17 பிப்., 2023

நூல் நயம்

இந்தி- ஒரு வரலாற்றுச் சுருக்கம்- கார்த்திக் புகழேந்தி


“இந்திய மொழிகள் 1625 என்றும் அவற்றுள் பல அழிந்துவிட்டன எனவும் மேலும் பல அழிவில் உள்ளன என்றும் சொல்கிறார்கள். இந்திய அரசின் அட்டவணை மொழிகள் 24 எனவும் அறிகிறோம்.

எடுத்துக்காட்டுக்கு, ஜார்க்கண்ட் மாநிலத்தின் சனத்தொகை, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 3.30 கோடி என்றும் எழுத, வாசிக்கத் தெரிந்தவர்கள் 67.6 % சதமானம் என்றும் தகவல்கள் உள. அங்கு இன்றும் பேசப்பட்டுக்கொண்டிருக்கிற மொழிகள் பதினைந்து. ஆனால், இன்று ஜார்க்கண்ட் மாநிலத்தின் அலுவல் மொழியும் ஆட்சி மொழியும் இந்தி. எதிர்காலத்தில், அங்கு இன்று பேசப்படுகின்ற 15 மொழிகளின் நிலையென்ன, கதி என்ன? வரலாற்றினுள் கரைத்து எள்ளும் தண்ணீரும் இறைத்துவிடலாமா?

இந்தி எனும் மொழியின் தொன்மை 400 ஆண்டுகளே! இன்றைய இந்தியாவின் அலுவல் மொழிகள் ஆங்கிலமும் இந்தியும். இந்தி அலுவல் மொழிதானே அன்று ஆட்சி மொழி இல்லை.

தம்பி கார்த்திக் புகழேந்தி எழுதிய கட்டுரை நூல்களையும் சிறுகதைத் தொகுப்புகளையும் நான் வாசித்திருக்கிறேன். நான் மதிக்கும் இளம் படைப்பாளிகளில் ஒருவர் அவர். சில மாதங்கள் முன்பு வாசிக்க நேர்ந்த அவரின் குறு ஆய்வு நூல் ‘இந்தி- ஒரு வரலாற்றுச் சுருக்கம்’. விரிவானதோர் ஆய்வு நூல் எழுதப்படுவதற்கான நாற்றங்கால் இச்சிறுநூல் என உறுதியாகச் சொல்வேன். ஆனால், விரிவான அந்த ஆய்வு நூலை விருதுகளுக்காக அலையும் ஆய்வறிஞர் கூட்டம் சாராத ஒருவர் ஆழங்கால் பட்டுச் செய்ய முனைய வேண்டும்.

காய்தலும் உவத்தலும் இன்றி, அந்தரத்தில் நின்று, அரசியல் சாய்வின்றி, நேர்மையாக எழுதப்பெற்ற நூல் இது என்பது கார்த்திக் புகழேந்தி தரும் தரவுகளில் இருந்து பெறப்படும் உண்மை. அந்த உண்மை வாசிக்கும் எவருக்கும் சில அக எழுச்சிகளை உறுதியாகத் தரும்.”

-நாஞ்சில் நாடன்
04-01-2023

நன்றி :
திரு நாஞ்சில் நாடன்

கருத்துகள் இல்லை: