மகான்கள் ஒரு வார்த்தையிலோ, ஒரு வரியிலோ, அல்லது வள்ளுவப் பெருந்தகை போல் ஒன்றேமுக்கால் அடியிலோ சுருக்கமாகச் சொல்வதை உரையாசிரியர்கள் பெரிதாக விரித்துக் சொல்வதை நாம் பார்க்கிறோம். எளிதில் புரிந்து கொள்ள அது உதவுகிறது.
திருக்குறளுக்கும், பகவத்கீதைக்கும் எவ்வளவு பேர் உரை எழுதியிருக்கிறார்கள்!
இவை தவிர சீரிய சிந்தனைகளை படிக்கும் நாமும் நமது வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டு பல இடங்களில் பலவிதமாக பொருள் கொள்கிறோம்.
மகான்களின் ஒப்பற்ற சிந்தனைகளை இடத்திற்குத்தக்கவாறு விரிந்த பொருள் அல்லது ஆழ்ந்த பொருள் காணமுடியும்.
உதாரணமாக வினோபாஜியின் கீதைக் கதைகளில் படித்த ஒரு சிறுகதை என் நினைவிற்கு வருகிறது. சுருக்கமாக அதைக் கீழே தருகிறேன்.
ஒருசமயம் தேவரும், அசுரரும், மானிடரும் பிரம்மாவிடம் உபதேசம் பெறச் சென்றார்கள்.
பிரம்மா அனைவருக்கும் "த" என்ற எழுத்தை உபதேசமாக அளித்தார்.
"தேவர்களாகிய நாம் காமம் அதிகமுள்ளவர்கள். சுகபோகங்களில் நமக்கு ஆசை அதிகம். ஆகவே பிரம்மா நமக்கு 'தமனம்' (புலனடக்கம்) தேவை என்பதை 'த' என்ற எழுத்தின் மூலம் உபதேசித்திருக்கிறார்"
என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
"அசுரர்களாகிய நாம் மிகவும் முன்கோபக்காரர்கள். எனவே தயா (கருணை) தேவை என்பதை சுட்டிக்காட்டவே 'த' என்ற எழுத்தை உபதேதித்திருக்கிறார்" என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
"மனிதர்களாகிய நாம் உலோபிகள், பணப்பித்தர்களாகி விட்டோம். எனவே தானம் புரியவேண்டும் என்பதை உணர்த்தவே 'த' என்ற எழுத்தை உபதேசித்துள்ளார்"
என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.
பிரம்மா அவர்கள் புரிந்துகொண்டது சரியென்றார். ஏனெனில் அவர்கள் அனைவரும் அவரவர் அனுபவத்திலிருந்தே உபதேசத்தைப் புரிந்துகொண்டிருந்தார்கள்.
கீதையின் உபதேசமும் இத்தகையதே. கீதையின் சொற்களுக்கு விரிந்த பொருள் காணவும், அவரவர் அனுபவத்தை ஒட்டிப் பல்வகைப் பொருள் கொள்ளவும் கீதோபதேசம் சிந்தனை சுதந்திரம் அளிக்கிறது.
என் சொந்த அனுபவங்கள் இரண்டை அடுத்தடுத்து தருகிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். நன்றி!
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக