28 மே, 2022

குட்டிக்கதை

*இடிவிழுந்த சிவலிங்கம்*

ஒரு ஏழைப்பெண் பூ வியாபாரம் செய்து வந்தாள். பூ கட்டாத தினங்களில் கோயிலுக்கு சந்தனம் அரைத்துக் கொடுப்பது, கோயிலைப் பெருக்கிக் கோலமிடுவது. நந்தவனத்துக்கு நீர் பாய்ச்சுவது போன்ற வேலைகளை அவள் செய்து வந்தாள். (இக்கோவிலின் பெயர் அச்சாளீஸ்வரர் கோவில், நாதனே பொன் மனை மகாதேவர் கோயிலுக்கும் நந்தீஸ்வரத்துக்கும் இடைப்பட்ட கோயில், கன்யாகுமரி மாவட்டம்.) 
அப்பெண்ணுக்கு, கோயிலுக்கு தினமும் வரும் பணக்காரப் பெண் ஒருத்தியோடு தோழமை ஏற்பட்டது. அது கைமாற்றாய் பணம் கேட்குமளவு வளர்ந்தது. ஒரு முறை அந்தப் பணக்கார நங்கையிடம் கொஞ்சம் பெரிய தொகையை வாங்கினாள். ஒரு மாதம் சென்றபின் பணத்தைத் திருப்பிக் கேட்டாள் செல்வவதி. இதோ அதோ என்று சாக்குச் சொல்லி வந்தாள் ஏழைப் பெண். கடன் கொடுத்தவளோ, என் வீட்டாருக்குத் தெரியாமல் நகையை அடகு வைத்து இப்பணத்தைக் கொடுத்தேன். அடுத்த மாதம் என் மைத்துனர் திருமணம். அதற்குள் திருப்பாவிட்டால் என் கணவர் திட்டுவார் கடன் வாங்கும்போதே நம்மால் திரும்பக் கொடுக்க முடியுமா என்று யோசிக்க மாட்டாயா என்று ஏசினாள். ஏழைப் பெண் கலங்கினாள். எல்லோரும் போனபிறகு அச்சாளீஸ்வரர் சன்னிதியில், #ஈஸ்வரா! பணம் வைத்துக் கொண்டா கொடுக்காமல் இருக்கிறேன்! உன்னை நம்பித்தான் பொய் சொல்லப்போகிறேன், தண்டனையாக என்னைப் பழி வாங்கி விடாதே என்று பிரார்த்தித்தாள். அடுத்த நாள் பணக்காரி கடனைக் கேட்டபோது, வீட்டுக்குப் போய் கணக்கு நோட்டைப் பார். உன் கடனை எப்பவோ கொடுத்து விட்டேன் என்று ஒரே போடாகப் போட்டாள் ஏழை. தனவந்தி வாயடைத்துப் போனாள். பிறகு சமாளித்துக்கொண்டு 
அடிப்பாவி! இப்படியா பொய் சொல்லுவே! ஊர் முக்கியஸ்தர்களைக் கூட்டி வருகிறேன். அச்சாளீஸ்வரர் சன்னிதியில் சத்தியம் செய்ய வேண்டும் என்றாள். ஊர் கூடியது. ஏழைப் பெண் கோயிலை வலம் வந்து, அச்சாளீஸ்வரா! கடனைத் தந்து விட்டேன். இது சத்தியம் என்று கற்பூரத்தை அடித்தாள். பலரும் பணக்காரியை இகழ்வாகப் பார்த்தனர். செல்வவதி ஆவேசத்தோடு, அச்சாளீஸ்வரா! ஊரார் முன்பு என்னைப் பொய்யானவளாக்கி விட்டாயே! அசத்தியத்தை ஏற்று மௌனமாயிருக்கும் உன் தலையில் இடி விழட்டும் என சபித்தாள். அப்போது கார் மேகங்கள் கூடின. மழையும், இடியும், மின்னலுமாய் வெளுத்து வாங்கியது. அதில் ஒரு இடி ஸ்வாமி சன்னிதி விமானத்தில் விழுந்தது. லிங்கத் திருமேனியில் பிளவு ஏற்பட்டது. உண்மையை இறைவன் நிரூபித்தான் என்று ஊரார் அதிசயித்தனர். ஊரார் நிதி திரட்டி பணக்கார பக்தையிடம் கொடுக்க, அவள் வீட்டார் அதைக் கோயில் திருப்பணிக்கே தந்து விட்டனர். பிளவு பட்ட லிங்கம் அருகிலுள்ள தடாகத்தில் வைக்கப்பட்டது. கருவறையில் புதிய லிங்கம் ஸ்தாபித்தனர். மறுநாள் கருவறையை திறந்தபோது, அங்கே பிளவுபட்ட லிங்கமே இருந்தது. அபிஷேகம் செய்ய வசதியாக பிளவை மூடிக் கொள் என்று பக்தர்கள் தினமும் பிரார்த்திக்க பிளவு சிறிது சிறிதாகக் குறுகி, தற்போது வடு மட்டுமே தெரிகிறது. புதிதாகச் செய்த லிங்கம் புஷ்கரணியில் உள்ளது. 
“ஆலகாலம் உண்டனை அன்று 
உலகைக் காத்திட 
நீல வானிடி தாங்கினை அபலை துயர் ஓட்டிட,
பால னிவனைத் துரத்திடும் பாப வினைகள் அழிந்திட,
கால காலனே அருள்வாய் அச்சாளீஸ்வர நாதனே”
என்ற பாடலே இருக்கிறது.
சிவ சிவ
திருச்சிற்றம்பலம்

நன்றி :
படித்ததில் பிடித்தது#

கருத்துகள் இல்லை: