10 நவ., 2021

அபுதாபியில் எஸ்ராவுடன் இனிய உரையாடல்


“ கதை சொல் அல்லது செத்து மடி “ என்ற வார்த்தைகளைக் கொண்டே அந்தத் தேசாந்திரியின் சந்திப்பை ஆரம்பம் செய்கிறேன். 

1001 இரவுகள் புத்தகத்தைப் பற்றிப் பரவலாக ஒரு ஸ்திரிலோலனின் கதை போலச் சித்தரித்த போது “ ஒருத்தி கதை சொன்னால் அவளைக் கொல்லாமல் விட்டுவிடுவானா ஒரு மன்னன்...? அவளின் உடல் சுகத்தை விட அவள் கூறிய கதைகள் அத்தனை இன்பமானதா...? என்ற கேள்வியை எழுப்பி, 
ஒரு கதை சொல்லியின் மகத்தான குணத்தை, அவன் இவ்வுலகில் பரப்பும் கருத்தியலை உரக்க கூறியவர் சம காலச் சிறந்த எழுத்தாளரான எஸ்.ராமகிருஸ்ணன் அவர்கள். 

“ ஒரு ஊருல ஒரு யானை இருந்துச்சாம் .......” என்ற திண்ணை காலத்து தாத்தப்பாட்டிகள் குறைந்து விட்ட காலத்தில் இலகுவாக இலக்கியத்தோடு சேர்ந்த வாழ்வின் தத்துவார்த்த விஷயங்களைக் கூரியபடிச் செல்லும் கதை சொல்லிகளின் அவசியம் உலகில் மிக்க முக்கியமானதாக உள்ளது. 

சமூக வலைத்தளங்கள் ஆக்கிரமித்து விட்ட இன்றைய தொழில் நுட்ப உலகில் “ நான் என்ன எழவுக்கு ஒரு பத்தியை எனக்கான நேரத்தை விரயம் செய்து வாசிக்க வேண்டும் என எண்ணம் தோன்றி விட்ட சமூகத்தில். 

தொன்மை, படிமம், துயரவிவரணை, கவியுருவகம், மறுதலிப்பு, மீட்டுறுவாக்கம் போன்ற வார்த்தைகள் கொண்ட எழுத்துக்களைக் கண்டாலே ஒவ்வாமை வந்து தூரமாய் விலகி ஓடும் ஆரம்பக் கட்ட வாசகனை மிரட்டும் இலக்கிய மாபியாக்களுக்கு இடையில் 

கதைகள் பற்றிய, எழுத்தாளர்கள் பற்றிய, அவர்களின் எழுத்துக்கள் பற்றி, உலக இலக்கியம் பற்றிய பிசிறில்லாத அவரின் தொடர்ச்சியான சுவையான பேச்சின் மூலம் என்னைப் போன்ற சாதாரணமானவனையையும் இலக்கியம் பக்கம் ஈர்த்து  புத்தகம் வாசிக்கச் செய்தவர் எஸ்.ரா.

உலகப் புத்தகக் கண்காட்சிக்காகச் சார்ஜா வந்திருந்தவரை அபுதாபிக்கு அழைக்க எங்களின் விருப்பம் ஏற்றுத் தோழர் நந்த குமாருடன் அபுதாபியின் புகழ் பெற்ற பள்ளியான “ ஷேக் செய்யத் மாஸ்க் “ வந்து சேர்ந்த போது மணி இரவு எட்டு. 

நிலவும் கூட முழு வேடம் தரித்துப் பௌர்ணமி என்ற பெயரில் எஸ்.ராவைக் காண எங்களுடன் காத்திருந்தது. 

சிறிய அறிமுகத்திற்குப் பிறகு வந்திருந்த நண்பர்கள் பத்து பேரும் எஸ்.ராவுடன் சேர்ந்து நடக்க அபுதாபியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் சுபஹான் பீர் முஹம்மது, எங்களை ஒளி வெள்ளத்தில் மறக்க முடியாத தரவுகளாக மாற்றிக் கேமராவில் சேகரித்தபடி இருந்தார். 

அவரைச் சந்திக்க வந்த எல்லோரிடத்தும் கேள்விகள் இருந்தன எனபது சிறப்பு. 

வேல்முருகன் அவரின் “ துணை எழுத்து “ பற்றிக் கேட்டார். முத்துகுமார் “ தேசாந்திரி” பற்றிப் பேசினார். நான் “ இடக்கை “ பற்றிக் கேள்வி எழுப்பினேன். பிரபு “ பதின் “ பற்றிக் கூறினார். நித்ய குமார் “ உறுபசி “ பற்றிச் சிலாகித்தார். 

நல்ல கேள்விகளின் துவக்கம் அவரை நான்கு மணி நேரம் பேசவைத்தது. 

தேசாந்திரியுடன் உடன் நடப்பது தனிச் சுகம். இலக்கில்லாத அவருக்கு எல்லாமே பாதை தான். சிரித்தபடியே உலகை கடந்து விடலாம்.
 
பள்ளி வாசலின் நுண்ணிய வேலைப்பாடு அதன் அமைதி தவழும் பிரமாண்டம் கண்டவர், கங்கை கொண்ட சோழபுரம் கோவில் சிற்பங்கள் பற்றியும் அதில் உள்ள விரிந்த மொட்டவிழ்ந்த இன்னும் மலராத மல்லிகைப் பூவின் சிற்பங்கள் பற்றி, குகைக் கோயில்கள் பற்றிப் பல்லவர்கள், முந்தைய சோழர்கள், வாதாபி, சிவகாமியின் சபதம் வரை சொல்லி முடிக்கும் போது பள்ளிவாசலின் உள்வாயிலை எட்டி இருந்தோம். 

திருப்புவனம் கோவிலில் செதுக்கப்பட்டிருக்கும் சிறிய சிற்பங்களில் ராஜா வெற்றிலை மடித்து ராணிக்கு கொடுப்பதையும் சிறு வெற்றிலைத் துகள் வாயில் ஒட்டியிருப்பதையும் சிற்பி வடித்திருக்கிறான், மழையில் சிற்பங்கள் நனைந்த நாளில் தடவிப்பார்த்தால் சிறிய வெற்றிலைத் துகள் தெரியும், சிற்பங்கள் அன்றைய ஸ்டோரி போர்ட் என்றார். 

பேச்சு இப்பொழுது அவர் எழுதிய கதை மாந்தர்களுக்குள் நுழைந்திருந்தது. 

பிடிவாதம் பிடிக்கும் ஒருத்தியின் கதையைக் கூறி மனைவியின் பிடிவாதத்திற்கும் மகளின் பிடிவாதத்திற்கும் நாம் நடந்து கொள்ளும் விதம் என நகைச்சுவையில் வந்து நின்றது. 

கதைகளுக்கான கருக்கள் எப்படி எடுப்பீர்கள் என்று ஒருவர் கேட்டதற்குப் பார்த்த, கேட்ட, வாசித்த செய்திகள், வாழ்வில் நடந்தவை என எல்லாமே என் கதைகளுக்கான கருவாக மாறும் என்றார். 

பால்யத்தில் ஊருக்குள் தனது நண்பனுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது அவனுடனே அவன் வீட்டிற்குள் ஓடிச் சென்றுள்ளார். அவன் சாப்பிட அமர இவரையும் அமரச் சொல்லி இருக்கிறார்கள். இருவரும் தட்டின் முன் அமர்ந்திருக்கத் தோசையைக் கொண்டு வந்த பெண்மணி அவருடைய தட்டில் இடப்போகும் போது தள்ளி அமர்ந்திருந்த ஒரு மூத்தாட்டி கேட்டாராம். 

“ அவன் நம்மாளா “ 
 இல்லை “ என்றபடி தோசை தட்டை அடையாமல் கரண்டியில் ஆடியபடி நிற்க 

“ இனி வீட்டுக்குள்ள ஏத்தாத “ என்ற கேள்விக்குப் பதில் தெரியாமல் அவர் தனது வீட்டில் போய்ச் சொல்ல 

“ நீ அவுங்க வீட்டுக்கு போகாத “ 

“ ஏன் “ 

“ அவுங்க வேற ஆள்கள் “ 

சாதி எங்கிருந்து வளர்க்கப்படுகிறது. கல்வி எப்படி ஜாதி உணர்வை வென்றது. கல்வியாளர்கள் எப்படிச் சமூகத்தில் போற்றப் பட்டார்கள். மீண்டும் பணம் மேலோங்கி கல்வி தரம் தாழ்ந்ததோ அப்பொழுதே பணம் கொண்ட சாதி மீண்டும் தலை தூக்கிய கதையைக் கூறினார். 

மருத்துவர்களின் வீடுகள் மருத்துவமனைகளாக இருந்த காலம் தாண்டி பணம் உள்ளவர்கள் மருத்துவமனை கட்டி அதில் மருத்துவர்கள் வேலைக்கு வந்த நிலை உருவானதும் மனிதம் விட்டுப் போன கதையைக் கூறினார். 

பண்பாடு என்ற சொல்லுக்கும் கலாச்சாரம் என்ற சொல்லுக்குமான வித்யாசத்தை விவரித்து கலாச்சாரம் என்ற வார்த்தையின் உள்ளே அடங்கி இருக்கும் அரசியலை புரியவைத்த போது ஆச்சர்யமாக இருந்தது.

ஷேக் செய்யத் பள்ளியை விட்டு வெளியே வந்து அதன் எதிரே இருக்கும் வஹ்த் அல் கராமா உள்ள ஸ்டேடியத்தில் வந்து அமர்ந்து கொண்டோம். 

பள்ளியின் மொத்தமும் அந்த ஸ்டேடியத்தில் உள்ள நீரில் பிரதிபலிக்க யமுனை ஆற்றின் தாஜ்மஹால் நிழலுருவம் நினைவில் வந்து சென்றது. 

அமீரகத்தில் போரில் உயிர்நீத்தவர்கள் அடையாளமாக உள்ள வஹத் அல் கராமா இடம் பற்றியும் அதில் தினமும் நடக்கும் முப்படை அணிவகுப்பு பற்றியும் சுபஹான் அவர்கள் எஸ்.ராவிடம் கூறி மாலை வேளையில் மேகங்கள் சூழ இந்த நீரில் பிரதிபலிக்கும் இந்தப் பள்ளியின் அழகை விவரித்தார். 

மீண்டும் பேச்சு உலக இலக்கியமாகத் தொடர்ந்து. 

ஜோசப் நீத்தம் எனும் அயர்லாந்து மருத்துவர் சீனா சென்று சீன மொழி கற்று இரண்டு லட்சம் புத்தகங்கள் வாசித்துச் சீனா பற்றிய 23 தொகுதிகள் கொண்ட புத்தகம் பற்றியும் அதுவே சீனா பற்றி உலகம் அறிய உதவும் கருவி எனவும் சீன அரசு அவர் பெயரில் விருது வழங்குவது பற்றியும் பேசினார். 

உலகின் ஒட்டுமொத்த கதைகளின் இரண்டே கருக்கள் ( இரண்டு பசிகள் ) பற்றியும் அவை எப்படி எல்லாம் உருவாகின்றன விரிவடைகின்றன பரந்துபட்டுக் கிடக்கின்றன என விவரித்தார். 

பசி பற்றியும் இருப்பவன் இல்லாதவன் பற்றியும் வந்த போது தானாய் ரஷ்ய இலக்கியம் தொற்றிக் கொண்டது. 

ஒரு வீட்டில் குடும்பத்தார் சுற்றி அமர்ந்து இட்லி சாப்பிட ஆரம்பிப்பதில் இருந்து வீட்டிற்குள் உண்டாகும் மனஸ்தாபம் முதல் கொஞ்சம் கொஞ்சமாய்க் கதைகளின் படிதட்டுகளை விவரித்தபடியே சென்று உணவு சார்ந்த அரசுக்கு எதிரான மக்களின் எழுச்சி வரை சென்றடைந்தார். 

கதை அவரின் வார்த்தைகளுக்கு இடையே கை கோர்த்து நடந்தபடியே வந்தது. 

பாலை தினையை என்பது அரேபியே பாலைவனத்தை போன்ற இடத்தைக்  குறிக்கிறது என இத்தனை நாள் நினைத்திருந்தேன்.  

“ முல்லையும், குறிஞ்சியும், முறைமையின் திரிந்து 
நல் இயல்பு இழந்து, நடுங்கு துயர் உறுத்துப் 
பாலை என்பது ஓர் படிவம் கொள்ளும் “ - என்பதன் அர்த்தம் புரிந்த நாள். 

கரடு, ஆரலை என தமிழ் நில மண்ணின் வேறு வேறு ரூபங்களை சுட்டிக்காட்டி காடும் காடு சார்ந்த இடத்தில் இருந்து கீழ் நோக்கி வரும் தினையை வரிசைப் படுத்தி 

“ அவரு அதுல கரைகண்டவர், ஆழமான விஷயத்தைப் பேசக்கூடியவர் “ என நம் குணம் இருப்பதையும் மேலை நாட்டவர்கள் கீழ் இருந்து மேல் நோக்கிச் செல்லும் “ he reach the height “ எனும் குணம் பற்றியும் விவரித்தார். 

அன்றைய ராம்நாடு தான் ஐந்து திணைகளும் கொண்ட நிலமாக இருந்தது என்று ஐந்து திணைக்கான ஊரையும் ஒவ்வொன்றாய் குறிப்பிட்டார். 

எல்லா நதியும் கடலில் கலக்கும் வகையைத் தவிர. அது கலந்து நின்ற அன்றைய R.S மங்களத்தின் “கம்மாய்” பற்றியும் அதன், நாரை கடக்க இயலாத நீள அகலம் பற்றியும் இன்றைய ராம்நாட்டைப் பற்றியும் கேட்க ஆச்சர்யமாக இருந்தது. 

அதே ராம்னாட்டில் இன்றும் தொடரும் இந்து முஸ்லீம்கள் நட்புறவு பற்றியும் பழைய பிரன்மலை கள்ளர்கள் சுன்னது செய்வது இன்னமும் தொடரும் அவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்குமான உறவு எனச் சென்றது பேச்சு. 

கூடவே இடைக்காட்டூர் சர்ச், ஓரியூர் சர்ச், பிராமணர்கள் கிருத்துவர்களாக மாறியது. இன்னமும் பாதரை ஐயர் என அழைப்பதின் பின்னணி எனக் கூறியவர். தமிழகத்தின் மொத்தவரலாற்றையும் சேர்த்து எழுதத் துடிக்கும் ஆசையைக் கூறினார். 

இருபது எழுத்தாளர்கள் சேர்ந்து சிறந்த உலக இலக்கியங்கள் பற்றிய மூன்று தொகுப்பை உருவாக்கி வருவது பற்றியும் கூறினார். அது முழுமை அடைய மூன்று ஆண்டுகள் பிடிக்கும் என்றார். 

இரவில் அஞ்சப்பரில் சாப்பிடும் போது சினிமாவின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். ரஜினியின் “பாபா” மற்றும் "அவன் இவன்" சினிமாவில் பணியாற்றிய அனுபவம் பற்றி நிறையப் பேசினார். அதன் பல்வேறு காரணிகள் பேசப்பட்டன. கூடவே தான் தங்கி இருந்த ஆஸ்திரேலிய கிராமங்கள் பற்றி விவரித்தார். 

இரவு தங்குவதற்கான ஏற்பாடு செய்திருந்த அறைக்கு வந்த பின்பும் பேச்சு இந்த அமீரக மண்ணைப் பற்றியும் கூடவே இந்திய பாகிஸ்தான் எல்லையில் ஜெய்சல்மார் பாலையில் ஒட்டகத்தில் பயணித்த அனுபவத்தையும் பற்றியும் இருந்தது. 

“ ஏன் இந்த மண் பற்றித் தமிழில் அதிகம் எழுதப்படவில்லை “ என்ற அவரின் கேள்வி என் நெஞ்சுக்கு அருகாமையில் வந்து அமர்ந்து கொண்டது. 

காரணம், கிரேக்க துன்பியல் கதைகள், அமெரிக்க லத்தீன் இலக்கியம், ஐரோப்பிய இலக்கியம், ரஷ்ய இலக்கியம் என்பார்கள் ஆனால் அரேபிய இலக்கியம் என யாருக்கும் ஏன் சொல்ல மனம் வரவில்லை என அடிக்கடி நான் எண்ணுவதுண்டு. 

அரேபிய வானவிலுக்கு (மண்ணுக்கு) ஒன்று வெள்ளையான புனித நிறம் காட்டப்படும் இல்லை மூர்க்கர்கள் காட்டுமிராண்டிகள் பெண் பித்தர்கள் எனக் கருப்பு நிறம் காட்டப்படும். வானவில் எங்கும் ஏழு நிறம் என ஏன் நம்ப மறுக்கிறார்கள். 

அடுத்தமுறை வாருங்கள், சில நாட்கள் எங்களுடன் தங்கி இருங்கள் இந்த மண்ணைப் பற்றி எழுதுங்கள் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. 

அருகில் இருந்த நண்பர் பிரபு கங்காதரன் “ இவர் எழுதிக் கொண்டிருக்கிறார் நாவலாய் “ என என்னைச் சுட்டிக் காட்ட மணல் பூத்தக் காட்டை, வெயில் விரும்பித் தூங்கும் இந்த மண்ணை என் கையில் மீதமுள்ள இந்த மண்ணின் வாடையை, மாயநதி ஓடும் இந்த பாலையை என்னால் ஆனமட்டும் எழுதி விட வேண்டும் என்ற எண்ணத்துடன் அவரிடம் விடைப் பெற்று வீடு திரும்பும் போது மணி ஊர்ந்தபடி அடுத்தநாளை ஆரம்பித்திருந்தது. 

படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தை விட்டு வெளியே வந்து உலவும் ஒரு காது நீண்ட ஒருவனைப் பற்றிய எஸ்.ரா கூறிய கதை நினைவில் வந்து போனது. 

நிஜத்தில் தேசாந்திரியை பார்த்து பேசிவிட்டு தான்  வந்தோமா இல்லை ......? இது கனவா........? 

சந்திப்பை சாத்தியப்படுத்திய தோழர் நந்த குமாருக்கு, ஷார்ஜா புத்தகக் கண்காட்சி குழுவுக்கு, அலுப்பை பார்க்காமல் அபுதாபி வந்து சென்ற எஸ்.ராவுக்கு என எல்லோருக்குமான நன்றியுடன்.

நன்றி :

கருத்துகள் இல்லை: