🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️
சூரியின் நாட்குறிப்பு-76 : குறளின் மாறுபட்ட கருத்து
🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️
இந்த நாட்குறிப்பின் சென்ற பதிவில் தூய்மை, துணையுடைமை என்று தொடங்கும் குறளின் விரிவான பொருள் பற்றிப் பேசினோம்.
இன்றும் ஒரு குறளைப் பற்றிப் பேசப்போகிறோம். இதை என் கவனத்திற்கு கொண்டு வந்தது என் தந்தையார். அவருக்கும் இறுதிவரை தீவிர வாசிக்கும் பழக்கம் இருந்தது. இது பரம்பரை சொத்து என்று கூடச் சொல்லலாம். அவரது தந்தையாருக்கும் இந்தத் தீவிர வாசிக்கும் பழக்கம் இருந்தது. எனவே எனக்கும் என் உடன்பிறப்புகள் சிலருக்கும் இந்த தீவிர வாசிப்புப் பழக்கம் இருப்பதில் ஆச்சரியம் இல்லை.
இன்று பேசப் போகும் குறள்:-
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலாதார்*
இது பலருக்கும் பரிச்சயமான குறளாக இருக்கலாம்.
பகவத் கீதையைப் போன்று திருக்குறளுக்கும் பலர் உரை எழுதியிருக்கின்றனர். பரிமேலழகர், மணக்குடவர், பரிதியார் என்று பட்டியல் நீளும். தற்காலத்தில் நாமக்கல் கவிஞர், மு.வரதராசனார், கலைஞர், சாலமன் பாப்பையா, சுஜாதா என்று பலரும் உரை எழுதியிருக்கிறார்கள்.
மேற்கூறிய குறளுக்கு அனைவருமே ஒரே பொருள்தரும் வண்ணம் உரையாத்துள்ளனர்
*பெரியவர்கள் பிறரால் செய்தற்கு அரிய செயல்களைச் செய்வார்கள். சிறியவர்கள் அத்தகைய அரிய செயல்களைச் செய்ய மாட்டார்கள்*
முத்தமிழ்க் காவலர் திரு கி ஆ பெ விசுவநாதம் இதிலிருந்து
மாறுபட்டார்கள். வாய்வழியாகவும், செவிவழியாகவும், ஓலைச்சுவடிகளின் வழியாகவும் முன்னேடுத்து வருங்காலையில் இந்தக் குறளில் ஒரு சிறு பிறழ்வு நேர்ந்திருக்கலாம் என அவர் கருதினார். அதற்குக் காரணம் மேலே தரப்பட்டிருக்கும் விளக்கவுரை. இது சரியாகக் கொண்டால் அது மிகைபடக் கூறியதாக முடியும்.
செய்வதற்கரிய செயல்களைச் செய்பவர்கள் பெரியோர் என்று கூறியபோதே, சிறியோர் அவ்வாறு செய்ய இயலாதோர் என்று பொருள் வந்துவிடுகிறதே! அவ்வாறிருக்க மறுபடியும
சிறியோர் அவ்வாறு செயற்கரிய செய்யார் என்று கூறவேண்டியதில்லை அல்லவா?
ஈற்றடியில் உள்ள 'க'வை, 'கு' என்று திருத்தினால் -
(ஈற்றடியில் 'செயற்கரிய' என்பதை 'செயற்குரிய' என்று மாற்றினால்)
*பெரியவர்கள் பிறருக்கு செய்துமுடிக்க இயலாத செயல்களைச் செய்து முடிப்பார்கள். ஆனால் சிறியோர் எளிதில் செய்யக்கூடிய செயல்களைக்கூட செய்யமாட்டார்கள்*.
தமிழ்ப் பேரறிஞர்கள் ஒப்பினால் இப்பிழையைத் திருத்தலாம், திருக்குறளைப் படிக்கும்போது கருத்தூன்றிப் படித்தால் அதன் புதைபொருளை எளிதில் அறியலாம் என்று கி ஆ பெ முடித்திருப்பார்.
இந்த அற்புத, சீரிய விளக்கத்தை என் தந்தையாரும் நானும் மிகவும் சிலாகித்துப் பேசிக் கொள்வோம்.
இந்தத் தமிழறிஞர் பற்றி தமிழ் விக்கிப்பீடியா தந்த சில தகவல்கள்:-
கி ஆ பெ அவர்கள் துவக்கத்தில் பெரியாருடன் குறைந்தபட்ச கொள்கைகளோடு இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோதும் அவரது திராவிடநாடு கோரிக்கையுடன் உடன்படாதவர். அது தமிழரின் தனித்தன்மையை நீர்த்துவிடும் என எண்ணினார். இவர் எழுதியுள்ள நூல்கள் தமிழ்வளர்ச்சித்துறையால் 2007-2008 இல் நாட்டுடைமையாக்கப்பட்டு பரிவுத் தொகை 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
மேலும் 2000ஆம் ஆண்டிலிருந்து கி. ஆ. பெ. விசுவநாதம் விருது அவரது பெயரால் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ்நெறியில் தமிழ்த் தொண்டாற்றும் ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
அவரது நினைவில் ஐந்து ரூபாய் தபால் தலை இந்திய தபால் துறை வெளியிட்டது.
1997ல் திருச்சியில் துவக்கப்பட்ட (அவரது சொந்த ஊர்) மருத்துவக் கல்லூரிக்கு கி. ஆ. பெ.யின் பெயர் சூட்டப்பட்டது
அடுத்த பதிவும் திருக்குறள் பற்றியதே. அதில் இன்னொரு
தமிழறிஞரை சந்திக்கலாம்.
🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக