்  கதையாக வரும் 'பாம்பு உறங்கும் பாற்கடல்', எளிதாக வாசித்து கடக்க இயலாத புனைவுகள் இவை.

//நியதியும், ஏற்பாடுகளும் வாழ்க்கையின் கட்டுத் திட்டங்களும் மனிதப் பிறவியின் அடிப்படைக் கோடுகளாக இருந்தாலும், அநேக சமயங்களில் இந்த கோட்டை மீறித் துள்ளுவதிலேயே சுகம் காணுகிறான் மனிதன்//.

 //ஒரு வகையில் வரம்புக்கோடுகளை மீறி சுகம் காணுவதிலும், அந்த எல்லை மீறலை ஆதியற்ற சுகமாகக் கருதி ரகசியமாக, கனவு காணுவதிலும்தான் வாழ்க்கையின் ரசாவஸ்தை நிர்ணயிக்கப்படுகிறது//.

 எல்லைமீறல்களின் புரிதல்களை கூறும் 'பறக்க வேண்டும் என்ற ஆசை' கதையில் இடம்பெறும் வரிகள் மேற்கண்டவை.

 பின்சீட் அத்துமீறல்களை கூறும் 'சினிமா', நாயுடு-ஜானகி  இணையரின் வாழ்வை விளக்கும் 'ராஜா தெரு', பரஸ்பர துரோகங்களை விளக்கும் 'மாதவி', தன்னை அறியும் பரவசமாக காமம் நீங்கிய கதை 'நான்', பத்திரிகையாளனின் அனுபவங்களைக் கொண்ட 'உண்மைக் கதை' ஆகியன வாசிப்பின் முடிவில் நம்மை சிந்தனையில் ஆழ்த்துபவை.

 தொகுப்பின் நீண்ட கதையாக இடம்பெறும் 'எட்டாவது நாள்', செய்யது பட்டாணி என்ற சாளப் பட்டாணியை, அந்த சாகசக்காரனை மறக்கவே இயலாமல் செய்து விடுகிறது.

 தங்குமிடத்தில் விதிகளின் பேரில் கடுமையாக நடந்து கொள்ளும் வாட்ச்மேன், அவ்விடத்தில் நீண்ட காலம் தங்கியிருக்கும் கண்டக்டர் ஒருவனால் விளையாட்டுத்தனமாக அல்லது வன்மத்துடன் பழிவாங்கப்படுதலை எளிய வார்த்தைகளில் சொல்லி செல்கிறது 'காமினி மூலம்'

 யானையின் முழு உருவத்தை காண்கையில் கிடைக்கும் மகிழ்வைவிட, தும்பிக்கை, வால், காதுகள், கால்கள் போன்ற தனித்தனியான பாகங்கள் மீதான பார்வைகள் அளிக்கும் மகிழ்வு அதிகம்.

 பக்கத்து வீட்டுக்காரர்களிடம் பகை பாராட்டுபவர், நான்கு தெரு தள்ளி இருப்பவனுடன் நல்லுறவு கொண்டிருப்பதை இங்கு நினைவு கூரலாம். பாதுகாப்பான இடைவெளி, உறவுகளின் நீடிப்பில் பெரும் பங்காற்றுகிறது.

 'கிட்ட உறவு முட்டப் பகை' என்பது போன்ற பாஸ்கரன் மீதான தமயந்தியின் வியப்பு மாற்றமுடியாத வெறுப்பாக, ஏமாற்றமாக உருமாறி விடுகிறது.

 7 வயது மகன் கொதிக்கும் தார்ச்சட்டியில் விழுந்து மரணிக்க, ஈட்டுத் தொகைக்காக பெற்றவன் அலைவதும், கையூட்டுகளும் பெரிதும் வருந்த வைப்பவை.

 'பாச்சி' என்ற நாய், 'கோமதி' என்ற மாடு கதைவுகளில் மிக இயல்பாக அமைந்து விடுகின்றன. உண்மையில் அவை மனிதர் அல்லாத பாத்திரங்கள் என்பதையே சில பக்கங்களின் வாசிப்புக்கு பின்பே உணரமுடிகிறது.

 உணவிற்காக  பிரயத்தனத்துடன் அலையும் தாயை விஷம் வைத்து கொன்று விடுபவன், தன் மனசாட்சியின் உறுத்தலுடன் போராடுவதை 'தூக்கம் வரவில்லை' கதை விளக்குகிறது.

 வாழ்வில் சந்திக்கும் மிகச் சில நபர்கள் மிக சாதுவானவர்களாக தோன்றுவதும், குறிப்பிட்ட ஒரு தருணத்தில் நம்பவியலாத அவர்தம் விஸ்வரூப உணர்வுப் பெருவெழுச்சியையும் ஏக்கியம்மா வெளிப்படுத்துகிறார்.

 தன்னையே மறந்து விட்டு அலைந்து திரியும் நபரைப்பற்றிய 'மானசீகம்', அழையா திருமணத்தில் உணவருந்தும் ஆவலுடன் சென்று வெளியேற்றப்படுபவனின் 'வேஷம்', மரண வீட்டின் சிந்தனைகளாக புனையப் பட்டிருக்கும் 'நாலுமணி', கதைகளும் வியப்பளிக்கத் தவறாதவை.

 'கைத்தடி பண்ணையார்' குறித்த தகவல் இதுபோன்ற மனிதர்களை எளிதாக நினைவுபடுத்தி செல்கிறது.

 மரண வீடுகளுக்குச் செல்கையில் பண்ணையார் சிறிது நேரம் அங்கு இருந்துவிட்டு தனது கைத்தடியை மட்டும் விட்டுச் சென்று விடுகிறார். சடங்குகளின் முடிவில் அங்கு வரும் அவர், தன்னிடம் தெரிவிக்காமல் நிகழ்வுகள் முடிந்துவிட்டதாக கோபம் கொள்கிறார்.

 அப்பண்ணையாரின் மரணத்தின்போது மனிதர்களுக்கு பதிலாக அவர்தம் கைத்தடிகளே நிறைந்திருக்கின்றன அவ்விடத்தில்.

 மலர்ந்த முகமும், இனிய சொற்களுமே பிறர் மனதில் நமது இருப்பை உறுதி செய்து கொள்ளப் போதுமானவை என்று தோன்றுகிறது.

 'பூனை' கதையில் மனைவிக்கு மிகவும் பிடித்த பூனை அவள் இல்லாத நேரங்களில் அவளது கணவனை கண்காணிக்கவும் செய்கிறது.

 காலவோட்டத்தில் அத்துமீறல்கள் நாற்றமாக உருமாறி அச்சுறுத்துகிறது. எப்போதும் அழுபவள், ஒவ்வொரு முறையும் வேறுபட்ட காரணங்களை கொண்டிருப்பதும் இக் கதையில் சொல்லப்படுகிறது.

 உணவகங்களில் இறைச்சி உணவுகளில் நிகழக்கூடிய சாத்தியங்களை விளக்கும் கதையொன்று பெரும் சோகத்துடன் நிறைவு கொள்கிறது.

 பெருநோய் கண்டவள் பகலில் இரக்கமுடன் பார்க்கப்படுபவள், சில மாதங்களுக்குப் பிறகு பிள்ளை பெற்று விடுகிறாள். அவ்வகையில் அம்மனிதர்களின் பண்பாடு எடுத்தாளப்படுகிறது.

 'புனித யாத்திரை' என்ற கதை தொகுப்பின் பிற கதைகளுடன் ஒப்பிடுகையில் மிக மிக சாதாரண புனைவாக தோன்றுகிறது.

 தமிழ் மனசு, கோழை மனசு, சஞ்சல மனசு, சந்தேக மனசு எனக் குற்றம் சாட்டுபவள் கவலையுடன் படிகளில் இறங்கிச் செல்கையில் அந்நபரை திரும்பிக்கூட பார்க்கவில்லை.

 ரயிலில் உடன் பயணிப்பவர் உறக்க கலக்கத்தில் சாய்ந்துவிட, எரிச்சலடையும் அடுத்த இருக்கைப் பயணி வன்மத்துடன் அவரது காலனி ஒன்றை, யாரும் பார்த்திராத ஒரு தருணத்தில், சன்னல் வழியே வீசி விடுகிறார்.

 இறங்கும் நேரத்தில் தேடிக் களைப்புற்று வருத்தமுடன் அவர் செல்வதை காண நேர்கையில் பரிதாபப்படுவதில் என்ன பயன் இருக்க முடியும்?

 இலக்கியம் பேசி படைப்பாளியை ஏமாற்றுபவன், ஃபாரின் சேலை சிதை  நெருப்பில் எரிந்தாலும் சரி, பிறர் அனுபவிக்க மனம் கொள்ளாதவன், மாய யதார்த்த வாதங்களுடன் எழுதப்பட்டிருக்கும் இரு கதைகள், சாகசத்துடன் உயரத்துக்கு செல்பவன், தரையை அடைய இயலாமல் விழுந்து மரணிக்கும் கதை என ஆ.மாதவன் தனது படைப்புகளின் வழியே இம்மாதத்தின் பெரும்பான்மையான நாட்களில் வாசம் செய்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

நன்றி :

திரு சரவணன் சுப்பிரமணியன், 
வாசிப்பை நேசிப்போம், 
முகநூல்

கருத்துகள் இல்லை: