23 ஜூன், 2023

நூல் நயம்

அணிந்துரை:
 *நல்லன எல்லாம் தரும்: சுதா சேஷய்யன்*
....................................
*ஆன்மிக அன்பர்கள் தவறவிடக் கூடாத நூல்*
*திருப்பூர் கிருஷ்ணன்*
....................................
  *முத்து முத்தான முப்பத்தைந்து ஆன்மிகக் கட்டுரைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ளது டாக்டர் சுதா சேஷய்யன் எழுதிய `நல்லன எல்லாம் தரும்` என்ற இந்நூல். 

  படிப்பவர்களுக்கு நல்லன எல்லாம் தரும் சிந்தனைகள் இந்நூலெங்கும் காணப்படுகின்றன. 

 தமிழ், சம்ஸ்க்ருதம் உள்ளிட்ட பல மொழிகளின் இலக்கியப் பெருங்கடல்களில் ஒளிவீசும் சிற்சில வரிகளை எடுத்துக்கொண்டு அவற்றிக்கேற்ற பொருத்தமான விளக்கங்களை இணைத்துக் கட்டுரைகளாக்கி வாசிப்பவர் மனத்தில் உயர்ந்த சிந்தனைகளை விதைக்கிறார் நூலாசிரியர். 

  புகழ்பெற்ற பேச்சாளர் எழுதியுள்ள நூல் இது. 

  `ஒரு பேச்சாளர் எழுத்தாளராகும்போது அந்த எழுத்தில் ஒரு கவர்ச்சி இருக்குமென்றும் ஓர் எழுத்தாளர் பேச்சாளராகும்போது அந்தப் பேச்சில் ஒரு கட்டுக்கோப்பு இருக்குமென்றும்` பிரபல சொற்பொழிவாளர் சத்தியசீலன் குறிப்பிடுவதுண்டு. 

  கீழே வைக்காமல் தொடர்ந்து படிக்கச் செய்யும் கவர்ச்சியும், ஒவ்வொரு கட்டுரையிலும் காணப்படும் கச்சிதமான கட்டுக்கோப்பும் இந்நூலைப் பொறுத்தவரை சத்தியசீலன் கூற்றை மெய்யாக்குகின்றன. 

  கட்டுரைகள் பட்டுக் கத்திரித்தாற்போல் பளிச்சென முடியும் வடிவ நேர்த்தியால் சிறுகதைகளைப் படித்ததுபோன்ற நிறைவைத் தோற்றுவிக்கின்றன.

  பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் ஒருசேர இரு துறைகளில் வல்லமை படைத்தவராகத் திகழ்கிறார் நூலாசிரியர் என்பதை நாம் உணர முடிகிறது. 

  எழுத்துத் துறையிலும் பேச்சுத் துறையிலும் ஒருசேர ஆற்றலை வெளிப்படுத்தியவர்கள் கண்ணதாசன், ஜெயகாந்தன், தீபம் நா. பார்த்தசாரதி, சோ போன்ற வெகுசிலரே. அந்த வெகுசிலர்ப் பட்டியலில் சுதாசேஷய்யனும் இணைகிறார். 

   இந்நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் அதனதன் அளவில் முழுமை பெற்று நிறைவடைந்து விடுவதால், உள்ளடக்கப் பகுதியைப் பார்த்து நேரம் கிடைக்கும்போதெல்லாம் விரும்பிய தலைப்பில் உள்ள கட்டுரைகளைத் திரும்பத் திரும்பப் படித்து மகிழலாம். 

  முழுநூலையும் படித்தால்தான் பயன் கிட்டும் என்பதில்லை. பகுதி பகுதியாகப் படித்தே பயனடையலாம். 

 இன்று தமிழகத்தில் சம்ஸ்க்ருத வெறுப்பு வேண்டுமென்றே பரப்பப் படுகிறது. 

  ஓர் உயர்ந்த மொழியின் இலக்கிய அனுபவத்தைத் தமிழர்கள் அடைவதற்குத் தடையாக நிற்கும் இத்தகைய மன உணர்வை நாம் கைவிடுதல் அவசியம். 

   தனித்தமிழ் அன்பரான மறைமலை அடிகள் காளிதாசனின் சம்ஸ்க்ருத சாகுந்தலத்தை மொழியாக்கம் செய்து அதன்மூலம் தமிழை வளப்படுத்தினார் என்ற உண்மையை உணர்ந்தால் சம்ஸ்க்ருத வெறுப்பில் அர்த்தமில்லை என்பதைப் புரிந்துகொள்வோம். 

  பழந்தமிழ்ப் பண்டிதர்கள் எல்லாம் சம்ஸ்க்ருதத்திலும் பாண்டித்தியம் பெற்றிருந்தார்கள். 

  மகாகவி பாரதியார் சம்ஸ்க்ருதத்தில் புலமை பெற்றிருந்தார். ஸ்ரீஅரவிந்தரிடம் ரிக்வேதம் பயின்றார். (இந்நூலிலும் `வெளிச்சம் தரும் கல்வி` என்ற கட்டுரை, ரிக்வேத சுலோகம் ஒன்றின் விளக்கமாக எழுதப்பட்டுள்ளது.) 

 `யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்` என்றும் பாடினார் பாரதியார். 

  அண்மைக் காலத்தில் சுவாமிநாத ஆத்ரேயன், ஸ்ரீராம தேசிகன் போன்ற பெருமக்கள் தமிழ், சம்ஸ்க்ருதம் இரண்டிலும் பெரும்புலமை பெற்றிருந்தார்கள். 

  தாய்மொழிமேல் பற்று வைத்திருப்பதற்குப் பிறமொழியை வெறுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

  இந்நூலில் சம்ஸ்க்ருதக் கவிதைகளின் நயங்கள் பல மிக அழகாக ஆங்காங்கே எடுத்துச் சொல்லப்பட்டுள்ளன. `கடலுக்கோர் கப்பல், நற்செயலே நல்லிறைவன், அற்புதங்கள் ஆறு` போன்ற கட்டுரைகள் அப்படிப் பட்டவை. 

  `ம்ருகம் என்பது அனைத்து விலங்குகளைக் குறித்தாலும் சிறப்பாக மானைக் குறிப்பதாகும்` என்பதுபோன்ற வரிகள் நம் புருவத்தை உயர்த்தச் செய்கின்றன. ம்ருகநயனி என்பதை மான் விழியாள் என்றுதானே மொழியாக்கம் செய்ய வேண்டும் என நம் மனம் தொடர் சிந்தனைகளில் ஆழ்கிறது. 

  `நற்செயலே நல்லிறைவன்` கட்டுரையில் `கடவுளைக் காட்டிலும் விதி பெரியது, ஆனால் வினைப் பயன்களையே விதி தருகிறது` என்ற கருத்து பர்த்ருஹரி நீதி சதக சுலோகத்தின் மூலம் விளக்கப்பட்டுள்ளது. 

  ஆதிசங்கரரின் சிவானந்தலகரி, செளந்தர்ய லகரி, பஜகோவிந்தம், காளிதாசரின் ரகுவம்சம், சதாசிவப் பிரம்மேந்திரரின் சம்ஸ்க்ருதக் கீர்த்தனை, ஸ்வேதாஸ்வதர உபநிஷதம், முண்டகோபநிஷதம், மகாபாரதம், அஷ்டாவக்கிர கீதை எனப் பல சம்ஸ்க்ருத நூல்களிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் வரிகள் நூலாசிரியரின் சம்ஸ்க்ருதப் புலமையைப் புலப்படுத்துகின்றன. 

  தெலுங்குக் கவிதையின் ஆன்மிக நயங்களும் இந்நூலில் உண்டு. `ஆசை அடங்கினால் ஆனந்தம்` என்ற கட்டுரை வேமனா என்ற தெலுங்கு ஞானியின் பாடல் கருத்தை நயம்பட விளக்குகிறது.

  `கடவுள் கூப்பிடு தூரத்தில்` என்ற கட்டுரையும் வேமன வரிகளின் நயத்தைப் பேசுவதுதான். 

   சர்வக்ஞருடைய கன்னடப் பாடல் நம் சிந்தையை அள்ளுகிறது. பெங்களூருவில் திருவள்ளுவருக்குச் சிலை வைத்தபோது, சென்னையில் சர்வக்ஞருக்குச் சிலைவைத்து நாம் மரியாதை செய்த நிகழ்வும் நினைவில் எழுகிறது. 

  மலையாள எழுத்தச்சனின் மகாபாரத மேற்கோளும் இந்நூலில் உண்டு. 

 *நூலாசிரியர் நமது தமிழின் அனைத்து பக்தி இலக்கியத்தையும் அவர் வீட்டு மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக் கரைத்துக் குடித்திருக்கிறார் என்றே தோன்றுகிறது! 

  தமிழின் பக்தி இலக்கியத்தில் அவருக்குள்ள பரந்துபட்ட அறிவு மலைக்க வைக்கிறது. 

  சேக்கிழாரின் பெரிய புராணம், நம்மாழ்வாரின் திருவாய்மொழி, தாயுமானவரின் பராபரக் கண்ணி, வள்ளலார் பாடல்கள் எனப் பல நூல்களிலிருந்து மணிமணியான பாடல்கள் மேற்கோள்களாக இடம்பெற்று அவற்றின் விளக்கம் சுவாரஸ்யமாகத் தரப்பட்டுள்ளது.                  

 *கடவுளின் வசிப்பிடம் என்ற கட்டுரை மிகச் சிறப்பான ஒரு படைப்பு. 

`படமாடக் கோயில் பரமற்கு ஒன்றீயில் 
நடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா
நடமாடக் கோயில் நம்பர்க்கொன் றீயில் 
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே!`

 என்ற திருமூலர் திருமந்திரத்தின் விளக்கம் ஓர் அழகிய சிறுகதையாய் மலர்ந்துள்ளது. 

  கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலாக வளரும் கதை கடினமான திருமந்திரப் பாடலையும் அதன் மிக முக்கியமான கருத்தையும் எளிமையாக அனைவர்க்கும் உணர்த்தும் முயற்சி. 

  இதையே வாரியார் சுவாமிகள், `அஞ்சல் அலுவலகத்தில் சேர்த்த தபால் அஞ்சல் பெட்டிக்கு வராது. ஆனால் அஞ்சல் பெட்டியில் சேர்த்த தபால், அஞ்சல் பெட்டிக்கும் கிடைக்கும். பின்னர் அது அஞ்சல் அலுவலகத்திற்கும் போய்ச் சேர்ந்துவிடும்` என விளக்குவார். 

 *`புலன்களின் பொறுப்பு` என்ற கட்டுரையில் திருநாவுக்கரசரின் புகழ்பெற்ற பாடலைக் கட்டுரையாசிரியர் நோக்கும் விதம் தனி அழகு. 

  ஐம்புலன்களும் ஆனந்தமடையும் இடம் இறைவனின் திருவடி என்பதால் ஐம்புலன்களின் ஆனந்தத்தையும் இறைவனோடு இணைத்துப் பார்க்கிறார் நாவுக்கரசர் என்ற விளக்கம் மிகப் பொருத்தம். 

`மாசில் வீணையும் மாலை மதியமும் 
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் 
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே 
ஈசன் எந்தை இணையடி நீழலே!`

கட்டுரையை வாசித்துவிட்டு இந்தப் பாசுரத்தைச் சொல்லும்போது மனத்தில் புதிய வெளிச்சம் பிறக்கிறது. 

 ஆன்மிக நறுமணம் கமழக் கமழ எழுதப்பட்டுள்ள இந்தக் கட்டுரைத் தொகுப்பு, தமிழின் பக்தி இலக்கியத் துறைக்கு வளம்சேர்க்கும் புதிய நூல். ஆன்மிக அன்பர்கள் தவறவிடக் கூடாத நூல். 
..........................................
நூல்: நல்லன எல்லாம் தரும். ஆசிரியர்: டாக்டர் சுதா சேஷய்யன், வெளியீடு: வானதி பதிப்பகம், 23. தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை- 600 018. தொலைபேசி: 044- 2434 2810 & 2431 9769. மின்னஞ்சல்: vanathipathippakam@gmail.com. விலை ரூ 250. 
............................................

நன்றி :
திரு. திருப்பூர் கிருஷ்ணன் 
மற்றும் 
முகநூல் 

கருத்துகள் இல்லை: