25 டிச., 2024

சூரியின் நாட்குறிப்பு-72: என் இனிய தனிமையே...

மதன் கார்க்கி கவிதையை, சித் ஶ்ரீராம் குழைத்து வார்த்தைகளில் வடிக்க, உறுத்தாத இனிய பின்னணி இசையை டி. இமான் வழங்க, டெடி திரைப்படத்தில் வரும் இனிய பாடல்!

இனிய பாடல்தான் என்றாலும் ஒரு மிக மெல்லிய சோகமும் ஏக்கமும் இழைந்தோடும் பாடல் என்பதை படம் பார்த்தவர்களால் ஓரளவிற்கு உணர முடியும்.

தனிமை ! அதைப் பற்றி நிறைய பாடியிருக்கிறார்கள். அதன் மேன்மையை, தனிமை பழகு என்றும், ஏகாந்தம் இனிது என்று அழுத்தந்திருத்தமாக வார்த்தைகளில் வடித்திருக்கிறார்கள். 

ஆனால் அதை வாழ்வில் பல கால கட்டங்களில் ஒரு வலியாகவும், குறையாகவும் உணர்ந்திருக்கிறேன். இன்று அதை இனிமையாக உணர முயல்கிறேன். 

ஆர் கே நாராயணின் கதாநாயகனின் வேதனையை என் வேதனையாக உணர்ந்ததுண்டு. The English Teacher நாவலில் வரும் அந்த நாயகன் தற்செயலாகப் பார்த்த பெண்ணை,  செவ்வாய் தோஷம் போன்ற பல தடைகளைப் பிடிவாதமாகத் தாண்டி மணக்கிறான். மூன்று நாள் காய்ச்சலில் அவனையும், அவனது இரண்டு வயது பெண் குழந்தையையும் தவிக்க விட்டு மறைகிறாள். சடங்குகள் சம்பிரதாயங்கள் முடிய, அவரவர் தம் வீடு திரும்ப, இறுதியில் அவன் அன்னையையும் அவனது இரண்டு வயது மகளுடன் பேருந்தில் ஏற்றி அனுப்பி விட்டு வீடு திரும்புகிறான். வெறுமையான வீட்டில் அமர்ந்திருக்கையில் அவன் மனதில் ஆயிரம் எண்ணங்கள், கேள்விகள்.

தன் பால்ய நண்பர்கள்...
அவர்களெல்லாம் எங்கே? பள்ளித்தோழர்கள் எங்கே? கல்லூரி சகாக்கள் எங்கே? 
அப்பா காலத்தில் இருந்த அவனது பெரிய கூட்டுக் குடும்பம் என்னவானது? 

 சிலர் மறைய,  பிறர் அவர்களுக்கென குடும்பம், குட்டி, வேலை என்று சிதறிப் போய் விட்டார்கள். தனிமை மட்டுமே சத்தியம், நிரந்தரம் என்பதை உணர்கிறான். நாராயணின் மறக்க முடியாத, அழகிய ஆங்கில வார்த்தைகளில் சொல்வதானால், *LONELINESS IS THE ONLY UNMITIGATED TRUTH OF LIFE*

திருப்பதியில் எம்.காம். தேர்வெழுதச் சென்றிருந்த போது, தாஜ்மஹால் போன்ற பிரம்மாண்டமான, அழகிய வண்ணமலர் பூத்துக்குலுங்கும் தோட்டத்துடன் கூடிய அற்புதமான நூலகத்தால் ஈர்க்கப்பட்டு, என் தேர்வையெல்லாம் மறந்து, சில மணி நேரம் அங்கே செலவிட்டேன். 

அங்கே ஆர் கே நாராயணின் பெயர் கேள்விப்படாத நாவல் ஒன்று: 

*GRATEFUL TO LIFE AND DEATH*. 

ஆச்சரியமாக இருந்தது. அவரது படைப்புகள் அனைத்துமே எனக்கு அத்துபடி. அதை எடுத்து புரட்ட ஆரம்பித்த சில நிமிடங்களில் அது THE ENGLISH TEACHER தான் என்பது தெரிந்தது.

அதை மறு பதிப்பிட்ட ரசனைமிக்க அமெரிக்க பதிப்பாளர், (throwing away the prosaic title, The English Teacher,) அந்த நாவலின் கடைசி வரியை தலைப்பாக மாற்றியிருந்தார், GRATEFUL TO LIFE AND DEATH என்று!

உண்மையில் அது நாராயணின் சொந்தக் கதை!

தனிமையைப் பற்றி இன்னும் நிறையப் பேசலாம்,  பேசிக்கொண்டே இருக்கலாம். பார்க்கலாம். ஏன் நீங்களும் பேசலாம்.  பேசுவீர்களா? 

🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵

கருத்துகள் இல்லை: