18 மார்., 2025

கவிதை நேரம்


உள்ளத்துள்ளது கவிதை

கவிமணி

[
 
1. வண்டி அற்புதப் பொருளாம் - வண்டி
மாடும் அற்புதப் பொருளாம்;
வண்டி பூட்டும் கயிறும் என்றன்
மனத்துக் கற்புதப் பொருளாம்!


2. வண்டல் கிண்டி உழுவோன் - கையில்
வரிவில் ஏந்தி நின்ற

பண்டை விஜயன் போல - இந்தப்
பாரில் அற்புதப் பொருளாம்!
3. பறக்கும் குருவி யோடென் - உள்ளம்
பறந்து பறந்து திரியும்;
கறக்கும் பசுவைச் சுற்றி - அதன்
கன்று போலத் துள்ளும்.
4. ஈயும் எனக்குத் தோழன் - ஊரும்
எறும்பும் எனக்கு நேசன்;
நாயும் எனக்குத் தோழன் - குள்ள
நரியும் எனக்கு நண்பன்!
5. கல்லின் கதைகள் எல்லாம் - இரு
காது குளிரக் கேட்பேன்;
புல்லின் பேச்சும் அறிவேன்! - அதைப்
புராண மாக விரிப்பேன்.
6. அலகில் சோதி யான - ஈசன்
அருளி னாலே அமையும்;
உலகில் எந்தப் பொருளும் - கவிக்கு
உரிய பொருளாம், ஐயா!

7. உள்ளத்துள்ளது கவிதை - இன்பம்

உருவெ டுப்பது கவிதை;
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
தெரிந்து ரைப்பது கவிதை!

கருத்துகள் இல்லை: