ஆகஸ்ட் 15 என்னும் தினம் குமரி நீலகண்டனுக்கு ஒரு சரித்திர நிகழ்வின் தொடக்கம்.
அடிமைப்பட்டிருந்த ஒரு பழம் சமுதாயத்தின் சுதந்திர விழிப்பு. ஒரு மனிதனின் பிறப்பு. பின்வருடங்கள் ஒன்றில் அதே தினத்தில் பிறந்த ஒரு குழந்தை அத்தினத்தின் சரித்திர நீட்சியை ஒரு ஏமாற்றமாக, நம்பிக்கை வீழ்ச்சியாகக் காணும் அவலம். இது கனவல்ல. வாழும் நிஜம்.
ஆகஸ்ட் 15 மகாத்மா காந்தியின் செயலராக அவரது அந்திம காலத்தில் இருந்த கல்யாணம் என்ற வடநாட்டில் பிறந்து வளர்ந்த ஒரு தமிழரின் பிறந்த தினமுமாகும். 15.8.1922. பத்திரிகைகளில் தெரிந்த விஷயம். கல்யாணம் 1943 லிருந்து மகாத்மா சுட்டுக் கொல்லப்பட்டது வரை அவரது செயலராகவும் பின் பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டு கடைசியில் சென்னையில் ஓய்வு பெற வந்ததும் அவருக்கு நீலகண்டன் பரிச்சயமாகிறார்.
அவருடன் பேசிப் பழகி அறிந்ததும், பத்திரிகைகளில் படித்து அறிந்ததும், தன்னைச் சுற்றி நிகழும் சம்பவங்களும் வரலாற்று மாற்றங்களும் 15 ஆகஸ்டை ஒரு மையப் புள்ளியாக்கி, அப்புள்ளியைச் சுற்றிய மனிதர்கள், கனவுகள், ஏமாற்றங்கள், வாழ்க்கை மதிப்புகளின் மாற்றங்கள் அனைத்தும் அலையோடுகின்றன. கல்யாணமும் மகாத்மாவும் சத்தியங்கள். வாழ்ந்த மனிதர்கள். ஆனால், சத்யா, பின்னர் வரும் ஏமாற்றங்களுக்கு சாட்சியம் ஒரு புனைவு சத்யா ஒரு சிறுமி 2000 ஆண்டு ஆகஸ்ட் 15-ல் பிறந்த கற்பனைப் பாத்திரம். எல்லாமே இருவரதுமான வலைப் பூ பதிவுகளாக எழுதப் பட்டுள்ளன.
கல்யாணம்.காம் –ல் காண்பதெல்லாம் நிகழ்ந்தவை. சத்யா.காம் –ல் ஒரு சிறுமியின் பதிவாக தரப்பட்டள்ளவை எல்லாம் பல நிகழ்வுகளும் மனிதர்களும் கற்பனையாக பதிவாகியுள்ளன. சத்யாவின் மாமாவும் அவர் பற்றிய நிகழ்வுகளும் பல உண்மை மனிதர்களின் பல உண்மை நிகழ்வுகளின் கற்பனைத் தொகுப்பு.
எத்தனையோ அரிய ஆவணங்கள், புகைப்படங்கள் புத்தகத்தை நிறைக்கின்றன.
கல்யாணத்துடன் ஏற்பட்ட பரிச்சயம் காற்றோடு கலந்து மறைந்த பேச்சாகப் போய்விடாது ஒர் அரிய ஆவணமாக நமக்குத் தந்துள்ளார் நீலகண்டன்.
ஆகஸ்ட் 15 (நாவல்)
ஆசிரியர்: குமரி எஸ் நீலகண்டன்
சாயி சூர்யா, 204/432, D 7, குருபிரசாத் ரெசிடென்ஸியல் காம்ப்ளெக்ஸ், டி.டி.கே சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை -18. தொலைபேசி: 9444628536
பக்கங்கள்: 502
விலை: ரூ 450
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக