
என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
31 மே, 2025
29 மே, 2025
27 மே, 2025
இன்றைய புத்தகம்
*மேலாண்மை பொன்னுச்சாமி முத்துக்கள் பத்து*
🟥முத்திரைக் கதை வரிசை
மேலாண்மை பொன்னுச்சாமி, கரிசல் எழுத்தாளர்களில் தனித்துவமானவர். அற்புதமான கதை சொல்லி, அவர் கையாளும் கதைக்கருக்களும், கதைப்பின்னலும், மொழிநடையும் நகரத்து எழுத்தாளர்களுக்கு வாய்க்காதவை. மேலாண்மை பொன்னுச்சாமி மண்ணையும், மனிதனையும் யதார்த்தமாக நேசிக்கிறவர். அப்பாவிகளாக, அன்பின் பிரவாகமாக இருக்கும் மனிதர்களுக்கு இச்சமூகம் செய்யும் கொடுமைகளை மையமாகக் கொண்டு கதையாக்கங்களைச் செய்துள்ளார்.
🟥கிராமங்களில் தொழில் உறவுகளுக்குள் இருந்த பெருந்தன்மையும், இரக்கமும், அன்பும் பொருளாதாரப் பெருக்கத்தால் இன்றைய கிராமத்துக் கிணறுகளைப் போல் வறண்டுவிட கிராமங்கள் இன்று மனிதத் தன்மையற்ற நிலைக்கு மாறியுள்ளதை மேலாண்மை அழகாகப் பதிவு செய்துள்ளார்.
🟥இத்தொகுதியில் உள்ள மேலாண்மையின் முத்திரைக் கதைகள் எந்த எழுத்தாளனும் தொடாத பகுதிகள். ஒரு துளிக்கூட பொய் கலவாத விவரிப்புகள். அலாதியான உத்திகள். யாராலும் அழுத்தமாகப் பதிவு செய்யப்படாத வாழ்க்கை முறை.
மேலாண்மையின் கதைகள் கண்களில் இரத்தத்தை வரவழைக்கும்; இதயத்தில் கண்ணீரை கசியவைக்கும்.
அம்ருதா 150
🔴உங்களுக்காக அம்ருதா பதிப்பகத்தின் மற்ற புத்தகங்களளும் 🏁சிறப்பு தள்ளுபடி விலையில்,,
அழைக்க ☎️ 9444070000 / 04424353555
பெற்றுக்கொள்ளுங்கள் சிறப்பு சலுகைகளை...
#booknow #SALE #chennai #reading #writer #writingcommunity #Monthly #magazine #education #knowledge #goodhabits #morninghabits #offers
26 மே, 2025
இன்றைய புத்தகம்
" கொற்றவை ".
ஜெயமோகன். தமிழினி பதிப்பகம் முதல் பதிப்பு 2005 .விலை ரூபாய் 280 மொத்த பக்கங்கள் 600.
"# இது ஒரு இலக்கிய புத்தகம் இலக்கிய நாவல் என்றும் சொல்லலாம்.
நினைவு தெரிந்த வயதில் இளங்கோ அவர்கள் திரைக்கதை வசனம் எழுதிய கண்ணகி திரைப்படம் பார்த்திருக்கிறேன் .கண்ணம்மாள் நடித்தது கண்ணகியாக .திரைக்கதையின் தந்தை என்று சொல்வார்கள் இளங்கோ அவர்களை.
அதற்குப் பிறகு பாக்யராஜ் அந்த பெயரை எடுத்துக் கொண்டதாக நினைவு.
அடுத்து எனது மாமா வீட்டில் ம.பொ .சிவஞானம் அவர்கள் எழுதிய சிலப்பதிகாரம் புத்தகம் படித்து கண்ணகி குறித்து கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து கொண்டேன் .
பிறகு பூம்புகார் சினிமா பார்த்து விஜயகுமாரி எஸ்எஸ் ராஜேந்திரன் ராஜஸ்ரீ அவர்கள் நடித்த பூம்புகார் சினிமா பார்த்து , கலைஞரின் தமிழ் மீதும் தமிழ் எழுத்துக்கள் மீதும் கண்ணகி மீதும் மாறா காதல் கொண்டேன் .
அதன் பிறகு எனது முகநூல் தோழி அடிக்கடி நியாயப்படுத்தும் நினைவுபடுத்தும் அப்துல் ரஹ்மான் எழுதிய ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது.
சிலம்பு பால்நகையாள் வெண்முத்துப்பல்நகையாள் கண்ணகி தன்
கால்நகையால் வாய்நகைபோய்க் கழுத்துநகை இழந்தகதை கவிக்கோ அப்துல் ரகுமான் நல்லபதிவு.
சென்ற வாரம் கலைஞரின் பூம்புகார் புத்தகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தஞ்சை பல்கலைக்கழகத்தின் மூலமாக வெளியிடப்பட்ட புத்தகத்தை வாசித்து பதிவிட்டிருந்தேன் .அந்த புத்தகத்தின் தலைப்பு
Tale of the Anklet .
கண்ணகி குறித்தான பலரின் சில புத்தகங்களையும் வாசித்திருக்கிறேன்.
கண்ணகியை குறித்து நான் அறிந்த விஷயங்களை எல்லாம் அப்பால் ஒதுக்கி விட்டு தள்ளிவிட்டு புதுவிதமாக எனக்கு இந்த கொற்றவை தந்திருக்கிறார் ஜெயமோகன் அவர்கள்.
வாங்கி வைத்து பல நாட்கள் ஆன பிறகும் இன்று தான் இந்த புத்தகத்தை முழுமையாக முடித்து இருக்கிறேன். முடித்த புத்தகத்தின் விமர்சனப் பதிவாக என்னால் எழுத முடியாது .படித்துவிட்டேன் என்று
தோற்றத்தைக் கொள்ளலாம் அவ்வளவே.
ஐம்பெரும் பூதங்கள் ஆக்கி ஐம்பெரும் பூதங்களில் முதன்மையானதான தீ இதனை திருப்பதமாக வைத்து ஒரு பதமாக சொல் வடித்து முன்னரே போல முதன்மையாக தந்திருக்கிறார் அதனை முதலில் பார்த்து விடுவோம்.
உண்ணும் அனைத்தையும் விண்ணுக்குக் கொண்டுசெல்லும் ஓயாப்பெருநடனமே காப்பியம் என்க, மண்ணில் அதற்கு உணவாகாத எதுவும் இல்லை. தீண்டும் அனைத்திலும் தாவி ஏறி உண்டு தன்னைப் பெருக்கிக் கோடிகோடி இதழ்விரித்து எங்கும் நிறையும் முடிவற்ற நாக்கு அது துடிதுடித்தும் தவிதவித்தும் உரையாடிக் கொண்டிருக்கிறது ஊழியூழிக் காலங்களாய், அது கூறுவது அழியாத ஒற்றைச் சொல்லையே என்றறிந்தனர் மண்ணை மீறி விண்ணில் உளம் எழுந்த அறவோர். திசையழிந்த வெளியெங்கும் நிரம்பிய ஒளியே மண்ணில் தீ என உறைகிறது என்று உணர்ந்தனர். தீ தொட்டபின் எதுவும் அழுக்கு அல்ல. எதுவும் இழுக்கும் அல்ல ஊன்வாய் திறந்து மண்ணில் விழும் உடல் உண்டு உயிர்த்து கண்டு கற்று அடையும் அழுக்குகளை யெல்லாம் தீயுண்ணக் கொடுத்தபின்னரே அதனுள் சிறையுண்ட சீவம் தன்னிலை இழந்து சிவமாகும் என்றனர். தீயுண்ணும் அனைத்தும் தீய்மை எனப்பட்டது. தீயுண்ணவே தூய்மை என்றாயிற்று. தீ எனும் ஒலியே தீங்குக்கும் தீஞ்சுவைக்கும் சொல்லாயிற்று. தீ உறையாத பரு ஏதும் இல்லையென்றனர் அறிவர். பச்சைப்பசுங்குருத்திலும் மென்மலர் இதழிலும் குளிர்ச்சுனை நீரிலும் தாய்முலைப்பாலிலும் தீ உறைகிறது என்றனர். ஒவ்வொன்றிலும் உறையும் தீயை அப்பொருளின் ஆணவம் அணைகட்டி அணைத்து நிறுத்துகிறது. அணை மீறுகையில் அது எரியும் எரியாகிறது என்றறிந்தனர். சொல்லில் உறையும் தீ தன் சிறை மீறுதலே காப்பியம் என்றனர் கற்றோர். காப்பியங்களுக்கு அவியாகி அவிதற்பொருட்டே மண்ணில் மாந்தர் பிறந்திறப்பதாகச் சொன்னது மண் மறைந்த பேரிலக்கண நூல் ஒன்று.
Bகனன்றெரிந்து கரியாகி உப்பாகி மண்ணில் மறைவர் மாந்தக் கோடிகள் மாசற்று ஒளிபெற்று மீள்பவர் சிலரே அவர்களை எரிமலரிதழ் நடுவே இலங்கும் இறைவடிவென்பர் சுற்றோர். ஆம், அவ்வாறே ஆகுக!
****
1987ல் இப்படைப்பின் கரு தனது நெஞ்சில் முகிழ்த்தது என ஆசிரியர் சொல்லுகின்றார். தனது 25 ஆம் வயதில் இந்த கொற்றவையை முற்றும் படைத்து வெற்றி கலப்பில் களிப்பில் மகிழ்ந்திருக்கிறார்.
கவிஞர் ஆற்றூர் ரவிவர்மாவின் நண்பரான மறைந்த உண்ணிராஜா என்னும் கவிஞர் சிலப்பதிகாரக் கதையை மலையாளத்தில் கதகளிக்குரிய 'ஆட்டக்கதை ' வடிவில் எழுதினார். அது கள்ளிக்கோட்டைப் பல்கலையில் பாடமாகியது. அதற்கு மாணவர் நலம் கருதிச் சிலம்பைப்பற்றிய விரிவான ஓர் அணிந்துரையை ஆசிரியர் எழுதியிருக்கிறார்.
அந்த நூலைவிடப் பெரிதாக எழுதிய அவ்வுரை அமைந்தது.
அதில் கேரளப் பண்பாட்டுக்கும் சிலம்புக்கும் இடையேயான உறவையும் கண்ணகி மதுரைக்கு எரியிட்டது குறித்த தன் நோக்கையும் விரித்தெழுதியிருந்தார்.
சிலம்பை நாடகவடிவில் எழுதவேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டதன் காரணமாக பல வடிவங்களில் பல காலமாக எழுதிக் கைவிட்டபின் இப்போதைய வடிவம் கண்டு எழுதி இருக்கிறார் ஆசிரியர்.
இதை எழுதி முடிக்க நான்கு ஆண்டுகள் ஆயின.
கண்ணகி கதையை புகாரில் தொடங்காமல் குமரியில் தொடங்கி இருப்பது சிறப்பு.
கொற்றவை என்பது மற்ற படைப்புகளில் இருந்து மாறுபட்ட படைப்பாக இருக்கின்றது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
நன்றி: திரு கருணா மூர்த்தி அவர்கள் மற்றும் முகநூல்
21 மே, 2025
20 மே, 2025
இன்றைய புத்தகம்
.
இன்றைய வாசிப்பு ""இலக்கற்ற பயணி" "எஸ் .ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதியது. தேசாந்திரி பதிப்பகம் .மொத்த பக்கங்கள் 184. விலை ரூபாய்175/--.
மூன்றாம் பதிப்பு 2018 பதிக்கப்பட்டது.
இலக்கற்ற பயணி என்று கூறிக்கொண்டு இதனை எழுதினாலும் ,இலக்கு,விளக்கம் லட்சியம் எல்லாம் கொண்டுதான் இவர் பயணித்து வழி எல்லாம் கவனித்து நமக்கு இந்த புத்தகத்தை அளித்திருக்கிறார்.
90 சதம் இவர் பயணம் சென்ற இடங்களை எல்லாம் நானும் பயணம் செய்திருக்கிறேன் .இவரின் பயண இலக்கு வேறாக இருந்தாலும் எனது பயண இலக்கு வேறாகத் தான் இருந்தது .எனது பயணங்களுக்கு சுற்றுலா ,இன்ப உலா, இன்பச் செலவு, புண்ணிய யாத்திரை உறவினரைக் காண என்று பல காரணங்களை முன்னிட்டு எனது பயணம் மேற்கொண்டேன்.
அவர் தன் கண் கொண்டு கண்ட காட்சிகள் வேறு, நான் என் கண் கொண்டு கண்ட காட்சிகள் வேறு .என் கண்கள் ஊனக் கண்கள்.அவர் கண்கள் ஞானக் கண்கள்.திறக்கும் அகக்கண் கொண்டு ஆய்வு கண் கொண்டு அவர் கண்டதையெல்லாம் இந்த புத்தகத்திலே மீண்டும் ஒருமுறை நான் 'சென்று ' காண செய்தேன் .அளவற்ற இன்பம். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத இன்பத்தை நான் சென்றதை காட்டிலும் இந்த புத்தகத்தைப் படித்ததனால் பெற்றேன்.
கண்ணதாசனின் ஒரு பாடல் வரிதான் நினைவுக்கு வருகிறது
."நான் பார்த்த பெண்ணை நீ பார்க்க வில்லை ,
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை .
என் விழியில் நீ இருந்தாய்
உன் விழியில் நான் இருந்தேன் "
என்று எனக்கு இப்போது சொல்லத் தோன்றுகிறது.
சிறுகதை தொகுப்புகள், நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் திரைப்பட நூல்கள், குழந்தைகள் நூல்கள் ,உலக இலக்கியப் பேருரைகள் வரலாறு நாடகத் தொகுப்பு, நேர்காணல் தொகுப்பு ,மொழிபெயர்ப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் என்று பல தளங்களில் நூல் செய்து பயணிக்கின்ற இவர் இந்த " "இலக்கற்ற பயணி "என்கிற புத்தகத்தை நமக்கு அளித்துள்ளார்.
மொத்தம் 27 தலைப்புகளில் அத்தியாயங்களில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது
.
பயணமே வாழ்தலின் இனிமையை புரியவைக்கிறது .கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக இலக்கில்லாமல் சுற்றித்திரிந்த , ஏதோ ஒரு இலக்கோடு இலக்கில்லாமல் , சுற்றி திரிந்த எஸ். ராமகிருஷ்ணன் தனது பயண அனுபவங்களை எல்லாம் சிறந்த கட்டுரைகளாக பதிவு செய்திருக்கிறார். இவை வெறும் பயணக்குறிப்புகள் மட்டுமல்ல .இதன் வழியே இந்திய சமூகத்தின் அரசியல் பொருளாதார பண்பாட்டு நிலைகள் துல்லியமாக பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதே இதன் தனித்துவம் ஆகும்.
1) சாலை கற்றுத் தருகிறது......
"டெல்லி சுல்தான் பக்தியார் கில்ஜி நாளந்தவை எரித்து அழித்த போது அங்கே நிலவறையில் இருந்த அரசிகளும் எரிந்து கருகிப்போயின .அப்படி எரிந்து போனதால் எஞ்சிய அரிசியை அந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள் .அது வெறும் அரிசி அல்ல .ஒரு வரலாற்று காட்சி. கருகிய அரசியல் இந்திய வரலாற்றின் கடந்த காலம் எழுதப்பட்டிருக்கிறது" என்று வறுத்தத்தோடு ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
பயணம் கற்றுக்கொடுக்கும் முதல் பாடமே "உடலை ஆரோக்கியமாக" வைத்திருக்க வேண்டும் என்பதுதான். நாக்கிற்கு அடி பணியக்கூடாது. தண்ணீரும் உணவும் மட்டும் கவனமாக பார்த்துக் கொண்டு விட்டால் எந்த ஊருக்கும் எப்போதும் போகலாம், எவ்வளவு வேண்டுமானாலும் சுற்றித் திரியலாம் என்று நுணுக்கம் தருகிறார் ஆசிரியர்.
2) தண்ணீரின் சிறகுகள்
3)பூமியின் கண்கள்.....
கனடாவில் ஒன்டாரியோ , சிம்கோ,நானும் கண்டு வந்து இருக்கிறேன் .இவரின் கண்களுக்கு *தண்ணீருக்கு சிறகுகள்* இருப்பதை கண்டுகொண்டதாக எழுதுகிறார்.
ஏரியின் உள் நீர் தெய்வம் இருப்பதாக நம்பிக்கை எல்லா இடங்களிலும் காணப்படுகிறது .ராமநாதபுரம் மாவட்டத்தில் ராஜசிங்கமங்கலம் என்ற ஒரு ஊரில் நாரை பறக்காத 48 மடை கண்மாய் இருப்பதாக குறிப்பிடுகிறார்.
மீன்பிடிப்பு தான் ஏரி சார்ந்த வாழ்வின் பிரதான தொழில் .பூர்வகுடி மக்கள் இந்த ஏரிகளுக்கு ,சுமார் 31 ஆயிரம் ஏரிகள், வைத்திருந்த பெயர்களெல்லாம் மாற்றிவிட்டு ஆட்சியாளரின் தாத்தா மாமனார் அவர் காலத்தைய மிலிட்டரி ஜெனரல், அவரது மனைவி, மச்சினன் என்று பலரது பெயர்கள் ஏரிகளுக்கு சூட்டப்பட்டு இருப்பதாக வருத்தத்தோடு குறிப்பிடுகிறார்.
*We do not see nature with our eyes but with our understandings and our hearts*என்று வில்லியம் ஹாஸ்லிட்டின் கூறுகிறார்.
கனடா வாசிகள் நாயை நேசிப்பது போல வேறு எவராலும் நாய்களை நேசிக்க முடியாது .தண்ணீரின் வயதை சொல்ல முடியாது .
" ஏரி என்பது பூமியின் கண்கள்; மரங்கள் அதன் புருவங்கள் "என்று இயற்கையியலாளர் ஹென்றி டேவிட் தோரூ தனது "வால்டன் "நூலில் எழுதி இருப்பதை நினைவு கூறத்தக்கது.
4) சமண நடை....
மதுரையை சுற்றியுள்ள பல இடங்களில் சமண குகை தளங்கள் காணப்படுகின்றன. குன்னத்தூர் மலை என்றழைக்கப்படும் இதில் உதயகிரி அஸ்தகிரி என்று இரண்டு வகைகள் உள்ளன. இரண்டாயிரம் வருடங்களின் முன்பே அங்கே சமயத்துறவிகள் தங்கி வாழ்ந்திருக்கிறார்கள். கல்லாலான படுக்கைகள் காணப்படுகின்றன. தொன்மையான மூன்று தமிழ் பிராமி கல்வெட்டுகள் காணப்படுகிறது ."சமணம் மதம் மட்டுமன்று .அது தமிழ்மொழியின் இலக்கணத்திற்கும் இலக்கியத்திற்கும் நிறைய வளமை சேர்த்திருக்கிறது. தமிழ் பண்பாட்டின் சில முக்கிய கூறுகள் சமணம் உருவாக்கி தந்தவையே.தமிழ் இலக்கியத்தின் முன்னோடி பங்களிப்பு சமணம் தந்ததே . நற்காட்சி நல்லொழுக்கம் நல்லறிவு ஆகிய மூன்று அறநெறிகளை தந்தது சமணம். அதன் வாழ்வியல் நெறிகள் உயர்வானவை" என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
5) காலத்தின் முன் நிற்பது..
கொனார்க் குறித்து எழுதப்பட்டுள்ளது. அங்குள்ள ஒட்டகச்சிவிங்கியின் சிற்பம் சிறப்பு மிக்கது. கொனார்க்கில் இரண்டு அதிசயங்கள் ;ஒன்று சூரியனின் கோவில், மற்றது கலவி சிற்பங்களின் கூட்டுக் கலைக்கூடம் .பாலின்பத்தின் களி, உணர்ச்சிப் பெருக்கும் ,உன்மத்தம் கிறங்கிய உடலுமாக கொனார்க் பார்வையாளர்கள் அந்தரங்கமான பார்வையாளனை சுற்றி ஓர் அந்தரங்கமான அதிர்வலை உருவாக்கக் கூடியது என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
தொழு நோய்க்கும் சூரியனுக்கும் ஆன உறவை சூரிய கோவில் காட்டுகிறது .சிற்பத் தொகுப்பு ஒன்றில் தொழுநோயாளி ஒரு பெண்ணுடன் கலவி யில் இடம்பெறும் சிற்பமும் இருக்கிறது. சூரியனுக்கு சாத்தப்படும் மலர் எருக்கம்பூ; அது மருத்துவரீதியாக தொழுநோயை குணமாக்கக் கூடியது.
"கலவி சிற்பங்கள் தமிழ்நாட்டிலும் சில கோவில்களில் காணப்படுகிறது. அவற்றில் உடல் முக்கிய விஷயமாக இருக்காது. ஆனால் கொனார்க்கின் கலைச் சிற்பங்கள் பித்தேறிய நிலையில் கொண்டாட்ட சிற்பங்களாக ஒளிர்கின்றன உ.டல் வேட்கையில் எண்ணிக்கையற்ற நிலைகள் சூட்சுமங்கள் லயப்பு யாவும் சிற்பத்தில் உயிரோட்டமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன .காமம் குறித்த திறந்த புத்தகம் என்று இந்த கோயிலை குறிப்பிடலாம் "என்று ஆசிரியர் கூறுகிறார்
6) திருக்கோகர்ணத்து ரதி...
தமிழ்நாட்டில் பல இடங்களில் பல கோயில்களில் ரதி சிற்பம் காணப்படுகிறது. ஆனால் எல்லா சிற்பங்களும் திருக்கோகர்ணத்து சிற்பம் போல் இல்லை என்று ஆசிரியர் பல உதாரணங்களோடு எடுத்துக் காட்டுகிறார்.
7) போர் ஹேயின் வகுப்பறை..
இந்தியாவைப் பற்றி அதிகம் எழுதிய ஸ்பானிய எழுத்தாளர் . அவரது எழுத்தின் அடிநாதமாக ஒலிப்பவை தத்துவம் பாடல் மற்றும் கவிதை உணர்வு .பௌத்தம் குறித்து ஆழ்ந்து அறிந்திருக்கிறார் .*மணல் புத்தகம் , கனவு புலிகள் *என்ற அவரது படிமங்கள் அபாரமானவை .அவரது சிறுகதைகள் கவிஞர் பிரம்மராஜன் அவர்களால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு இருக்கின்றன "என்று ஆசிரியர் கூறுகிறார்.
I can't sleep unless I am surrounded by books என்பது போர் ஹெயின் புகழ் பெற்ற வரி.
8) ஷேக்ஸ்பியரின் முன்னால்.
ஸ்ட்ராட் போர்ட் நகரில் 60 ஆண்டு காலமாக இங்கே ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் தொடர்ச்சியாக நடத்தப்படுவதாக அறிவித்தார்கள்.
மேடையில் குளியல் காட்சி .குளித்துவிட்டு இளவரசி கேத்தரின் ஆடைகள் இல்லாமல் நிர்வாணமாக எழுந்து நின்று மாற்று உடைகளை சுற்றிக் கொண்டாள் .அரங்கில் யாரோ எச்சில் விழுங்கும் சத்தம் துல்லியமாக கேட்டது என்கிற வரிகளில் அந்த ஊர் மக்களின் நாடக ரசிகை தன்மை புரிகிறது. Wwhen we are born we cry that we are come to this great stage of fools என்ற ஷேக்ஸ்பியரின் வரிகள் நினைவுக்கு வருகிறது.
10) ஹரித்துவாரில் பெய்யும் மழை..
சிரபுஞ்சியில் அதிக மழை பொழிகின்ற இடமாக இருந்தாலும் ஹரித்வாரில் கங்கை நதி ஓரத்தில் பொழிகின்ற மழை அழகோடு காணப்படுகிறது என்பதாக ஆசிரியர் சொல்கிறார்.
11) எல்வின் காலடிகள்.
ஒரிசாவின் குழப்பத்தின் அருகிலுள்ள பழங்குடியினரின் வாரச்சந்தை குறித்து ஆசிரியர் எழுதுகிறார் இரண்டு மாறுபட்ட உலகின் நடுவில் இருப்பது போலவே இருக்கிறது .நகரில் இருந்து கொண்டுவரப்பட்ட எல்லா பொருட்களும் டூப்ளிகேட் .அதேநேரம் பழங்குடி மக்கள் விற்பனைக்காக வைத்திருப்பவை அத்தனையும் இயற்கையாக விளைந்த வை" என்ற மாறுபட்ட கோணத்தில் கண்முன்னே சமர்ப்பிக்கிறார் .எனது அமெரிக்கப் பயணத்தில் (farmers market) விவசாயிகள் சந்தை என்கிற பகுதிக்கு சென்று இந்த உண்மையை நான் கண்டறிந்து இருக்கிறேன்.
12) கொற்கையில் கடல் இல்லை.
கடல் உள்வாங்கியதால் சுமார் 10 கிலோ மீட்டர் அளவில் கொற்கை துறைமுகம் கடலால் விழுங்கப்பட்டு விட்டது .பாண்டிய மன்னனின் துறைமுகமாக விளங்கிய கொற்கை ,வாணிபத் தளமாக இருந்ததாக குறிப்பிடுகிறார் ஆசிரியர். அக்கசாலை எனப்படும் பண்டைய நாணயச் சாலை இங்கே இருந்திருக்கிறது.சங்க இலக்கியங்கள் பலவும் கொற்கை துறைமுகத்தை போற்றிப் பாடுகின்றன.
13) கொடும்பாளூர் ஒற்றை மயிலும்
14) கபிலரும் மருதனும் காற்றில் வாழ்கிறார்கள் .
வடக்கிருந்து கபிலர் உயிர் நீத்த இடமும் பாரிக்காக பல கவிதைகள் இயற்றிய விதமும் அழகாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
15) துறவின் அழகியல்
கழுகுமலை குறித்து கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை குறித்து மிக அழகாக ஆசிரியர் விவரிக்கிறார்.
16) தயா ஆற்றின் கரையில்...
ஒரிசாவில் உள்ள இந்த தெளலியில் அசோகரது கல்வெட்டு காணப்படுகிறது. ஒரிசா தான் பழைய கலிங்கம் .கலிங்கத்தை வென்ற கதையைப் பாடுவதே கலிங்கத்துபரணி .இதுகுறித்து அழகாக ஆசிரியர் சொல்லி செல்கிறார்
17) கூட்ஸ் பயணம்
18)தனுஷ்கோடி.
நான் ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது வீசிய புயல் காரணமாக தனுஷ்கோடி காணாமல் போய்விட்டது .அது குறித்த ஆசிரியரின் பார்வை கண்களில் சோகத்தையும் கண்ணீரையும் ஒருங்கே வர செய்கிறது.
19) ரயில் ஓடும் தூரம்
20)விழிக்கும் ஏரி
21) மலை தோன்றுகிறது
22) ஸ்ரீரங்கப்பட்டின ஆறு ..
நானும் சென்று கண்டு களித்திருக்கிறேன். ஸ்ரீரங்கப்பட்டினம் மிகப் பழமையான ஊர் திப்புசுல்தானின் கோடை மாளிகையும் அவரது சமாதியும் இந்த ஊரில்தான் உள்ளன .சங்மா என்ற இடத்தில் காவிரியின் கூடுதுறை உள்ளது
மிக அழகான இடங்களில் ஒன்று.
23) ரிவேரா ஓவியங்கள்..
ரிவேரா வின் ஓவியங்கள் குறித்து சிலாகித்துப் பேசுகிறார் ஆசிரியர்.
24) நவகண்டம்.
தன் கழுத்தை தானே அறுத்து பலியிட்டுக் கொள்ளும் மரபு தமிழகத்தில் தொன்மையாக இருந்து வருகிறது .தன் கழுத்தை தானே அறுத்து பலியிட்டுக் கொள்வதையே நவகண்டம் என்பார்கள். இது ஒரு வீரச்சாவு .சாமுராய் வீரர்கள் வயிற்றை கிழித்து தற்கொலை செய்து கொள்வார்கள் .அதற்கு பெயர் ஹராகிரி. ஆவிப்பலியை மெய்ப்பிக்கும் சிற்பங்களை கொங்குநாட்டில் காணமுடிகிறது என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.
25) மெல்போர்ன் குளிரில் சிறு நடை..
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பனி குளிர் குறித்து ஆசிரியர் சிலாகித்துப் பேசுகிறார் .மெல்போர்ன் மலர் போல் சிரிப்பவள் இவளா என்கிற ஒரு திரைப்பட பாடல் நமது கவனத்திற்கு வந்து போகாமல் இருக்காது.
இங்கு உள்ள சிறைச்சாலையை சுவர்கள் பல எழுத்துக்களால் நிரம்பியிருக்கும். தஸ்தாயெவ்ஸ்கி "மரணவீட்டின் குறிப்புகள்" என்று ஒரு குறு நாவலை எழுதி இருப்பார் .அது சைபீரிய சிறைச்சாலையை பற்றியது .அதுபோல எண்ணிக்கையற்ற கதைகள் இந்த சுவர்களுக்குள் புதைந்து இருப்பதை உணர முடிவதாக ஆசிரியர் சொல்வார்.
25) நயாகரா முன்னால்...
மூன்று நாட்கள் நான் என் மனைவி மக்களோடு நாயகராக முன்னால் தங்கியிருந்த நினைவு தான் ,எனக்கு இந்த கட்டுரையை படிக்கும்போது நினைவுக்கு வருகிறது ."வாழ்விலே ஒரு முறை" என அசோகமித்திரன் கதை ஒன்றுக்குத் தலைப்பு வைத்திருப்பார்; அதுவும் நினைவுக்கு வருகிறது .ஆறு மாதம் பனியாகவும் ஆறு மாதம் நீர்வீழ்ச்சியாகும் காணப்படுகின்ற நயகரா ஒரு அற்புதமான நீர்வீழ்ச்சி .இதனை ஆசிரியர் சொல்லுகின்ற வகையிலேயே சுவைத்துப் பார்க்க வேண்டும்.
26) சிங்கப்பூரில் 5 நாட்கள்.
சிங்கப்பூரில் நான் மூன்று நாட்கள் தான் தங்கி இருந்தேன். நான் கண்டதையும் நான் காணாத தையும் அதிகம் ஆசிரியர் விவரிக்க விவரிக்க படிக்கப் படிக்க சுவையாக இருக்கிறது இந்த கட்டுரை.
27) ஹம்பியில் நிழல்கள் உரையாடுகின்றன...
ஹாப்பி ஒருவரை சென்று பார்க்க வேண்டிய இடம் நானும் சென்று பார்த்து இருக்கிறேன் .ஆசிரியர் கண்ணோட்டம் வேறு .
விஜய நகரப் பேரரசின் நினைவுச் சின்னமாக உள்ளஹம்பியை unesco உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றாக பராமரித்து வருகிறது .ஹம்பியின் சிறப்புகளில் ஒன்று இங்குள்ள விருபா ஷா கோயில் .இதன் கோபுர சிற்பங்கள் அற்புதமானவை .விஜயநகர கட்டடக் கலையின் உன்னதம் என்று ஹம்பியைக் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
ஒரு அருமையான கவிதையோடு இந்த கட்டுரையை முடித்து இருப்பார் அந்த கவிதை இதுதான்.. நமது அகநானூறு போல ஆந்திரத்து அகநானூறு பாடல் இது.
*பெண்ணே !
காதலனைத் தேடி நள்ளிரவில் மெல்ல நடந்து செல்வதைத் தவிர்.
நள்ளிரவில் ஏற்றப்படும் சிறு விளக்கு தொலைவில் இருப்பவர்களுக்கு கூட
தெரிந்து விடுவது போல
ஒளி விட்டுத் திகழும் உன் முகப் பொலிவும்
பொன்மேனி கட்டழகும்
உன்னை க்காட்டிக்கொடுத்துவிடும்"*
"இருளில் ஒளிரும் சிறு விளக்கு என்ற உவமை காதலுற்ற பெண்ணிற்கு மட்டுமானதன்று, கால அபிமானங்களை மீறி ஒளிதரும் விளக்காக மீதமிருக்கும் ஹம்பிக்கும் பொருந்தக்கூடிய ஒன்றே"என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
ஒரு இலக்கோடு நாம் இந்த "இலக்கற்ற பயணி"யின் புத்தகத்தைப் படித்து மகிழ்வோம் வாருங்கள்.
நன்றி: திரு கருணா மூர்த்தி அவர்கள், திரு எஸ்ரா அவர்கள் மற்றும் முகநூல்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)