" பத்தாயிரம் மைல் பயணம் ".
வெ .இறையன்பு. நியூஸ் செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் வெளியீடு. முதல் பதிப்பு 2018. விலை ரூபாய் 265. மொத்த பக்கங்கள் 306.
# இது ஒரு பயண நூல். பயண கட்டுரை என்று சொல்லலாம் .பயணங்களால் கிடைக்கக்கூடிய அடையக்கூடிய கோடி நன்மைகள் என்ன என்பதையும் சுட்டிக்காட்டி எழுதப்பட்ட புத்தகம் இது.
ஓராண்டுக்கு முன்னதாக ஆயிரம் மைல் பயணம் என்கிற சுஜாதா அவர்கள் எழுதிய புத்தகத்தை படித்தேன் .கோயில் குளங்களாக சுற்றிக்கொண்டு வந்த புத்தகம் அது .தமிழ்நாடு முழுக்க ஆயிரம் மைல் அளவிலேயே சுற்றி பயணம் செய்த புத்தகமது .
இது பயணங்கள் குறித்த புத்தகம் என்று சொல்லலாம்.
பயணம் தருகின்ற பயன்கள் குறித்து கட்டுரை புத்தகம் என்று சொல்லலாம். பத்தாயிரம்
மைல் பயணம் என்பது ஆசிரியர் இறையன்பு அவர்கள் மேற்கொண்ட பயணத்தின் காரணமாக எழுதப்பட்ட புத்தகமா என்று நினைத்து தான் இதை வாசிக்க எடுத்தேன் .நாமும் அவர் சென்ற இடமெல்லாம் சென்று இருக்கிறோமா சென்று வந்தோமா செல்ல விழைவோமா என்கிற ஆவல் முதல் காரணமாகத்தான் இந்த புத்தகத்தை கையில் எடுத்தேன் .ஆனால் புத்தகம் சொல்லுகின்ற விஷயங்கள் வேறாக இருந்தது .
புதிய தலைமுறை இதழ்களில்ங்களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்த புத்தகம்
45 தலைப்புகளில் இந்த புத்தகம் அழகாக எழுதப்பட்டிருக்கிறது.
1. பயணம் செல்வோம்
2. பயணப் பயன்கள்
3. விளையாட்டுக்குத் தலையாட்டுவோம்
4. கோப்பைகளில் பயணித்த தேநீர்
5. காஃபியின் கதை
6. காற்றில் புகையிலை
7. சாக்லெட் சுவடுகள்
8. உப்புச் சப்பில்லை
9. உணவின் எஜமான்
10. இனிப்பும் கசப்பும்
11.மிளகாய் சுற்றிப் போடு
12.வாசனை வழி
13. சந்தன மரத்திற்குத் தாயகம் இந்தியா
14. ரோஜாவின் ராஜபாதை
15.எகிறிக் குதிக்கும் தக்காளி
16. பயணங்களும் மருத்துவமும்
17.நாடுவிட்டு நாடு சென்ற சிகிச்சைகள்
18. வளர்ப்பு மிருகங்கள்
19. கால்நடை போற்றுதும்
20. பாலைவனக் கப்பல்
21. நாலு கால் புயல்
22.மனிதன் பாதி
23. செல்லமே
24. ஆம்லெட் வயது 4,000
25. தீவாய்த் தேங்கி மறைந்தவை
26. தமிழர் பயணங்கள்
27. ஆயிரம் ஜன்னல் வீடு
28. உணவின் பயணம்
29.மக்காத மக்காச்சோளம்
30. உருண்டு திரண்ட உருளை
31. அரிசியின் கதை
32. சிறு தானியங்கள்
33. உணவும் மதமும்
34. கலப்புச் சாப்பாடு
35. இட்லி,தோசை, இடியாப்பம், பீஸா
36. பட்டுப் பயணப் பாதை
37. தேனின் கதை
38. உலகை மாற்றிய பயணங்கள்
39. சாதனைப் பயணங்கள்
40. ஆபத்தான பயணங்கள்
41. பணயம் வைத்துப் பயணம்
42. பயணத்தால் முளைத்த நாடுகள்
43. அடிமை, கைதி பயணங்கள்
44. பயணங்களும் சோகங்களும்
45. பயணம் செய்வோம்; மரணம் வெல்வோம் .
தமிழில் ஏராளமான பயணநூல்கள் வெளிவந்திருந்தாலும் வரலாற்றுப் பார்வையில் மிகவும் வித்தியாசமான கோணத்தில் எழுதப்பட்டுள்ள இந்நூல் ஒரு நாட்டில் உற்பத்தியான பொருள் மற்ற நாடுகளுக்குப் பயணமான தகவல்களையும், நாடுகளுக்கிடையிலான நாகரிகப் பரிமாற்றங்களையும் சுவைபட விளக்கிச் செல்கிறது. பயணங்களால் தேசங்களுக்கும், மக்களுக்கும் கிடைத்த பயன்பாடுகள், இன்னல்கள், வாழ்வுக்கான ஆகச்சிறந்த விளைவுகள், நோய்கள், சிகிச்சைகள் உள்ளிட்ட இன்னபிற அம்சங்களையும் ஆச்சரியமூட்டும் தகவல்களையும் வரலாற்றுப் பதிவாக சுவாரஸ்யமாக விவரித்துச் செல்லும் எழுத்துநடை நுலாசிரியருக்கு மட்டுமேயான அற்புத வரம்.
பயணங்களால் தேசங்கள் இணையும், தடுப்புச் சுவர்கள் உடையும், அன்பு பெருகும். பண்பாடு பரிமாறப் படும், விஞ்ஞானம் செழிக்கும், வாழ்க்கைத் தரம் உயரும் என்று பயணங்களின் பலாபலன்களைப் பட்டியலிடும் இந்நூல் 'பயணமே மனிதனைப் பண்பட்டவனாக மேம்படுத்துகிறது' இன்று உறுதிபட சொல்லுகிறது இந்த நூல்.
கலை, பண்பாடு, விளையாட்டு, உணவு, விளைபொருட்கள், விலங்கினங்கள், மருத்துவம், தானியங்கள், தாவரங்கள் போன்ற பலவும் பல்வேறு நாடுகளுக்கிடையிலான பயணங்களால் பரிமாறிக் கொள்ளப்பட்டவை எனும் வரலாற்றுத் தகவல்கள் மலைக்கவும் மயக்கவும் வைக்கின்றன. இப்புத்தகம் முன்வைக்கும் பயணங்களின் பயன்பாடுகளையும் அதன் ருசியையும் பிரமாண்டத்தையும் அவசியத்தையும் வாசிக்கிறபோது பயணத்தின் மீதான ஆவலும் பிரியமும் பயணங்கள் மீதான ஒருவகைக் காதலாகக் கைகூடிவிடுகிறது.
ஏறத்தாழ ஐம்பதுக்கும் மேற்பட்ட அறிஞர்கள், பயணிகள், வரலாற்றாசிரியர்கள் ஆங்கிலம், தமிழ் மொழிகளில் எழுதிய ஆதார நூல்களிலிருந்து தரவுகளைச் சேகரித்து அவற்றிலிருந்து புதியபுதிய கருத்துகளை விரித்துக்கொண்டும் விவாதித்துக்கொண்டும் செல்கிறார் நூலாசிரியர் வெ.இறையன்பு அவர்கள். தமிழ் இலக்கிய உலகில் பயணநூல் வரிசையில் புதியபாதையில் எழுதிச் செல்கிறது இந்த புத்தகம்.
விதைகள் கூட உருவான இடத்திலேயே விழ விரும்புவதில்லை. இறகுகள் முளைத்த விதைகள் இருக்கின்றன. பஞ்சைத் தரித்துக் கொண்ட வித்துக்களும் உண்டு. காற்றின் கைகளால் எடுத்துச் செல்லப் பட்டு வெகுதூரத்தில் விழுந்து முளைப்பதற்கு அந்த வடிவங்களே அவற்றுக்கு ஆதாரம்.
பழங்கள் சுவையாக இருப்பது கூட விதைகள் வேறு இடத்தில் முளைக்க வேண்டும் என்கின்ற முன் ஜாக்கிரதையால் தான். வெறுமனே விழுந்தால் பல விதைகள் முளைக்க முடியாது. பறவைகளின் உணவுக்குழாயில் நுழைந்து ஏற்படுகின்ற மாற்றத்தின் மூலம்தான் அவை முளைப்புத் திறனைப் பெற முடியும் என்பது இயற்கையின் நியதி.
மேற்கு ஆசியாவின் பிறைபோன்ற பகுதியிலிருந்துதான் நிறையப் பயிர்கள் தோன்றி உலகெங்கும் பரவின. மெசோ அமெரிக்காவில், சரித்திர காலத்திற்கு முன்பு தோன்றிய பருத்திப் பயிரிலிருந்து அபிவிருத்தி செய்தவை.
சார்லஸ் டார்வின், கெலபேகோஸ் தீவுகளுக்குப் பயணம் செய்தபோது, ஏற்பட்ட அனுபவங்களால்தான் அவருக்குப் பரிணாம வளர்ச்சித் தத்துவமே பரிச்சயமானது.
விலங்குகள்கூட ஒரே இடத்தில் உற்பத்தியாகவில்லை. ஆட்டின் அளவே இருந்த குதிரை மத்திய கிழக்குப் பகுதியிலும், ஐரோப்பாவிலும் வளர்ப்பு மிருகமான பிறகு அடைந்த பெரிய உருவம் நாடோடி வீரர்கள் சவாரி செய்து வந்தபோது பலரையும் பயமுறுத்தியது. பல ஆண்டுகள் குதிரைகளை இனப்பெருக்கம் செய்ய வைக்கும் யுக்தி தமிழ்நாட்டிற்குத் தெரியாமலே இருந்ததாகவும், தமிழ் மன்னர்கள் அரேபியாவிலிருந்தே அவற்றை இறக்குமதி செய்ததாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உண்டு. ஒட்டகம் வடஅமெரிக்காவில் தான் முதலில் தோன்றியது. அங்கு அது காணாமல் போவதற்கு முன்பு ஆசியாவிற்கும், தெற்கு அமெரிக்காவிற்கும் பரவியது.
பதினான்கு விதமான விலங்குகளை மாத்திரம்தான், மனிதனால் வளர்ப்பு மிருகமாக மாற்ற முடிந்தது. அவற்றில் செம்மறி, ஆடு, பசு, பன்றி, குதிரை ஆகியவை முக்கியமானவை. சிலவற்றை அடக்க முடிந்ததே தவிர ஆள முடியவில்லை. மொகலாய மன்னர்கள் ஆயிரக் கணக்கான சிவிங்கிகளை வேட்டையாடுவதற்காகப் பழக்கி வைத்தார்கள். ஆனால், அவை குட்டி போடவில்லை. 1960ஆம் ஆண்டு தான் மிருகக்காட்சிச் சாலையில் இருந்த சிவிங்கி முதல்முறையாகக் குட்டி போட்டது. அதிக தூரம் ஓடித் திரிகிற போதுதான், பெண் சிறுத்தைகளுக்குக் கரு முட்டை உண்டாகிறது என்பதுதான் அதற்குக் காரணம்.
சுற்றுப்பயணம் மேற்கொண்டவர்களால் அழியவிருந்த பல இனங்கள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. 1861ஆம் ஆண்டு பெர்ரி ஆர்மன் டேவிட் என்கிற பாதிரியார் சீனாவிற்குச் சென்றபோது பீஜிங்கில் உள்ள அரண்மனைப் பூங்காவில் அற்புதமான மான் இனம் இருப்பதைப் பார்த்து, அவற்றில் சிலவற்றைப் பாரீசுக்கு அனுப்பினார். 1900 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் அரண்மனைப் பூங்கா அடியோடு நாசமாகி அத்தனை மான்களும் அழிந்தன. பாரீசிலிருந்த மான்கள் மட்டுமே உயிரோடு இருந்தன. அவற்றிற்கு பெர்ரி டேவிட் என்றே பெயரிடப்பட்டன. 1954ல் நான்கு மான்கள் அங்கிருந்து சீனாவிற்கே அனுப்பப்பட்டன.
பறவைகள் தங்கள் இனம் அழிந்துவிடாமல் பாதுகாத்துக் கொண்டதற்கு, அவற்றின் இடம்பெயர்தல்தான் முக்கியக் காரணம். குளிர் பிரதேசங்களில் வாழும் பறவைகள் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் பயணம் செய்து முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து, பிறகு அவற்றோடு சொந்த நாட்டிற்குத் திரும்புகின்றன.
சந்திரகுப்த மௌரியர் தன்னிடம் தோல்வியடைந்த செல்யூகஸ் நிகேடருக்கு ஐநூறு யானைகளைப் பரிசாக அளித்தார். தோல்வி அடைந்தவர்களிடம் பெருந்தொகையை ஈடாகக் கறக்கும் (ransom) பழக்கம் உலகமெங்கும் பரவியிருந்தபோது, பரிசு தருகிற பழக்கம் பாரதத்தில் மட்டுமே இருந்தது. அதனால், யானைகளின் போர்த் திறனை அறிந்து பல்லாண்டுகளுக்குப் பிறகு கத்தார்ஜ் நாட்டைச் சார்ந்த ஹன்னிபால், ஆப்பிரிக்கக் காட்டு யானைகளைப் பழக்கி, வடக்கிலிருந்து படையெடுத்து ரோமாபுரியைக் கைப்பற்றினார்.
ஆரம்பத்திலிருந்தே வாழையிலையில் உண்ணுகின்ற தூய நாகரிகம் தமிழர்களிடம் இருந்தது. உபயோகித்துத் தூக்கி எறிந்து சுத்தத்தைப் பேணி, சுற்றுச்சூழலைப் பாதிக்காத முதல் 'டிஸ்போசபிள்' (disposable) தட்டு வாழையிலைதான். பதினைந்தாம் நூற்றாண்டு வரை மேற்கத்திய நாடுகளில் சாப்பிடும் தட்டு, புழக்கத்தில் இல்லை. கனமான ரொட்டியின் மீது உணவைப் பரப்பி, ஒரு பிடி பிடிப்பதுதான் அவர்களின் வழக்கம்.
பண்டித நேரு சோவியத் யூனியன் நாட்டிற்கு 1907ஆம் ஆண்டு பயணம் செய்தார். அங்கு கண்ட அரசு நிர்வாக முறை அவரை வெகுவாகக் சுவர்ந்தது. அதனால்தான், இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள் சோவியத் சாரத்துடன் வடிவமைக்கப்பட்டன. 1947ஆம் ஆண்டுதான், அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு அவர் முதல்முறையாகச் சென்றார். ஒருவேளை ரஷ்யாவிற்குச் செல்வதற்குமுன் அமெரிக்காவிற்குச் சென்றிருந்தால், அவருடைய சிந்தனை முறையே மாறியிருக்கலாம்.
இராமாயணம், மகாபாரதம் ஆகிய இருபெரும் இதிகாசங்களும் ஒரே இடத்தில் நடந்த சம்பவங்கள் அல்ல. பல நாடுகளுக்குச் சென்று
தங்கி, வாழ்ந்த அனுபவங்கள் சேர்ந்தால்தான் அவற்றிற்குச் சுவை கூடின, வாழ்க்கையிலும் சுவை கூட வேண்டுமென்றால் பல பகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் செய்தால்தான் அது சாத்தியமாகும். கிரேக்க மகாகாவியங்களான இலியட், ஒடிசி ஆகிய இரண்டுமே பயணத்தை அடிப்படையாகக் கொண்ட சித்தரிப்புகள்தான்.
இந்தியாவின் மீது படையெடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் வெளிநாட்டவர்களுக்கு ஏற்பட்டதற்கு முக்கியக் காரணம் இங்கு வந்து சென்றவர்கள், இந்தியாவைப் பற்றி எழுதிவைத்த குறிப்புகள் தான். வரலாற்று நூல்களுக்குத் தந்தை என்று வர்ணிக்கப்படும் 'ஹிரோடெட்டஸ்' தன்னுடைய 'சரித்திரங்கள்' என்ற புத்தகத்தில் "இந்தியாவில் தங்கம் பொதி பொதியாகக் குவிந்து கிடப்பதாக" எழுதியிருப்பார்.
பல சமூகங்கள் எழுதுகிற பழக்கத்தைப் பக்கத்திலிருக்கும் சமூகங்களிடம்தான் கற்றுக்கொண்டன.
முதலில் எழுத ஆரம்பித்தவர்கள் பயிர்களைச் சாகுபடி செய்வதிலும் முதலிடம் பெற்றிருந்தார்கள்.
இன்று நாம் சாப்பிடுகிற பல உணவு வகைகள்கூட சுற்றுலாவினால் தான் பிரபலமாயின. 'நொபீன் சந்திரதாஸ்' என்கின்ற கல்கத்தாக்காரர் தான் முதல் ரசகுல்லாவைக் கண்டுபிடித்தார். ஏழையாய் இருந்த அவர், எவ்வளவு தான் முயற்சி செய்தும் அதைப் பிரபலமாக்க முடியவில்லை. யாரும் அதை விரும்பவும் இல்லை. அப்போது பகவான்தாஸ் பக்லா என்பவர் ஒரு படகில் சுற்றுலா வந்தவர், கரையோரமாக இருந்த 'நொபீன் சந்திரா'வின் வீட்டுக்குப் பக்கத்தில் படகை நிறுத்தினார். தண்ணீர் வேண்டும் என்று அவர் மகன் அடம் பிடித்ததால் நொபீன் வீட்டிற்குச் சென்று தண்ணீர் கேட்டார். வங்காளத்தில் தண்ணீரை மட்டும் தருவது வழக்கமில்லை. ஏதேனும் இனிப்பைக் கொடுத்து விட்டுத்தான் தண்ணீரைத் தருவார்கள். ஏழையாக இருந்தால் ஒரு தேக்கரண்டி சர்க்கரையாவது தரவேண்டும். தன்னிடம் விற்பனை யாகாமல் இருந்த ரசகுல்லாவை பையனுக்குத் தந்தார் நொபீன். அவனுக்கோ ரசகுல்லா மிகவும் பிடித்துப் போக, தந்தையிடம் சொல்லி ஒரு பானையையே வாங்கி வரச்செய்தான். பகவான்தாசுக்கும் அது மிகவும் பிடித்தது. அதற்குப் பிறகு கூடை கூடையாக வாங்கி, தன் உறவினர்களுக் கெல்லாம் தந்து ரசகுல்லாவை வங்காளம் முழுவதற்கும் பிரசித்தி யாக்கி விட்டார் பகவான்தாஸ்.
பாரசீகர்கள் மூலமாகத்தான் கபாப், கொஃப்தா, தந்தூரி ரொட்டி ஆகியவை அறிமுகமாயின.
காஞ்சிபுரம், பட்டடக்கல், எல்லோரா ஆகியவை ஒவ்வொன்றும் 500 மைல்களுக்கு அப்பால் இருக்கின்றன. ஆனால், அங்கிருக்கும் கோயில்களோ ஒரேமாதிரி அமைந்திருக்கின்றன. கைலாசநாதர் கோயில் ராஜசிம்மனால் தொடங்கப்பட்டு மூன்றாம் மகேந்திர வர்மனால் முடிக்கப்பட்டது. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோயிலைக் கண்ட சாளுக்கிய நாட்டின் இரண்டாம் விக்ரமாதித்தன் அதைப்போலவே தோற்றமளிக்கும் விருப்பாட்சி கோயிலை பட்டடக்கல்லில் கட்டடக் கலையாக்கினான். ராஷ்டிரக்கூட மன்னர்கள் அந்தக் கோயிலைக் கண்டு, எல்லோராவில் அதைப் போலவே ஒரு கோயிலை வடிவமைத்தார்கள்.
விளையாட்டுக்களும், சுற்றுலாவினாலும், பயணத்தினாலுமே நாடுவிட்டு நாடு பரவின. இந்தியாவில்தான் சதுரங்கம் ஆரம்பமானது. படையின் நான்கு அங்கங்களான காலாட்படை, குதிரைப்படை, யானைப் படை, தேர்ப்படை ஆகியவையே நான்கு சதுரங்கமாயின.
பட்டு விற்க வந்தவர்கள் மூலமாகத் தான் அது பல நாடுகளுக்குப் பயணித்தது.
யுவான் சுவாங்கும், பாஹியானும் நாளந்தாவில் மாணவர்களிடம் பிரபலமாகியிருந்த பல விளையாட்டுக்களைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். ஸ்காட்லாந்தில் பிரபலமாகி இருந்த பூனையும், நாயும் என்ற விளையாட்டே கிரிக்கெட்டாகப் பரிணாம வளர்ச்சி பெற்றது.
2500 ஆண்டுகளுக்கு முன்பு சீனத்திலிருந்த குஜூ என்கிற விளையாட்டே கால்பந்தானது .பாரசீகர்கள்தான் போலோ விளையாட்டை முதல்முதலில் விளையாடியவர்கள்.
சுற்றுலா என்பது கற்றுக்கொள்ள உதவும் அனுபவப் பாடம். மனித நாகரிகம் இன்று அடைந்திருக்கும் உன்னத நிலைக்குச் சுற்றலாவே காரணம்.
பயணங்களால் மனித நாகரிகம் எப்படி மேம்பட்டது என்பது குறித்த பறவைப் பார்வைதான் இந்த நூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக