28 நவ., 2021

நூல் நயம் : பூபாளத்திற்கொரு புல்லாங்குழல் - வெ.இறையன்பு

RM_2021:    0167:     26/50
நூல்: பூபாளத்திற்கொரு புல்லாங்குழல்
ஆசிரியர்: வெ. இறையன்பு
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
முதல் பதிப்பு 2006

கல்வியாளர், கட்டுரையாளர், கவிஞர், இளையோர் திறன் மேம்பாட்டாளர் என பன்முகத் தன்மை பெற்ற சிறந்த மனிதரின் கவிதைத் தொகுப்பு பூபாளத்திற்கொரு புல்லாங்குழல். 

தனது ஐ.ஏ.எஸ். பதவி மூலம் என்னென்ன சமூக நலன்களைச் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்தவர். மகளிர் முன்னேற்றத்துக்கும் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புக்கும் பல திட்டங்களைக் கொண்டு வந்தவர். 
பெண் விடியலுக்காக பல கவிதைகள் இந்நூலில் உள்ளன. அதனால் தானோ இந்தத் தலைப்பை வைத்தாரோ. 

"சின்ன வயதிலிருந்தே சாப்பாட்டுடன் 
உங்களுக்கு ( பெண்களுக்கு) பொறுமைக் குணமும் போதிக்கப் பட்டதால் உங்களை அடிமைப் படுத்தும் ஆளுகைகள் உங்களுக்கு அக்கிரமமாய் படவில்லையோ!"
என்று கேட்கிறார் விழியின் விரிசல்கள் என்ற பாடலில்.

நிற வெறிக்குக் கருப்புக் கொடி என்ற தலைப்பில் காகத்தைப் பற்றி பாடி இருப்பார். 
"காக்கையே! 
உன்னை எப்படியெல்லாம் அவமானப் படுத்துகிறோம்.
காக்காய் குளியலெனவும்
காக்காய் பிடிப்பதெனவும்
காக்காய் வலிப்பெனவும்
காரணமில்லாமல் வைகின்றனர் வையகத்தில்.
அகத்தியன் கமண்டலத்தை
அன்று நீ கவிழ்த்திருக்கா விட்டால் காவிரி ஏது? கல்லணை ஏது?.
கவிழ்த்ததுதான் கவிழ்த்தாயே
தமிழக எல்லையில்
கவிழ்த்திருக்கக் கூடாதா!"
என கேள்வி கேட்கிறார். 

விரதம் என்ற தலைப்பில்
"உனக்குத் தெரியாது,
நான் உளிகளைப்
பொறுத்துக் கொள்வதெல்லாம் 
சிற்பமாவதற்கு என்று"
என்று உழைத்து முன்னேற வேண்டும் என துடிக்கும் இளையோருக்கு வழிகாட்டுகிறார்.

இறையன்பு அவர்களின் இன்னும் பல சிறந்த கவிதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. அவருடைய 'வையத் தலைமை கொள்' மற்றும் 'போர்த்திறம் பழகு' நூல்கள் எல்லாம் இளைஞர்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கக் கூடிய நூல்கள். படித்துப் பயன் பெறுவோம்.

-சிவக்குமரன்

நன்றி :

திரு சிவ குமார், 
வாசிப்பை நேசிப்போம், 
முகநூல்

கருத்துகள் இல்லை: