24 நவ., 2023

நூல் நயம்

"மாலன் முத்துக்கள் பத்து ".
அம்ருதா பதிப்பகம். முதல் பதிப்பு 2011 விலை ரூபாய் 95 .மொத்த பக்கங்கள் 160 .

     இது ஒரு சிறுகதை தொகுப்பு . மாலன் எழுதிய சிறுகதைகளில் 10 முத்தான கதைகளை தொகுத்து இந்த புத்தகத்தில் வழங்கப்பட்டிருக்கிறது.
       ஒவ்வொரு எழுத்தாளர்களின் முத்தான பத்து கதைகளை தெரிவு செய்து வெளியிடும் வழக்கத்தை கொண்டிருக்கின்ற அம்ருதா பதிப்பகம். இந்த முறை மாலன் அவர்களின் கதைகளை தெரிவு செய்து வெளியிட்டு இருக்கிறது இந்த புத்தகத்தில்.

***

ஆசிரியர் குறிப்பு:
        ஆசிரியர் மாலன், இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான பாரதிய பாஷா பரிஷத் விருதை முழுமையான படைப்பாளுமைக்காகப் பெற்றவர். சிங்கப்பூர் வழங்கும் லீ காங் சியான் புலமைப் பரிசிலைப் பெற்ற முதல் இந்தியரும் ஒரே தமிழரும் இவரே. 2019ஆம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் என்று தமிழக அரசால் விருதளித்து கௌரவிக்கப்பட்டவர். கம்பன் விருது, கண்ணதாசன்விருது, மேலும் பல விருதுகளால் கௌரவிக்கப்பட்டவர்.

        படைப்பிலக்கியத்தில் முழுமை கொண்டவர் என்ற பாரதிய பாஷா பரிஷத்தின் விருது உட்பட பல விருதுகளைப் பெற்ற எழுத்தாளர், பத்திரிகையாளர் மாலன் இந்த நாவலை மொழிபெயர்த்துள்ளார்.

        எழுத்து இலக்கிய இதழ் மூலம் தமிழ்க் கவிதை உலகிற்கும், தமது கவிதைகள் மூலம் எழுத்துலகிற்கும் அறிமுகமானவர் மாலன். 

        
        காமராஜர் தலைமையின் கீழ் நால்வர் பணியாற்றினர் .இளம் தளபதிகளாக குமரி ஆனந்தன் ஆனந்தநாயகி பழ.நெடுமாறன் ஆகியோர்.காமராஜர் ஆட்சிக்கு வந்திருந்தால் அவர்கள் அரியனை ஏறி இருப்பார்கள் மந்திரிகளாக .
          அரசியலில் அவர்கள் .
இலக்கியத்தில் அது போலவே சுப்ரமணிய ராஜு, பாலகுமாரன் ,மாலன் என்று பிரகாசம். அரசியலில் அவர்களை எனக்கு பிடிக்கும், அதுபோல இலக்கியத்தில் இவர்களை எனக்கு பிடிக்கும் .இப்பொழுது இருக்கின்றவர்களில் மாலன் கவித்துவமானவர் ;
தனித்துவமானவர் எனது பார்வையில்.

****

     இந்த புத்தகத்தில் மாலனின் சிறுகதைகளில் 10 முத்துக்களாக தேர்வு செய்யப்பட்டு இடம்பெற்றிருக்கிறது கீழ்க்கண்ட சிறுகதைகள்.
1.அறம்
2.ராசி
3கடமை
4.ஆயுதம்
5.தப்புக் கணக்கு
6.முகங்கள்
7.வித்வான்
8.இதெல்லாம் யாருடைய தப்பு?
9.இறகுகளும் பாறைகளும்
10.எங்கள் வாழ்வும்.

**
      மாலன் சிறுகதைகளை வரலாற்றோடு வைத்துப் புரிந்துகொள்வது பொருத்தமாக இருக்கும். இக்கதைகள் எழுதப்பட்ட காலகட்டம், சூழ்நிலை போன்றவற்றை இக்கதைகளில் கிடைக்கும் குறிப்புகள் வழியே சீர்தூக்கிப் பார்க்க முடியும். பொதுவாகவே, அப்போது எழுதியவர்களில் பெரும்பாலோருக்கு அரசியலும், சமூகப் பொறுப்புணர்வும்
கடமையும் இருப்பதை உணரலாம்.

      இதேபோல், தமிழக அரசியல், சமூக, பண்பாட்டுத் தளங்களில் சில இயக்கங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் பெருமளவு வெளியே தெரிய வந்த ஆண்டுகளும் அவைதான்.

இந்தப் பின்னணியில், மாலன் 
அவர்களின் "இதெல்லாம் யாருடைய தப்பு?", "ஆயுதம்" போன்றவை மிகவும் கூர்மையானவை. அதில் எழுப்பப்படும் கேள்விகள், விசாரணைகள் முக்கியமானவை. இன்னமும் இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் இல்லை! அந்த வகையில், மாலன் அவர்களை முக்காலம் உணர்ந்த தீர்க்கதரிசி எனலாம். 

       மாறாதிருக்கும் சமூக சூழ்நிலைகளை என்னவென்று சொல்ல? 'கடமை', 'அறம்' இரண்டும் தமிழக அரசியலின் வேறு முகங்களைக் காட்டுவன. 

      தம் கருத்துகளைச் சொல்ல, விமர்சனங்களை முன்வைக்க கதைகளைக் கையாளும் காலத்தைச் சேர்ந்தவர் மாலன் என்பதை இக்கதைகள் புலப்படுத்துகின்றன. இன்றைக்கு அறவே ஒழிந்துவிட்ட போக்கு இது! கேள்வி கேட்பது, உரத்துப் பேசுவது என்பதெல்லாம் கதைகளுக்கு ஒவ்வாதவை; அவை ரொமாண்டிசம் என்று விலக்கப்படும் அவலமே இன்றைய இலக்கியப் பார்வை! ஆனால், மாலன் தலைமுறைக்காரர்கள் எல்லோருமே அசெளகரியமான கேள்விகளைக் கேட்பதை கடமையாகச் செய்திருக்கிறார்கள். அதனால் தான், இன்றும் அவர் கதைகள் படிக்கத் தூண்டுவனவாக இருக்கின்றன.

     பள்ளிக் கல்வியில் ஏற்பட்ட ஏமாற்றங்களைப் பதிவு செய்யும் ஆரம்ப வித்து, தப்புக் கணக்கு கதை. தமிழகம் எங்கும் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளில் அதிகபட்ச மதிப்பெண்களைப் பெற, மாட்டுக் கொட்டகைகள் நடத்தப்படுகின்றன. உருப்போட்டு, உருப்போட்டு, மாணவர்கள் உருப்படாமலே போய்விடும் ஆபத்து! இதில் தர்க்கம் நியாயம், புத்திசாலித்தனம் எதற்கும் இடமில்லை. புத்தகத்தில் உள்ளதை அப்படியே கக்கும் மாணவனே முதல் மாணவன்!! ஜனனி போன்ற புத்திசாலித்தனமான குழந்தைகள் அபூர்வம். கேள்வியே கேட்கக்கூடாது என்று கருதும் பெற்றோரே பெரும்பாலோர்.

     காதலும், கல்யாணமும், சுதந்திரமும் மாலன் கதைகளில் சித்திரிக்கப்படும் விதம், எண்பதுகளைச் சார்ந்தது. இன்றைய நகரத்துப் பெண்களைக் காதல் உடைத்துவிடுவதில்லை. 'மயிலிறகின் கனம்' ஒரு பொருட்டே இல்லை. அவர்கள் உடலையும் மனத்தையும் லகுவாகக் கடக்கக் கற்றுக்கொண்டுவிட்டார்கள். 'எங்கள் வாழ்வில்' பாலி, 'இறகுகளும் பாறைகளும்' அருணா போன்றவர்கள் ஒரு காலகட்டத்தின் அடையாளங்கள். 

       சமூக வளர்ச்சியின் மாற்றங்கள். 'வித்வான்' எதிர்கால அறிவியல் சாத்தியம் என்ற அழகிய கற்பனை. 

      'ராசி' நுட்பமான கதை. நிராகரிப்பின் வலியை உணர்ந்தவன், ஒரு கட்டத்தில் அங்கீகாரத்தைச் சந்திக்கும்போது ஏற்படும் தயக்கம், தடுமாற்றம், கச்சிதமாக வெளிப்பட்ட கதை.

       கதைகள் மூலம், சமூகப் பொறுப் புணர்வைத் தட்டி எழுப்புவது. ஆரோக்கியமான படைப்பின் முகவரி இது.

அறம்...

     இந்தக் கதையைப் படிக்கும் போது பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்த்த தமிழ்நாட்டின் நிலவரம் நினைவுக்கு வந்தது.
 
      இன்றும் இப்பொழுதும் எப்பொழுதும் பிரச்சினையாக இருக்கக்கூடிய ஒரு பதவி குறித்து பதவியை உபயோகப்படுத்தும் திறம் குறித்து ஆசிரியர் தீர்க்கமாக ஆலோசித்து இந்த கதையை எழுதி இருக்கிறார் .

       கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்று சொல்லும் போதே பணி செய்ய வேண்டுமே ஒன்றி ஒழிய பணியை செய்யும் பணிபுரித்து சிந்திக்கக் கூடாது என்று தத்துவத்தையும் ஆசிரியர் சொல்லி ,சொல்லாமல் சொல்லி செல்கிறார் .

      ஒரு மாநிலத்தின் கவர்னர் முகமாக வாழ்கின்ற நிலையில் அவருக்கு ஒரு வேலைக்காரன் .அவனது பெயர் அறம்.
       அறம் என்று பெயர் வைத்து இருக்கும் போது புரியாமல் படித்த நான், இறுதியில் புரிந்து கொண்டேன் பெயர் வைத்த காரணம் .
      அந்த மாநிலத்தின் ஆளுநர் எப்போதும் ஒரு ஒரு கொட்டை ருத்ராட்சை மாலை உத்திராட்சம் அணிந்து கொண்டிருப்பார். அது காணாமல் போய்விடுகிறது .அவன் மீது சந்தேகப்பட்டு அவனை அடிக்கிறார் உதைக்கிறார் திட்டுகிறார் ஏசுகிறார். எல்லாம் செய்கிறார். அவன் வாய் மூடி மௌனமாகவே இருந்து விடுகிறான் .
        அதிகாரி ஆனந்த் என்பவர் அறம் செய்திருக்க மாட்டான் என்று சொல்லுகிறார் .ஆனால் ஆளுநர் ஒப்புக்கொள்ளவில்லை .நான் அதை அவனிடம் தான் கொடுத்தேன் .அவன் தான் அதை எடுத்துக் கொண்டு விட்டான் என்று அடம் பிடிக்கிறார் அடாவடி ஆளுநர் .

       இந்த நிலையில் தேர்தல் நடந்து ஒரு கட்சி ஆட்சிக்கு வருகிறது .கட்சியின் ஆட்சி தலைவராக இருக்கக்கூடியவர் அதிகமாக ஊழல் செய்திருக்கிறார் .அவருக்கு பதவி பிரமாணம் செய்யலாமா வேண்டாமா என்கிற நிலையில்அரசு அதிகாரி ஆனந்த் அந்த அரசியல்வாதிக்கு முடிசூட்ட வேண்டாம், பதவி ஏற்பதற்கு ஒப்புக்கொள்ள வேண்டாம் என்று சொல்கின்ற நிலையில் ஆளுநர் சிறப்பான காரணங்கள் கூறி ஒப்புக்கொள்கிறார்.
         பதவியேற்பு விழாவின்போது எப்பொழுதும் உடன் இருக்கின்ற அறம் காணாமல் போய்விடுகிறான் என்பதாக கதை முடிகிறது .

      ஒரு நாடு செழிக்க வேண்டுமென்றால் அறம் செய்ய வேண்டும் ;தழைக்க வேண்டும் ;அங்கு இருக்க வேண்டும் . அரம் இல்லாத நாட்டில் உருப்படாது என்கிற தத்துவத்தை தான் ஆசிரியர் இந்த கதையில் சொல்லுகிறார் .

       இந்த கதையைப் படிக்கும் போது எனக்கு சுஜாதா அவர்கள் எழுதிய ஒரு கதை நினைவுக்கு வந்தது .பத்து பக்கங்களுக்கும் மேல் எழுதப்பட்ட கதை அது .திருக்குறளில் வருகின்ற அறத்தின் பால் பட்ட ஒரு திருக்குறளுக்கு விளக்கம் சொல்லும் முகத்தான் எழுதப்பட்ட கதை அது .

   * மனத்துக்கண் மாசிலன் ஆதல் * என்று வருகின்ற திருக்குறளுக்கு விளக்கம் சொல்லுகின்ற வகையிலே அந்த கதை எழுதப்பட்டிருக்கிறது .
      அதுவும் அறந்தான் ,இதுவும் அறந்தான் .செயல் மட்டும் அறமாக இருந்தால் போதாது ,நினைவும் மனமும் செயலும்அறத்தை சார்ந்து இருக்க வேண்டும் என்று இன்னும் வியாக்கியானம் சொல்லிக் கொண்டே போகலாம் இந்த கதைக்கு .
         அவ்வளவு அற்புதமான கதை இது.

***
      எல்லா கதைகளையும் ஏற்கனவே படித்து விட்ட பிறகும் இந்த மழைக்காலத்தில் நான்கு முத்து புத்தகங்களை படிப்பது மனதுக்கு இதமாக இருக்கிறது .காலத்தால் அழிக்க முடியாத கதைகள் எல்லாமே.

கருத்துகள் இல்லை: