12 ஏப்., 2025

ஹோமியோபதி


கேள்விசூழ் ஹோமியோ உலகு!

ச.ராமசாமி , அப்ரோச் பவுண்டேஷன் 

                


        ஹோமியோபதி மட்டுமல்ல, எல்லாத் துறைகளுமே கேள்விகளால் சூழப்பட்டுள்ளன. ஏன், இந்த உலகே, பிரபஞ்சமே கேள்விகளால் சூழப்பட்டுள்ளபோது ஹோமியோபதிக்கும் கேள்விகளுக்குமான உறவு  குறித்துப் பேசுவது அவசியமான ஒன்றுதான். ஹோமியோபதியில் துயரர் ஆய்வில் மருத்துவர் நிறையக்  கேள்விகள் கேட்கிறார். அது குறித்த தனி துயரர் விசாரணை என்று ஓர்  இயலே ஹோமியோபதியில் உள்ளது.  துயரர் தனது நோய் குறித்துச் சொல்ல ஆரம்பிக்கும்போதே துயரர் விசாரணை தொடங்கி விடுகிறது. இந்த விசாரணை என்னும் கலை  உண்மையிலேயே துயரர்  சொல்லும் குறிகளின் மேல் மருத்துவர் கேள்விகள் கட்டமைக்கும் கலையில்தான் உள்ளது. இதில் மிகவும் சுவாரஸ்மான ஒன்று என்னவென்றால் ஹோமியோபதியே கேள்விகளில் பிறந்த மருத்துவ முறைதான். ஹோமியோபதியின் வரலாறும் கதைகளும் அதையே நமக்குச் சொல்கின்றன.

         ஐரோப்பாவில் 18 ஆம் நூற்றாண்டில் நிலவி வந்த மருத்துவமுறை மீது சாமுவெல் ஹானிமன்  முதலில் அறச்சீற்றத்தோடும்  அதனைத் தொடர்ந்து  அறிவு தாகத்தோடும்  எழுப்பிய காத்திரமான கேள்விகளுக்கு விடைதேடிப் புறப்பட்ட  பயணத்தில் வந்து நின்ற இடமும் கண்டு உருவாக்கிய மருத்துவ முறையும்தான் ஹோமியோபதி.  அதற்கு அவர், தான் பயின்ற மருத்துவத்தோடு, தாய்வீட்டைக் கேள்விகளால் துளைத்தெடுத்தார்.  இப்படி ஒரு கால்நூற்றாண்டு காலம் நீண்ட நெடிய ஓர் அறிவுப்போரோட்டத்தை நிகழ்த்தித்தான் ஐரோப்பாவின் மரபான மருத்துவமுறைக்கு  அலோபதி என்று நாமகரணம் சூட்டியதோடு  ஹோமியோபதி என்கிற புதிய மருத்துவ முறையையும் கண்டடைந்தார். இந்த நெடிய பயணத்தில் அவரைக் கொண்டு செலுத்தியது அன்றைய ஐரோப்பாவின் மருத்துவமுறை மீது அவருக்கு இருந்த கேள்விகள்தான்.



               ஹோமியோபதியின் தந்தை மாமேதை சாமுவெல் ஹானிமன் ஒரு பருண்மை குறித்துதான் ஆழமான கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டார். அது வேறு ஒன்றுமல்ல மருத்துவத்தின் மிக முக்கியமான கூறான  நோய் குறித்துதான். ஹோமியோபதியில் உரையாடல் ஊடாகத்தான் நோய் என்கிற சித்திரத்தை மருத்துவரும் நோயாளரும் இணைந்து உருவாக்குகிறார்கள். இதில் மருத்துவரின் உற்று நோக்கலுக்கும், நோயாளரின் உடன் வருபவர் சொல்லும் தகவல்களுக்கும் இடம் இருக்கின்றன. என்றாலும், அதில் கேள்விகள்தான் முக்கியமான பங்கு வகிக்கின்றன. கேள்விகளின் வழிதான் நோய் ஓர் உருவம் கொள்கிறது என்பது ஒன்றும் மிகையான கூற்றல்ல. நாம் அன்றாடம் பயன்படுத்தும் கருவிகளும், இந்த உலகு குறித்து நாம் உருவாக்கி வைத்திருக்கும் கருத்துகளும், மனித வாழ்வு குறித்த புரிதல்களும் கேள்விகள் வழியேதான் நடந்திருக்கின்றன.

           யோசிக்கும்போது  மனிதகுலத்தின் அனைத்து  செயல்பாடுகளுக்கும் அடிப்படையாக இருப்பது கேள்விகள்தான் என்கிற முடிவுக்கு வருவது ஒன்றும் சார்பானதல்ல. நோய் குறித்த, நோய் என்கிற சித்திரத்தை உருவாக்க  ஹோமியோபதிக்குள் கேட்கப்படும் கேள்விகள் ஏராளம் ஏராளம். எல்லா கேள்விகளும் பதிலை அடைந்துவிட்டன, அடைந்துவிடுகின்றன என்று சொல்லமுடியாது. திருப்திகரமான பதில்களைப் பெற்ற கேள்விகள் அதே பதில்களோடுதான் நீடிக்கும் என்றும் சொல்ல இயலாது. பதில்களாக வந்தடைந்த உண்மைகள் பொய்பிக்கப்படுவதற்கான (Falsification)  திறப்பைக் கொண்டுள்ளன. அதுவே அறிவியல் உண்மைகளின் அடிப்படைகளில் ஒன்றாகிறது.

       ஹோமியோபதியை நோக்கிக் கேட்கப்படும் கேள்விகளும் இந்த வகைமைகள் கொண்டவையாகவே எனக்கு தோன்றும். அவற்றில் தவறான கேள்விகள் என்று ஏதும் இல்லை என்றும் தோன்றும். ஹோமியோபதி துயரர் விசாரணை மேலதிகமும் கேள்விகளால் நிரம்பியுள்ள ஓர் உரையாடலாகவே அமைகிறது என்பது ஓர் வெளிப்படையான உண்மை என்றாலும் நான் மிகவும் சுவாரஸ்யமாகக் கருதுவது நோயாளர்கள் கேட்கும் கேள்விகளைத்தான்.  நீண்ட வினா வரிசை, நோயாளர் பதில்களின் மேல் மேலும் கேள்விகள் என வினாவும் விடையும்  ஒரு நெசவு இயக்கம் போல்  தொழில்பட்டு, மருந்து தேர்வு என்கிற கேள்விகளின் நோக்கம் நிறைவேறியதும், அதாவது  உரிய  மருந்தை வந்தடைந்ததும், ஹோமியோபதி மருத்துவர்  அவரது அறிவினா, அறியாவினா, ஐயவினா  எல்லாவற்றையும் நிறுத்திக் கொள்கிறார். 

                     அடுத்து நடப்பது ....ஓ ! இப்போது தொடங்குவது நோயாளர் சுற்றோ என்று எண்ண வைத்துவிடும் சிலசமயம். இவ்வளவு நேரம் எப்படியெல்லாம் கேட்டீங்க என்னவெல்லாம் கேட்டீங்க என்பதைப்போல் நோயாளர் மருத்துவரை நோக்கிக் கேள்விகள் கேட்கத் தொடங்கி விடுவார். மாணவரின் கேள்விகளுக்கு எந்த அளவிற்கு ஓர் ஆசிரியர் காது கொடுக்க வேண்டுமோ அந்த அளவுக்கு மருத்துவர் நோயாளருக்கு செவிமடுக்க வேண்டும். இந்த இடத்தில் மருத்துவர் நோயாளர் உறவு மேல் கீழானதாக (Vertical relationship)  இல்லாமல் கிடைமட்டமானதாக,சமதளத்தில் (Horizontal relationship) உள்ளவர்களாக  இருந்தால் நல்ல பலன் தரும்.



ஹோமியோபதியை நோக்கிக் கேட்கப்படும் கேள்விகள் தான் எத்தனை வகையானவை.   இந்த மருந்தை எப்படி உட்கொள்ள வேண்டும், உணவுக்கு முன்பா, பின்பா?  அல்லது வெறும் வயிற்றிலா எல்லா மருந்தும் ஒரே மாதிரியா வெள்ள வெள்ளயா  உருண்ட உருண்டயா இருக்கே எப்பிடி இந்த மருந்துதான்னு கண்டுபிடிப்பீங்க? இந்த மருந்து…. இவ்வளவு சிறிய அளவு மருந்து எனக்கு இருக்கும் இவ்வளவு தொந்தரவுகளை கேட்குமா?  இது போதுமா? ஹோமியோபதி உளவியல் மருத்துவமா? நாட்டு மருத்துவமா? காபி டீ சாப்பிடக்கூடாதா? பத்தியம் ஏதாவது இருக்கா?  சளி காய்ச்சல்னு இடையில ஏதாவது  தொந்தரவு வந்தா வேறு மருந்துகள் எடுத்துக்கலாமா? ஒன்னும் பண்ணாதுல்ல? பக்கவிளைவுகள், சைடுஎஃபெக்ட் இல்லைன்னாங்க, எவ்வளவு நாளில் சரியாகும் சொல்லுங்க? என்னென்னவோ  டெஸ்டெல்லாம் சொல்றாங்க அதெல்லாம்  வேண்டாமா? எனக்கு ஏன் இந்த நோய் வந்தது? எப்படி வந்தது? எனக்கு எந்த தவறான பழக்கமும் இல்லை. எந்த தப்பும் பண்ணல. எந்தப்பாவமும் பண்ணல. எங்க அப்பா அம்மாவும் நல்லவங்கதான்… முன்னோர்கள் எதாவது பண்ணியிருப்பாங்களோ? மன அழுத்தம் அதுதான்  இந்த  Stress அது காரணமா இருக்குமா?  இந்தக் காலத்துல பள்ளிக்கூடம் போற புள்ளங்களே  ஸ்டிரஸ்ங்கிறாங்க, சரியாயிடும்ல? இப்படி ஏராளமான கேள்விகள் .

                மருத்துவரின் நேரத்தின் அருமை கருதி, வரிசையாகக் காத்திருக்கும் சக நோயாளரின் மீது ஏற்படும் கருணையால் அப்போதைக்கு நிறுத்திக் கொள்கிறார்கள் நோயாளர்கள். தொலைபேசியில் தொடர்வதும் அடுத்தடுத்த சந்திப்புகளில் கேட்கப்படுவதுமாகக்  கேள்விகள் என்பவை எப்போதும் வற்றாத ஜீவநதி. எல்லா கேள்விகளும் பதிலை எதிர்பார்த்துக் கேட்கப்படுவதில்லை என்பதை நான் மிகவும் தாமதமாகவே புரிந்து கொண்டேன்.  சரியான பொருத்தமான பதில்களை  வேண்டி கேள்விகள் தொடுக்கப்படுவதில்லை. பல சமயங்களில்  ஓர் அப்படியா, ஒரு ‘ம்’ அல்லது ஏற்பதாக ஒரு தலை அசைப்போ, எல்லாம் சரியாயிடும் என்கிற ஒரு நம்பிக்கை வார்த்தையோ போதுமானதாக இருக்கிறது. எனவே கேள்விகள் மொழி வழியாக மட்டுமே அணுகப்படுகின்றனவா? என்பது கேள்விகள் குறித்துக் கேட்கப்படவேண்டிய முக்கியமான கேள்வியாகிறது.

                   அறிவுபூர்வமான தர்க்கபூர்வமான விடைகளைக் காட்டிலும்  நடைமுறையும் வாழ்க்கை அனுபவங்களுமே கேள்விகளோடு மேலதிகத் தாக்கம் செலுத்துகின்றன. நோய் குறித்த கேள்விகளும் ஐயங்களும் நோய் விலகியதும் இயல்பாக மறைகின்றன.  இப்ப இல்ல ... It's gone.. போயிந்தே !   என்னைச் சற்றே குறுகவைக்கும் கேள்வியும் வரும். குறிப்பாக குழந்தைகள் ஏதாவது ஓர் இடைவெளியில் ஆச்சரியத்தோடு இப்படிக் கேட்டுவிடுவார்கள்,   “ஏன் அங்கிள் இவ்வளவு புத்தகத்தையும் படிக்கிறீங்களா எல்லாம் தடி தடியா இருக்கே” குழந்தைகளைப் பயமுறுத்திவிட்டோமோ என்கிற உணர்வை உருவாக்கும் கேள்வி. இதற்கு பதிலேது?  

                   சரியாகத் தேர்வு செய்யப்பட்ட ஹோமியோபதி மருந்து நோயை நீக்குவதோடு கூட இன்னொரு பணியையும் செய்கிறது. மருத்துவரும் நோயாளரும் எதிர்பார்க்காத வகையில் நோயாளர் கொண்டிருந்த நோய் அனுபவத்தோடும் அது உருவாக்கியிருந்த கேள்விகளோடும் நோய் நீங்கிய அனுபவத்தோடும் உரையாடுகிறது. இந்த ரசவாதத்தை ஹோமியோ மருந்துகள் ஒவ்வொரு நலமான மனிதரிடத்திலும் உருவாக்குகின்றன. இந்த செயல்பாடு மருத்துவரை நோக்கிக் கேட்கப்படும் கேள்விகளையும் மாற்றிவிடுகின்றன.

                      நோயாளர் நலமானதும் வினாக்கள் வேறு வகையாக, வேறு தொனியில்  வெளிப்படுகின்றன.   ஏன் ஸார், எப்படி எனது நோய்குறிகள் எல்லாம் மறைந்தன ? அவை எங்கே போயின? இந்தச் சிறிய உருண்டைகளுக்குள் என்ன மறைந்து உள்ளது? என்ன விதமான ஆற்றல் இது?  ஹோமியோபதி ஏன் இன்னும் பரவலாக அறியப்படாமல் இருக்கிறது? என்ன மாயவித்தை செய்கிறீர்கள் நீங்கள்? 

                         இப்பொழுது இன்னொரு கேள்வி பிறக்கிறது. கேள்விகள் மாறுகிற போது மனிதர்கள் மட்டும் அப்படியே இருப்பார்களா என்ன? சிகிச்சைக்காக வந்த மனிதரை, நோயாளரை ஹோமியோபதி  அந்த மருத்துவ முறை குறித்து அறிவார்வம் கொள்ள வைக்கிறது.  ஹோமியோபதி நோயாளர் ஹோமியோபதி ஆர்வலர் ஆகிறார். இந்த வேலையையும் சிறிய அளவிலான  வெள்ளை  உருண்டைகளே செய்கின்றன. ஹோமியோ மருந்துகள் ஆற்றல் வடிவில் செயல்புரிகின்றன இல்லையா? ஹோமியோ இலக்கியங்களில் நலமாக்கல் கதைகளோடு இப்படி மனிதர்கள் உருமாறிய கதைகளும் இணைந்தே வந்து வாசிப்பை இனிதாக்குகின்றன. 

                ஒருவித சந்தேகத்தோடும், கீழ்நோக்கிய பார்வையோடும்  ஹோமியோபதி  சிகிச்சைக்காக இந்தத் துறைக்குள் அடியெடுத்து வைத்த எத்தனை எத்தனையோ அலோபதி மருத்துவர்களை, நலமாக்கல் தந்த அனுபவங்கள் அவர்களை ஹோமியோபதி மருத்துவர்களாக  மாற்றியிருக்கிறது . அதுமட்டுமல்ல பலர்  இந்த மருத்துவ முறைக்காகத் தங்கள் வாழ்க்கையையே  அர்ப்பணித்து அளப்பரிய பங்களிப்புகளை அளித்ததோடு ஒவ்வொரு ஹோமியோபதியரின் மேசையிலும், புத்தக அடுக்குகளிலும் நாளும் சிகிச்சைக்காகப்  பயன்படும் நூல்களாக,    அதன் மூலம் இன்றும் வாழும் அதிசயம் நடப்பது இங்கேதான். அலோபதி மருத்துவர்கள் தங்கள் துறை முன்னோடிகளை, மேதைகளைப் பெயர்களாக வாழ்க்கைக் குறிப்புகளாகப் படிப்பார்கள். சிலர் நினைவில் வைத்திருக்கலாம், ஆனால் ஹோமியோபதியில் மருத்துவர்கள் மட்டுமல்ல அதன் பயனாளருக்கும் மருத்துவ முன்னோடிகள் பற்றிய உணர்வுபூர்வமான வாழ்க்கைச் சித்திரங்கள் தெரியும். நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு டாக்டர் ஜே.டி. கெண்டும், பர்னட்டும், எஸ்.ஆர்.பாதக்கும்  அலோபதி மருத்துவர்களாகவே இருந்திருந்தால் அவர்களை எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் ?

 


                 நோயாளர், ஆர்வலர் என்பதைத் தாண்டி தொடர் ஹோமியோபதி கல்வியும் பயிற்சியும் கூர்ந்த கவனிப்பாலும் இப்போதும் தொடர்கின்றன கேள்விகள். ஆனால், வேறுவிதமாய். மருத்துவம் என்னும் மனித எத்தனத்தின் அடிப்படைகளை ஆழமாக, இன்னும் உண்மைகளை நோக்கி நெருக்கமாக முன்வைக்கப்படும் கேள்விகளாக, நோய் என்றால் என்ன? அது ஒர் உயிரியில் எப்படி வெளிப்படுகிறது? அதைக் கணிப்பது, அவதானிப்பது எப்படி ?  நோயை உற்று நோக்குவது என்றால் என்ன? மருந்துகளை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்வது எப்படி? ஒரு மருந்தை நோய்க்குத் தீர்வாக்குவது எது ? என்று கேள்விகள் மற்றொரு தளத்திற்கு நகர்ந்து விடுகின்றன. இப்படியான கேள்விகளுடன் பயணிப்பதும் அது குறித்து நூல்களில் கற்பதும் அனுபவத்தின் வழி கற்பதும் அவரவர் ஆர்வம், உழைப்பு சார்ந்தும்,   ஹோமியோபதியில் அதற்கு ஏற்ப அவரவர் இடமும்  அமைகிறது. 

                 ஹானிமன் ஒவ்வொரு மருத்துவரும் மருந்து நிரூபணத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு நோய் அனுபவத்தைப் பெறுவதன் மூலமாகவே நோயையும் மருந்தையும் உணரமுடியும் என்கிறார். மருந்து நிரூபணம் குறித்த வழிகாட்டல்களில் (ஆர்கனான் மணிமொழி 141) மருத்துவனும் மருந்து நிரூபணத்தில் பங்கேற்று செயற்கை நோயை அனுபவித்துப் பார்க்கவேண்டும் அப்பொழுதுதான் நோய்க்குறிகளைப் புரிந்துகொள்ள முடியும் என்கிறார். உற்றவன் (நோயாளர்) நிலையை தீர்ப்பான் (மருத்துவன்) அடையவேண்டும் என்கிறார். 

                 மருத்துவர்கள், மாணவர்கள், பயனாளர்கள், ஆர்வலர்கள், ஆதரவாளர்கள், ஹோமியோபதி நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த ஹானிமன் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்ளும் இந்நேரத்தில் ஒரே ஒரு கேள்வி கேட்கட்டுமா? ஹோமியோபதியில் ஒருவருக்கான இடம் எது? அதில் உங்களுக்கான இடம் எது?

கருத்துகள் இல்லை: