19 பிப்., 2023

நூல் நயம்

வெற்றிக்கு சில புத்தகங்கள் " .
என் சொக்கன் .கிழக்கு பதிப்பகம் 
மொத்த பக்கங்கள் 304 .முதல் பதிப்பு 2019 விலை ரூபாய் 325.

மொத்தம் நான்கு பாகங்களில் இந்தப் புத்தகம் எழுதப் பட்டிருக்கிறது .இது முதல் பாகம்.

     ஒரு புத்தகத்தால் என்ன செய்துவிட முடியும் என்பதற்கான எளிமையான அதேசமயம் உறுதியான பதில் ஒரு புத்தகத்தால் செய்ய முடியாதது எதுவும் இல்லை என்பது தான் .
         கல்வி வேலை காதல் குடும்பம் தொழில் என்று வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் முன்னேறிச் செல்வதற்கு புத்தகங்களை விட அணுக்கமான துணை கிடைப்பது அரிது .

      ஆனால் இருக்கும் வேலைகளுக்கு மத்தியிலும் நமக்கான புத்தகங்களை எப்படி தெரிவு செய்வது  ?எப்படி தேர்ந்தெடுப்பது ?எத்தனை புத்தகங்களை வாங்கி குவிப்பது ?நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான பக்கங்களை படித்து நமக்கு தேவையான அம்சங்களை மட்டும் எப்படி அடையாளம் கண்டு பிடித்து பிரித்து எடுப்பது ?படித்ததை எல்லாம் எப்போது செயல்படுத்தி பார்த்து வெற்றியை ஈட்டுவது?

         மலைப்பூட்டும் இந்த பெரும் பணியை செய்து உதவும் ஒரு மகத்தான வழிகாட்டி தான் இந்த நூல் .
      நமது வெற்றியை உறுதி செய்ய ஒரு நூலகத்தையே சாறு பிழிந்து நமக்கு அளித்திருக்கிறார் என் சொக்கன் அவர்கள் .

      பாதுகாக்க பரிசளிக்க இதைவிட சிறந்த நூல் தொகுப்பு சமீபத்தில் வெளிவந்த இல்லை என்பதை மறுப்பதற்கில்லை.

      சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் செழுமையாக உதவும் ஒரு அற்புதமான கையடக்க நூலாகும் இது.

#####

ஆசிரியர் குறிப்பு:
நா. சொக்கன் என்கிற நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் “என். சொக்கன்” என்று அறியப்படும் தமிழக எழுத்தாளர். சேலம், ஆத்தூரில் பிறந்து, வளர்ந்து, பெங்களூரில் வசிக்கும் இவர் மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். 1990 முதல் எழுதத் தொடங்கிய இவர் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் எழுதுகிறார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் சில புதினங்களும் எழுதியுள்ளார். வாழ்க்கை வரலாறுகள், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பல நூல்களும் பல்வேறு பத்திரிகைகளில் தொடர்கள், கட்டுரைகளும் எழுதிவருகிறார், சிறுவர்களுக்கும் அதிகம் எழுதிவருகிறார், இவரது நூல்கள் சில ஒலிப்புத்தகமாகவும், ஆங்கிலம், இந்தி, மலையாளம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, சீன மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியாகியுள்ளன.

#####
      இனி இந்தப் புத்தகம் குறித்து பார்ப்போம்:

        இந்த புத்தகத்தில் உலகளாவிய 65 புத்தகங்கள் குறித்து படிக்கப்பட்டு கருத்து செரிவுகள் சுருக்கமாக அளிக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளது .
       ஒரு நாளில் ஒரு புத்தகம் படிப்பதே குதிரைக்கொம்பாக இருக்கிறது .இமாலய சாதனை என்று கூட சொல்லிவிடலாம் .காரணம் அவ்வளவு தூரம் நம்மை டிஜிட்டல் உலகம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது .
         ஆனால் ஒரே ஒரு நாளில் உலகு எல்லாம் போற்றப்பட்ட படிக்கப்பட்ட தலைசிறந்த 65 புத்தகங்களை இந்த ஒரு புத்தகத்தின் வாயிலாக படித்து விட்டேன் என்பதை எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

உதாரணத்திற்கு சில புத்தகங்களை பார்ப்போம்.

1) The Houdini Solutions by Ernie Schenck.
*கட்டுகளுக்கு உள்ளே:*

        ஹவுடினி தீர்வு என்று வர்ணிக்கப்படும் இந்த செயல்முறை மிக சுலபமானது ;நேரடியானது .

       கட்டுகளுக்குள் சிக்கியிருக்கும் போது அந்தப் பிரச்சனையை நினைத்து சக்தியை வீணாக்காதீர்கள் .அதற்கான தீர்வை மட்டும் தீவிரமாக யோசியுங்கள் .யோசியுங்கள் போதும் என்கிறார்.

2) Family Wisdom by Robin Sharma.
*குடும்ப சூத்திரங்கள்.*

         ஒருவர் வாழ்க்கையில் வெற்றி அடைந்து விட்டார் என்றால் என்ன அர்த்தம் .
       நல்ல வேலை கை நிறைய சம்பளம் வங்கியில் கணிசமான அளவு சேமிப்பு சமூகத்தில் நல்ல மரியாதையை குடும்பம் குழந்தைகள் வீடு கார் இன்னபிற வசதிகள் நம்மில் பெரும்பாலோரின் வாழ்க்கை இலட்சியம் இவ்வளவு தான் .
       ஆனால் உண்மையான வெற்றி என்பது இதுதானா ? இல்லை என்கிறார் ஆசிரியர்.

         ஆசிரியர் ராபின் ஷர்மா முன்வைக்கும் அந்த ஐந்து குடும்ப சூத்திரங்கள் என்னவென்றால், 
1) வீட்டில் ஒவ்வொருவரும் தலைவர்தான் 
.2)நல்ல உறவுகள் நம்பிக்கையிலிருந்து பிறக்கின்றன.
 3)தோசை சாப்பிடுங்கள் ஓட்டைகளை எண்ணாதீர்கள்.
 4)குடும்பத்தில் நீங்களும் ஒரு முக்கியமான அங்கம் ஆகவே உங்களை கவனித்துக் கொள்ளுங்கள் மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
 5)நமக்குப் பிறகும் இந்த உலகிற்கு ஏதேனும் விட்டுச் செல்லுங்கள் என்கிற சூத்திரங்களை வகுத்துக் கொடுத்த ஆசிரியர்.

3) what got you here ,won't get you there.
By  Marshall Goldsmith.

*இன்னா இருபது.*

       நமது தொடர்ச்சியான முன்னேற்றத்தை தடுக்க கூடிய 20 கெட்ட பழக்கங்களை பட்டியலிட்டு விட்டு அவைகளைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளை வழிமுறைகளையும் விரிவாகப் பேசும் இந்தப் புத்தகம் ,அருமையாக இருக்கிறது.
            நாம் செய்யத் தவறுகின்ற அல்லது செய்கின்ற தவறுகளை அருமையாக சுட்டிக்காட்டி அதை களைந்து விட்டால் நமது வாழ்க்கை எங்கோ உயரத்தில் பறக்கும் என்பதை ஆசிரியர் 20 கட்டளைகள் வாயிலாக தெரிவிக்கிறார்.

4) monkey business by William oncken.
Jacob publishing House.
*முதுகில் சில குரங்குகள்.*

         நமது முன்னேற்றத்திற்கு சில தடைகள் தானாகவே வந்து அமைந்துவிடுகின்றன. மற்றவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் நாமே நம் தலையில் ஏற்றுக்கொள்கிறோம்.
       இவ்வாறு மற்றவர்கள் வேலைகளைக்கூட நாமே சுமக்க பழகிக் கொண்டால் அது நாளுக்கு நாள் ஒவ்வொரு குரங்காக நமது முதுகில் சுரண்டிக் கொண்டே இருக்கும் என்பதை ஆசிரியர் உதாரணங்களோடு விளக்குகிறார்.
         
அருமையான புத்தகம் இது.

5) the leader with seven faces .by Leonardo

*ஏழு முகம்:*

           ராவணனுக்கு ஏழு  ,முகம் முருகனுக்கு ஆறுமுகம் பிரமனுக்கு மூன்று முகம் என்று கேள்விப்பட்டிருக்கிறோம் .அது என்ன ஏழு முகம்.?
   .நான் தலைவர்களாக வரவேண்டும் என்றால் மற்றவர்கள் நம்மிடம் பார்க்கிற அந்த ஏழு முகங்களைப் பற்றி தெளிவாக தெரிந்து கொள்வது அவசியம்.
அ. நீங்கள் என்ன பேசுகிறீர்கள் .
ஆ.நீங்கள் எங்களை எங்கே அழைத்துச் செல்கிறீர்கள். 
இ. நீங்கள் எதை உருவாக்குகிறீர்கள் ஈ.நீங்கள் எதன் மீது அக்கறை காட்டுகிறீர்கள் 
உ.நீங்கள் எப்படி பணிபுரிகிறார்கள் ஊ .நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் ஒ.நீங்கள் என்ன செய்கிறீர்கள்.

        இந்த ஏழு முகங்களில் அடிப்படையிலான கேள்விகளை நம்மை நாமே திரும்பத் திரும்பக் கேட்டுக் கொள்ள வேண்டும் .அவற்றுக்கு நேர்மையான பதில் பெறவேண்டும். தேவையான மாற்றங்களை செய்து தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் இந்த புத்தகத்தின் அடிப்படை கருத்து.

     பாதுகாக்க பரிசளிக்க இதைவிட சிறந்த நூல் தொகுப்பு சமீபத்தில் வெளிவந்த தில்லை.

      இதுபோல் இன்னும் மூன்று தொகுப்புகள் இருக்கின்றன .அவை குறித்து பின்னர் பார்ப்போம்.

நன்றி :
திரு கருணா மூர்த்தி 
மற்றும் 
முகநூல்

கருத்துகள் இல்லை: