22 டிச., 2024

சூரியின் நாட்குறிப்பு-71: மனம்போன போக்கில்


மனம்போன போக்கில் :
 உறக்கம் வராத ராத்திரிகள்! 

"அவளோட ராவுகள்" மாதிரி கிளுகிளுப்பான தலைப்பு.  ஏமாந்துவிடுவீர்கள்,  முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.  

வாலிபத்தில், திருமணத்திற்கு முந்திய காலத்தில்,  ஆஸ்துமா நோயினால் படாதபாடு பட்ட அனுபவங்கள். (திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்தது) முயன்றால் எப்படிப்பட்ட சூழ்நிலையையும் மாற்றி ரசிக்கக்கூடியதாக ஆக்கமுடியும் என்று என்னை உணரவைத்த அனுபவங்களில் ஒன்று. 

குளிர் மாதங்களில்,  குறிப்பாக மார்கழி மாதத்தில், இரவு ஏன் வருகிறது,  வராமல் போய்விடாதா என்று எண்ணவைக்கும்.  

இரவு படுத்தால் திகை ஏற்பட்டு,  மூச்சுத்திணறல் வந்து கொஞ்ச நேரம் உட்கார்ந்து,  கொஞ்ச நேரம் உலாவி,  எப்படியோ இரவைக் கடத்த வேண்டும். உறங்கவே முடியாது.  நரக வேதனை.  ஆனால் மனதை வேறெதிலோ லயிக்கச் செய்துவிட்டால் பொழுது போவது தெரியாது.  தூக்கமின்மை ஒரு தொல்லையாகத் தெரியாது. சீக்கிரம் விடிந்துவிடும். காலை வந்துவிட்டால் கவலை இல்லை, பெரிய விடுதலை. (உண்மையில் ஒரு ஸ்ப்ரே அல்லது ஒரு இன்ஹேலர் எளிய தீர்வை அளித்திருக்கக்கூடும்.  சரியான வழிகாட்டுதல் இன்றி தேவையில்லாமல் துன்பப்பட்டிருக்கிறேன்.  பழைய கர்மா கடனை அடைத்திருக்கிறேன் என்றும் கொள்ளலாம்.) 

ஆனால் மனதை லயிக்கச் செய்யும் பொழுதுபோக்கை கண்டுபிடிக்க வேண்டும். படிக்கலாமென்றால் கண்கள் சோர்ந்திருக்கும்.  மேலும் விளக்கைப் போட்டால் மற்றவர் தூக்கத்திற்கு இடைஞ்சல். இருட்டிலே வேறென்ன செய்வது? BY TRIAL AND ERROR  அந்த வழியை கண்டுபிடித்தேன்.  

கார்ட்டூனிஸ்ட் அபு ஆபிரஹாம் காட்டிய அந்த வழிக்குப் பெயர் CREATIVE IDLENESS என்பதாகும்.  அது என்ன என்கிறீர்களா?  CREATIVE IDLENESS IS TAKING YOUR MIND FOR A WALK.  மனத்தை அதன் போக்கில்,  சிறு வழிகாட்டுதல்களுடன்,  சுவையான எண்ணங்களை உருவாக்கி அவற்றில் தோய்தல். 

ஒரு சொல் அல்லது ஒரு எண்ணம், அதிலிருந்து அதன் தொடர்புள்ள மற்றொரு எண்ணம் என  சங்கிலித் தொடரை உருவாக்கி,  மனதுடன் உலா வருதல்.

உதாரணமாக,  விடிந்தால் வியாழக்கிழமை.  வியாழன் நோக்கு வந்த பிறகே திருமணம் செய்ய வேண்டும் என்று ஜோதிடர்கள் கூறுவது.  

வியாழபகவான்  பிருகஸ்பதி  தேவர்களின் குரு. நவகிரகங்களில் ஒருவராகவும் வழிபடுதல் வழக்கு.  இவர் நான்கு  வேதங்களையும், அறுபத்து நான்கு கலைகளையும் அறிந்தவர். எண்ணற்ற யாகங்களையும் செய்து தேவர்களின் குருவாக மாறியவர். நவக்கிரக அந்தஸ்து பெற்றவர். அதனால் பிருகஸ்பதியின் கிரகமான வியாழ கிரகம் ராஜகிரகம் எனப்படுகிறது. ஞானிகளையும், மேதைகளையும் உருவாக்குபவர்.

ஆங்கிலத்தில் வியாழக்கிழமை THURSDAY.  THOR'S DAY என்பதன் மாற்று வடிவம்.  THOR IS THE NORWEGIAN GOD OF THE SEA என்று படித்தது நினைவிற்கு வருகிறது.  

தோர் என்ற பெயர் வேறெங்கோ அறிமுகமான பெயரல்லவா! ஆம்,  தோர் ஹேயர்தால் (THOR HEYERDAHL) ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர், அறிவியலளாளர்,  எக்ஸ்ப்ளோரர். 
இவரது KON-TIKI EXPEDITION உலகப்புகழ் பெற்றது.  1948ல் வெளியான இந்த நூல் உலகப்புகழ் பெற்றது.  நான் அதை வாங்கிப் படித்து பல காலம் வைத்திருந்தேன்.  அதிலுள்ள படங்கள் இன்னும் நினைவில் நிற்கின்றன.  

பஸிபிக் மஹா சமுத்திரத்தை கட்டுமரத்தில் கடந்து பாலினீசிய தீவுகளுக்கு பயணம் செய்து,  கொலம்பஸ் வருவதற்கு முந்திய காலத்தில் தென்அமெரிக்காவிலிருந்து பழங்குடியினர் பசிபிக் மஹாசமுத்திரத்தை கட்டுமரத்தில் கடந்து பாலினீசியாவில் குடியேறி இருக்கக்கூடும் என்பதை உறுதி செய்ய இந்தப் பயணம்.  

அவரது கட்டுமரத்தின் பெயர் கோன்-டிகி. இது இன்கா இந்தியர்கள் வழிபட்ட சூரிய பகவானின் பெயர்.  அந்தப் பழங்குடியினரைப் போலவே தாமும்  ஐந்தாறு நண்பர்களுடன் கட்டுமரத்தில் கடந்தார்.  மிகுந்த ஆபத்தான,  பாதுகாப்பில்லாத இந்தப் பயணம் பெரிதும் பேசப்பட்டது.  புத்தகமாக வந்து விற்பனையில் உலக அளவில் சாதனை படைத்தது.

இந்தியாவிலும் சூரியன் கடவுளாக வழிபடப்படுகிறார்.  ஆதிசங்கரர் தொகுத்த ஆறு மதங்களில் (ஷண்மதம்)  சௌரமும் (சூரியனும்) ஒன்று.  அநேகமாக எல்லாக் கோவில்களிலும் சூரிய தேவனுக்கு ஒரு இடம் உண்டு.  ஒரிஸ்ஸா மாநிலம் கோனாரக்கில் சூரியனுக்கு தனிக்கோவிலே உண்டு. 

சூரிய பகவானை போற்றிப்பாடும் பக்தி சூத்திரம் ஆதித்ய ஹிருதயம்.  ஆதித்தன் என்றாலும் சூரியன்தான். கதிரவன்,  மலரவன், ஆதவன் என்று தமிழில் பல பெயர்களில் வழங்குவதைப் போல் வடமொழியிலும் ஆயிரம் பெயர்கள். ஆதித்ய  ஹ்ருதயம்  வால்மீகி இராமாயணத்தின் ஒரு சிறு பகுதி. 

காஞ்சிப் பெரியவர்கள் கூறியது :

''பயம் போக வேண்டும் என்றால் ஆதித்ய ஹ்ருதயம் படிக்கச் சொல்லுங்கள். அந்த ஸ்லோகத்தைப் படித்தால் மனதில் அச்சம் நீங்கி தைரியம் பிறக்கும். எதற்கும் கலங்காத திடமான மனம் உருவாகும். இலங்கையில் யுத்தம் நடந்த காலகட்டம். முடிவில்லாதபோரால்
ராமருக்கு மிகுந்த மனச்சோர்வு ஏற்பட்டது. ''எவ்வளவு நாளாக யுத்தம் நடக்கிறது! இன்னும் இவன் பணியவில்லையே? என்ன தான் வழி?'' எனக் கவலைப்பட்டார். அப்போது வந்த அகத்திய முனிவர், சூரியபகவானைப் பிரார்த்தனை செய்யும் 'ஆதித்ய ஹ்ருதயம்' ஸ்லோகத்தை ராமருக்கு உபதேசம் செய்தார். ராமரும் அதைச் சொல்லி சூரியபகவானை வழிபட்டார். அவ்வளவு தான்...ராமரின் 
சோர்வு காணாமல் போனது. வீரம் பொங்கியது. மறுநாள் உற்சாகமுடன் போரிட்டு ராவணனை வதம் செய்தார். வால்மீகி ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் இந்தப்பகுதி வருகிறது. துணிவுடன் வாழ விரும்புபவர்கள் ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி சூரியனை வழிபட்டால் போதும். தைரியம் பிறக்கும். வாழ்க்கைப் போரிலும் எளிதாக வெல்ல முடியும்''.

ஞாயிறு அன்று காலை புண்ணிய நதிகளில் குளிப்பதும், சூரிய நமஸ்காரம் செய்வதும், காயத்ரி மந்திரம் சொல்வதும், ஆதித்ய ஹ்ருதயம் போன்ற சூரிய ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதும், சூரியனின் அருளைப் பெற்றுத் தரும். 

உலகத்தின் உயிராகச் சூரியதேவன் விளங்குகிறார். வேதகாலம் முதலே சூரியனைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. ரிக்வேதம் சூரியனை மூன்றுவித அக்னியில் ஒன்றாக விவரிக்கிறது. யஜுர்வேதம் சகல உலகங்களையும் ஒளிபெறச் செய்பவன் என்று போற்றுகிறது. அதர்வண வேதம் சூரியனை வழிபட்டவர்கள் இதயநோயிலிருந்து விடுபடுவர் என்று வழிகாட்டுகிறது. 

கிரகங்களில்   முதன்மையானவர்   சூரியன்.   சூரியனை மையமாக   வைத்துக்கொண்டு அனைத்துக் கிரங்களும் சுற்றுகிறது. சூரியன் தலைமை தாங்கும் தகுதியைத் தருகிறார். ஆண்மையைத்     தருகிறார். நிர்வாகத்திறமை அளிக்கிறார். சூரிய ஒளி அனைவருக்கும் பாகுபாடு இன்றி அளிப்பது போல் எல்லோரையும் சமமாக நினைப்பவர், தயாள தன்மை உடையவர். பேதம் கிடையாது, சாதி  பாகுபாடு கிடையாது. எல்லோரையும் சரி சமமாக நடத்துவர். இரகசியம் கிடையாது. வெளிப்படையாக பேசுவர். வள்ளல் தன்மை உடையவர். இல்லை என்று சொல்லாத தன்மை பேரும் புகழும்  உடையவர்.

SUN GAZING கண்களுக்கு அற்புத ஆற்றலைத் தருகிறது. ஆனால் அதை முறைப்படி செய்ய வேண்டும். 

இன்னும் விடியவில்லையா?  மீதி எட்டு கிரகங்கள் இருக்கின்றனவே! இல்லாவிடில் ஏதாவது ஒரு தொடர்புள்ள சொல் கிடைக்கும். அதைப் பிடித்துக் கொண்டு சங்கிலித் தொடராக பயணம்! 

இப்படி காலம் வழிந்தோட,  சிவன் கோவிலில் மார்கழி மாத  பஜனைப் பாடல்கள் இசைத்தட்டு ஒலிக்க ஆரம்பித்து விடும்!  

அப்புறமென்ன?  பல் துலக்கி, சூடான வென்னீர் பருகி,  காலைக்கடன்கள் முடித்து,  அருமையான காப்பி பருகி,  அடுத்த நாளுக்கு தயாராகிவிடுவேன்!

😵😵😵😵😵😵😵😵😵😵😵😵😵😵

கருத்துகள் இல்லை: