14 டிச., 2022

மகாகவியும் ஆன்மிகமும் : திருப்பூர் கிருஷ்ணன்

டிசம்பர் 11: மகாகவி பாரதி பிறந்த தினம்:
...........................................
*மகாகவியும் ஆன்மிகமும்!*
*திருப்பூர் கிருஷ்ணன்*
...........................................
 அரவிந்தரைப் போலவே பாரதிக்கும் ஆன்மிகச் சீடர்கள் இருந்தார்கள்.  குண்டலினி யோகம் குறித்துச் சில ஆன்மிக அன்பர்கள் பாரதியிடம் சந்தேகம் கேட்டுத் தெளிவுபெற இரவு நேரங்களில் வந்ததுண்டு. 

   ஸ்ரீஅரவிந்தருக்கு இணையான ஆன்மிகவாதி மகாகவி பாரதி என்பதை பாரதியின் வாழ்க்கை நிகழ்வுகளும் அவரது கவிதைகளும் நமக்கு உணர்த்துகின்றன. 
........................................... 
  *மகாகவி பாரதியார், சமூகம் சார்ந்த அவரின் பல்வேறு உயர்ந்த கோட்பாடுகளுக்காக எல்லோராலும் கொண்டாடப் படுகிறார். அவரின் அத்தனை கோட்பாடுகளுக்கும் அடிநாதமாக இருந்தது அவரது ஆன்மிகம்தான். 

  சரியான ஆன்மிகம் எது என்பதைச் சிந்தித்து தம் மனத்தில் உறுதி செய்துகொண்டு அதன்வழி வாழ்ந்தவர் அவர். 

  ரஷ்யப் புரட்சியைப் பற்றிக் கவிதை புனைந்தபோது கூட `ஆகா என்றெழுந்ததுபார் யுகப்புரட்சி` என வியந்ததோடு அந்தப் புரட்சிக்குக் காரணம் `மாகாளி பராசக்தி அங்கே கடைக்கண் வைத்ததுதான்` என்கிறார். 

 நமது ஆன்மிகத்தில் காலப்போக்கில் சிற்சில கசடுகள் சேர்ந்தன. தூய ஆன்மிகத்தில் இல்லாத பொய்யான கசடுகள் அவை. 

  அனைத்து உயிர்களும் பிரம்மத்தின் வடிவமே எனக் கண்ட மிக உயர்ந்த வேத நெறி, நடைமுறையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் ஜாதி நெறியாகக் கீழிறங்கியபோது எழுந்ததுதான் தீண்டாமை என்ற கொடுமை. 

  ஆழ்வார்களிலும் நாயன்மார்களிலும் எல்லா ஜாதியினரும் இருப்பதை உறுதி செய்கிறது வரலாறு. 

  அப்படியிருக்க, அனைவரும் ஒன்று என்றே முழங்கிய நம் ஆன்மிகத்தில் பின்னாளில் தீண்டாமை எப்படி உருக்கொண்டது என்பதே விந்தை. 

 நம்மிடையே நேர்ந்த இன்னொரு தகாத போக்கு பெண்கல்வி மறுப்பு. 

  கலைவாணி என்ற பெண் தெய்வத்தைக் கல்விக் கடவுளாக்கிக் கும்பிடுவது நம் ஆன்மிகம். பெண்ணைக் கல்விக் கடவுளாக்கிய நாம் பெண்ணுக்குக் கல்வியை மறுக்கலாமா? 

 வேத காலத்திலும் சங்க காலத்திலும் பெண்கள் கல்வியில் உயர்ந்து விளங்கியதை வரலாறு பேசுகிறது. ஆனால் பிற்பட்ட காலங்களில் பெண்ணுக்குக் கல்வி உரிமை மறுக்கப்பட்டது. நியாயமற்ற இந்தச் செயலைக் கண்டித்தது பாரதியின் கவிமனம். 

`கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்திக் 
  காட்சி கெடுத்திடலாமோ?
பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் 
  பேதைமை அற்றிடும் காணீர்!`

 எனக் கவிதையில் முழங்கினார் அவர். மாபெரும் ஆன்மிகவாதியும் விவேகானந்தரின் சிஷ்யையுமான சகோதரி நிவேதிதையை அவர் சந்தித்தபின், அவரது பெண்ணியச் சிந்தனைகள் உத்வேகம் கொண்டன.

   `மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்` என எழுதியது அவரது பேனா.   

  தீண்டாமை ஒழிப்பில் ஆன்மிகவாதியான பாரதியின் பங்கு மிக அதிகம்.

  `ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்` எனப் பாப்பாப் பாட்டுப் பாடிய பாரதி, `வேதியராயினும் ஒன்றே அன்றி வேறு குலத்தவராயினும் ஒன்றே` எனத் தெளிவுபட அறிவித்தார்.  

 கைம்பெண் மறுமணத்தை ஆதரித்த பாரதி, மனைவியை இழந்த ஆண்கள் கணவனை இழந்த பெண்களை மணந்துகொள்ளலாம் எனத் தம் கட்டுரையில் பரிந்துரைத்தார். 

 நமது ராமாயணம் மகாபாரதம் என்ற இருபெரும் இதிகாசங்களில் போற்றப்படும் கடவுளர் இருவர். ஒருவர் ராமர், இன்னொருவர் கிருஷ்ணர். 

  ராமனையோ கண்ணனையோ இருவரில் யாரை வேண்டுமானாலும் பாரதி போற்றலாம். கொண்டாடலாம். 

  பாரதியின் மனம் ராமனை விடவும் கூடுதலாக கண்ணன்பால் ஈர்ப்புக் கொண்டது. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு என்கிறார்கள். 

 ஒன்று பாரதி தேச விடுதலையை விரும்பிய கவி. அவரே சுதந்திரத் தியாகி. ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று ஆடுவோமே என்பது போன்ற  சுதந்திர வேட்கையைத் தோற்றுவிக்கும் பற்பல பாடல்களைப் புனைந்தார். 

  பத்திரிகைகளில் சுதந்திர எழுச்சி ஊட்டும் கட்டுரைகளைத் தீட்டினார். 

  தன் நாட்டுக்கு விடுதலை வேண்டும் என விரும்பிய பாரதியை தனக்குச் சொந்தமான நாட்டைத் தம்பிக்கு விட்டுக் கொடுத்துவிட்டுக் கானகம் சென்ற ராமன் கவரவில்லை. 

 பாண்டவர்களுக்குச் சொந்தமான நாட்டை அவர்களுடன் இணைந்து போரிட்டு அவர்களுக்கு வாங்கிக் கொடுத்த கண்ணனே கவர்ந்தான். எனவே தான் பாரதி ராமன் பாட்டு எழுதாமல் கண்ணன் பாட்டு எழுதினார். 

  அவரது முப்பெரும் பாடல்களில் ஒன்றான கண்ணன் பாட்டு இலக்கிய உலகில் மட்டுமல்லாமல் ஆன்மிக உலகிலும் பெரும்புகழ் பெற்றது. 

  கண்ணனை `நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய் பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய்` என எல்லாமாகவும் கண்டு பாடிய கண்ணன் அடியவர் அவர். 

  பாரதியைக் கண்ணன் கவர இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. அவர் இசை அன்பர். சங்கீதம் அவரை ஆட்கொண்டிருந்தது. தமது பாடல்களுக்கு அவரே மெட்டமைத்துப் பாடினார். 

  வையாபுரிப் பிள்ளை போன்ற தமிழ் அறிஞர்கள் அவரைச் சந்திக்க நேர்ந்த சந்தர்ப்பத்தில் அவரது கவிப்புலமையோடு இசைப்புலமையையும் உணர்ந்திருந்ததால் ஒரு பாட்டுப் பாடுமாறு வேண்டினார்கள். 

  தம் கம்பீரக் குரலில் தாம் புனைந்த பாடல்களைத் தாமே பாடி கேட்பவர்களைப் பரவசப்படுத்தினார் அவர். 

  இசை நாட்டம் கொண்ட அவரை ராமன் கவராமல் கண்ணன் கவர்ந்ததில் வியப்பில்லையே? கண்ணன் கையில்தானே புல்லாங்குழல் இருக்கிறது? 

  `புல்லாங்குழல் கொண்டு வருவான் அமுது பொங்கித் ததும்புநல் கீதம் படிப்பான் கள்ளால் மயங்கியதுபோலே அதைக் கண்மூடி வாய்திறந்தே கேட்டிருப்போம்!` எனப் பாடி மகிழ்ந்தவர் அல்லவா பாரதி? 

  ராமன் கையில் எந்த இசைக் கருவியும் இல்லை என்பது மட்டுமல்ல, ராமனின் விரோதியான ராவணன் கையில்தான் வீணை இருந்தது!

  கண்ணன் அடியவரான அவர் இன்னொரு கண்ணன் அடிவயரான ஸ்ரீஅரவிந்தர் மேல் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். 

  தாம் செய்யாத குற்றத்திற்காகக் கைதுசெய்யப்பட்டு, அலிப்பூர் சிறையில் அடைக்கப் பட்டிருந்த ஓராண்டுக் காலத்தில் கண்ணனைக் குறித்துத் தவம் செய்தார் அரவிந்தர். அந்தத் தவத்தின் மூலம் ஸ்ரீகிருஷ்ண தரிசனம் பெற்றார். 

  நேரில் கண்ணன் தோன்றினான். அர்ச்சுனனுக்குக் கீதையைப் போதித்த கண்ணன், அரவிந்தருக்கும் கீதையை உபதேசித்தான். 

  சிறையிலிருந்து விடுதலை ஆனபின் உத்தர்பாரா என்ற இடத்தில் மேடையேறிச் சொற்பொழிவு செய்த அரவிந்தர், தாம் பெற்ற கிருஷ்ண தரிசனம் குறித்துப் பொதுமக்கள் முன்னிலையில் அறிவித்தார். 

  மக்கள் பரவசத்தோடு அவரது பேச்சைக் கேட்டு மகிழ்ந்தார்கள். பத்திரிகைகளில் ஸ்ரீஅரவிந்தர் நேரில் கிருஷ்ண தரிசனம் பெற்றதாக அறிவித்தார் என்ற செய்தி வெளியாயிற்று. 

 அச்செய்தி புதுச்சேரியில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்த பாரதியை வியப்பில் ஆழ்த்தியது.  

  இந்தக் கலியுகத்தில் நேரடியான கிருஷ்ண தரிசனம் சாத்தியமா என பாரதியின் மனம் திகைத்தது. கண்ணன் பாட்டு எழுதிய தமக்கு ஸ்ரீஅரவிந்தருக்குக் கிட்டியதுபோன்ற கிருஷ்ண தரிசனம் கிட்டவில்லையே என அவர் மனம் ஏங்கியது. 

  தமது பத்திரிகை நிருபர் ஒருவரை அரவிந்தர் வசித்த கொல்கத்தாவுக்குக் கப்பலில் அனுப்பி உண்மை அறிந்துவரச் செய்தார். 

  அரவிந்தர் கிருஷ்ண தரிசனம் பெற்றது நிஜமே என்ற தகவலை நிருபர் மூலம் உறுதி செய்துகொண்டார். அதன்பின் அரவிந்தரைப் புகழ்ந்து பத்திரிகைகளில் எழுதலானார். 

  சிறிதுகாலத்தில் கொல்கத்தாவிலிருந்து சந்திரநாகூர் சென்றார் அரவிந்தர். தம்மை ஆங்கிலேய அரசு மறுபடி சிறைப்பிடிக்கலாம் என்ற தகவலை சகோதரி நிவேதிதை மூலம் அறிந்தார். 

  எனவே, பிரஞ்ச் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த புதுச்சேரிக்கு வந்துசேர்ந்தார்.

  புதுச்சேரிக்கு வந்த ஸ்ரீஅரவிந்தரை வரவேற்றவர் அவர்மேல் மிகுந்த மரியாதை கொண்டிருந்த பாரதிதான். புதுச்சேரியில் அரவிந்தர் தங்குவதற்கு வீடுபார்த்துக் கொடுத்தவரும் பாரதியே. 

  தவத்தால் தெய்வநிலைக்கு உயர்ந்தவரும் இன்று தம் அடியவர்களால் வீடுபேறு தரும் ஆற்றல் வாய்ந்தவராகப் போற்றப் படுபவருமான ஸ்ரீஅரவிந்தருக்கு தங்குவதற்கு வீடுபார்த்துக் கொடுத்த பெருமை பாரதியுடையது. 

 அரவிந்தரும் பாரதியும் வ.வே.சு. ஐயரும் அமுதன் என்ற அடியவரும் இணைந்து ஆன்மிக சாதனைகளைப் பழகினார்கள். நாள்தோறும் மாலை வேளைகளில் அரவிந்தரைச் சந்தித்துப் பல்வேறு செய்திகளைப் பற்றிப் பேசி மகிழும் வழக்கத்தை பாரதி கொண்டிருந்தார். 

  பாரதியின் சமகாலத்தில் வாழ்ந்தவரும் பாரதி அன்பருமான அமுதன் `அரவிந்தர் பாரதி` சந்திப்பைப் பற்றிப் பின்வருமாறு எழுதுகிறார்:

  `பாரதி முதலானோர் ஸ்ரீஅரவிந்தரைச் சந்தித்துவிட்டு இரவு எட்டரை ஒன்பது மணிக்கு வீடு திரும்பும்போது ஏதோ திவ்ய சம்பத்தின் ஓர் அம்சத்தை அவரவர் தகுதிக்கு ஏற்றவாறு தத்தம் உள்ளத்தில் கனிவோடு ஏந்திச் சென்றதாகக் கேட்டிருக்கிறேன். 

  இவர்கள் கண்ணுக்கு மறுநாள் காலையில் தங்கள் மாறுதல் அடைந்த உள்ளும் புறமும் போன்றே வெளியுலகும் மாறுதலடைந்து காணப்படுமாம்!`

 அரவிந்தரைப் போலவே பாரதிக்கும் ஆன்மிகச் சீடர்கள் இருந்தார்கள். பாரதி குண்டலினி யோகத்தில் தேர்ச்சி பெற்றிருந்தார். 

  அந்த யோகம் குறித்துச் சில ஆன்மிக அன்பர்கள் பாரதியிடம் சந்தேகம் கேட்டுத் தெளிவுபெற இரவு நேரங்களில் வந்ததுண்டு. 

  அரவிந்தர் பாரதி இருவருமே ஆன்மிகம் இலக்கியம் இரண்டிலும் நாட்டம் கொண்டிருந்தார்கள். அரவிந்தர் ஆங்கில இலக்கியவாதியாகவும் பாரதி தமிழ் இலக்கியவாதியாகவும் விளங்கினார்கள். 

 அரவிந்தரைப் பெரிதும் ஆன்மிகவாதியாக மட்டுமே பலரும் அறிந்துள்ளார்கள். பாரதியைப் பெரிதும் இலக்கியவாதியாக மட்டுமே பலரும் நினைக்கிறார்கள். 

  ஆனால் ஸ்ரீஅரவிந்தருக்கு இணையான ஆன்மிகவாதி மகாகவி பாரதி என்பதை பாரதியின் வாழ்க்கை நிகழ்வுகளும் அவரது கவிதைகளும் நமக்கு உணர்த்துகின்றன. 

 பாரதியின் ஆன்மிகக் கோட்பாடு மத நல்லிணக்கத்தோடு கூடியது. `ஆத்திசூடி இளம்பிறை அணிந்து` என்ற பாடலில், 

`மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன் 
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர் 
உருவத்தாலே உணர்ந்துணராது 
பலவகையாகப் பரவிடு பரம்பொருள் ஒன்றே`

என அவர் தெளிவுபட அறிவிப்பதைக் காணலாம். 

 மகாகவி பாரதி, ஆழ்வார்களுக்கு இணையான, வணங்கத் தக்க ஆன்மிகவாதி என்பதை நமக்குப் புலப்படுத்திக் கொண்டிருக்கிறது, சென்னை மத்தியகைலாஸ் ஆலயத்தில் ஆராதிக்கப்படும் அவரது சிலை. 

  மகாகவி பாரதி ஆன்மிகவாதியே ஆயினும் பழையது என்ற ஒரே காரணத்திற்காக எதையும் போற்றாமல், ஒவ்வொன்றிலும் தம் ஞான ஒளியைப் பாய்ச்சி எதுசரி எது தவறு என்பதைக் கண்டுணர்ந்து எழுதினார்.

 அதனால்தான் அவர் கடைப்பிடித்த ஆன்மிக நெறி இன்றளவும் போற்றத் தக்கதாகவும் ஏற்கத் தக்கதாகவும் இருக்கிறது. 

நன்றி:
திருப்பூர் கிருஷ்ணன் 
& மாலைமலர்
.....................................

கருத்துகள் இல்லை: