5 மே, 2023

நூல் நயம்

"கொள்ளைக்காரர்கள் ".
பொன்னீலன் .நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் .முதல் பதிப்பு 1979 விலை ரூபாய் 45. மொத்த பக்கங்கள் 184.

     இது ஒரு சமூக நாவல் ..
சமூகத்தின் அவலங்களை படம் பிடித்து அப்பட்டமாக காட்டக்கூடிய நாவல்.

         70களில் அரிசி பஞ்சம் தலைவிரித்து ஆடியது .வாலாஜா முதல் ஜோலார்பேட்டை வரையிலுள்ள ரயில்வே ஸ்டேஷன் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் நிறைய பேர் கே ஜி எஃப் நகரத்திலும் பெங்களூரிலும் பணியாற்றிக் கொண்டிருந்த வறுமை கோட்டிற்கு கீழ்ப்பட்ட அல்லது அடித்தட்டு மக்கள் அவர்கள் வாரந்தோறும் அல்லது விடுமுறை தினங்களிலோ அல்லது மாத ஒரு முறையோ இங்கிருந்து அங்கு பணியிடங்களுக்கு செல்லும் பொழுது அரிசி கொண்டு செல்வார்கள் .
       ரயில்வே துறை போலீசார் கண்களுக்கு தெரியாமல் இருப்பதற்காக சிறு சிறு குப்பல்களாக சிறு சிறு மூட்டைகளாக கட்டி உட்காரும் இடத்திற்கு கீழே வைத்துவிட்டு தனது சேலைகளாலோ அல்லது வேட்டி விரிப்புகளாலோ மறைத்து கொண்டிருப்பார்கள் .அப்படியும் கண்டுபிடித்து அவர்களை கீழே இறக்கி விடுவார்கள் அல்லது அரிசியை கைப்பற்றி விடுவார்கள் அல்லது அரிசியை கைப்பற்றி கீழே கொட்டி விடுவார்கள் இதை நான் பலமுறை கண்கூடாகவே கண்டிருக்கிறேன்.

        அல்லல்  பட்ட மக்கள்  அல்லல்பட்டு கொண்டே இருக்க வேண்டுமோ.
           இதையே ஒரு லாரி மூலமாக கடத்தப்படும் பொழுது எல்லோரும் சல்யூட் செய்து பெற வேண்டியதைப் பெற்றுக் கொண்டு வழி அனுப்பி வைப்பார்கள் .
         அந்த மொத்த அரிசியும் ஒட்டுமொத்தமாக மாநிலம் விட்டு மாநிலம் சென்று விடும் .
         கிராமம் விட்டு கிராமம் செல்லக்கூட எடுத்துச் செல்ல வக்கில்லாத உரிமை இல்லாத சட்டம் தடுக்கின்ற ஏழைகள் படுகின்ற அவஸ்தை கண்ணில் நீரை வரவழைத்து விடும் .
       அந்த துயர சம்பவத்தை தான் ஆசிரியர் பொன்னீலன் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த உண்மையான சம்பவத்தை நாவலாக புனைந்திருக்கிறார்.

             1973 இல் குமரி மாவட்டத்திலும் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும்-ஏன், இந்தியாவின் பெரும்பான்மைப் பகுதிகளிலும்கூட உணவுப் பொருட்களுக்காகப் பெரும் போராட்டங்கள் நடந்தன. அவற்றில் அரசியல் கட்சிகள் நடத்தியவையும் உண்டு. கட்சி சார்பற்ற ஏழை ஜனங்கள் பொறுமையிழந்து தங்களுக்குத் தெரிந்த முறையில் நடத்தியவையும் உண்டு. இப்புனிதப் போராட்டங்களில் ஈடுபட்டுக் கொடிய இன்னல்களுக்குள்ளான உழைக்கும் மக்களின் தியாகத்தை
சித்தரிக்கும் வண்ணமாக இந்த நாவல் படைக்கப்பட்டு இருக்கிறது ஆசிரியர் பொன்னிலன் அவர்களால்.

*****
நூலாசிரியரைப் பற்றி

      முற்போக்கு இலக்கிய முகாமைச் சேர்ந்த படைப்பாளிகளில் குறிப்பிடத் தகுந்தவர்.

இவர் படைத்த 'கரிசல்' 'ஜீவா என்றொரு மானுடன்' ஆகியவை தமிழக அரசின் பரிசினைப் பெற்றுள்ளன.
            'மார்க்ஸீய அழகியல்' என்ற மொழிபெயர்ப்பு நூலிற்காகத் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் இவருக்குப் பரிசளித்துள்ளது. இவரின் படைப்புகள் சில முதுநிலைப் பட்டப்படிப்பிற்குப் பாடநூல்களாக உள்ளன.

       ஏழு நாவல்கள், பன்னிரண்டு கட்டுரை நூல்கள், ஒரு கவிதைத் தொகுதி, மூன்று மொழிபெயர்ப்புகள், ஒரு பயணநூல். இரண்டு வாழ்க்கை வரலாறுகள் இவரது பிற படைப்புகள்.
        ‘புதிய தரிசனம்'என்ற நூலுக்குச் சாகித்ய அகடமி விருது கிடைத்தது.

****

          இந்த நாவல் குறித்து சுருக்கமாக பார்ப்போம்:
          மக்கள் தேவைக்குப் பற்றாக் குறைவான நெல் விளைச்சலே காணும் மேற்குக் கன்னியாகுமரி மாவட்டத்தின் மக்களைப் பற்றிய கதை இது.

         அங்குள்ள ஏழை மக்கள் அரிசியைப் பொன்போலப் போற்றிப் பயன்படுத்துவார்கள். கொஞ்சம் அரிசியைப் போட்டுக் கஞ்சி காய்ச்சி அதைக் கிழங்கோடு சேர்த்துச் சாப்பிடுவார்கள். விழா நாட்களில் மூன்று வேளையும் அரிசிச் சோறு பொங்கி மனநிறைவோடு உண்பார்கள் .

          தட்டுப்பாடு ஏற்படும் மாதங்களில் தஞ்சை, நெல்லை மாவட்டங்களில் விளையும் அரிசியை வியாபாரிகள் கொண்டு வந்து மேற்குக் கன்னியாகுமரியிலும் கேரளத்திலும் குவிப்பார்கள். லைசென்ஸ் வாங்கித்தான் அரிசி கொண்டு வர வேண்டும் என்ற கட்டுப்பாடு வந்த பின்னரும் வியாபாரிகள் லஞ்சம் கொடுத்து அரிசியைக் கடத்திச் சென்று கேரளத்திலும் மேற்குக் கன்னியாகுமரி மாவட்டத்திலும் விற்றுக் கொள்ளையடிப்பது வழக்கம்.

             கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லைக்கப்பால் 20 மைல் தூரத்திலுள்ள வள்ளியூரிலும், 10 மைல் தூரத்திலுள்ள பணக்குடியிலும் லிட்டர் இரண்டு ரூபாய்க்கு அரிசி விற்கும் பொழுது குமரி மாவட்டத்தில் ஏழு ரூபாய்க்கும் எட்டு ரூபாய்க்கும் அரிசி விற்கும்.

           அரிசியை லாரி லாரியாக செக்போஸ்டுகளைத் தாண்டிக் கொண்டு போகப் சட்ட விரோதமான வழிகளைக் கடத்தல்காரர்கள் கையாளுவார்கள். பெண்களோ, தமது குடும்பத்தின்
தேவைக்காக ஐந்து லிட்டர், பத்து லிட்டர் அரிசியை செக்போஸ்டு வழியாக இல்லாமல் ரப்பர் தோட்டங்களின் ஒற்றையடிப் பாதை வழியாகக் கடத்துவார்கள்.

          லாரி லாரியாக செக்போஸ்டு வழியே, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துக் கடத்திச் செல்லுவது எளிது. அவ்வாறு போகிற அரிசியை அதிகாரிகளோ, போலீஸ்காரர்களோ தடுக்கமாட்டார்கள். லாபக் கொள்ளை தடையின்றி நடைபெறும். 

         வர்த்தகத்தில் சுதந்திரம் என்ற கோஷம், செக்போஸ்டுகள் வேண்டாம் என்ற கோஷம், கடத்தல்காரர்களின் தடையற்ற கொள்ளைக்குகந்த கோஷம் கடத்தல் கொள்ளையில் சின்னஞ்சிறு தடைகளைக் கூட அகற்றுவதற்கு முயற்சி நடந்தது. ஆனால் இது கொள்ளையென்று மக்கள் உணரத் தலைப்பட்டனர்.

      ஏழை எளிய மக்கள் தங்கள் கஞ்சிக்கும் ஒரு நாள் விழாச் சோற்றுக்கும் அரிசி வாங்குவதற்காகப் பத்துப் பன்னிரண்டு மைல்கள் நடந்து வந்து அரிசியை விலைக்கு வாங்கி, செக்போஸ்டு இல்லாத சுற்றுப்பாதையில் கல்லும் முள்ளும் காலைக் கிழிக்கக் கொண்டு செல்லப் படாதபாடுபடுகிறார்கள்.

         லாரி லாரியாகப் போகும் அரிசியைப் பிடிக்காத அதிகாரிகள். ஜீப்பில் வந்து இந்த ஏழை எளிய மக்கள் பைகளில் கொண்டு போகும் அரிசியைப் பிடுங்கித் தங்கள் வீடுகளுக்குக் கொண்டு போய் விடுகிறார்கள்.

          உழைத்த, காசு கொடுத்து வாங்கிய அரிசிப் பையை இழப்பது, உடலுறுப்பு ஒன்றை இழப்பது போன்ற வருத்தம் தருவது, அவர்கள் அழுவார்கள். கதறுவார்கள், போலீஸ்காரர்களையும் அதிகாரிகளையும் சபிப்பார்கள்.
             ஆனால் இதற்கெல்லாம் காரணமான தங்கள் எதிரிகள் யாரென்று அவர்களுக்குத் தெரியாது.

          தோட்டத் தொழிலாளர்கள்
இந்நிகழ்ச்சிகளுக்குக் காரணமானவர்கள் நிலச்சுவான்தார்கள், கடத்தல் வியாபாரிகள் அவர்களுடைய லாபக் கொள்ளை வெறி, அதிகாரிகளின் லஞ்சவெறி என்பதை உணர்ந்து அவையனைத்தையும் எதிர்க்கும் உறுதி கொண்டார்கள். ஊர்வலம் வந்தார்கள், செயலில் இறங்கத் தீர்மானித்தார்கள். கடத்தல் லாரிகளைப் பிடித்துக் கடத்தல் அரிசியை, மக்களுக்குப் பிரித்துக் கொடுக்கத் தீர்மானித்தார்கள்.

          உணர்வும், வீரமும் கொண்ட தொழிலாளரது நடைமுறைச் செயலால் கடத்தல் லாரிகள் நிறுத்தப்பட்டு அதில் அடுக்கியிருந்த அரிசி மூட்டைகள் கைப்பற்றப்பட்டு, தொழிலாளருக்கும் ஏழை எளிய மக்களுக்கும் வினியோகிக்கப்பட்டன.

போலீஸ் வந்தது.

        சட்டம், உண்பதற்காக அரிசி கோரிப்
போராடிய தொழிலாளிகளையும், மாதர் குலத்தையும், கொள்ளைக்காரர்களாக்கி
வீரதீரத்தோடு, தடியாலடித்து விரட்டியது.

          கதையின் நிகழ்ச்சிகளும், போராட்டப் போக்கும் அரசியல் பின்னலும் இவைதாம். இந்த யதார்த்தம், மேற்குக் கன்னியாகுமரி மாவட்டத்து ஏழை எளிய மக்கள் தாய்மார்களுக்குத் தெரியும். 

           மக்கள் உண்மையைப் புரிந்து கொள்ளத் தாமதமாகிறது. வறுமையும், துன்பங்களும், அவர்களைச் சட்டத்தைப் புறக்கணித்து அரிசி தேடத் தூண்டுகின்றன. கடத்தல் சட்ட விரோதமானது என்று தெரிந்தும் அவர்களின் உலக விருப்பு ஆசை, அவர்களை 20 மைல்கள் நடந்து 10 லிட்டர் அரிசி வாங்கிவரத் தூண்டுகிறது.

           இதிலிருந்துதான் கதை தொடங்குகிறது.

நன்றி :

கருத்துகள் இல்லை: