1 மே, 2025

இன்றைய புத்தகம்


என்னுரை

இது ஒரு ஆச்சரியமான நாவல்!

இது எழுதப்பட்ட பின்பலத்தை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. ஒருநாள் எழுத்தாள நண்பர் பட்டுக்கோட்டை பிரபாகரிடம் இருந்து போன் வந்தது. நலம் விசாரித்த திரு பிரபாகர் 'பாக்யா இதழில் ஒரு தொடர் எழுத முடியுமா?' என்று கேட்டார்.

பாக்யாவுக்கு பிரபல நடிகரும் இயக்குநருமான திரு. K.பாக்யராஜ்தான் ஆசிரியர் - இவர் போய் கேட்கிறாரே என்று எனக்குள் வியப்பு. அவரே விளக்கினார். 'பாக்யராஜ்' சார் நல்ல தொடர் ஒன்று தன் இதழில் வரவேண்டும் என்று விரும்புகிறார். என் தொடர் ஒன்று வந்தபடி உள்ளது. நீங்கள் எழுதினால் நன்றாயிருக்கும் என்று தோன்றியதால் கேட்கிறேன். சாரும் உங்களுடன் பேசுவார் என்றார்.

அதேபோல பாக்யராஜ் சாரும் பேசினார். எனக்கு சற்று பிரமிப்பாக கூட இருந்தது. சிறு வயதில் நான் சிவாஜி ரசிகன். வளர்ந்து எழுத்தாளனாகிவிட்ட நிலையில் சார்புகள் உதிர்ந்து ஒரு பொதுவான ரசிகத்தன்மை உருவாகிவிட்டது. ஆனால் அந்த ரசிகத் தன்மைக்கு அதிக தீனி போட்டவர் திரு. K.பாக்யராஜ். நான் அவரை வெகுவாக ரசித்து வியந்திருக்கிறேன். நடுத்தட்டுக்கும் கீழான குடும்பத்தில் இருந்தும், எந்த மன்மத தோற்றப் பொலிவுகளும் இல்லாமல் வயலில் இருந்து பிடுங்கிய ஒரு கடலைச் செடி போல மிக இயற்கையான தன்மைகளோடு சினிமாத்துறைக்குள் நுழைந்து படிப்படியாக முன்னேறியவர் இவர். இவரைப் பார்த்து குப்பன் சுப்பனுக்கெல்லாமும் தன்னம்பிக்கை முளைத்தது. கோடம்பாக்கம் ஒன்றும் சந்திர மண்டலத்துக்கு பக்கத்தில் இல்லை. நாமும் நுழையலாம் - சாதிக்கலாம் என்கிற எண்ணம் பலருக்கு ஏற்பட்டது.

இப்படிப்பட்டவர் பத்திரியைாளராக மாறியதும் அதில் அவர் தொடர்வதும் என்வரையில் அதிசயங்களோடு சேர்ந்த ரகம்.

சினிமா என்பது காட்சிக்குரிய களம். பத்திரிகையோ வாசிப்பிக்குரிய இடம். இரண்டிலும் நிலைபெற விரும்பியதும் நிலை பெற்றிருப்பதும் பாராட்டுக்குரிய விஷயங்கள். அப்படிப்பட்டவரின் இதழில் நான் இதுநாள் வரை எழுதியிராததும் ஒரு ஆச்சரியம். அதற்கு திரு பட்டுக்கோட்டை பிரபாகர் மூலம் முற்றுப்புள்ளி விழுந்தது.

மாயவன் காதலியும் பிறந்தது.

பொதுவாக என் படைப்பு என்றவுடன் ஒரு அமானுஷ்ய எண்ணம் தலை தூக்கும். ஆனால் நான் அதை மிக வெறுக்கிறேன். சினிமாவில்தான் வில்லன் வேஷம் போட்டு ஜெயித்தவன் வில்லனாகவே நடிக்க வேண்டியிருக்கிறது என்றால் பத்திரிகையிலுமா?

நான் வெர்சடைலாக (Verstatile) எல்லாகளங்களிலும், தளங்களிலும் எழுத விரும்புகிறேன். ஆழ்ந்த கடவுள் பற்றும் ஆன்மீக வேட்கையும் எனக்குள் இருப்பதை போலவே இடது சார்பு தாக்கங்களும் அதன் நல்ல விஷயங்களும் எனக்குள் உண்டு. என் படைப்புக்குள் இந்த இரண்டுமே நாகமும் சாரையுமாக பிணைந்திருக்கும். இந்த இரட்டை நிலைப்பாடு ஒரு அதிசயம் ஆச்சரியம் என்போரும் உண்டு. கோளாறு என்போரும் உண்டு. ஆனால் என்படைப்பை வாசித்துவிட்டு சுமார், பரவாயில்லை என்ற விமர்சனங்களை நான் பெற்றதேயில்லை. என் படைப்பு ஒரு தாக்கம் ஏற்படுத்தாமல் போனதுமில்லை.

இந்த மாயவனின் காதலியிலும் அதை நான் சாதித்திருப்பதாக கருதுகிறேன்.

இப்படி பல்வேறு தொடர்கள் எழுதிக் கொண்டிருந்த நிலையில் முற்றிலும் மாறுபட விரும்பி இந்த தொடரை கிராமிய தளத்துக்கு வடிவமைத்துக் கொண்டேன்.

வாசக உலகமும் நன்றாக வரவேற்றது. பல வாசகர்கள் இது ஒரு எழுத்து வடிவிலான திரைப்படம் என்றனர். சிலரோ இது நிச்சயம் ஒரு திரைப்படத்துக்கான Script என்றனர். என் வரையிலோ ஒரு வாழமுடியாத ஒருவன், பிறப்பால் அழுத்தப்பட்ட ஒருவன் வாழ்வதற்கு செய்யும் முயற்சிதான் இந்த நாவல்.

உண்மையில் இதற்கு 'மாயக்கள்வன்' என்கிற தலைப்புதான் பொருந்துகிறது. ஆனால் மாயவன் காதலி என்று அமைந்து விட்டது. கதையின் இறுதி அத்தியாயத்தில்தான் காதல் எட்டிப் பார்க்கிறது. ஆனாலும் மிக அழுத்தமான காதல் அது!

ஒரு தொடராக அமைந்துவிட்டதால், திரு பிரபாகர் தன் மதிப்புரையில் குறிப்பிட்டது போல விறுவிறுப்புக்கு முக்கியத்துவம் தந்து தொடரும் என்று போடவேண்டிய தேவை காரணமாக ஒரு இலக்கிய உச்சத்தை நோக்கி செல்ல முடியவில்லை. ஆனாலும் அதை இழந்தும் விடவில்லை.

இன்னமும் அடர்வாய் மதுரை பாஷை பேசி பக்கத்துக்கு பக்கம் மொழி மணத்தை மூச்சில் ஏறவிட்டிருக்கலாமோ என்று இதனை புரூஃப் திருத்தும் போது தோன்றியது. இல்லையில்லை வெகு ஜன நோக்குக்கு இதுதான் சரியான அளவு டிகாஷனில் போட்ட காபி போன்றது என்றும் மனது கருதியது. வாசியுங்கள் - விமரிசியுங்கள்.

நண்பர் பிரபாகரே மதிப்புரைதந்துள்ளார்.

நவீன எழுத்துக்களின் அப்பாவாக திரு சுஜாதாவை சொன்னால் சித்தப்பாவாக பிரபாகரை கூறலாம். மிகவே விசாலமான மனதோடு மதிப்புரை தந்திருக்கிறார். மாச்சரியம் இல்லை - அப்படி எழுதியிருக்கலாம் இப்படி போயிருக்கலாம் என்கிற வாத்தியார் நோக்கு இல்லை. அவரிடமிருந்து உயர்ந்த ரசிக மனோபாவம் வெளிப்பட்டிருக்கிறது. நான்கூட முதலில் மனிதன் - பிறகு ரசிகன் - பிறகே எழுத்தாளன். திரு பிரபாகருக்கு என் நன்றி. தொடரை வெளியிட்டதோடு மிக இணக்கமாய் நட்போடு பேசி அடுத்த தொடரையும் எழுதப் பணிந்துவிட்ட பாக்யராஜ் சாருக்கும் என் நன்றிகள்.

மிக்க அன்புடன்

இந்திரா சௌந்தர்ராஜன்

கருத்துகள் இல்லை: