16 ஜூன், 2022

இன்று சில தகவல்கள்

1981

1981ம் ஆண்டு ராஜஸ்தான், ஜெய்பூரில் அந்த பெரிய வெள்ளம் வந்தது. தரிசாக இருக்கும் விவசாய நிலங்களில் வெள்ளம் வந்தால் அவற்றின் மேற்புற மண் அடித்து செல்லபட்டு மண்வளம் குன்றிவிடும். அதுதான் இங்கும் நடந்தது. விவசாயம் பொய்த்தது. விவசாயிகள் இடம்பெயர்ந்தார்கள். நிலம் தரிசாக கிடக்க அங்கிருந்து கிளம்பிய புழுதி வெள்ளம் நகரையே அவ்வப்போது ஸ்தம்பிக்க வைக்கும்

2013

அந்த ஊரை சேர்ந்த ஓட்டல் அதிபர் மன்வேந்திர சிங் ஷெகாவத் என்பவர் நிறைய பணம் சேர்த்துக்கொண்டு அந்த ஊருக்கு வந்தார். தரிசாக கிடந்த 500 எக்கர் நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கினார். அதன்பின் அந்த நிலத்தை மையமாக வைத்து ஒட்டுமொத்த கிராமங்களுக்கும் பசுமையை உண்டாக்க முனைந்தார்.

ஜெய்பூரில் மழைக்காலத்தில் பெய்யும் மழையை சேமித்து வைத்தாலே மேல்புறத்து மண் அடித்து செல்ல்படுவது நின்றுவிடும் என திட்டமிட்டு முதலில் தன் நிலத்தில் ஒரு பெரிய குளத்தை வெட்டினார். மழைநீரை அங்கே கொண்டுவந்து சேர்க்க நீர்பிடிப்பு பகுதிகளில் சிறு கால்வாய்கள் வெட்டபட்டன. நிலமெங்கும் பாத்திகள் வெட்டபட்டன. பாத்திகளில் விழும் நீர் ஓட வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கும். அதை சுற்றி புல்லும், செடிகளும் வளர ஆரம்பிக்கும்.

அதன்பின் ஜப்பானிய மியாவாகி முறையை பயன்படுத்தி 500 ஏக்கரில் 2 லட்சம் மரங்கள் நடப்பட்டன. மியாவாக்கி என்பது மிக வித்தியாசமான முறை. வழக்கமாக ஒரு ஏக்கர் நிலத்தில் ஆயிரம் மரங்களை தான் நடமுடியும். ஆனால் மியவாக்கி முறையில் அருகருகே மிக நெருக்கமாக 20,000 மரங்களை நடுவார்கள். வெவேறு வகை மரங்களை இப்படி மிக நெருக்கமாக நடுவதால் அவற்றுக்கிடையே கடுமையான போட்டி ஏற்பட்டு ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு வளரும். வழக்கமான முறையில் ஆன்டுக்கு ஒரு மீட்டர் மட்டுமே வளரும் மரங்கள் இம்முறையில் ஆண்டுக்கு 10 மீட்டர் உயரத்தில் வளரும்.,

இதன்பின் மேலும் நாலு குளங்கள் வெட்டபட்டன. இவற்றில் ஆண்டுக்கு 40 கோடி லிடட்ர் நீரை தேக்கிவைக்கமுடியும். குளங்களும், மரங்களும் வந்ததும் மீன்கள், ஆமைகள், பறவைகள் எல்லாம் அங்கே வர ஆரம்பித்தன. சுற்றுவட்டார கிராமங்களின் கிணறுகள் அனைத்திலும் மந்திரம் போட்டால் போல் நிலத்தடி நீர்மட்டம் பெருகி விவசாயம் செழிக்க ஆரம்பித்தது.

இந்த நிலத்துக்கு துன் (Dhun) என பெயர் வைத்து அங்கே 85 ஏக்கரில் மாட்டுபண்ணை, நாற்று உற்பத்தி எல்லாம் செய்து வருகிறார் மன்வேந்திர சிங். மாடுகளை மேயவிடுவதால் இயற்கையான சாணியும், உரமும் நிலத்துக்கு கிடைத்து மண்வளம் மேம்படுகிறது

இம்மாதிரி குளங்களை வெட்டி நீரை தேக்கினால் ஒரு நாடு எப்படி மேம்படும் என்பதை நன்றாக அறிந்தவர்கள் சோழர்கள். அவர்கள் வெட்டிய குளங்களும், ஏரிகளும் தான் 

இன்றும் தமிழகம் செழிக்க காரணம். இம்முறையை இந்தியாவின் வரண்டபகுதிகள் அனைத்திலும் கையாண்டு கிடைக்கும் நீர்வளத்தை நன்றாக பயன்படுத்தினால் ஒட்டுமொத்த விவசாயம் செழிக்கும், பல்லுயிர்பெருக்கமும் மேம்படும். 

#பூமியும்_வானமும்

~ நியாண்டர் செல்வன்

நன்றி :


கருத்துகள் இல்லை: