22 ஏப்., 2025

இன்றைய புத்தகம்


இந்தப் புத்தகம் புனைவா அல்லது அபுனைவா என்பது அவரவரின் வாசிப்பு
எல்லைக்கு உட்பட்டது.

ஒருபக்கம் வெடித்து சிரிக்க வைக்கும் சுயபகடி, இன்னொரு பக்கம் வேகமாக ஓடும் பொழுது சரக்கென்று முள் குத்தி ஏற்படும் வலி என்று வாழ்வு போலவே இன்பத்தையும், சோகத்தையும் சேர்த்து தருகிறது இந்நூலின் வாசிப்பனுபவம்.

நடுநிசியில் சுற்றும் பேய்களும்,
பல விதமான பெண்களும்,
சைவ சித்தாந்தம் பேசி மதம் மாறிய அண்ணாச்சியும்,
நாளைக்கு சாகும் என்று சொல்லி மேலும் பதினைந்து வருடம் வாழ்ந்த ஆச்சியும், புண்ணாக்கு வாங்கி வர சொன்ன மருத்துவரும்,
நான் ஈ படத்திற்கு மகள் சொல்லிய விளக்கமும்,
சாதகம் அமைய பெறாமல் மனமுடைந்த ஆசானும் ,
இறந்த மகனிற்கு போன் போகவில்லை என்று வருந்தும் அப்பா,
இலக்கிய கூட்டங்கள் ,
இலக்கிய இதழுக்கு கட்டுரை எழுத வரும் அழைப்பு,
காமிக்ஸ் புத்தகங்கள்,
கேரள பேருந்து பயண அனுபவம் என்று பலவகையான வாழ்வுகள் பெருகி வருகிறது .

இவையனைத்துக்கும் நடுவில் தான் நாமும் இருக்கிறோம்.வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் தள்ளி நின்று பார்க்கும் உள்ளுணர்வு பெற்றவனே எழுத்தாளன். அது அவன் சம்மந்தமுடைய விஷயம் என்றாலும் அவனுள் எதோ ஓன்று நடப்பது அனைத்தையும் தள்ளி நின்று பார்க்கிறது. கால கடந்த பின்பு மனம் அந்த நிகழ்வை புனைவாக நிகழ்த்துகிறது.

இத்தனை அனுபவமும் ஒருவருக்கு வாய்க்கும் என்றால் அவர் மீது மிகுந்த பொறாமை வருகிறது. ஆனால் அத்தனை அனுபவத்தையும் இது போன்று எழுத முடியுமென்றால் வாழ்வு இது போன்று பல மடங்கு அனுபவத்தை அவருக்கு அளிக்கட்டும்.

எனது தாத்தா வழி உறவுகள் வீட்டிற்கு வருவது எனக்கு பால்ய காலத்தில் மிகவும் புடிக்கும். அவர்களிடம் வற்றாத கதை எப்பொழுதும் இருக்கும். சுதந்திரம் வாங்கியது, முதல் தபால் எழுதியது, காபியை முதலில் பருகியது, முதல் பேருந்து, முதல் ரயில் என்று அணைத்து அனுபவத்திலும் ஒரு முதல் வார்த்தையை சேர்த்து கொள்வார்கள்.. அனைத்தும் அவர்களுக்கு கன்னி அனுபவம் அதனாலயே பெரு வியப்பாக சொல்லுவார்கள். அந்த கதைகள் இன்று நினைக்கும் போது பொக்கிஷங்கள்.

இந்தப் புத்தகத்தில் போகன் காட்டிய பல விஷயங்கள் எனக்கு முதல் அனுபவங்கள்.
அதனாலயே அவை பொக்கிஷங்கள்!

நன்றி: KINDLE CUSTOMER 

கருத்துகள் இல்லை: